Monday, March 23, 2020

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காதற்கு இதுதான் காரணம்- ஐஞ்சுவை அவியல்


ஏய் புள்ள! எதுக்கு வாசல் கோலத்து நடுவுல சொம்பும் வேப்பிலையும் வச்சிருக்கே?
அதுவா மாமா!? கொரோனா வைரஸ் நம்ம வீட்டுக்குள் வராம இருக்கத்தான்.  பூமில பாவாத்மாக்கள் அதிகமாகிட்டதால் சமயபுரம் மாரியம்மனுக்கு கோவம் வந்திட்டுதாம். அவதான் ஜனங்களை  கொத்தா அள்ளிக்க இந்த வைரசை அனுப்பினதாகவும், அதிகாலையில் எழுந்து குளிச்சு, வாசல் தெளிச்சு கோலமிட்டு, ஒரு குடத்து தண்ணில மஞ்சப்பொடியை கலந்து குடத்துக்கு பூ வச்சு, வேப்பிலை சொருகி வச்சா கொரோனா வீட்டுக்கு வராதுன்னு சொன்னாங்க. அதான் செஞ்சேன். 

எந்த தெய்வமாவது தன்னோட குழந்தைகளை இப்படி அநியாயத்துக்கு அழிக்குமா?! இறைவன் அனைத்து உயிர்களும் வாழத்தகுந்த மாதிரி  எல்லா ஏற்பாட்டோடவும் உலகத்தை படைச்சான். எல்லா உயிர்களும் நல்லபடியா வாழ்ந்து வந்தது. மனிதன் வரும்வரைக்கும்... பரிணாம வளர்ச்சியில் மனிதன் எப்ப  உருவானோனா அப்பவே பூமிக்கு பிரச்சனை உண்டானது. தனது இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழாமல் தன்னோட  ஆடம்பரத்துக்காக, வெற்று கௌரவத்திற்காக கண்ட கருமாந்திரத்தினையும் படைச்சு, அதையும் அளவில்லாம பயன்படுத்தி நாட்டை சுடுகாடாக்கிட்டோம். அதன் விளைவுதான் புதுப்புது வியாதிகள் வந்துக்கிட்டிருக்கு. அதைவிட்டு மாரியாத்தாளுக்கு கோவம், பிள்ளையாருக்கு கோவம்ன்னுட்டு...

அப்ப கொரோனா வைரஸ்ன்னா கிருமியா மாமா?!   அந்த பூச்சி எப்படி இருக்கும்?!


வைரஸ்சை உயிர்ன்னு சொல்லக்கூடாது. உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் ஒருசேர வைரசில் இருக்குறதால் இது உயிரியல் ஆராய்ச்சியாளர்களை தலையை பிச்சுக்க வைக்குது. வைரஸ் தாவர செல் அல்லது விலங்கு செல்லினுள்ளே வளரும் தன்மையுடையது. எதாவது செல் இல்லாமல் இது பல்கிப்பெருகாதுன்றதுதான் நமக்கான ஒரே ஆறுதல்.  நியூக்ளிக் அமிலமும், புரதம், மற்றும் என்சைம்களை கொண்டது. திடீர் மாற்றத்தை இது அடையும்.  ஆனா,வளர்சிதை மாற்றத்துக்கு உட்படாது. இதுக்கு புரோட்டோபிளாசம் கிடையாது.  

வைரஸ் பல்கிப்பெருகி தன்னோட இனத்தை தக்க வச்சுக்கனும்ன்னா உயிருள்ள செல் வேணும். செல் கிடைக்காத வரை இது மரபணு செய்திகள் இருக்கும்  புரதத்தாலும்,  மென் கொழுப்பினாலும் சுற்றப்பட்ட ஒரு உயிர் பொருள். உயிர் பொருள்தானே உயிர் இல்ல. அதாவது புரியும்படியா சொல்லனும்ன்னா ஸ்லீப்பர் செல்ன்னு வச்சுக்கலாம். இது எந்தவொரு உயிரினத்தின் செல்லுடன் சேராதவரை ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா எதாவது ஒரு உயிரினத்தின் செல்லோடு இது சேர்ந்துட்டா... அதன் விளைவு பயங்கரமானதா இருக்கும்.
பாக்டீரியாவது 10 அல்லது 15 நாள் தனித்து வாழும். ஆனா, இந்த வைரஸ் எதன் துணையுமில்லாம வாழாது. வளராது. புரதமும்,மென்கொழுப்புமாய் இருக்கும் இந்த உயிர்பொருள் எதாவது தாவர/விலங்கு/பறவைகள்/மனிதர்கள்கிட்ட சேர்ந்தப்பிறகே இது வைரசா மாறுது.  எதாவது ஒரு செல்லினுள் வைரஸ் சென்றதும், அந்த செல்லின் டி,என்.ஏக்குள் புகுந்து தன்னோட வேலையை காட்டும். 

