தோஷம் போக்க, கல்யாண வரம் வேண்டி, நோய் குணமாக, கல்வி வரம் கிடைக்க, செல்வம் சேர, குழந்தை வரம் கிடைக்க... இப்படி பலதரப்பட்ட கோரிக்கையோடு கோவிலுக்கு போவோம். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு அனுபவத்தை தரும். கோவிலின் பிரம்மாண்டத்தினை ரசிக்கவே போகும் கோவில்களில் ஒன்றுதான் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் வேலூருக்கு மிக அருகில் இருக்கும் ரத்தினகிரி, பாலமுருகன் கோவில். ஆரணில இருந்து 35கிமீ தூரம்ங்குறதால் வண்டி எடுத்துக்கிட்டு அடிக்கடி போய்டுவேன்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்ன்றது நம்மூரு சொல்லாடல். அதற்கேற்ப சிறிய குன்றின்மீது இந்த கோவில் அமைந்திருக்கிறது. கி.பி. 1245 ஆம் ஆண்டு சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவானதாய் ஆய்வுகள் சொல்கிறது. அப்ப வெறும் மணல்கோவிலாதான் இருந்திருக்கு.
1968ம் ஆண்டு கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த திரு, சச்சிதானந்தம் என்பவர் மின்சாரத்துறையில் வேலை பார்த்து வந்தார். கீழ்மின்னல் கிராமத்திலிருந்து இரத்தனகிரி வழியாதான் வேலைக்கு போறது வழக்கம். 20-03-1968 புதன்கிழமை அன்னிக்கு வழக்கம்போல் அவ்வழியா போன சச்சிதானந்தக்கு என்ன தோன்றியதோ தெரில. என்னிக்குமில்லாம அன்னிக்கு இரத்தினகிரி குன்றின்மீது ஏறி பாலமுருகப் பெருமானை வணங்கினார்.
1968ல் எடுக்கப்பட்ட ரத்தினகிரி மலையின் புகைப்படம்..
ரத்தினகிரி பாலமுருகனடிமை (சச்சிதானந்தம்)
முருகனை வணங்கி, அங்கிருந்த பூசாரியிடம் கற்பூரம் ஆரத்தி காட்ட சொன்னார். கற்பூரம் இல்லையென பூசாரி சொல்ல, சரி ஊதுபத்தியாவது காட்டுங்கள் என சச்சிதானந்தம் சொல்ல, அதற்கும் வழியில்லையென பூசாரி சொன்னார். ஒரு கற்பூர ஆரத்திக்குக்கூட வழியில்லாத நிலையில் அவசியம் கோவில் தேவைதானா?! என அவர் மனசில் வினா எழும்ப சச்சிதானந்தம் மயங்கி விழுந்தார்.
சச்சிதானந்தம் மயங்கி விழுந்ததை கண்டதும், பூசாரி ஆட்களை அழைத்துவர மலையடிவாரத்துக்கு சென்றார். அதற்கிடையில் சச்சிதானந்திற்கு மயக்கம் தெளிய, முருகனின் பரிதாபநிலை மனசில் தோன்ற, மீண்டும் முருகனை பார்த்தார். கருவறையிலிருந்த முருகன் சிலையில் ஒரு ஒளி தோன்றியது. அருகிலிருந்த மணலில், இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். இனி பாலமுருகனுக்கு பணி செய்யும் அடியவனாகவே இருப்பேன். கோவில் திருப்பணி தவிர வேறு சிந்தனை இனி இல்லை என எழுதிவிட்டு, உடைகளை களைந்து வெறும் கோவணத்தோடு முருகன் கோவிலிலேயே அமர்ந்து விட்டார். அன்றிலிருந்து அவருக்கு பாலமுருகனடிமை என்று பெயர் உண்டானது.
சச்சிதானந்தம் பாலமுருகனடிமையானப்பின் யாரிடமும் பேசுவதில்லை. அவரை சுற்றியுள்ளோர் அவரின் தேவையை குறிப்பறிந்து செய்கின்றனர். நமது குறைகள், விண்ணப்பங்களை சீட்டில் எழுதி கொடுத்தால், அதற்கான பதிலை அதே சீட்டில் எழுதி கொடுப்பதை வழக்கம். தொடர்ந்து 35 ஆண்டுகள் எந்த இடத்திற்கும் செல்லாமல் பாலமுருகன் அருகில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்... அவரது சீரிய முயற்சியால் கோவில் பிரம்மாண்டமாய் எழுந்தது.
கோவிலோடு சேர்ந்து 4 திருமண மண்டபம், இலவச மருத்துவமனை, அறக்கட்டளைகள், பள்ளிகள், சிறுவர் இல்லம், முதியோர் இல்லம், அன்னதானம், கண் சிகிச்சை முகாம், மருத்துவ முகாம் என சமுதாயப்பணிகளும் நடந்தேறியது. கோவில் பணியாளர்களுக்கென வீடுகள் கட்டித்தரப்பட்டிருக்கு. பக்தர்கள் தங்குவதற்கு இலவச மண்டபங்களும் உண்டு.
14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இத்தலத்தைப் பற்றி "இரத்தனகிரிவாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே" என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார். "தேவர்களின் கடவுள் இரத்தனகிரியில் வசிக்கிறார்" என்பதே இதன் பொருள். மேலும் அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில் "ஒப்பில்லாத மாமணி வித்தகர்" எனச்சொல்லி பாடியிருக்கிறார்.
