Wednesday, April 18, 2018

மகிழ்வித்து மகிழவேண்டிய அட்சய திருதியை நன்னாள் - அறிவோம் ஆன்மீகம்

நம்ம ஊர்ல ஏப்ரல் மாசம் பொறந்தாலே போதும் அட்சய திருதியை ஜுரம் வந்திரும். அட்சய திருதியை அன்னிக்கு நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும் . கடன் பட்டாவது எதாவது நகை வாங்க துடிப்பாங்க நம்ம ஊர் பொண்ணுங்க. இந்த மாதிரி சடங்கு சம்பிராயத்துல நம்பிக்கை இல்லாதவங்க ஏன்?! எதுக்கு இப்படி நகை வாங்குறீங்கன்னு கேட்டால், அட்சயதிருதியை அன்னிக்கு வாங்கி நகை வாங்கினால் தங்கமா சேரும். அதனாலதான் நகை வாங்கப்போறோம்ன்னு பதில் சொல்வாங்க.  இப்படி கடன்பட்டு நகை வாங்கி பெட்டில வச்சா தங்கமழை வீட்டில் பொழியுமா?! 

இறைவனை வழிபாடு செய்யவும், தானதர்மம் செய்யவும் நல்ல நாள், நேரம் பார்க்க தேவையில்லைதான். அதுலாம் எப்போதும் நல்வழியில் செல்பவர்களுக்கு.... ஆனா தீய வழியில் செல்பவர்களுக்கு நாள், கிழமைன்னு ஒதுக்கி வெச்சாலாவது நல்வழியில் செல்வாங்கன்னுதான் விரதநாட்கள் உண்டாச்சு. ஆனா, அந்த நாட்கள் எதுக்கு உருவாச்சுன்னே அரைகுறையா புரிஞ்சுக்கிட்டு கொண்டாடப்படும் விரதநாட்களில் ’அட்சய திரிதியை’க்கு முக்கிய இடமுண்டு.

சயம் ன்னா குறைதல், தேய்தல்ன்னு அர்த்தம். அட்சயம் என்ற சொல்லுக்கு வளர்தல் என்று பொருள். அன்றைய தினம் செய்யப்படும் எல்லா விசயமும் பல்கிப்பெருகும் என்பது ஐதீகம். அதனால, அன்னிக்கு என்ன நல்ல விசயம் செய்யலாம்ன்னு யோசிக்குறதை விட்டுட் என்ன பொருள் வாங்கலாம்ன்னு கடைகளை நோக்கி சில வருசங்களாய் படையெடுக்குது இன்றைய சமுதாயம். தங்கம் விலை தாறுமாறாய் இருக்கும் இக்காலகட்டத்தில் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க துடிக்குறாங்க நம் மக்கள். சரி, அப்ப அட்சய திருதியை அன்னிக்கு என்ன வாங்கனும், ஏன் இந்த நாளில் என்ன செய்யனும், எப்படி இந்த நாள் உருவானதுன்னு பார்க்கலாம்.. வாங்க...
சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளும் திருதியை நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் மிகப்புனிதமானது. அன்று செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்பதால் வேதகாலங்களில் சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்வதுமென கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்க, தான தருமங்கள் செய்து இந்நாளை கழித்தனர். அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன், பன்மடங்கு அதிகரித்து, அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் விற்பனையை தாறுமாறாய் உயர்த்த எந்த வேதத்திலும், எந்த கடவுளும் சொல்லல.

கேரளாவின் ’காலடி’யில் பிறந்து ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர்.  சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார்.  குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற வீடு மிக ஏழ்மையானது. பவத் பிட்சாந்தேஹி’ என யாசித்து நின்றார். உள்ளிருந்த வெளிவந்த பெண், ஐயா! தங்களுக்கு கொடூக்க எங்கள் வீட்டில் ஏதுமில்லை. இந்த காய்ந்த நெல்லிக்காயை தவிர்த்து.. எனக்கூறி மனதார ஆதிசங்கரருக்கு பிட்சை இட்டாள். ஏழ்மை நிலையிலும் தன்னிடமிருந்த நெல்லிக்கனியை கொடுத்த பெண்ணின் இரக்கக்குணத்தை கண்டு நெகிழ்ந்த ஆதிசங்கரர், அவள் வறுமையை போக்க, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி  மகாலட்சுமியை மனதில் இறுத்தி தியானித்தார். அப்பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி, மழையாய் பொழிந்து அவளது வறுமை நீங்கியது. அப்படி ஏழைப்பெண்ணின் ஏழ்மை நீங்கிய நாள் அட்சயதிருதியை. 

