Thursday, September 05, 2013

என் ஆசிரியர்கள்


”ராமசாமி ஐயா”
தத்தக்க பித்தக்கன்னு நடக்கும் வயசில்,  பக்கத்து வீட்டு அண்ணாவோடு மஞ்சப்பையில், கைக்கு கிடைத்த குமுதம், கல்யாண பத்திரிகைகளை போட்டுக்கிட்டு போன என்னை ச்ச்சீ போன்னு விரட்டி அடிக்காம, வா தாயி!!ன்னு வகுப்புக்குள்ள கூட்டிக்கிட்டு போனவர்.


 “அப்பா”
பள்ளியில் சேர்த்ததும் தன் கடமை முடிந்தது என எண்ணாமல், பக்கத்தில் அமர்ந்து எழுத்துக்களையும், எண்களையும் கற்று தந்ததோடு விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல கூடாது, வழ வழன்னு குழைய கூடாது,  (மன்னிச்சு அப்பா! உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)

அம்மா”
எல்லாருக்குமே அப்பா தைரியத்தையும், அம்மா அன்பையும் சொல்லி தருவாங்க. ஆனா, வித்தியாசமா பெண்ணாய் பொறந்ததால அழனும்ன்னு அவசியமில்லை. தைரியமா இரு. எதிரியே வீடு தேடி வந்தாலும் அவமானப்படுத்தக்கூடாது,யாரையும் பசியோடு இருக்க விடக்கூடாது ன்னு கற்று தந்தவள்.  வைராக்கியம், ரோஷத்துக்கு சொந்தக்காரி. ஒரு ஆணால் வரும் தைரியத்தை விட, ஒரு பெண்ணால் வரும் தைரியத்துக்கு மதிப்பதிகம்ன்னு அடிக்கடி உணர வைப்பவள்.. 

”கமலா டீச்சர்”
அன்னையும், பிதாவும் மட்டுமில்ல நானும் கத்து தருவேன்ன்னு ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கைப்பிடிச்சு கத்து தந்தவள்.

மூர்த்தி சார்”
உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமில்லை, தேமாவும், புளிமாவும் சேர்ந்ததுதான் தமிழ்ன்னு சொல்லி தந்து, எதாவது தப்பா சொன்னால், காதை திருகி அப்புறம் பச்சை பச்சையாய் திட்டிப்புடுவேன்னு பயமுறித்தி வெண்டைக்காய், மாங்காய், சுண்டைக்கா, முருங்கைக்காய், பீர்க்கங்காய்ன்னு சொல்லி சிரிக்க வைத்து, தப்பு தப்பா எழுதிய என்னைக்கூட தமிழில் மாணவர் மன்றத்தேர்வில் முதல் வகுப்பில் தேற வைத்தவர்.

கணக்கு நாகரத்தினம் சார்”:
ஜியாமெண்ட்ரி பாக்சில் இருக்கும் காம்பஸ் வம்பு சண்டைக்கு வரும் கதிரேசனை குத்துறதுக்கு மட்டுமே யூஸ்ன்னு நினச்சுக்கிட்டு இருந்த என்னை, மகளாய் நினைத்து கிஸான் ஜாம் கொடுத்து, ஜியாமெண்ட்ரி வரைய கத்து கொடுத்து 81 மார்க் எடுக்க வைத்தவர்.


“வடிவேலு சார்”
9 வகுப்பில் அடி எடுத்து வைத்த முதல் நாள்..., கிளாசுக்குள் நுழைந்தவர், எங்கள் பேரை வரிசையா சொல்லிட்டு வர சொன்னார். என் பேரை சொல்லிட்டு அமைதியா உக்காந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.  கடைசி பெஞ்ச் அரட்டை கேர்ள்ன்னு பேரெடுத்ததை நிரூபிக்கனுமேன்னு எங்க பேரையே கேட்டிட்டு இருக்கீங்களே! உங்க பேர் என்னன்னு கேட்டதுக்கு..,இங்க வா! இதோ என் பாக்கட்டுல இருக்குற பேட்ச்ல என் பேர் இருக்கு படின்னார். vadiveluன்னு இருந்துச்சு, என் நாக்குல இருந்த சனி பகவான் கதகளி ஆட வாடிவாலுன்னு படிச்சு தொலைச்சேன், அன்னில இருந்து ரொம்ப ரொம்ப டிரை பண்ணி ஆங்கிலத்தை எழுத்து கூட்டி படிக்க வச்ச புண்ணியவான். அதுக்கு அவர் எடுத்துக்கிட்ட காலம் மூணு வருசம்.