வேலூர், ஆற்காட்டிலிருந்து நேரடி பேருந்தும், வேலூர் டூ ஆற்காடு செல்லும் டவுன்பஸ்கள் ரத்தினகிரியில் நின்று செல்லும். அங்கிருந்து சுமார் 500மீ தூரத்தில் மலையடிவாரம் வரும். அங்கிருந்து படிகள் வழியாக மலைக்கு செல்லலாம். முடியாதவர்கள் வாகனங்களில் செல்ல தனிவழியும் உண்டு.
மலையடிவாரத்தில் துர்க்கைக்கு தனிச்சன்னிதி உண்டு. கூடவே முருகன் வாகனமான மயிலின் பராமரிப்புக்கூடமும் உண்டு. மலைமீதிருக்கும் முருகன் கோவில் வாயிலே நம்மை பல வண்ணங்கள் மிளிர பிரம்மாண்டமாய் வரவேற்கும். நீண்டு நெடிதுயர்ந்த தூண்கள், அதில் யாழிகளின் சிலாரூபம் என மிரட்டும்.
பளப்பளக்கும் மார்பிள் தரை. நுழைவுக்கட்டணமாய் 5 ரூபாய் வசூலிக்கப்படுது. கொடிமரத்தை வணங்கி, உள்நுழைந்தால் முதலில் தரிசிப்பது முழுமுதற் கடவுளான வினாயகர். அவரை வணங்கி வெளியில் வந்து சில படிகள் ஏறினால் நாம் தரிசிப்பது உற்சவமூர்த்தியான சன்முகரை...
உற்சவ மூர்த்தியை தரிசித்தபின், மூலவரை தரிசிக்கவேண்டும். வெறும் 100 சதுர அடியில் மட்டுமே இருந்த இக்கோவிலை மிக பிரம்மாண்டமாய் கட்டினாலும், கருவறை பழைய கோவிலின் அளவே இருக்கிறது. யானைகள் இழுத்துச்செல்லும் தேர் வடிவில் கருவறை அமைந்திருக்கிறது.
இங்கு பூஜையின்போது அர்ச்சகர்கள், மலர்கள், நைவேத்தியம், பூஜைப்பொருட்கள் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையிலேயே இருக்கும். ஐப்பசியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். முருகன் சிவ அம்சம் என்பதால் இங்கு முருகனுக்கும் ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படும்.
தல தீர்த்தமான ஆறுமுக தெப்பம், அறுங்கோண வடிவில் பிரம்மாண்டமான தெப்பக்குளம் கட்டுமாணப்பணியில் உள்ளது. இங்கு முருகன் பாலகன் வடிவில் இருப்பதால் கந்தசஷ்டியின்போது சூரசம்ஹார விழா கொண்டாடப்படுவதில்லை.
மலையடிவாரத்தில் வராஹிக்கென தனிச்சன்னிதி உண்டு. இங்கு வாழையிலையில் அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நெய்தீபம் ஏற்றி வணங்கினால் திருமணத்தடை நீங்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் மொட்டை அடித்து காவடி எடுப்பது வழக்கம். தைப்பூசம், ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், கார்த்திகை கிருத்திகை உள்ளிட்ட அனைத்து முருகருக்குண்டான அனைத்து விசேசங்களும் சிறப்பாக நடைப்பெறும். அதுமட்டுமில்லாமல் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, நவராத்திரி, ஆடி, தை வெள்ளிகளில் துர்க்கை கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
இக்கோவில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரையும், மாலை 3.30முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்படும். மலைமீதேற ஷேர் ஆட்டோக்கள் வசதியுமுண்டு. ஒரு நபருக்கு 10ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. சிறிய ஹோட்டல்கள், பொரி கடலை, ஊசி பாசி மணி கடைகள் இருக்கும். பெரிய ஹோட்டல்தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்குறவங்களுக்கு சுமார் 500மீ தூரத்தில் 3 ஸ்டார் ஹோட்டல் இருக்கு.
படங்கள் வாட்ஸ் அப்பில் வந்ததும்... அப்பப்ப மொபைலில் சுட்டதும்...
நன்றியுடன்,
ராஜி
கோவிலும் அழகு முருகனைப் போலவே...
ReplyDeleteஅதிக ஜன சந்தடியில்லாம, வெகு சுத்தமாய், கட்டண தரிசனமில்லாம முருகனை தரிசிக்கலாம். மனசுக்கு இதமாய் இருக்கும்.
Deleteபிரமாண்ட கோவிலில் பாலமுருகன்.
ReplyDeleteகோவிலைவிடவும் ஊர் மிக பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கு.
Deleteகோவில் ரொம்ப அழகா இருக்கு. நல்ல படங்கள். பாலமுருகனடிமை அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறேனே தவிர கோவிலைப்பற்றி இவ்வளவு தெரியாது....
ReplyDeleteகோவிலைப்பற்றி அறிந்துக்கொண்டமைக்கு நன்றி சகோ
Deleteகணக்கில் பதினாறு வருடங்கள் இடிக்கிறது! 2003 இல் எழுதப்பட்டதோ?
ReplyDeleteஹோசூர் செல்லும் வழியில் இந்தக் கோவிலைக் கண்டிருக்கிறேன். ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்கிற ஆவலுண்டு.
நான் கணக்கில் கொஞ்சமல்ல நிறையவே வீக். அங்கிருந்த தகவல் பலகையை படமாக்கி அதை பார்த்து அப்படியே ஈயடிச்சான் காப்பி பண்ணது. அதான் இப்படி ஒரு சொதப்பல். இனி இத்தவறு நிகழா வண்ணம் பார்த்துக்குறேன்.
Deleteபடங்களும் பகிர்வும் அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete