Monday, March 02, 2020

பொண்டாட்டி பொறந்த நாளுக்கு இப்படிலாமா சர்ப்ரைஸ் கொடுப்பாங்க?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! கேன் தண்ணி கொண்டு வர சொல்லி போன் பண்ண சொன்னேனே! பண்ணியா?! இல்லியா?!  ஒரு பொட்டு தண்ணி இல்ல.

சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். கேன் தயாரிக்குறவங்க ஏதோ ஸ்ட்ரைக் பண்ணுறாங்களாம். அதான் கேன் வர லேட்டாகுது..

ஏன் ஸ்டிரைக் பண்ணுறாங்களாம்?! தண்ணியில்லாம ஜனங்க எம்புட்டு கஷ்டப்படுறாங்க.

நாம செய்யுறது தப்புன்னு தெரியாமயே அதுக்கு அடிமையாகிட்டோம் புள்ள!! எந்த காலத்திலயும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாடு இருந்துச்சு.  வறண்ட கிணத்தில் இருக்கும் நீரை சொட்டி, ஆத்துல ஊற்று வெட்டி.. இப்படி கோடையை சமாளிச்சோம். வீடுகளுக்கு குழாய் மூலமா தண்ணி வர ஆரம்பிச்சபின் ரெண்டு நாளுக்கு ஒருமுறைன்னு ஆரம்பிச்சு 10 டூ 20 நாளிலாவது தண்ணி கிடைச்சது. எப்ப ருசியான தண்ணி வேணும்ன்னும், அல்லல்படக்கூடாதுன்னும், சுத்தமான குடிதண்ணின்னு சொல்லப்பட்ட  விளம்பரத்திற்கும்  ஆசைப்பட்டு கேன் தண்ணியை வீட்டுக்குள் விட்டோமோ அன்னிக்கே நிலத்தடி நீர் படு வேகமா குறைய ஆரம்பிச்சுட்டுது. இன்னிக்கு மினரல் வாட்டர்ன்னு சொல்லி நாம குடிக்கும் தண்ணில மினரலே இல்ல தெரியுமா?!. 
மினரல்ன்னா என்ன மாமா?!

மினரல்ன்னா தாது உப்புக்கள்.  மண்ணில்  நம்ம உடலுக்கு தேவையான கால்சியம்,  மக்னீசியம், பொட்டாசியம்  மாதிரியான தாது உப்புக்கள் இருக்கு. அது நிலத்தடி நீரில் கலந்து தண்ணீர் வழியா நம்ம உடலுக்கு போய்க்கிட்டு இருந்துச்சு. சுத்தமான தண்ணின்னு தண்ணில இருக்கும் நல்ல பாக்டீரியா, தாது உப்புகளை நீக்கிட்டு, தண்ணி ருசியா இருக்க, தண்ணில இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை எடுத்துட்டு,  தண்ணி பளீர்ன்னு இருக்க பலவித சோடாக்களைக்கொண்டு  தண்ணியையும், கேனையும் ப்ளீச் பண்ணி  சுத்தமான?! தண்ணியை நமக்கு கொடுக்குறாங்க. கூடவே, தண்ணி வரும் பிளாஸ்டிக் கேன்ல இருக்கும் டாலேட்ன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருளும் தண்ணில கலந்து நம்ம ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
சுத்தமான குடிநீரை அரசாங்கம் கொடுத்தா, இப்படிலாம் ஏன் மாமா நடக்கபோகுது?!

அரசாங்கத்தையே குத்தம் சொல்லமுடியாது. எல்லாத்துக்கும் நம்ம பொறுமையின்மை, அவசரம், சுத்தம்ன்ற பேர்ல நாம பண்ணுற அட்ராசிட்டிதான் இதுக்கு காரணம். ஆத்து தண்ணி, கிணத்து தண்ணியை வடிகட்டாம குடிச்ச தலைமுறைதான் நாம, ஆனா நாம நம்ம பிள்ளைங்களுக்கு சளி வரும், காய்ச்சல் வரும்ன்னும்,  அடுத்தவங்க கேட்பாங்கன்னும்  வீட்டில் தண்ணி சுத்தம் பண்ணும் மெஷினை மாட்டி இருக்கோம். 

