Saturday, May 18, 2019

பிறந்தநாள்... இன்று முருகனுக்கு பிறந்த நாள் - வைகாசி விசாகம்


வைகாசி விசாகம் எனப்படும் நன்னாளான இன்றுதான் முருகப்பெருமான் அவதரித்த தினம்.  வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில்தான் முருகன் அவதாரம் நடந்தது. அதாவது முருகருக்கு ஹாப்பி பர்த்டே இன்னிக்கு.   விசாகம் நட்சத்திரமென்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டாகும். 

மக்களுக்கும் , தேவர்களுக்கும் பெரும் இன்னலை கொடுத்துக்கொண்டிருந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் மற்றும் அசமுகியை வதம் செய்யும் நோக்கோடு முருகப்பெருமான் படைக்கப்பட்டார். தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள் என்ற ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் இறைவன் எனும் ஒருவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் பொருட்டு  முருகப்பெருமான் தோற்றம் ஆறு என்ற எண்ணிக்கையில் உண்டாக்கப்பட்டது.

வைகாசி மாதம் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலாயே இம்மாதத்தை வைசாகம் என்றழைக்கப்பட்டு வைகாசி என்றழைக்கப்படுது. வைகாசி மாத பௌர்ணமி தினத்தைதான் நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடுறோம்.  “வி”ன்னா பட்சி, ”சாகன்”என்றால் சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில்மீது வலம் வருவதால் முருகனுக்கும் விசாகன் என்றும் ஒரு பேருண்டு.  பகைவனுக்கும் அருளும் தன்மைக்கொண்ட முருகனுக்கு இந்நாளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் போன்ற தலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுது. இந்நாளில் மக்கள் பால்குடம் ஏந்தி வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்துவிக்கப்படும்.  இன்றைய தினம் விரதமிருந்து முருகனை வேண்டிக்கொண்டால் நினைத்தது ஈடேறும். குழந்தை இல்லாதவர்கள் விசாகத்தன்று பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டால் அடுத்த விசாகத்திற்குள் குழந்தை வரம் கிடைக்குமென்பது கண்கண்ட உண்மை. திருமணமாகாதவர்களும் இவ்விரதம் கடைப்பிடிக்கலாம். ஆண்களும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கலாம். பால்காவடிகள் எடுத்து இறைவனை தியானித்தால் சகல சௌபாக்கியமும் கிடக்கும்.
Sri Karthikeya and Shivalingam:
ராம அவதாரத்திற்கு முன்பே கந்தர் அவதாரம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. முனிவர்களின் யாகத்திற்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய ராம, லட்சுமணனை விஸ்வாமித்திரன் அழைத்து செல்கிறார். அவ்வாறு செல்லும்போது கந்தப்பெருமானின் பிறப்பு, பத்மாசூரனை அழித்த கதையை சொல்லி சென்றதாக வால்மீகி தன் ராமாயாணத்தில் ‘குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். பின்னாளில் இந்த வாசகமே காளிதாசருக்கு தலைப்பாய் அமைந்துவிட்டது. 

.
இனி முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்வினை பார்ப்போம்...

பத்மாசுரன் என்பவன் கடும் தவமிருந்து சிவனுக்கு இணையான ஒருவரால் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்கக்கூடாது. அவ்வாறு வரும் ஒருவனும் பெண்ணால் வந்தவனாக இருக்கக்கூடாதெனவும் வரம் வேண்டுமென ஈசனிடமே வரம் கேட்டு, அவ்வாறே வரமும் வாங்கிக்கொண்டான்.  பிறகென்ன?! பெண் சம்பந்தமில்லாம எப்படி குழந்தை பிறக்கும்?! அதும் ஈசன் மூலமாய்...  இப்படி ஒரு பிறப்பு நிகழாதென ஆணவம் கொண்டு தேவர்களை துன்புறுத்தினர்.  தேவர்கள்  சிவனிடம் சென்று முறையிட சென்றனர். தட்சிணாமூர்த்தி தோற்றத்தில் சிவன் தவம் புரிய, அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவம் புரிந்துக்கொண்டிருந்தாள். இந்நேரத்தில் எதுக்கேட்டாலும் கிடைக்கும் என்று உணர்ந்திருந்த தேவர்கள் சிவனிடம், அசுரர்களை அழிக்க ஒரு அம்சம் தங்களால் ஒரு அம்சம் வேண்டுமென வேண்டி நின்றனர்.

பத்மாசூரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கி கங்கை நதியில் விட்டார். வாயுதேவனும், வருணபகவானும் அந்த குழந்தையை சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தனர்.  அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்கள்  வளர்த்து வந்தனர். குழந்தையை காண வந்த பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அள்ளி அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாகியது. இக்குழந்தைக்கு ஆறு முகம், பனிரெண்டு கைகளென திகழ்ந்தது.

முருகனுக்கு சுப்ரமணியன் என்றும் பெயர் உண்டு. ஸுப்ரஹ்மண்யன் என்ற பெயரே இவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த பெயருக்கு பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவப்பெருமானே பரமாத்மா. அவரின் பிள்ளை பரமாத்மாவின் அம்சம் என்று பொருள்படும்படி இப்பெயர் வந்தது.


முருகப்பெருமான் தன்னுடைய ஆறு வயது வரை மட்டுமே குழந்தைப்பருவ லீலைகளை புரிந்தார். பிரம்மாவும்க்கு ’ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தது, அப்பனுக்கே பாடம் சொன்னது, அவ்வையின் தலைக்கனத்தை அழித்தது, ஞானப்பழத்துக்காக சண்டையிட்டு பழனி மலையில் நின்றது என பல லீலைகள் புரிந்தார்.  ஆனாலும், அவரின் அவதார நோக்கமாகிய பத்மாசூரன் வதத்திற்குள் இத்தனையும் லீலைகளையும் புரிந்தார்.


