Saturday, January 19, 2013

எங்க வீட்டு பொங்கல் கொண்டாட்டம்(கொஞ்சம் லேட்டா...,)

(பொங்கல் கோலம்..., என் மகள்கள் தூயா மற்றும் இனியாவின்  கைவண்ணத்தில்...)

(அரிசி மாவில் கோலம்...,)

(தன் சித்தப்பா, பெரியப்பா, அண்ணாலாம் வேட்டி காடி இருப்பதை பார்த்து என் மகன் ராம்ஜியும் பட்டு வேட்டி, சட்டையுடன்...,) 

 (தம்பி வேட்டி கட்டியதை பார்த்ததும் தூயாக்கு சேலை கட்டி பார்க்க ஆசை வந்துட்டுது..., )
அதிகாலையில் எழுந்து குளிச்சு, ”ப” வடிவில களிமண்ணால வீடு கட்டி, பசு மாட்டின் சாணத்தில் பிள்ளையார் பிடிச்சு வைப்போம் அதுக்கு “ பிள்ளையார் மன”ன்னு பேர்.  காய்கறிகள்,  கரும்புலாம் வெச்சு  பெரியவங்க நாங்க சாமி கும்புடுவோம். பொடுசுங்கலாம் எப்படா சாமி கும்பிட்டு முடிப்பாங்க. கரும்பு எப்போ திங்கலாம்ன்னு காத்து கிடப்பாங்க.

                                                          
(இதுதான் பிள்ளையார் மனை....,.     )

பொங்கல் அன்று வீடு வாசல்லாம் மொழுகி, குளிச்சு  சுத்த பத்தமா ஒரு தட்டில் ஊற வெச்ச பச்சரிசி, பச்சரிசி மாவு, வெல்லம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், பூ, பானகம் என்று சொல்லப்படுகின்ற வெல்லம் தண்ணி ஒரு டம்ப்ளர், மஞ்சள் தண்ணி ஒரு டம்ப்ளர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஆண்கள், சின்ன பிள்ளைகள்லாம் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வருவாங்க. அதுக்கு ,” பச்சை வைக்குறது”னு பேர்.

                                          பச்சை வைக்க கோவில்ல தட்டு ரெடி....,

பங்காளிகள்ன்னு சொல்லப்படுகின்ற  பெரியப்பா,    சித்தப்பா, அண்ணன், தம்பி லாம் சேர்ந்து கோயிலுக்கு போய் பச்சை வச்சுக்கிட்டு வருவாங்க. .

                           
       கோயிலுக்கு போனவங்க வருவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்கள் வீடில் வாசல் இருக்குறவங்க வாசல்லயும், வாசல் இல்லாதவங்க மாடிலயும், மஞ்சள் தண்ணி தெளிச்ச்சு, தரையில் கோலம் போட்டு  செங்கல் அடுக்கி, அதற்கு மேல் களிமண் உருண்டை வச்சு, ஈர மஞ்சளை கோர்த்து, அடுப்பு மேல வச்சு ரெடியா இருப்போம்.

                                 
                           
(அடுப்பு ரெடி, பொங்க பானை ரெடி...,)

    கோயில்ல இருந்து வந்ததும் கற்பூரம் ஏத்தி அதை பொங்கல் வைக்க போற அடுப்புல  போட்டு துவரை மிளாறை எரிய வைப்போம். பொங்கல் பானை காய்ந்ததும் முதலில் விதை நெல் போடுவோம். 


 
(நல்ல நேரத்துல பொங்கல் வைக்கன்னும்ன்னு எல்லாரும் மும்முரமாய் வேலை செய்றங்க.., தூயாவும் தன்னோட  பெரியப்பாக்கு உதவுறாங்க..,)


அது பொறிந்ததும், பால் ஊற்றி பால் பொங்கியதும்  தண்ணி ஊத்தி பொங்கி வரும்போது , பொங்கலோ பொங்கல்ன்னு சொல்வோம். பொங்கி வந்ததும் கடைக்கு போய் உப்பு வாங்கி வருவோம் (பொங்கல் பொங்கியதும் முதல்ல உப்பு வாங்கனும்ன்னு ஐதீகம்.)   கரும்பை வெட்டி துடுப்பாக்கி அதால கிளறுவோம். உப்பு போட்டு பொங்கி இறக்கி வைப்போம்.

பொங்கல் இறக்கியதும் அதே அடுப்புல பொங்கல் குழம்பு, வெந்தயக்கீரை மசியல் பிடி கருணை காரக்குழம்பு வைப்போம். சமையல் முடிந்ததும், பிள்ளையார் மனைலயும், பொங்கல் அடுப்புக்கும்  செங்கல் பொடியால கோலம் போட்டு பூசணி இலையில் பொங்கல், பொங்கல் குழம்பு, கீரை மசியல்லாம் வச்சு சாமி கும்புடுவோம். 

