Wednesday, July 16, 2014

சொர்க்க வாசல், மதுரை திருமலை நாயக்கர் மஹால் II - மௌனச் சாட்சிகள்

ரெண்டு வாரங்களுக்கு முன் மதுரை  நாயக்கர் மகாலை சுத்திப் பார்க்க ஆரம்பிச்சோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சுத்திப் பார்க்கலாம்ன்னு நினைச்சு ஓய்வெடுக்க ஆரம்பிச்சு கொஞ்சம் கூடுதலாக ஓய்வெடுத்துவிட்டோம். இன்னிக்கு நாமப் பார்க்கப் போறது நாயக்கர் மகாலின் ஒரு பகுதியான “சொர்க்கவிலாசம்”.

இந்த ”சொர்க்கவிலாசம்” பகுதிதான் மன்னரின் வசிப்பிடமாக இருந்தது. இங்கே கல் பீடத்தின் மேல, யானை தந்தததினாலான ஒரு மண்டபம் இருந்ததாம். இதில் ரத்தினத்திலான ஒரு அரியணை இருந்ததாம். அதன் மீது அமர்ந்துதான் மன்னர் செங்கோல்லாற்றினார் எனச் சொல்லப்படுகிறது.  இந்த மண்டபத்தின் அழகு,  விதானங்களிலும் சுவர்களிலும் வெளிப்படுகிறது. அத்தனையும், வெகுநுட்பமான வேலைபாடுகள் நிறைந்ததாகவும், இதற்க்கு ஈடு இணை வேறு எங்கும் காணப்படவில்லை எனவும் சொல்லபடுகிறது .இந்த அரண்மனைத் தொகுப்பில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தனவாம்.

இங்கே தெரிகிற இந்த வரைப்படம் அரண்மனையின் மொத்த பரப்பளவினை பற்றியக் குறிப்புகள். ஆனா, அவை எல்லாமே தோராயமான அளவுகள். ஏன்னா, நிறைய இடம் சிதிலமடைஞ்சு இருக்கு. சில இடங்கள் புதுபிக்கபட்டு இருக்கு.  திருமலை மன்னர் கட்டுன மகால் வடக்குல தெற்கு மாசி வீதியையும், மேற்குல கூடல் அழகர் கோவிலையும், தெற்குல கிருதமாலா நதியையும் (இப்ப அது ஒரு சின்ன வாய்க்காலா ஆயிடுச்சு), கிழக்குல கீழ வெளி வீதியையும் எல்லைகளா கொண்டிருந்ததுன்னு ஒரு செவி வழி தகவல் உண்டு.
ஹாலின் உள்புறம் இருந்து செல்லும் நுழைவாயில் வழியாக இந்த சொர்க்கவாசலுக்கு செல்லலாம்.  முழுவதும் கலை நயம் மிக்க சிற்பங்கள், தூண்கள்லாம் பார்ப்பதற்கு அழகா இருக்கு. நாம இப்ப ”சொர்க்கவிலாச”த்தினுள் வந்துட்டோம்.

முழுவதும் தூண்களால் ஆனா நாட்டிய சாலையும், எந்த வித பிடிமானமும் இல்லாமல் தூண்ளின் பிடியில் நிற்கும் மேற்கூரையும், உயரமான சாரளங்களும், அந்தக் காலத்து கலையரங்கதினையும், அங்கு நடந்த இசை,நாடக கச்சேரிகளை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகின்றன.

தூண்களின் பின்னணியில் மஹாலின் அந்தக் காலத்து வரைபடங்களும், புகைப்படங்களும் அலங்கரிக்கின்றன.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி நீளமும், 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.    
   
இங்கே காணபடுவது எல்லாம் நாயக்க மன்னர் காலத்தில் வழிப்பாடுகளும், பூஜைகளும் செய்யப்பட்ட சிலைகள். மேலும், பல கல்வெட்டுகளும் காணப்படுகிறது.  அதன்மூல்ம் சில செய்திகளும், வரலாறுகளும் நமக்கு தெரியவருகிறது.  