அட்சய திருதியை அன்று ஆதிசங்கரரின் பிறந்த ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், 32 நம்பூதிரிகளைக்கொண்டு, 1008முறை கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளை வைத்து பண்ணப்படும்  கனகதாரா யாகம் செய்கின்றனர். இடுப்பில் கைவைத்தபடி ஒரு கையில் வெண்ணெயுடன் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கருவறைக்கு பெயர் க்ருஷ்ண அம்பலம். இச்சன்னிதியின் வலப்புறம்  சிவனும், இடப்புறம் சாரதாம்பிகைக்கும், சக்தி வினாயகருக்கும் கோவில் உண்டு. 

பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர் என்ற முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்களை கண்டதும் காலில் விழுந்து வணங்கி பணிவிடை செய்து தன் நிலையை எடுத்து சொன்னான். ராஜாதிராஜன் இன்று குடிசையில் வாழும் காரணத்தை தங்கள் ஞானத்திருஷ்டியில் கண்டனர். மன்னா! பத்து தலைமுறைகள் நீ வேடனாய் இருந்து பத்தாவது பிறவியில் கௌட தேசத்தின் காட்டில் இருக்கும்போது வழிப்பறியில் ஈடுபட்டும், முனிவர்களை இம்சித்தும் பல கொடுமைகளை செய்து வந்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறாய். இவ்வளவு கொடுமை செய்தும் எப்படி மன்னனாய் பிறந்தேன் என வினவி நின்றான் பூரியசஸ்.
BHAGAVAD GITA {5.21 } बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम्‌ ।  स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ 21॥ Such a person who is in union with the Supreme Being becomes unattached to external sensual pleasures by discov­ering the joy of the Self through contemplation and enjoys transcendental bliss. (5.21):
ஒருநாள் அவ்வழியே சென்ற இரண்டு வைசியர்கள் மற்றும் ஒரு அந்தணரையும் நீ அடித்து துன்புறுத்தி அவர்களிடம் கொள்ளையடிக்க பார்த்தாய். அந்தணர் கொண்டு வந்த செல்வங்களோடு ஓடி விட்டார். பொருட்கள் மீதான ஆசையினால் அந்தணருக்கு மூர்ச்சை தெளிவிக்கும் பொருட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்தாய். அனறைய தினம் சித்திரை மாதம் திருதியை நட்சத்திரம். அன்றைய தினம் நீ அறியாமல் செய்த நீர்தானமே உன்னை ராஜாதிராஜனாய் பிறக்க வைத்தது என்றனர்.

தெரியாமல் செய்த தானத்திற்கே இத்தனை பலனா என்று யோசித்த மன்னன் விஷ்ணுவை வணங்கியபடி வெயிலில் வருவோருக்கு நிழலும், நீரும் தந்து வந்தான். சிலநாட்களில் அவனுக்கு உதவ அவனின் உறவினர்கள் முன்வந்தது உதவினர். அவன் நாடும் அவனுக்கு திரும்ப கிடைத்து பதினாறு செல்வங்களோடு நல்லாட்சி புரியும்போது விஷ்ணுபகவான் அவன்முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென கேட்க, உன்னை மறவாத மனமும், மாறாத பக்தியும் வேண்டுமென வேண்டி நின்றான். அவ்வாறே வரமளித்து மன்னனுக்கு வைகுண்ட பதவி அளித்த நன்நாள் வைகாசி மாதம் மூன்றாம் நாளான அட்சய திருதியை நாள்.


அட்சய திருதியையின் சிறப்புகள்...
கௌரி என்றழைக்கப்படும் பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது இந்த நாளில்.
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை சூரியபகவானிடமிருந்து பாண்டவர்கள் பெற்றது இந்நாளில்....