(பொங்கல் பொங்கிட்டுது...,)

(பொங்கல் நல்லாவே பொங்கி வருது..,)

(பூசணி இலையில் சூரியனுக்கு படையல் ரெடி.., பொங்கல், பொங்கல் குழம்பு, வெந்தியக்கீரை குழம்பு, பிடி கருணை காரக்குழம்பு..,)

 
 (பொங்கல் பண்டிகையே நன்றி செலுத்துற பண்டிகைதானே?! தினமும் நம் பசி போக்கும் அடுப்புக்கும் ஒரு படையல்..,)

 மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு  விளக்கு வச்ச பின் தான் படைக்குறது வழக்கம். துணிகளை படைச்சு, வீட்டிலிருக்கும் பெரியவங்க, தம்பதி சமேதராய்  எடுத்து குடுப்பாங்க. பெரியவங்கலாம்  தன்னால் முடிந்த அளவு  பணம்  மத்தவங்களுக்கு குடுப்பாங்க.அதுக்காகவும் பசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க.

   சாம்பார், பொறியல், வடை, பாயாசம், இனிப்பு போண்டா, கொழுக்கட்டை இதெல்லாம் கண்டிப்பா செய்யனும், செய்து சாமிக்கு படையல் போட மணி எட்டாகிடும். பெரியவங்கள்லாம் டி.வி பார்த்துக்கிட்டும் கதை பேசிக்கிட்டும் சாப்பிட்டு முடிக்கும்வரை பிள்ளைகள்லாம் தவிப்பா பார்த்துக்கிட்டும் சீக்கிரம் சாப்பிடுங்க, எதிர்வீடு, பக்கத்துவீட்டுல எல்லாம் பசங்க டிரெஸ் போட்டுட்டாங்கன்னும் கூச்சல் போட்டுக்கிட்டும் இருப்பாங்க



 (7 மணிக்கு படைக்க போற துணிகள் மஞ்சள் தடவி மதியம் மூணு மணிக்கே தயார்...,)

 (மைத்துனர் பசங்க பயபக்தியா சாமி கும்பிடுறதா சீன் போடுதுங்க.., சீக்கிரம் சாமி கும்பிட்டு புது துணி எடுத்து தரனும்ன்னு வெயிட்டிங்க்...,)



 (சின்ன மகள் இனியா தாத்தா பாட்டிக்கிட்ட ஆசிகளையும், புது துணியும் வாங்குறா..,)

(எனக்குதான் ட்ரெஸ் முதல்லன்னு எல்லா குட்டீசும் சண்டை போட..,
எல்லார் ட்ரெஸ்சையும் ஒரே தட்டுல வெச்சு குடுக்க வெச்சுட்டா தூயா...)

 (என்னதான் அடிக்கடி புது ட்ரெஸ் எடுத்து போட்டுக்கிட்டாலும், பண்டிகையின் போது ட்ரெஸ் வாங்கும்போது பசங்க முகத்துல எம்புட்டு சந்தோசம்??!)

(சின்ன பிள்ளைங்க மட்டுமில்ல, பெரியவங்களான நாங்களும் அப்படிதான் பெரியவங்க காலில் விழுந்து ஆசியோடு புது துணி வாங்கிக்குவோம்..,) 

குழந்தைகளை தொடர்ந்து பெரியவங்க நாங்கலாம் ஜோடியாய் பெரியவங்க  காலில் விழுந்து டிரெஸ் வாங்கிக்குவோம். துணியோடு சேர்த்து அவங்களால் முடிந்த அளவு பணம் தருவாங்க. அதை பிரிச்சுக்குறதுல தகராறு பண்ணிக்கிட்டு இருக்கும்போது, குட்டீஸ்கள் அப்பா, அம்மாவுக்கு இடையில்  சமாதான படுத்துற மாதிரி வந்து பணத்தை அதுங்க அடிச்சுக்கிட்டு போய்டும்ங்க. 

    புது துணி உடுத்திக்கிட்டு  அவங்கவங்க நட்பு வட்டத்தோடு கோயிலுக்கு போவோம்.  வத்தலும், தொத்தலுமா  இருக்கும் ரெண்டே ரெண்டு மாட்டை என்னமோ அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்குற மாதிரி எங்க ஊரு “பிரசாந்த், சிம்பு, தனுஷ்”லாம் பயங்கரமா  சீன் போடுவாங்க. அந்த வீரத்துல  எங்க ஊர் ”தாப்ஸீ, ஹன்சிகா மோத்வானி, கார்த்திகா”லாம்  மயங்கி புது காதல்லாம் பிக்கப் ஆகும்.


   காணும் பொங்கலன்று எல்லாரும் கோவிலுக்கு போவோம். கோவிலுக்கு போகும் முன் சின்ன மாமனர், மாமா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லாரும் எல்லாருக்கும் பைசா குடுப்பாங்க. எப்படியும் பெரியவங்களுக்கு ஆயிரம் ரூபாயும், சின்னவங்களுக்கு 250 ரூபாயும் சேர்ந்துடும் பொங்கல் அன்று. 

    முன்னலாம் 3 கி.மீ நடந்து போவோம். எல்லா உறவுகளும் பேசிக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டும் கரும்பு, பொரி சாப்பிட்டுக்கிட்டும் போவோம். இப்போலாம் டூவீலர்ல போய்ட்டு வந்துடறோம். நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு எல்லாரும் உணர்கிறோம்.