“மீனாட்சி டீச்சர்”
தமிழ் -தகராறு, ஆங்கிலம்- ஆகாது, புவியியல் -புரியாது, வரலாறு- வராது, கணக்கு - கசக்கும்ன்னு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு புது அகராதி போட்டு வச்சிருந்த என்னை நம்பி!!  அப்பா 11 வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப்பில் கொண்டு போய் போட அங்க விலங்கியல், இயற்பியல், வேதியியல்ன்னு விதம், விதமா, கலர் கலரா பூதங்கள் வந்து மிரட்டுச்சு. அதுலயும் விலங்கியல் பாடம் இருக்கே! ஐயோ! நைட் கனவுல கரப்பான் மூச்சி மல்லாந்து படுத்து வயித்தை காட்டும், சாப்பிட போனால் தவளை வந்து சாப்பாட்டு தட்டுல டான்ஸ் ஆடும். அட, போனா போகுது இதெல்லாம் மறக்கலாம்ன்னு டிவி பொட்டி முன்னாடி உக்காந்தா மண்புழு நெளியும், பிராக்டிக்கல் எக்சாம் காலை வரை கூட ரெக்கார்ட் முடிக்காம தில்லா நின்ன என்னை, விட்டா மறுபடியும் இதே கிளாசுல உக்காந்து நம்ம உயிரை வாங்குவான்னு முழு மார்க் போட்டு 12வது கிளாசோடு மூட்டை முடிச்சு கட்டி அனுப்பியவர்.

ரவி சார்:
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு எம்ப்ராய்டரி, பொம்மைகள், வொயர் கூட பின்ன கத்து கொடுத்தவர்,ஒரே வாரிசானதால் பொத்தி பொத்தி வளர்த்ததால், வேகமா நடக்கவே பயப்படும் என்னை விளையாட்டுக்களில் கலந்துக்க வைத்தவர்.

நட்புகள்:
பள்ளிக்கூடத்துல பாடம் மட்டுமல்ல, குறும்புத்தனம், சண்டை, அழுகை, சமாதானம், பகிர்தலும் கூட கத்துக்கலாம்ன்னு கத்துக்கொடுத்த மாலதி, சுஜாதா, செல்வி, தெய்வநாயகி, நசீமா, ஜெயலட்சுமி, உமா, கமலகண்ணன், வில்வநாதன், அருணகிரி, கார்த்தி....,

லவ்ஸ்:
பதின்ம வயதில் பாடமும், நட்பும், குறும்புத்தனமும் மட்டுமல்ல, காதலும் கூட வரும்ன்னு சொல்லி தந்த செல்ல இம்சை. 

வூட்டுக்காரர்:
ஏழுக்கழுதை வயசாச்சு! இன்னும் பொறுப்பில்லாம இருக்காளேன்னு பொறுப்பா வாழ்க்கை பாடத்தை கத்து தரும் தியாகி!!

மூத்த பெண்: 
தாய்மையை கற்று தந்தவள், கூடவே, இலவச இணைப்பாக கம்ப்யூட்டரையும்...,

இளைய மகள்: 
அச்சச்சோ! ரெண்டாவதும் பெண்ணாகிடுச்சே!ன்னு ஒதுக்கிய சொந்தங்களையும், அதைலாம் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்ன்னு உலகத்தை பற்றி கற்று கொடுக்க ஆரம்பித்தவள்.

கடைக்குட்டி:
தொலைத்த என் குழந்தை தனத்தையும், குறும்புத் தனத்தையும் மீண்டும் நினைவு படுத்திய என் ஆசான்.

பதிவர்கள்:
எல்லாவற்றையும் கற்று தர ஆளிருந்த எனக்கு சகோதர பாசத்தை காட்ட ஆளில்லாமல் தவித்த காலங்களில் சகோதர பாசத்தை அறிய வைத்தவர்கள்.

முகம் அறியாத ஆசான்கள்:
பிள்ளை பேறு முடிந்த பதினைந்தாவது நாளே ரெண்டாவது மாடிக்கு கற்களை சுமந்து உழைப்பை கற்று தந்த கட்டிட தொழிலாளி.., 

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நேரத்திலும் கவனக்குறைவாய் தந்த அதிகமான நூறு ரூபாயை திருப்பி தந்த பால்கார ஐயா! 

கையில் காசில்லாம போய் ஒரு முழம் பூ கேட்டு பர்சை வீட்டுலயே வச்சுட்டு வந்ததை உணர்ந்து, கையில் வாங்கிய பூவை, வேணாம் பாட்டின்னு திருப்பி தர, வெள்ளிக்கிழமை அதுமா பூவை திருப்பி தராதம்மா, அப்பாலிக்கா வரும்போது காசு கொடுன்னு நம்பி கடன் கொடுத்ததள்ளாத வயதிலும் பூ விற்கும் பாட்டி.

