உலகத்துக்கே அன்னையும் பிதாவுமென கருதப்படும் சிவன்,பார்வதியின் மூத்தமகனாக கருதப்படுபவர் விநாயகர். சித்திரமா வரைஞ்சோ, அம்பிகையின் உடலிலிருந்து எடுத்த அழுக்கு(மஞ்சள்)க்கு அம்பிகை உயிர் கொடுத்திருந்தாலும், ஆகமொத்தம் எப்படியோ பிள்ளையார் சிவதம்பதியினரின் மூத்த மகனானார். மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதை எழுதுவதற்கு சரியான ஆளை தேடியபோது முதலில் அவர் மனதில்தோன்றியது விநாயகர்தான். விநாயகரிடம் சென்று, மகாபாரதம் எழுதித்தர வேண்டினார்.
‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டுமென்ற நிபந்தனையுடன் வியாசகருக்கு மகாபாரதம் எழுதித்தர விநாயகர் ஒப்புக்கொண்டார். நிபந்தனை கடுமையானதாக இருந்தாலும், பாரத இதிகாசத்தை எழுதியே தீரனும்ன்ற வைராக்கியத்தோடு வியாசர் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, பதிலுக்கு இவரும் ஒரு நிபந்தனை விதித்தார். பாரதத்தை நிறுத்தாமல் சொல்கிறேன். அதே நேரத்தில், பாடலின் பொருளை அறிந்துக்கொண்டே எழுத வேண்டும் என எதிர் நிபந்தனை விதித்தார் வியாசர்.
இதைக்கேட்ட விநாயகர் நகைப்புடன் சம்மதித்தார். அதன்பின் மகரிஷி பாரத இதிகாசம் பாட ஆரம்பித்தார்.விநாயகர் எழுத ஆரம்பித்தார். ஒருக்கட்டத்தில் எழுத்தாணி உடைந்து போனது. வியாசர் நிறுத்தாமல் பாடலை சொல்லிச்சென்றதால் தனது முகத்திலுள்ள வலப்புற தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தார். இவ்வாறு மகாபாரத இதிகாசம் வியாசரால் பாடப்பட்டு 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகரால் வெற்றிகரமாக எழுதி முடிக்கப்பட்டது. இதனாலேயே விநாயகரின் முகத்தில் ஒரு தந்தம் முழுமையாகவும், மற்றொரு தந்தம் ஒடிந்த நிலையிலும் இருக்கும். இந்த உருவத்திலுள்ள விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து வகையிலும் ஏற்றம், வெற்றி கிட்டும். குழந்தைகளின் நினைவாற்றல் கூடும். இப்படி தந்தத்தை உடைத்தது, வெளிப்புற பார்வைக்கு தெரிவதை நம்பாமல் எதையும் அறிவுக்கண் கொண்டு பார்க்க வேண்டுமென உணர்த்துது.
விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்ததுன்னு கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபராயுகத்தில் பரராசமுனிவர் - வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் - பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவதாரமெடுத்த அவரது பிறப்பு நீண்டுக்கொண்டே வந்துள்ளது. யுகங்களை கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் விநாயகரை மட்டுமே வணங்குவதை வழக்கம். அத்தகைய வழிப்பாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.
விநாயகருக்கு யானைத்தலை அமைந்ததைக்கண்ட அம்பாள் வருத்தம் கொண்டாள். அவளை சிவன் சமாதானம் செய்தார். ‘இந்த உருவிலேயே அவன் உலகப்புகழ் பெறுவான். மக்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகனை வழிபட்ட பின்னரே தொடங்குவர். காரிய தடை ஏற்படும் போதும், அதனை விலக்குமாறு அவனையே வேண்டுவர்’ என அருளினார்.
பிள்ளையாரின் முகத்தோற்றம் "ஓ" என்ற வடிவில் இருப்பதாலும், "ஓம்" என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக "உ" என முதலில் எழுதி, மற்றதெல்லாம் எழுதுவது நம் மரபு. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம், உகரம் சக்தி, மகரம் மலம், நாதம் மாயை, விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை. பிள்ளையார் தடைகளை விலக்குபவர் என்பதால், நாம் தொடங்கும் எந்த செயலும் தடையில்லாமல் நடக்க பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி ’உ’ போட்டு தொடங்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் பிள்ளையார் தனது தாய் தந்தையாகிய உமையாள்,உமையவனை முதன்மையாக வைத்து குறிப்பதற்காக சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார் என்பதும் ஒரு கருத்து. எழுத்தாணியும், சுவடியும் எழுத சரிப்பட்டு வருமான்னு பார்க்க ஒரு வட்டம் மற்றும் நீள்கோட்டை கொண்ட ‘உ’ எழுத்தை எழுதி பார்த்து அதுவே வழக்கமானதாய் சொல்வோரும் உண்டு.
முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்குறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்குன்னு நமக்கு தெரியாதுல்ல! அது என்னன்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கலாம். திருநாரையூர் கோவிலிலுள்ள பொல்லாப் பிள்ளையார், திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள சித்தி விநாயகர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலுள்ள கள்ளவாரண பிள்ளையார், திருவண்ணாமலை அல்லல் தீர்த்த விநாயகர், காசி எனப்படும் வாரணாசியிலுள்ள துண்டிராஜகணபதி இவைகள்தான் விநாயகருக்கான அறுபடைவீடுகள்.
தெருவுக்கு தெரு விநாயகர் கோவில் இருந்தாலும், திருச்சி மலைக்கோட்டை விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், மணக்குள விநாயகர், காணிப்பாக்கம்(சித்தூர் மாவட்டம்) விநாயகர் இதுமாதிரி சொற்பமான கோவில்களே பிரசித்தம். இவை இல்லாம, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள போஹ்ரா கணேஷ் கோவில், இரந்தாம்புர் கணேஷ் கோவில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மற்றும் வரதவிநாயகர் கோவில், புனே ஸ்ரீமத் டக்குஷேர்ஹால்வி விநாயகர் கோவில், கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டகணபதி கோவில், இடார்கஞ்ச் ஸ்ரீவிநாயகருதேவரு கோவில், ஹம்பி விநாயகர் கோவில், ஆந்திர மாநிலம் காணிபாக்கம் விநாயகர் கோவில், கேரளாவில் உள்ள மாத்தூர் விநாயகர் கோவில், கொட்டாரக்காரா விநாயகர் கோவிலும் பிரசித்திப்பெற்ற கோவில்களாகும்.
சாணம், மஞ்சள், செம்பு, வெள்ளி, மரத்துண்டு, அரச இலைன்னு நினைச்ச பொருட்களில் விநாயகரை கொண்டு வந்து வணங்கினாலும், பொதுவா 16 உருவங்களில்தான் அருள்புரிவார்.
தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகத்தில் களை உண்டாகும்.
பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி, நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு, உபாசனை நன்கு அமையும்.
வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீரா வேசத்தில், செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
சக்தி கணபதி: பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சய மாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவரை வழிபடுவதால் சகல காரியங்களும் சித்தியாகும்.
உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.
விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.
சுப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.
லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கை யில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத் தியாகும்.
புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசூரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகளில் வெற்றி கிட்டும்.
நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
இந்த உருவ அமைப்பில்தான் விநாயகரை ஆலயங்களில் நிறுவி வழிபடவேண்டுமென்பது நியதி. நம் பக்தியின் மிகுதியால் பலவித உருவங்களில் சிலாரூபம் அமைச்சு வழிப்பட்டு வருகிறோம்.
விநாயகர் துது...
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
முழுமுதற் கடவுளை வணங்குவோம்! எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவோம்!
நன்றியுடன்,
ராஜி
விநாயகரின் பலதரப்பட்ட உருவங்களை தற்போதுதான் அறிகிறேன். முழுமுதற் கடவுளை வணங்குவோம்.
ReplyDeleteதினத்தந்தி பேப்பர்ல விநாயகர் பண்டிகைபோது இந்த விவரம் வந்ததுப்பா.
Deleteமுழு முதற் கடவுள் பற்றிய வரலாறு அருமை. என்ன திடீரென்று விநாயகர் வரலாறு?
ReplyDeleteநம்மூர் அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் வந்தால், அந்த வாரம், மாசம் முழுக்க விழா எடுக்குறாங்கல்ல!! அதுமாதிரிதான் இதும். போனவாரம் விநாயகருக்கு பர்த்டேவாச்சே! அதான் இந்த வாரமும் அந்த எஃபெக்ட்
Deleteபிரமாண்டமான பிள்ளையார் படங்கள்தான்
ReplyDeleteஎல்லாமே நெட்ல சுட்டதுண்ணே
Deleteபடங்கள் உட்பட பிள்ளையார் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஅழகான படங்களை தேர்ந்தெடுத்த உங்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteபகிர்ந்து கொண்ட விஷயங்கள் சிறப்பு 👌.
இந்த பாராட்டுக்குதான் மெனக்கெடுறேன். நன்றிண்ணே
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நன்றிண்ணே
Delete