Friday, March 09, 2018

எங்க ஊரு கோவில் - புண்ணியம் தேடி

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.

புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!
 
முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.
பலவாறு முயற்சிச் செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சிச் செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.
ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.
நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.
கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,
ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.
சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப்பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம், அன்னாபிஷேகம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப்படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 

ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறு,மணல்ன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.
நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சுமக்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.
எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

அடுத்த வாரம் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை தரிசிக்கலாம்....
நன்றியுடன்,
ராஜி.

24 comments:

  1. படங்களுடன் பகிர்தவிதம் நேரடியாக தரிசித்த உணர்வைத்தருகிறது.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  2. அருமையான விளக்கமும்,பிரதிமைகளும்........ நன்றி தங்கச்சி,பதிவுக்கு........

    ReplyDelete
  3. ஆ....ராணியின் வரலாறு அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆரணில ராஜின்னு சொல்லி இருக்கலாமே!

      Delete
  4. படங்களும் பகிர்வும் அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. தகவல்கள் சிறப்பு. பாராட்டுகள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பதிவை படித்து கருத்திட்டமைக்கு நன்றிண்ணே

      Delete
  6. சிறப்பு வாய்ந்த கோவில் என்று தெரிகிறது. அழகிய படங்கள். காலையில் தரிசனம் ஆச்சு.

    ReplyDelete
    Replies
    1. இந்த கோவிலுக்கு போனால் மனசுக்கு அமைதி கொடுக்கும் சகோ.

      Delete
  7. ஆரணி + அப்பு சிறப்பை அறிந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு மீள்பதிவுண்ணே

      Delete
  8. சிறந்த கோவில் தரிசனம்
    தங்கள் பதிவு எங்களை ஈர்த்துக்கொண்டது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ

      Delete
  9. வித்தியாசமான கோயில். தொடர்புடைய கதைகள், நிகழ்வுகள். நல்ல தரிசனம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  10. ஸ்ரீ ஹரிஹர பரந்தாமனின் இனிய தரிசனம்..

    அழகிய படங்கள்... புதிய செய்திகள்... வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. பிரபலம் ஆகாத கோவில்ண்ணே.

      Delete
  11. மிக அருமை ராஜிக்கா..

    அழகிய படங்களுடன் இனிய தரிசனம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  12. உங்கள ஊர் கோவிலைப்பற்றி நல்ல அறிமுகம். விரிவான தகவலுக்கு நன்றி.

    ஜாகிர்தார் என்பது மன்னனின் பெயராக இருக்காது. ஜாகிர்தார் என்பது ஒரு பதவியின் பெயர். குறிப்பட்ட பகுதிக்கு வரிவசூல் செய்ய அரசனால் நியமிக்கப்படும் ஒரு நபர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!? விசாரிச்சு பார்க்கிறேன் சகோ. தகவலுக்கு நன்றிப்பா

      Delete
  13. ஆரணி ஜாகிர் வேதாஜி பாஸ்கர் பந்த் என்பவரால் 17 ஆம் நூற்றண்டில் கமண்டல நாகநதியின் கரையில் ஏற்படுத்தப்பட்டது. கமண்டல நாகநதியின் கரையில் ஒரு அரண்மனை கட்டப்பட்டது. பூசிமலைக்குப்பம் அரண்மனை என்பது இதன் பெயர். மூன்று நூற்றாண்டுகளை கடந்த புகழ்பெற்ற இந்த கட்டிடம் தற்பொழுது பாழடைந்து வருகிறது. இந்த அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபம் ஆட்சிக்கூடம், ராணி மாளிகை, குளியல் குளங்கள், நீராழி கிணறு என பல அம்சங்களும் சிதைவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. .இவரைத் தொடர்ந்து பல ஜகிர்தார்கள் இப்பகுதியை நிர்வாகித்துள்ளனர். இதன் கடைசி ஜாகீர்தாரர் சீனிவாசராவ். சுதந்திர இந்தியாவில் ஜாகீர் பொறுப்புகள் ஒழிக்கப்பட்டபோது ஆரணி ஜாகீர், இந்திய அரசுடன் சேர்க்கப்பட்டது.

    மேலதிக விவரங்களுக்கு காண்க: http://www.arnijagir.com/History.htm http://oneindiaonepeople.com/arni-a-jewel-in-the-jagirs-crown/ http://indiancolumbus.blogspot.com/2017/06/arni-satya-vijaya-nagaram-palace.html

    ReplyDelete