Tripura Sundari - Shri Vidya:
க்ருஷ்ணரின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தது இப்புண்ணிய நாளில்...இந்நாளில்தான் கிருத யுகம் உருவானது...
Parashuram. the 6th Avatar of Vishnu was born to end the atrocities on earth. His axe is well known and mentioned in Ramayana too.:
ஏழ்மையில் வாடிய தன் பால்ய நண்பனின் வறுமையை, ஒருபிடி அவலில் போக்கிய நாளும் இதுவே....ன்றைய தினத்தில்தான் மகாலட்சுமி மகாவிஷ்ணு மார்பில் வாசம் செய்ய வரம் வாங்கினாள்....
மனிதர்களின் பாவத்தை போக்கும் கங்காதேவி பூமியில் உருவான நாளும் இந்நாளே....
Akhilandeshvari — The Goddess Never-Not-Broken:
பிரம்மனின் தலையை கொய்த சிவனின் பாவம் தீர, பிட்சானனாய் உலகை வலம் வந்த வேளையில் அன்னப்பூரணி மாளிகையின் முன் பிட்சை கேட்க... அன்னையானவள் பிட்சை இடஇட உணவு குறைந்துகொண்டே வருவதைக்கண்டு வேதனையுற்று தன் சகோதரனான விஷ்ணுவிடம் உதவிக்கேட்க மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தை அட்சயம் என்று சொல்லி தொட, அது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமானது. அட்சய பாத்திரம் உருவான நாளும் இதுவே.

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் என்றென்றும் நிலைத்து நிற்க மகாலட்சுமியை பூஜை செய்யும் நாளும் இதுவே! இந்நாளில்தான் திருப்பதி வெங்கடாசலபதி, பத்மாவதியை மணக்கும்பொருட்டு, குபேரனிடம் கடன் வாங்கினார். இன்றைய தினம் வரை அசலை கட்டாமல் வட்டிமட்டுமே ஏழுமலையான் கட்டிட்டு வந்தாலும், தனது பக்தர்களின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கிறார். தங்களது திருமணத்துக்கு உதவியதாலாயே மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை குபேரன்மீது எப்போதும் உண்டு.

தேய்ந்து வளரும் சாபத்தால் அவதிப்பட்ட சந்திரன், சிவனை சரணாகதி அடைய சிவனின் ஜடாமுடியில் மூன்றாம் பிறையாக இடம்பெற்றதும் இந்நாளே...

அட்சயதிருதியை அன்று செய்ய வேண்டியது...
மறைந்த முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்யலாம். முன் ஜென்ம வினைகள் தீரும். சுமங்கலி பெண்கள் பூஜை செய்து ஆடைகள் தானம் செய்யலாம். வஸ்திரதானம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும். பசுக்களுக்கு ஒரு பிடி புல் கொடுக்கலாம். தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. அரிசி, சர்க்கரை, உப்பு, மஞ்சளும் வாங்கலாம். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம் நம்பிக்கை.

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலையில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கும்பம் தயாரிக்கவேண்டும். கும்பத்தினில் காசுகள் போடலாம் அல்லது பச்சரிசியில் காசுகள் போடலாம்.


குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். கலசத்தின் அருகில் படியில் அல்லது உழக்கு அல்லது டம்ப்ளரில் நெல் நிரப்பி வைத்து பூ பொட்டு . இன்றைய தினம் லட்சுமி, குபேரன், மகாவிஷ்ணு மூல மந்திரங்களை சொல்லி வழிப்படுதல் நலம். குசேலர் கதையினை படித்தலும் நலம் சேர்க்கும்.
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும். படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவலாம். ஆதரவின்றி தவிக்கும் முதியோருக்கு உதவலாம்.
தங்கத்தை வாங்கி பெட்டிக்குள் பூட்டி வைப்பதால் அது வளர்ந்துடாது. இந்நாளில் தங்கத்தை தானம் செய்யனும். இன்னிக்கு தங்கம் விக்கும் விலையில் இது சாத்தியமில்லை. அதனால, முடிஞ்சளவுக்கு அரிசி, கோதுமை, மஞ்சள், அன்னம் என தானம் செய்வோம். மொத்தத்தில் மகிழ்வித்து மகிழ்வோம்!!

நன்றியுடன்,
ராஜி.

15 comments:

  1. எதெது அவரவர்க்கு சரியாஅப் படுகிறதோ அதை அதை செய்கிறார்கள் இப்படி மக்களின் அறியாமயால்தான் தங்க வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது மார்கெடிங் செய்பவர்கள் பணம் பார்க்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. பைசா இருந்தா நகை வாங்கலாம். இல்லன்னா வீட்டுக்காரர் உயிரை வாங்காம உப்பு, மஞ்சள் வாங்கலாம்.

      Delete
  2. காத்தாடிப்போன ஆடி மாதத்தையே வியாபாரமாக்கி செல்வம் கொழிக்க வைத்து விட்டனர் வியாபாரிகள்.

    அறியாமை மாக்கள் இருக்கும்வரை....

    ReplyDelete
  3. அருமையான பரவசமூட்டும் படங்களுடன் அட்சய திருதியை வரலாறு.......////திருப்பதி வெங்கடாசலபதி, பத்மாவதியை மணக்கும்பொருட்டு, குபேரனிடம் கடன் வாங்கினார். இன்றைய தினம் வரை அசலை கட்டாமல் வட்டிமட்டுமே ஏழுமலையான் கட்டிட்டு வரார்.//// நாம கவலைப்பட வேணாம்....ஆனானப்பட்ட ஆண்டவரே வாங்கின கடன் கட்ட முடியாம வட்டி மட்டும் கட்டிட்டிருக்காரு....... நாம் எம்மாத்திரம்...// நன்றி தங்கச்சி பதிவுக்கு.....

    ReplyDelete
    Replies
    1. கடனை கட்டாத திருப்பதி வெங்கடாச்சலப்பதிக்கு கைவிலங்கிடும் திருவிழா ஆடி முதல் நாள் அன்று நடக்கும். தகுதிக்கு மீறி கடன்வாங்கி கல்யாணம் பண்ணாதீங்கன்னு அன்னிக்கே பகவான் சொல்லிட்டாரு

      Delete
  4. அட்சயதிருதியை என்றெல்லாம் கேரளத்தில் எதுவும் இல்லாமல் இருந்தது. சமீபகாலமாகத்தான் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பார்த்து இங்கும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

    கீதா: ராஜி எனக்கும் இது பற்றி சிறு வயது முதல் எங்கள் ஊரில் எல்லாம் நான் கேட்டதே இல்லை. எனக்குத் தெரிந்து ஒரு 4,5 வருடம் முன்புதான் இப்படி ஒரு நாள் இருக்கிறது என்பதே தெரியவந்தது. தங்கம் வெள்ளி எல்லாம் நமக்கு எட்ட தூரம். துரை செல்வராஜு அண்ணா சொல்லியது போல் நல்ல சிந்தனைகளை வளர்ப்போம்..ந்ல்லதை நினைப்போம்..

    அது சரி இந்தப் பச்சை கலரு ஜிஞ்சுச்சா, சிவப்பு கலரு ஜிஞ்சுச்சா நாள் எல்லாம் இப்ப பேசறதில்லையோ..நடுல அது ஒன்னு கிளப்பி விட்டாய்ங்களே...பச்சை வாங்கிக் கொடுக்கணும்..அப்புறம் வேறு ஏதோ கலர் மறு வருஷம் வந்துச்சு...யாரும் இப்ப சொல்லிக் கேட்கலையே அதான் கேட்டேன் ஹிஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. இப்பயும் திணுசு தினுசா சொல்றாங்க. இந்தமுறை சந்திரகிரகணம் பிடிச்ச நேரம் சரியில்லன்னு சொல்லி, ஒரே ஒரு பொண்ணு மட்டும் வச்சிருக்கவுங்க, 15 பேர்கிட்ட காசு வாங்கி கோவிலுக்கு போயி, பச்சை கலர் வளையல் வாங்கி பொண்ணுக்கு போட்டு கூட்டி வந்து வீட்டில் விருந்து வைக்கனும்ன்னு சொன்னாங்க,

      என் அம்மாக்கிட்ட நானும் உனக்கு ஒரு பொண்ணுதானேம்மான்னு கேட்டதுக்கு,நீ இருந்து சாதிக்கபோறது ஏதுமில்லை. அதனால போய் சேருன்னு சொல்லிட்டாங்க. மை மம்மி ஆல்வேஸ் பகுத்தறிவுவாதி கீதாக்கா

      Delete
  5. அருமையான பதிவு, சிந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்குறதுக்குலாம் இப்ப வேலையே இல்ல. நம்ப ஜனங்க மூளைய பிரெஷ்சா வச்சிருக்க ஆசைப்படுறாய்ங்க

      Delete
  6. உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தளத்தில் பகிர்ந்துமுள்ளேன்.

    ReplyDelete
  7. அட்சயதிருதியைக்கான அர்த்தத்தையே மாற்றி விட்டார்கள். சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கம் மட்டுமே வாங்கனும்ன்னு மனசுல பதிஞ்சுட்டுது.

      Delete
  8. இப்போதெல்லாம் இது வியாபார யுக்தியாக்கி விட்டார்கள். மக்களும் அதை நம்புகிறார்கள் என்பது தான் சோகம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்குமே விளம்பரம்தான்

      Delete