ராணி மங்கம்மா என்னும் அரசி திறம்பட மதுரையை ஆட்சி செய்ததும், அவர் புதுப்புது நகரங்களை உருவாக்கி மதுரையை சிறப்பாக ஆண்டதும் தெரிகிறது.  ராணி மங்கம்மா திருமலை நாயக்கரின் வழித்தோன்றலே!   ராணி மங்கம்மா இன்றும் தென்னாட்டில் சாதாரணமாக நினைவுக் கூறப்படும் பெயர். தன் மகன் அம்மை நோயில் இறக்க,  பேரன் ஒரு வயதுகூட நிரம்பாமலிருக்க,  மங்கம்மாள் 1689ல் ஆட்சிக்கு வந்தாள். 1706 வரை பதினேழு வருடம் ஆட்சிச் செய்த ராணி மங்கம்மா அதிகம் போர்கள் செய்ததில்லை. தென்னாட்டை போரில்லாது காத்தாள். அதனால் செல்வம் பெருகியது. மங்கம்மாள் அதிகமும் கோயில்கள் கட்டவில்லை. ஆனால் சாலைகள் அமைக்கவும், சந்தைகள் உருவாக்கவும் பெருஞ்செலவு செய்தாள். இன்று தென்தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் ராணி மங்கம்மா போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர், சிவகாசி, கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள் ராணி மங்கம்மா கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன.

இந்த நரசிம்ம சிலை நாயக்க மன்னர்களது காலத்தில் உள்ளது என சொல்லப்படுகிறது.  அதேச்சமயம் நரசிம்மர் வழிபாடு நாயக்க மன்னர்களின் முக்கிய வழிப்பாடாக இருந்திருக்கிறது.  அவர்கள் கட்டிய கோவில் தூண்களில் நரசிம்மர் உருவம் கட்டாயம் இருக்கும்.


 செஞ்சி கோட்டை நாயக்க மன்னர்களின் ஆட்சியில் இருந்த போது அவர்கள் கட்டிய கோவிலின் தூண்கள் எல்லாம் நரசிம்ம உருவம் பொரிக்கப்பட்டுள்ளதை செஞ்சிச் சென்றால் காணலாம். மதுரை அழகர் கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இதெல்லாம் இதற்குச் சான்று. 

இந்த மகாலில் மகாவீரர் சிலையும் இருக்கு.  அதேப்போல் நிறைய சமணப் பள்ளிகளும் அழிக்கப்பட்ட வரலாறுகளும் தெரிகிறது.  அவர்களது வழிபாடுகளில் நாகம் முக்கிய பங்கு வகித்தமையும் தெரிகிறது. நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோவிலும் ,ஒரு சமணப்பள்ளி எனவும் அதை மாற்றி “நாகராஜருக்கு கோவில் எழுப்பினதாகவும் சொல்றங்க.  இதற்கு சான்று 'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகாவீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.


அதேப்போல, கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கோவிலைக் குறிப்பிடுகிறது. இன்று அவரது சிலை மஹாலின் அருங்காட்சியத்தில் மட்டுமே. 

இது இசக்கி சிலை என அழைக்கப்படும் கிராமதேவதையின் வழிபாட்டு சிலை என இங்குள்ள குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிராம தேவதைகள் எல்லாம் நடுகல் வழிபாடு வகையை சார்ந்தது என சில கருத்துக்களும் உண்டு.

இது உடைந்த பீரங்கியின் நுனிப்பாகம்.  இது எந்த போரில்,  யாருக்கு எதிராக எப்பொழுது உபயோகப்படுத்தப்பட்டது போன்ற குறிப்புகள் இல்லை.   

இங்கே இருக்கும் கல்வெட்டுகளில் அண்டை ராஜ்யங்களான திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும்  மற்ற ராஜ்யங்களுக்கும் கொடுக்கப்பட்ட கொடைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் முதற்கொண்டு அவர்களது ஆட்சிமுறை, அரசியல் முறை எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன.  மேலும் ஆங்கிலேயர் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளும் மதராசபட்டினத்து அரசியல் நிகழ்வுகளும் குறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் இங்க இருக்கு.
  
இது அருங்கட்சியத்தின் உட்புற தோற்றம்......,


இது, நாடகச் சபையின் உட்புற தோற்றம்...,

அந்தக் காலத்தில் உபயோகப்படுத்திய ஓலைச்சுவடிகளும், எழுத்தாணிகளும் காண்ணாடிப் பேழைக்குப் பின்னே காட்சிக்காக....,


அருங்காட்சியதைதை விட்டு வெளியே வரும் போது இருக்கும் நாயக்கர் மஹாலின் தோற்றம்.

வேலைப்பாடுகளை உடைய நாயக்கர் மகாலின் உத்திரத்திலுள்ள கலை வேலைப்பாடுடைய சித்திரங்கள்.

பகல் பொழுதுகளில் நாயக்கர் மகாலின் அழகினை பார்த்தா மட்டும் போதுமா!? இரவு நேரத்தில் இம்மாகால் எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா!? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்க....., பார்க்கலாம். 

19 comments:

  1. மாஹாலை அழகாக பார்த்தோம்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி உமையாள்!

      Delete
  2. புகைப்படங்களுடன் திருமலை நாயக்கர் மகாலை சுற்றி காட்டிட்டீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  3. நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது பதிவு! விரிவான தகவல்களுடன் சிறப்புப் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. அழகான வர்ணனை! அழகான படங்கள், விளக்கங்கள்! பல வருடங்களுக்கு முன் பார்த்த மஹாலை இப்போது நேரில் பார்த்த உணர்வு!

    ReplyDelete
    Replies
    1. அக்டோபரில் மதுரையில் நடக்கும் பதிவர் சந்திப்பின் போது மீண்டும் மகாலின் அழகை சுத்திப் பாருங்க!

      Delete
  5. ஆகா
    வர்ணனை அருமை
    படங்கள் அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ!

      Delete
  6. போட்டோக்கள் அருமை அக்கா...
    வர்ணனைகளும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  7. இந்த அழகிய மாளிகைகளும், கோயில்களும் தமிழ்நாடு அந்தக் காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழநாட்டு நதிகளை நதிகளை இடை மறித்து யாரும் அணைகளைக் கட்டாதபடியால், வருடம் முழுவதும் குறைவில்லாமல் ஆறுகளில் தண்ணீர் வந்திருக்கும். அதனால் உண்டாகிய செல்வத்தால் தான் அக்கால மன்னர்கள் கோயில்களையும் மாளிகைகளையும் கட்டினார்கள். நாயக்கர்கள் நிச்சயமாக ஆந்திராவிலிருந்து தமது சொந்தப் பணத்தைக் கொண்டு வந்து இந்த மாளிகையைக் கட்டியிருக்க மாட்டார்கள். எல்லாமே தமிழர்களின் உழைப்பும், தமிழ்நாட்டின் செல்வமும் தான்.

    ReplyDelete
    Replies
    1. தமிழர்களின் உழைப்பையும், செல்வத்தையும் சுரண்டி தன் மண்ணுக்கு கொண்டுப்போகாம இருந்ததுக்கே நாயக்க மன்னர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லலாமே சகோ!!?

      Delete
  8. அழகான படங்களுடன் அழகான வர்ணனை சகோதரி... தொடர்க...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றியண்ணா!

      Delete
  9. அற்புதம்
    மகாலைப்போலவே தங்கள் பதிவும்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஏற்கனவே வந்து பார்த்து கருத்தும் சொல்லியாச்சுங்க டீச்சர்!!

    ReplyDelete
  11. புகைப்படங்களுடன், விபரமான விளக்கங்களும் நேரில் பார்த்ததுபோல் ஒரு உணர்வு
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. சூப்பர் ராஜி.அடுத்து மதுரை போகும் போது கட்டாயம் போகணும். போய் ரொம்ப வருஷமாச்சு.

    ReplyDelete