மனித உயிருக்கே உண்டான ஒரு வரப்பிரசாதம் ஒன்னு நம்ம உடலில் இருக்கு. அதான் நம்ம நோய் எதிர்ப்பு மண்டலம். அதாவது, நம் உடல் அமைப்பு சாராத ஏதாவதொரு செல் நம் உடலுக்குள் நுழையும்போது  Antibodies ன்னு சொல்லப்படும் எதிர்ப்பு புரதம் உருவாகி, உடலுக்குள் நுழைஞ்ச அந்த புதிய செல்மீது ஒட்டி  CD4+ன்னு சொல்லப்படும் வெள்ளையணுக்களுக்கு அடையாளம் காட்டும். வெள்ளையணுக்கள் உடலுக்குள் வந்த  அந்நிய பொருளை அழிக்கும். இதான் எல்லா உடல்களிலும் நிகழும்,. ஆக, ஒரு வைரஸ் உடலில் நுழைஞ்சு, உடலுக்கு சொந்தமான செல்களின்மேல் அதன் புரதத்தை ஒட்டி அமர்ந்து, அதன் DNA-வையோ, RNA-வையோ உட்செலுத்தி, வைரஸ் செல்கள் பல்கிப்பெருகும் இப்படி உருவாகும் வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களைத் தாக்கி, போய்க்கிட்டே இருக்கும்.  இதுதான்  இந்த வைரஸின் ஆபத்தான  செயல்...

இப்படி அடுத்தடுத்த செல்களை வைரஸ் தாக்கும்போது  வெள்ளையணுக்கள் குழப்பம் அடையும்.  நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க லேட் ஆகும்.  ஒவ்வொரு செல்லுக்குள்ளும் போன வைரஸ் பன்மடங்கி பெருகி நோயை உண்டாக்கினப்பின்னரே, உட்புகுந்த வைரஸை நோய்எதிர்ப்பு மண்டலம் தாக்கி அழிக்கும். அதன்பின் அந்த வைரஸைப் பற்றி ஞாபகசக்தியை (Cognition) நம் நோய் எதிர்ப்பு மண்டலம் பெறுகிறது... ஆக, அடுத்த முறை அந்த வைரஸ் உள்நுழையும் போது நம் நோய் எதிர்ப்பு மண்டலம் உடனே தாக்கி வைரஸை அழிக்கிறது. எதாவதொரு வைரசால் பாதிக்கப்பட்டு குணமடந்த பின்னர் வாழ்நாளில் மீண்டும் அதே வைரசால் பாதிக்கப்படுவதில்லை. அதனால்தான், தடுப்பு மருந்துன்னு நாம உடலில் போடப்படும் ஊசியில் எந்த மருந்தும் இல்ல.  பெரியம்மை, போலியோ, மஞ்சள் காமாலை வைரஸ் நம் உடலை தாக்குறதுக்கு முன்னாடியே,  அதன் தன்மைகளும், மரபணு செய்தியும் கொண்ட வைரஸின் அடையாளத்துடன் கூடிய வீரியம் குறைக்கப்பட்ட வைரஸை நம்ம உடலில் செலுத்தி, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி விடுவதுதான் நாம போட்டுக்கும் தடுப்பூசியின் சாராம்சம்.  இப்படி செய்யுறதால், நோய் உண்டாக்கும் செல்லின்  Carrier Chain அறுபட்டு அந்த வைரஸ் பரவல் தடைபட்டு, ஸ்லீப்பர் செல்லாகவே நம் உடலில் காலத்துக்கும் இருக்கும். 
டிப்ஸ் 3 படிச்சதும்.. மாமா ரியாக்சன்..
போற உசுரு கொரோனாவிலயே போகட்டும்...

ஒரு வைரஸ் உருவாக்கும் நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கனும்ன்னா அந்த வைரசின் முழு தகவல்கள், அதன் அமைப்பு, புரதம், மென் கொழுப்பு படலம் தேவை, இவற்றைவிட, மிகமிக,முக்கியமாக அது DNA அல்லது RNA வகை மரபணு செய்தியை (Genetic Material) தன்னகத்தே கொண்டிருக்கிறதாவென தெரியனும். ஏன்னா,  DNA வகை வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது ஈசி.  DNA வகை வைரசால் உண்டானதுதான்   பெரியம்மை, தட்டம்மை,போலியோ மாதிரியான நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள்.  இந்த வகை வைரசில் மரபணுவின் தோற்றமும் கட்டமைப்பும் மாறாத மாதிரி அந்த வைரசில் ஒரு செக்யூரிட்டி லாக் மாதிரி ஒரு கட்டமைப்பு உண்டு. அதனால், பல்லாயிரம்  வருசங்களாக DNA வைரஸ்களின் மரபணு செய்தியில் மாற்றம் இல்லாததால் ஈசியா நம்மால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

வைரசில் இன்னொரு வகையான RNA வகை வைரஸ்களே மிகப்பெரிய பேரழிவை இதுவரை செஞ்சிருக்கு.  இந்த இரண்டாவது RNA வகை வைரசில்தான் எயிட்ஸ், எபோலா, இன்ஃப்ளுயன்சா, சார்ஸ் முதற்கொண்டு இப்ப புதுசா வந்திருக்கும் கொரொனா வரை சேருது.  இந்த வகை வைரஸ்களின் மரபணு செய்தி வரிசை, எதாவது ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து ஸ்டடியா உக்காந்து, அந்த செல்லாகவே மாறி  தன்னைப்போலவே இன்னொரு செல்லை வடிவம் மாறிக்கும் தன்மைக்கொண்டது.  அதனால்தான் இந்த மாதிரி நோய்க்கான தடுப்பூசியை கண்டுப்பிடிக்க முடியல.  எதாவது ஒரு செல்லை வச்சு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நம்ம உடம்புல போட்டாலும், தடுப்பூசி உருவாக்கி நம் உடலில் செலுத்தினாலும், Mutate ஆகி அடுத்து வரும் வைரஸை அது எதுவும் செய்யாது. . இதில்தான் பெரும் சிக்கல் உண்டாகுது.  ஒவ்வொரு முறையும் RNA வைரஸால் நோய்வாய்ப்பட்டு, நம் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்த்துப் போராடி அதை வென்று நம் உடலைக் காக்கிறது. அடுத்த முறை அதே வைரஸ் வேறொரு Mutated RNA உடன் வந்து மீண்டும் நோயை ஏற்படுத்துகிறது.  HIV வைரஸ் ஏன் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துச்சுன்னு சொன்னா,  HIV வைரஸ் உடலுக்குள் நுழைஞ்சதும்,  CD4 என்னும் வெள்ளையணுக்களை அழிக்குறதுதான். அதுக்கப்புறம் இது உடலுக்கு தீங்கானதுன்னு Antibodies சொன்னாலும்  HIV வைரசை அழிக்க அங்க யாரும் இருக்குறதில்லை. அதுக்கப்புறம் வரிசையா எல்லா நோயும் HIV வைரஸ் தாக்கப்பட்ட ஆட்களுக்கு வரும்.
Antiretroviral மாதிரியான மருந்துகள் தற்காலிக நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு தந்து,  வைரஸ் பரவலைத் தடுக்குமே தவிர RNA வைரஸ்களுக்கு முழுமையான மருந்தும், தடுப்பூசியும் கிடையவே கிடையாது. 

மஞ்ச தண்ணி தெளிக்குறது, நிலவேம்பு கசாயம் குடிக்குறது, வேப்பிலையை கட்டுறதுன்னு நம்மாளுங்க பண்ற அலும்புனால  காய்ச்சல், புண் மாதிரியான சின்ன சின்ன உபாதைகள் அப்போதைக்கு குணமாக வாய்ப்புண்டு. ஆனா,  உடலுக்குள் புகுந்த வைரசை  ஒன்னுமே பண்ண முடியாதுன்றதுதான் உண்மை. வைரஸ் உடலுக்குள் புகுந்தால் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம்தான் அவற்றுக்குலாம் ஒரே தீர்வு.  எபோலா,சார்ஸ்,ஃப்ளூ வைரசைவிட HIV வைரஸ் வித்தியாசப்பட்டதுப்போல,  இப்ப வந்திருக்கும் கொரோனா வைரஸ்சும் வேறுபட்டுள்ளது. மற்ற வைரஸ்சின் மேற்புறத்தைவிட,  கொரோனா  வைரஸ்சின் மேற்புறம் தடிமனானது.  மற்ற வைரஸ்கள், சளி, ரத்தம் மாதிரி எதாவதொரு ரூபத்தில்  உடலைவிட்டு  வெளியில் வந்தால் சில மணிநேரமே உயிர்ப்புடன் இருக்கும். ஆனா, இந்த கொரோனா வைரஸ் மட்டும் சில நாட்கள் வரை நாம் பயன்படுத்தும் பொருட்களில் உயிர்வாழ்கிறது. 

இந்த கொரோனா வைரஸ் ஒரு மரபணு பிறழ்ந்த விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததா சொல்றாங்க. கொரோனா வைரஸ் இன்னமும் அதன் மரபணுவை மாற்றிக்கொள்ள வாய்ப்ப்பு இருக்கு. இப்ப சளி, இருமல்., தும்மலினால் பரவி, வாய், கண், மூக்கு வழியா உடலுக்கு செல்லும் தன்மைக்கொண்டதா இருக்கு. இப்போதைக்கு உடலுறவு, ரத்தம் மூலமா பரவும்  HIV வைரஸ் தன்னிலை பிறழ்ந்து,   நாளைக்கே இது காத்துல பரவக்கூடியதா மாறவும் வாய்ப்பிருக்கு. இதுவரை இரு வைரசுமே விலங்குகளுக்கு இந்த வைரஸ் எந்த பாதிப்பும் உண்டாக்கலை. ஆனா, நாளைக்கே விலங்குக்கோ, பறவைகளுக்கோ பரவினால் இன்னமும் பாதிப்பு அதிகம்.  இப்போதைக்கு இந்த வைரஸ்களிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இருக்குறது ரெண்டே வழிதான். ஒன்னு அந்தந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்ற மாதிரி விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கனும்.  ஒருவேளை, நோய் தொற்று ஏற்பட்டால்,  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரித்துக்கொள்வதுதான்.   


புதுசா கொரோனா வைரஸ்  உருவாகி நம்மை கதிகலங்க வைக்கும் இவ்வேளையில்,  பாதிக்கப்பட்டவர் தகுந்த சிகிச்சையோடு தனிமையில் இருங்கள்.  வெளியிடங்களுக்கு செல்லாமல்   வைட்டமின் சி இருக்கும் உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.  பாதிக்கப்படாதவங்களும் அவசியமில்லாதபோது வெளியில் போகாதீங்க.  அடிக்கடி சோப் போட்டு கை கழுவுங்க. யாரா இருந்தாலும் ஒரு மீட்டர் தூரத்தில் எட்ட நின்று பேசுங்க. முடிந்த மட்டிலும் யாரையும் தொட்டு பேசாதீங்க! வீட்டில் எந்த விசேசமும் வைக்காதீங்க.  

ஊருக்கு நாலு சாமி இருந்தாலும் எந்த சாமியும் நம்மளை வந்து காப்பாத்தாது. சக மனுசன்தான்  காப்பாத்துவான். சாமிலாம் ஒரு ஆறுதலுக்கு சொல்லியழ மட்டும்தான். களத்தில் இறங்கி வேலை செய்ய, நம்மை பாதுக்காக்க போலீஸ், மருத்துவ பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள்தான்.   மார்ச் 31வரை ஊரடங்கு உத்தரவு இருக்கும் இவ்வேளையில்  ஆதரவற்று இருக்குறவங்களுக்கு ஒருவேளை உணவாவது கொடுங்க. வசதி இருந்தால் சோப், துண்டு வாங்கி கொடுங்க.  மருத்துவ பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் நமக்காக நேரங்காலம் பார்க்காம வேலை செய்யும்போது நாம இங்க அவங்க குடும்பத்தை கவனிச்சுக்கலாம். அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம். இப்படி விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் நடந்துக்கிட்டா கொரோனா வைரஸ் நம்மை அண்டாது.அப்படியே  நமக்கு வந்தாலும் பாதிப்பு அதிகமா இருக்காது.  இந்த கொரோனா வைரசை விரட்ட செய்ய வேண்டியது....

மஞ்ச தண்ணி, வேப்பிலைன்னு போகாம, தனித்திருப்போம்... விழிப்புடன் இருப்போம்.. அடிக்கடி கைகளை கழுவுவோம்.. சரிதானே மாமா!

சரிதான் புள்ள!

நன்றியுடன், 
ராஜி

4 comments:

 1. பார்ரா என்னவொரு ஆய்வு...

  கடைசியிலே வந்தேறி + நாதாரி ஆரியர்களுக்கு என்று சொல்லாமல், சொன்ன விஜய் சேதுபதி போல் இருக்கே - பல வரிகள்...! வாழ்க நலம்... ஹா... ஹா...

  ReplyDelete
 2. விரிவான தகவல்கள்.

  நலமே விளையட்டும்.

  ReplyDelete
 3. மிகச் சிறப்பான பதிவு.  

  ReplyDelete
 4. //ஊருக்கு நாலு சாமி இருந்தாலும் எந்த சாமியும் நம்மளை வந்து காப்பாத்தாது. சக மனுசன்தான் காப்பாத்துவான். சாமிலாம் ஒரு ஆறுதலுக்கு சொல்லியழ மட்டும்தான்//

  நன்றி ராஜி.

  ReplyDelete