பத்மாசூரனை வெல்ல தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவசேனாதிபதியென பெயர் பெற்றார். தேவசேனா என்பது தெய்வானையின் ஒரு பெயராகும். அவளை மணந்து தேவர்களின் பரிசினை ஏற்றார். குறவர்குல மகளான வள்ளியை மணந்து இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதமில்லை என உலகுக்கு உணர்த்தினார்.

பணிரெண்டு கரங்களின் வேலைகள்...

பனிரெண்டு கைகளின் வேலைகள் இரு கைகள் நம்மை காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது, நாலாவது கை தன் தொடையில் இருக்கிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது கை வேலை சுழற்றுகின்றது. ஏழாவது கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. எட்டாவது கை மார்பிலிருக்கும் மாலையை சுழற்றுகிறது. ஒன்பதாவது கை கைவளையலை சுழற்றிக்கொண்டு நம் வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை அருளோசையை எழுப்புகின்றது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பனிரெண்டாவது கை மணமாலையை சூட்டுகிறது...

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்...

புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதாரமும், ஞானமும் பெற்றது இந்நாளில்...

வைணவ பக்தி மார்க்கத்தை பின்பற்றி, நெறிதவறாமல் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினம் இத்தினம்...

வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவிய நாள் இந்நாள்....

காஞ்சிப்பெரியவர் இந்நாளில்தான் அவதரித்தார். பல தெய்வங்களுக்கு வைகாசி விசாகத்தன்று விழாக்கள் எடுப்பதால் இந்த மாதத்தை ‘மாதவ மாதம்’ன்னு பேர் பெற்றது..


எமதர்மன் பிறந்த நாள் இன்றுதான். வைகாசி விசாகத்தன்று யமனுக்கு பூஜை செய்து நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமென வேண்டி கொள்வர்.

இந்நாளில் இந்திரன், சுமாமிமலை முருகனை வணங்கி, இழந்த தன்  ஆற்றலை திரும்ப பெற்றான். திருமழப்பாடியில் ஈசன் இந்நாளில் திருநடனம் புரிகிறார்.  மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபதா ஆயுதத்தை பெற்றது இந்நாளில்...


மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சபவ விழா பத்து நாட்கள் சிறப்பாக இந்நாளில் நடைபெறும். கன்னியாக்குமரி  பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக நடைப்பெறும். காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலிலும், கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலிலும் கருட சேவை நடைப்பெறும். காஞ்சிபுரம் சுற்றீயுள்ள 16 வகை பெருமாள்கள் ஒரே நேரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவது சிறப்பு..

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் நரசிம்மரின் உக்கிரம் குறைய  வருடம் முழுதும் சந்தன காப்பில் இருப்பார். இந்த விசாக தினத்தன்று காப்பு அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  ராமநாதப்புரத்தில் உத்தரகோச மங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டால் சகல தோசமும் நீங்கும். உச்சிக்கால வேளையில் தலையில் பச்சரிசி, அருகம்புல் வைத்து நீராடினால் பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.

இதுமட்டுமின்றி திருச்சேங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மற்றும் பல திரௌபதி அம்மன் கோவில்களில் திமிதி விழாவும், அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் திருவிழாக்களும் இந்நாளில் சிறப்புற நடைப்பெறும்..

விரதமிருக்கும் முறை...

வைகாசி விசாக விரதமிருக்க விரும்புபவர்கள் பிரம்ம மூர்த்தத்தில்  எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி இரவு பால் அருந்தி விரதம் முடிக்கலாம்,.  முருகன் கோவில் அமைந்துள்ள மலையை கிரிவலம் வந்தாலும் நல்லது. இவ்விரதத்தை மேற்கொள்வோர் பானகம், மோர், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். அன்று முழுவதும் முருகனின்  மந்திரமான ஓம் சரவணபவ,  ஓம் முருகா என்பவற்றை உச்சரித்தல் சிறந்த பலனை அளிக்கும். கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம் புத்தகமும் படிக்கலாம்.

நாற்புறமும் பல்வேறு அபாயங்கள் நம் தேசத்தையும், மக்களையும் சூழ்ந்துள்ள நிலையில், வெற்றிவேல் நமக்கு உற்ற துணையாகட்டும். வீணரை வீழ்த்திய வீரவேலின் சக்தி நம் நெஞ்சில் குடிகொள்ளட்டும். சூரனை வென்ற சுடர்வேல் நம்மை முப்போதும் எப்போதும் காக்கட்டும்!! திருச்செந்தூர்வாழ் முருகன்தான் எல்லாத்துக்கும் துணையாய் இருக்கனும்! அருகிலிருப்போரை முதல்ல கண் திறந்து பாரப்பா!

வெற்றிவேல்! வீரவேல்!

நன்றியுடன்,
ராஜி.

5 comments:

  1. முருகன் அருள் நமக்கெல்லாம் பூரணமாகக் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  2. முருகா சரணம்

    ReplyDelete
  3. முருகனின் பிறந்தநாளுக்கு சிறப்பு பகிர்வு வாழ்துகள்.

    ReplyDelete
  4. தமிழ்க்கடவுள் முருகன் என்னு தொலைக்காட்சி டொடர் இருந்தது கார்த்திகைப் பெண்கள் ஓராறு பேரும்கண்டுகளிக்கும் பாலன்

    ReplyDelete