Tuesday, March 31, 2020

வீட்டிலேயும் செய்யலாம் ரிங் முறுக்கு -கிச்சன் கார்னர்

யானை அசைஞ்சு தின்னும்.. வீடு அசையாம தின்னும்..ன்னு பெரியவங்க சொல்வாங்க. அதுல, வீட்டில் அடைஞ்சு கிடக்கும் பிள்ளைகள் அசைஞ்சும், அசையாமலும் தின்னும்ன்னு சேர்த்துக்கலாம் போல! பண்டம் செஞ்சு மாளலை.
மாலைல பக்கோடா, போண்டா, சிம்லி, ராகி புட்டு, ராகி அடைன்னு விதம் விதமா செய்யனும். அதில்லாம பகலில் போக வரும்போது கொறிக்க முறுக்கு, தட்டை, ஓமப்பொடின்னு செஞ்சு வைக்கனும். பசங்களை திருப்திப்படுத்துறோம்ன்னு இருந்தாலும், எண்ணெய் அதிகமா செலவாகுறதுதான்  பகீர்ன்னு இருக்கு...

பசங்களுக்கு பிடிச்ச பண்டங்களில் ரிங் முறுக்கும் ஒன்னு.  எங்க ஊரில் இதை சிகப்பு முறுக்குன்னு சொல்வாங்க. இதன் பூர்வீகம் ஆந்திராவாம். அதனால் இதை ஆந்திரா முறுக்குன்னும் சொல்றாங்க.  என் பெரிய பொண்ணுக்கு சிகப்பு முறுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த முறுக்கினை ரொம்ப சுலபமா செய்யலாம்.

தேவையான பொருட்கள்..
அரிசி மாவு-1கப்
மிளகாய் தூள்-காரத்திற்கேற்ப
சீரகம்-1டீஸ்பூன்
கறுப்பு அல்லது வெள்ளை எள் -1டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
உப்பு -தேவையான அளவு’
வெண்ணெய் அல்லது எண்ணெய் 
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு

அரிசி மாவு எதுவா இருந்தாலும் பரவாயில்லை. பச்சரிசியை காய வைத்து அரைச்சதா இருந்தால் போதும். ஈர அரிசியை அரைச்சு வந்த மாவா இருக்கக்கூடாது. 
ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அரிசி மாவும் தண்ணீரும் எடுத்துக்கனும்...

சீரகம், எள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூளை எடுத்துக்கனும். விருப்பப்பட்டால் ஓமமும் சேர்த்துக்கலாம்.
அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி கொதிச்சு வரும்போது எடுத்து வச்சிருக்கும் பொருட்களை போட்டு கொதிக்க வைக்கனும்.
வெண்ணெய் அல்லது எண்ணெயினை சூடுபடுத்தவும்..
தண்ணீர் கொதிச்சு வரும்போது அரிசி மாவினை கொட்டி கிளறவும். சூடு படுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது எண்ணெயினை ஊற்றி நன்கு கிளறவும்.அடுப்பை அணைத்துவிடவும்.
மாவு சூடாய் இருக்கும்போதே மாவினை நன்றாக பிசைய வேண்டும். கட்டி இல்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு  மாவினை பிசைந்துக்கொள்ள வேண்டும். 
கொஞ்சம் மாவினை எடுத்து நீளமாய் உருட்டிக்கனும். அழுத்தி உருட்டக்கூடாது. இதமா பதமா உருட்டனும்.
இரண்டு முனையையும் ஒட்டிக்கனும்...
இதுமாதிரியே எல்லா மாவினையும் சுத்தி வச்சுக்கனும்.. எல்லாமே ஒரே அளவில் இருக்குற மாதிரி பார்த்துக்கனும். ரொம்ப மெல்லிசாகவும், மாவை அழுத்தியும் உருட்டக்கூடாது. அப்படி செஞ்சால் முறுக்கு கடக் முடக்ன்னு இருக்கும்.
மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கனும்..
மாலை நேரத்தில் கொறிக்க ரிங் முறுக்கு தயார்.  நான் கலர் பவுடர் சேர்க்காததால் கடையில் இருப்பது போல சிகப்பா வரலை.

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. ரொம்ப சுலபமா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. சுலபமாய் இருக்குறதால்தான் நான் சமைக்கிறேன். உருட்டுறது மட்டும்தான் வேலை. மத்ததுலாம் சுலபம்தான்

      Delete
  2. சுவையான குறிப்பு. ஆந்திராவில் இது ரொம்பவும் பிரபலம். அங்கே செல்லும்போது சுவைத்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. இப்ப எல்லா ஊரிலும் கிடைக்குது. ஆந்திராவில் பச்சைப்பயற்றை சேர்ப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

      Delete
  3. ரொம்ப ஈஸியா இருக்கும் போலவே....  உருட்டற பதம்தான் பயமுறுத்தறீங்க!

    ReplyDelete
    Replies
    1. இதுகூட கஷ்டப்படலைன்ன பண்டம் கிடைக்காதே சகொ! கஷ்டமெல்லாம் இல்ல. விளக்கு திரி உருட்டுற மாதிரி மெத்ன்னு உருட்டுங்க சரியா வரும்.

      Delete