கடையை காலி பண்ணிட்டு, கடைசியாய் இருந்த நாலு இட்டிலியை தட்டில் வைத்து சாப்பிட, அமரும்போது அக்கா வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்துட்டாங்க. அவங்க பையன் பசிக்கு அழுகுறான். வீட்டில் மாவு எதுமில்ல. டிஃபன் இருக்கான்னு கேக்க, 11 மணி ஆகியும், சாப்பிடாத போதும், எச்சில் விழுங்கியப் படியே தன் சாப்பாட்டை தரும் ஹோட்டல் கார அக்கா!!

இப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கை பாடத்தை கற்று தரும் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.

16 comments:

  1. //ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை பாடத்தை கற்றுதரும் அத்தனை விதமான ஆசிரியருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.//
    நன்றாக சொன்னீர்கள்.அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
    மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
  2. //அண்ணாவோடு மஞ்சப்பையில்//
    நீங்க தானா அது!

    ReplyDelete
  3. அருமையான பதிவு....

    ReplyDelete
  4. // / / அதைலாம் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்ன்னு உலகத்தை பற்றி கற்று கொடுக்க ஆரம்பித்தவள்... / / /

    மாற்றம்...

    வாழ்த்துகள் சகோதரி....

    ReplyDelete
  5. நல்ல பதிவு வகை வகையான ஆசிரியைகளை வரிசை படி வகை படுத்தி உள்ளீர்கள் ..அருமை

    ReplyDelete
  6. என்னது வடிவேலு உங்கள் வாத்தியா ?

    அதான் நீங்க அவர் பெயரை வாடி வாலு அப்படின்னு படிக்கப்போக
    நொந்து போய், வாத்தியார் உத்தியோகத்தை விட்டுட்டு சினிமா பீல்டுக்கு வந்துட்டாரா ?

    அவரைத் தானே சொல்றீங்க...

    அது கிடக்கட்டும். .

    நானும் ஒரு ஆசிரியராத்தான் ஒரு எட்டு வருஷம் குப்பை கொட்டி இருக்கேன்.

    ஆக, ஆசிரியர் தரப்புலேந்து உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  7. முகம் அறிய ஆசான்கள்

    போற்றுகிறேன்

    ReplyDelete
  8. //உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)//


    ஹஹஹா

    ReplyDelete
  9. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கை பாடத்தை கற்று தரும் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    அருமையான ஆசான்கள்..!

    ReplyDelete
  10. இறுதி பகுதியில் நம்மில் பலர் நினைக்க மறந்த பலரையும் நினைவு கூர்ந்தது மிகவும் அருமை...

    ReplyDelete
  11. தொலைத்த என் குழந்தை தனத்தையும், குறும்புத் தனத்தையும் மீண்டும் நினைவு படுத்திய என் ஆசான்.//

    உண்மையான வார்த்தைகள். இதில் கொஞ்ச நாள் கழிச்சி பேரனோ, பேத்தியும் சேர்ந்துக்குவாங்க.... என்னுடைய இளைய வயதில் நான் செய்த அதே வால்தனத்தை இப்போது என்னுடைய பேத்தியில் நான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. லவ்ஸ்:
    பதின்ம வயதில் பாடமும், நட்பும், குறும்புத்தனமும் மட்டுமல்ல, காதலும் கூட வரும்ன்னு சொல்லி தந்த செல்ல இம்சை.

    ungalaium vidalaya intha pazai pona kathal

    ReplyDelete
  13. "விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல கூடாது, வழ வழன்னு குழைய கூடாது, (மன்னிச்சு அப்பா! உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)"
    மீறியது முதல் பகுதியையா அல்லது இரண்டாவது பகுதியையா?
    உழைப்பை கற்று தந்த கட்டிட தொழிலாளி,நூறு ரூபாயை திருப்பி தந்த பால்கார ஐயா, நம்பி கடன் கொடுத்ததள்ளாத வயதிலும் பூ விற்கும் பாட்டி, தன் சாப்பாட்டை தரும் ஹோட்டல் கார அக்கா போன்ற வாழ்க்கை பாடத்தை கற்று தரும் ஆசிரியர்களை மறக்காமல் குறிப்பிட்டுள்ள உங்களைப் பாராட்டுகிறேன்

    ReplyDelete
  14. ஈ எறும்பு கூடப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசான் என்றுதான் நானும் நினைப்பேன்.
    நீங்கள் அதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ராஜி. உன்னதமான பதிவு. நெகிழவைத்த பதிவு.
    சரியான குறும்புக்காரரா இருந்திருக்கீங்க.:)
    வாழ்த்துகள் மா.

    ReplyDelete
  15. :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
    இங்கே குழுமியிருக்கும் உணர்வுக்குவியலுக்கு புன்னகை மட்டுமே "ஓரளவிற்கு" பதில் சொல்லும். வார்த்தைகள் வழுக்கி விழும் நிச்சயமாய்!!

    அன்புடன்,
    சுந்தர்

    ReplyDelete