பிளாஸ்டிக் பாட்டிலுக்கும், டபுள் டாப் கேனுக்குமென தனித்தனியா ரூல்ஸ் உண்டு. ஒவ்வொரு முறையும் தண்ணி சுத்தம் பண்ணும்போது தாது உப்புகள் அழிக்கப்படுது. அடுத்த முறை விடுபட்ட தாதுக்களை சேர்க்கனும். ஆனா, அதுமாதிரி எந்த கம்பெனியும் சேர்க்குறதில்லை. குறிப்பிட்ட  ஆழத்துக்குதான் போர் போடனும். சுத்தம் செஞ்சு வரும் தண்ணியை முறையா மீண்டும் நிலத்தில் சேமிக்கனும். விவசாய நிலத்தில் விட்டாலும் தப்பில்ல. முக்கியமா விவசாய நிலத்தில் மினரல் வாட்டர் கம்பெனியை தொடங்கக்கூடாது.  மழைநீரை நேரடியா சுத்தம் செய்யக்கூடாது. மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கென நிறைய கட்டுபாடுகள் இருக்கு.  அங்க வேலை செய்யும் ஆட்களுக்கும் இதுமாதிரியான கட்டுபாடுகள் உண்டு. டாக்டர் சர்டிஃபிகேட் அவசியம் தரனும்,  தலையில், கையில், வாயில் உறை போட்டு இருக்கனும். பெண்களாயிருந்தால் பூ, பொட்டு, வளையல் போடக்கூடாது. இப்படி பல கண்டிஷன் போட்டு இருக்கு அரசாங்கம். ஆனா, அதுலாம் கடைபிடிக்காம அடுத்த தலைமுறைகளுக்கான நீரையும் நாம அளவில்லாம உறிஞ்சு காலி பண்ணிட்டு இருக்கோம். அரசாங்கம்  லேட்டா விழிச்சுக்கிட்டு பேக்டரியை சோதனை செஞ்சா ஸ்ட்ரைக் பண்ணுறாங்க நம்மாளுங்க, என்னத்த சொல்ல?!
ஓ இதான் விசயமா?! இந்த ஆண்டவனுக்கு ஓரவஞ்சனை மாமா. நிலத்துல முக்காவாசி தண்ணியை வச்சுட்டு, அதை உப்பா வச்சுட்டதால் எவ்வளவு கஷ்டம் பார்த்தியா?!  எல்லாமே நல்ல தண்ணியா இருந்திருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்?!

இந்நேரம் அதையும் உறிஞ்சு வித்திருப்பாங்க நம்மாளுங்க. எல்லா காரியத்துக்கும்  ஒரு காரணம் உண்டு. அதுமாதிரிதான் கடல்நீர் உப்பா இருக்கவும் காரணமுண்டு, முதல்ல கடல் நீர் எப்படி உப்பா இருக்குன்னு கேளு.  ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்ததுதான் நீர்ன்னு சின்ன வயசுல படிச்சு இருப்பே. அந்த மூலக்கூறுகள் எப்படி  உருவாகுதுன்னு தெரிஞ்சுக்க. சோலார் நெபுலா(Solar Nebula), .விண்கல் மோதல்கள்ன்ற இந்த 2 காரணங்களில் எதாவது ஒன்றினால்தான்  பூமியில் தண்ணி உருவாகி இருக்கலாம் சொல்றாங்க.  சூரிய குடும்பம் உருவாகும்போது சூரிய குடும்பத்தை சுத்தி வாயுக்களாலும் தூசுகளாலும் ஆன ஒரு மிகப்பெரிய மேகக்கூட்டம் சூழ்ந்துச்சாம்.  அந்த மேகக்கூட்டம்தான் சோலார் நெபியுலா (Solar Nebula) ன்னு சொல்லப்படுது. அந்த மேகக்கூட்டத்தில் நிறைய ஹைட்ரஜன் அணுவும், ஆக்சிஜன் அணுவும் இருந்துச்சாம். ஏதோ ஒரு சூழல்ல இந்த இரு அணுக்களும் ஒன்னு சேர்ந்து உலர்பனியா மாறுச்சாம். அப்படி உருவான உலர்பனி ஈர்ப்பு விசை காரணமா ஒவ்வொரு கிரகத்தாலும் ஈர்க்கப்பட்டுச்சாம். அதேமாதிரிதான் பூமியின் மூலம் ஈர்க்கப்பட்ட உலர்பனித் துகள்கள் பூமியின் வெப்பமான மேற்பரப்பில் பட்டு உலர் நிலையில் இருந்த அனைத்து மூலக்கூறுகளும் வாயு மற்றும் திரவ நிலைக்கு மாறினதாகவும், இது பல மில்லியன் வருசங்களா நிகழ்ந்து பூமியின் மேற்பரப்பு வெப்பம் நன்கு குறையவும், நீர் மூலக்கூறுகள் நிலையான இப்ப இருக்கும் நிலைக்கு வந்ததா சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அப்படி முதன்முதலில் உருவான நீர் மூலக்கூறுகளை கொண்டு இந்த பூமியின் பெருங்கடல்களை 3 மில்லியன் முறைக்குமேல் நிரப்ப முடியுமாம்.

ம்ஹூம், இப்படி தண்ணி உருவாகலை.  தண்ணி உருவாக விண்கல் வீழ்ச்சிதான் காரணம்ன்னு இன்னொரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. நாசா ஆராய்ச்சியின்படி விண்கல் தாக்குதல் இல்லன்னா சிறுகோள் வெடிப்பினால்(Asteroid Bombardment)தான் உலர்ந்த நீர் மூக்கூறுகளால் ஆன படிமங்கள் (Crystals) இருந்த விண்கற்கள்(சிறு கோள்கள்) பூமியின் ஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு பூமியின்மீது மோதின. மோதிய எரிகற்களும், வால் நட்சத்திரங்களும் சுமந்துவந்த உறைந்த நிலையில் இருந்த நீர்படிமங்கள் பூமியின் வெப்பத்தை வேகமாக குறைத்தது மட்டுமில்லாம திரவநிலைக்கும் மாறி மேற்பரப்பை மூட ஆரம்பித்தன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த நிகழ்வில் வந்து மோதிய கோடிக்கணக்கான கற்களே இந்த அளவு நீர் பூமியை அடைந்ததற்கான காரணன்னு சொல்லுது. இரண்டாவது காரணத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முக்கிய காரணம்பூமியின் பெருங்கடல்களில் உள்ள நீரின் டியூட்டிரியம் - ஹைட்ரஜன் விகிதமானது (D/H ratio) எரிகற்களில் காணப்படும் விகிதத்தோடு ஒத்துபோகுதாம்.

சரி, கடல் தண்ணி ஏன் உப்பாச்சுன்னு சொல்லு மாமா.


இதோ அதுக்குதான் வரேன்.
பூமி உருவான ஆரம்பித்தில் பூமியின் மேற்பரப்பு முழுக்க அதிக அளவில் குளோரைடும் சோடியமும் இருந்துச்சாம். பூமிக்கு வந்த நீரின் மூலக்கூறுகள் சோடியம் குளோரைடை உயரமான இடங்களிலிருந்து தாழ்வான இடத்திற்கு கடத்தி சென்று படிய வச்சுதாம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்ததால் பூமியின் உயரமான பரப்பிலிருந்த அனைத்து சோடியம் குளோரைடு மூலக்கூறுகளும் தாழ்வான பகுதியில வந்து படிந்ததாம். இப்படியாகத்தான் பூமியின் பெருங்கடல்கள் அனைத்தும் உப்பா மாறிட்டுதாம். அதிக நீரோட்டம் கொண்ட பெருங்கடல்களில் இருக்கும் உப்புத்தன்மையைவிட நால்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தேங்கியுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மையா இருக்குறதை எடுத்துக்காட்டா சொல்றாங்க. (உதா. சாக்கடல் - Dead sea). ஒருவேளை கடல் தண்ணி உப்பா இல்லன்னா பூமியே உப்பாதான் இருந்திருக்கும்.

அப்படி பூமி உப்பா இருந்தால் என்ன மாமா நடந்திருக்கும்?!

இப்பவே பதிவு பெருசாகிட்டு, அதனால் இன்னொரு பதிவில் அதை பார்க்கலாம்.. முகம் கொடுத்து பேசக்கூடாது. அது என்ன?1 இது என்னன்னு கேள்வி கேட்டே சாகடிப்பே!!

ம்க்கும் அவனவன் பொண்டாட்டிக்காக என்னவெல்லாம் செய்றாங்க. நீ என்னடான்னா நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம கெணத்துல போட்ட கல்லாட்டம் இருக்கியே!
பொண்டாட்டி புடவைக்கு மடிப்பு எடுக்கும் புருசனை பாரு...
பொண்டாட்டி பொறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் புருசனையும் பாரு. நீயும் கொடுத்தியே ஒரு சர்ப்ரைசை நாலு வருசத்துக்கு முந்தி.... அதை இப்ப நினைச்சாலும்... !@#$%^&)(*&^%$#@!$%^&*(*&^%$#@!@#$%)(*&^%$#@

நன்றியுடன்.
ராஜி

8 comments:

  1. அருமை. சரியா சொன்னேங்க. எல்லாத்துக்கும் அவசரப்பட்டு இயற்கையை நாம தொலைச்சிட்டோம். ஆனா அதை உணராம தொலைச்சதை செயற்கைல தேடிகிட்டு இருக்கோம். அது தான் பரிதாபம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பொண்டாட்டி பொறந்த நாளுக்கு இப்படிலாமா சர்ப்ரைஸ் கொடுப்பாங்க?! – ஐஞ்சுவை அவியல் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. அந்தக் காலத்தில் தண்ணீரை இப்படி பயந்து பயந்தா குடித்தோம்?  பள்ளியில் கால்வாசி திறந்துகிடந்த டேங்கிலிருந்த தண்ணீரை குழாயில் அப்படியே கைகளில் பிடித்து குடித்த நினைவு வருகிறது.

    ReplyDelete
  4. அசத்திய கணவன் காணொளி ரசிக்க வைத்தது.  அவர்களுக்குள் ...    கடைசிவரை இதே ஆர்வமும் அன்பும் நிலைத்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்கள் ராஜி அக்கா..

    ReplyDelete
  6. உங்கள் பாணியில் நல்ல தகவல்கள் சகோதரி...

    ReplyDelete
  7. நீங்கள் ஏண்ணா GEOLOGY ஆசிரியையா

    ReplyDelete
  8. என்ன கியோலஜி ஆசிரியையா

    ReplyDelete