    அத்தோடு பொங்கல் கொண்டாட்டம் முடிஞ்சுது. அன்னிக்கு பொங்கல் முடிந்தாலும் அதன் நினைவு பல மாதங்கள் நெஞ்சில் நிற்கும். அடுத்த பொங்கல் எப்போ வரும்ன்னு காத்து கிடப்போம்.
   எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே...,

17 comments:

  1. இந்தக் காலத்த்திலும் பழக்கமாகிப் போன செய்முறைகளுடன் அருமையா பொங்கல் கொண்டாடி அசத்திட்டீங்க ராஜி.(எங்களுக்கும் பொங்கல் உண்டு . நாங்கள் சாமியெல்லாம் கும்பிடாததால் அது ஒரு குடும்ப கெட்-டு-கெதெர்)

    ReplyDelete
  2. பதிவு மகிழ்ச்சிய தந்தது

    ReplyDelete
  3. ஆஹா அருமையான கொண்டாட்டம் அசத்துங்க அசத்துங்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. பொங்கல் கொண்டாட்ங்கள் மிக அருமை.
    தீபாவளி பண்டிகைக்கு நாங்கள் மாமா, அத்தையிடம் ஆசீர்வாதம் பெற்றி புத்தாடைகள் வாங்குவோம், வரிசைப்படி. எல்லோரும் விழுந்து வணங்கி வாங்குவோம்.
    உங்கள் புடவைக் கட்டியதும், மகன் வேட்டிக் கட்டியதும் அழகு.
    நிறைவில் சொன்ன மாதிரி கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை மறநது பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சிகரமானது.

    ReplyDelete
  5. அருமையான பொங்கல் கொண்டாட்டம்....

    கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பண்டிகை சமயங்களில் மறக்கப் பட வேண்டும் - அப்பதானே உறவு மேம்படும்.....

    சிறப்பான பகிர்வும் படங்களும்.

    த.ம. 3

    ReplyDelete
  6. அழகா கொண்டாடி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.
    அட!உங்க பொண்ணுக்கு கோலம போட கத்துகுடுத்துட்டீங்களா? வெரி குட்!வெரி குட்

    ReplyDelete
  7. நினைவில் நிற்கும் பொங்கல் விழா பகிர்வு! அருமை! அருமை! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
  8. அழகாக உங்கள் வீட்டு பொங்கலை படங்களுடன் பகிர்ந்து பரவசப்படுத்தி விட்டீர்கள் ராஜி.

    ReplyDelete
  9. அருமையான பொங்கல் கொண்டாட்டம்.
    பாரம்பரிய முறைகளை மறக்காமல் தொடர்வது மகிழ்ச்சி தருகின்றது.

    ReplyDelete
  10. பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி .மிகவவும் சிறப்பாகக் கொண்டாடி உள்ளீர்கள்
    பொங்கலை!... படங்கள் ஒவ்வொன்றும் மனதில் மகிழ்ச்சியைக் கொடுத்தது .

    ReplyDelete
  11. குடும்பத்துடன் பொங்களைக் கொண்டாடாதவர்கள் இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு பொறாமைப்படுவார்கள்..:)
    சூப்பர்

    ReplyDelete
  12. ஹேய்... உங்க வீட்ல கேஸ் அடுப்பு பொங்கல் இல்லையா... இப்பவும் செங்கல் அடுப்பு செஞ்சு விறகு எரிய வெச்ச பாரம்பரிய பொங்கலைப் பார்க்கவே இனிமை. பெரியவங்க கிட்ட இளையவங்க ஆசியும், துணியும் வாங்கிக்கறது பெரியவங்களுக்கு கெளரவம் மட்டுமில்ல... உறவும் பாசமும் இளையவர்களுக்கு பரிமாறப்பட, முதியவர்களை மதிக்கன்னு பல விஷயங்களுக்கு அடிப்படை அது. குடும்பத்தோட சந்தோஷமா கதை பேசிக்கிட்டு நடந்து போயிட்டு வர்ற ஜாலியை இனி இழக்காதீங்க... இனிய பொங்கலை உன்னோடயே சேர்ந்து கொண்டாடின உணர்வு எனக்கு. மிக்க சந்தோஷம்!

    ReplyDelete
  13. இனியா உள்ளிட்ட உங்க குடும்ப உறுப்பினர்கள் பலரை இன்று தான் பார்க்கிறேன் உங்க வீட்டு காரர் திரும்பியிருக்க மாதிரி போட்டோ போட்டுட்டீங்க.

    கோலங்கள் அழகு.

    நாங்க அனுப்பிய பொங்கல் சீர் வந்து சேர்ந்ததா :))

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் வந்து சேர்ந்துச்சு. மனசுக்கு நிறைவாவகவும் இருந்துச்சு.., நன்றிங்க சகோ@

      Delete
  14. சற்றுத் தாமதமாயினும்
    பொங்கல் சிறப்புப் பதிவுகளில்
    இதுதான் முதனமையான பதிவு
    என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமை.
    எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. BELATED பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete