Friday, March 06, 2020

ஸ்ரீசிவசடையப்பர் கோவில் - பாண்டிச்சேரி சித்தர்கள்.


கடந்த வாரம் நாம ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் சமாதியில் தரிசனம் செய்தோம். இப்படி சித்தர்களை தரிசனம் செய்வதால் என்ன நன்மைகள்ன்னு  பார்த்தா, அவர்கள் உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சாகாக்கலை அறிந்தவர்கள் சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதற்காகவே பிறவிகள் எடுத்தனர். அதுவே, அவர்களின் ஜீவன் முக்திநிலை அடையும்  என்று நினைத்தார்கள். அவர்கள் பார்ப்பதெல்லாம் பரம்பொருளின் படைப்பாகவும்அவற்றில் அன்பு கொண்டும், எல்லா இடத்திலும், எல்லா பொருட்களிலும், எல்லா உயிர்களிடத்திலும் என சிவமே என்று லயித்திருந்தனர். ஆகவே அவர்கள் நிலையான ஒரு இடத்தில இருப்பதில்லை. புண்ணிய தலங்கள் இருக்கும் இடமெல்லாம் யாத்திரை செய்வதையே தங்கள் குறிக்கோளாக கொண்டு அந்தந்த இடங்களில் உள்ள மக்களுக்கு நன்மை செய்வதே அவர்கள் சிவத்தொண்டாக கருதினர். சில பக்தர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடிச்சென்று நன்மை செய்த சித்தர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. ஓரிடத்தில் கடமை முடிந்ததாக இறைவனின் உத்திரவு வந்தால் வேறிடம் செல்வர். உருமாறும் கலை அறிந்தவர்கள் அவர்கள். நினைத்த வடிவெடுத்து நினைத்த இடத்திற்கு கனப்பொழுதில் செல்வர். சித்தர்கள் எந்த காலத்திலும் தோன்றுவர்.எந்த நாட்டிலும் தோன்றுவர். இன்ன காலத்தில் இன்ன நாட்டில் என்ற நியதிகள் அவர்களுக்கு இல்லை.
சித்தர்களுக்கு  தமெக்கென வாழும் எண்ணமும் இல்லை.  இரும்பையும் பொன்னாக்கலாமென்ற வித்தை  தெரிந்தும் அவர்கள் பெண்பொருள் என்று எதன்மீதும் ஆசை இல்லாதவர்கள். இறைவன் அருளிருந்தால் மட்டும் போதும் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள் தங்களுடைய அருள் வல்லமையை பெருக்கிக்கொள்ள தன்னை சோதனைக்கு ஆட்படுத்திக்கொண்டு, தனக்குத்தானே இன்னலை எற்படுத்திக்கொண்டு தனது ஆன்மாவை தூய்மைப்படுத்திக்கொள்வார்கள். அவ்வளவு சிறப்புகள் இருக்கும் சித்தர்களின் கடைசிக்காலம் ஒரு இடத்தில நிலையான ஜீவசமாதியடைந்து பரம்பொருளுடன் இரண்டர கலந்துவிடுவார்கள். அப்படி அவர்கள் ஜீவன் உறைந்த இடங்களைத்தேடி சென்று தரிசிப்பதென்பது நாம் எல்லோரும் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன்.

அதிலும் இந்த புதுவைமண் தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய பரம்பொருளின் அருள்பெற்ற புண்ணியபூமி. கடந்த ஐந்நூறு  ஆண்டுகளுக்குள் சுமார் 32 சித்தர்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமாகி ஜீவசமாதியாகி விட்டார்கள்.

இந்த சித்த பூமியைப் பற்றி ஒரு தனிபாடல் இவ்வாறு பாடப்பட்டுள்ளது..

எத்தலம் சென்றிட்டாலும்
எத்தீர்த்தம் ஆடிட்டாலும்
இந்த சித்தர்வாழ் புதுவைபோல்
சிறந்தது ஒன்றில்லை கண்டீர்
முத்தியும் உதவும் ஞானம்
முப்பொருள் தனையும் ஈந்து
சித்தனே வந்து இங்கு
சிவகதி அடைந்தார் அன்றோ
வடலூர் இராமலிங்க சுவாமிகள் புதுவை அம்பலத்தாடையார் மடத்து வீதியில் சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்துசன்மார்க்க நெறியை போதித்தார். கர்னாடகா யுத்ததின்போது, சிதம்பரத்திலிருந்து, திருவாசக வெள்ளி பெட்டகத்தை யுத்தத்தின் அழிவிலிருந்து மீட்டு புதுவைக்கு கொண்டு வந்து பாதுகாத்தார் ஸ்ரீநாகலிங்க சுவாமிகள். மகாகவி பாரதியார் புதுவையிலுள்ள சித்தர் ஸ்ரீசித்தானந்த சுவாமிகள் ஜீவசமாதியிலுள்ள குயில்தோப்பிலிருந்து குயில் பாட்டுக்கள் எழுதி இருக்கிறார். இப்பேற்பட்ட பெரியவர்கள்லாம் வந்த இந்த புதுவைக்கு நாமும் இன்று வந்திருக்கிறோம் என்பதே எப்பிறவியில் நாம் செய்த புண்ணியமோன்னு தெரியலை.
 கம்பளி சித்தர் சமாதியிலிருந்துபக்தி பரவசத்தோடு அடுத்து நாங்க பார்க்க வந்த சித்தர் ஜீவசமாதி ஸ்ரீசிவ சடையப்பர் சமாதியாகும். இங்க, என்ன விஷேசம்ன்னா என்னுடைய மொபைல் நாங்கள் வந்த காரிலயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். (யாருப்பா அங்க விசிலடிச்சு, கைத்தட்டுறது?!). அதனால், போட்டோக்கள் எதும் எடுக்க முடியலை. ஆனாலும் கடமையாத்தனுமேன்னு கூகுளாண்டவர்கிட்டயும் கேட்டேன்.  எல்லா சாமிகளையும்போல் இந்த சாமியும் கைவிரிச்சுட்டார். சரி, இறைவன் அருள் அதுதான் போலும்ன்னு நினைச்சுக்கிட்டு பதிவெழுதினால், வாட்ஸ் அப் க்ருப்ல இந்த படங்களை சில நண்பர்கள் பகிர்ந்திருந்தாங்க. அதை நான் இங்க பகிர்ந்தேன்.

நாங்கள் அங்க போன நேரம் ஏதோ விஷேசமான பூஜைகள் நடந்திருக்கும்போல! எல்லா தெய்வங்களும் அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சரி, இந்த சித்தர் சமாதியின் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்ன்னு யார் சிக்குவாங்கன்னு பார்த்தா, அங்கிருந்த பரபரப்பில் யாரிடம் கேட்பது எனத்தெரியாமல் வழக்கம்போல முழிக்க, சரி  பதிவு அம்புட்டுதான் போல! படமும் இல்ல, கதையும் இல்ல, எப்படி பதிவு எழுதன்னு  சித்தரே கதின்னு பிரகாரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்து ஓரிடத்தில் அமைதியாக!! அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யும்போது, அப்பொழுது சிவனடியார் ஒருவர் பிரசாதம் கொடுத்துக்கிட்டு அருகில் வந்தார். சரி இவரை விட்டால் வேறு வழியில்லைஇவரிடமே ஜீவசமாதி வரலாற்றை கேட்டுவிட வேண்டியதுதான் என மெதுவாக அவரிடம்ஐயா! இந்த ஜீவசமாதி பத்தி எங்களுக்கு சொல்லுங்களேன் என பணிவாக கேட்க, அவரும் இந்த கோவில் பற்றி வழிவழியாக சொல்லப்பட்டுவரும் கதை எங்கள் பெரியவர்கள் சொல்ல, நாங்கள் கேட்டதை நான் உங்களுக்கு சொல்றேன் என ஆர்வமா சொல்லத்தொடங்கினார்.
இங்கு ஜீவசமாதியான சித்தர் ஒரு பெண்சித்தராகும்.  அவர் இயற்பெயர் சரியாக தெரியாததால் தாயாரம்மாள் என அழைத்தனர். அப்பொழுது தாயாரம்மாள் சிறுமியாக இருந்தபோது புதுச்சேரியை அடுத்துள்ள பெருமுக்கல்ன்ற இடத்தில மாடுகள் மேய்த்து வருவாராம். ஒருநாள் மாடுமேய்த்து வீட்டுக்கு திரும்பும் நேரம் அடைமழையாம்.  எங்கும் செல்லமுடியாத நிலை.  உடனே அருகிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றாராம். இரவும் நெருங்கிவிட்டதால் அங்கேயே சிறுமியான தாயாரம்மாள் தங்கிவிடுகின்றார். அன்றிரவு திடீரென ஒரு பிரகாசமான ஒளி. அதனால் திடீரென கண்விழித்த சிறுமி எங்கிருந்து அந்த ஒளிவருகிறது என்று லேசாக கண்திறந்து பார்த்தாள், அங்கே ஒரு சித்தர் படுத்திருந்தார். அவரைச்சுற்றிதான் ஒரு பெரு ஒளிவட்டம். அவர் உடல் மேலேமேலே சென்றுகொண்டிருந்தது பயந்துபோன சிறுமி கண்ணை இருக்கமுடிகொண்டு பயத்தில் அப்படியே உறங்கிவிடுகிறாள் .
மறுநாள் பொழுது விடிந்தது. ஆனாலும்,  மழைவிடவில்லை. பசியமயக்கம் வேறு. அதனால், மிகவும் சோர்வாக இருந்தததால் . இரவு நடந்ததை எண்ணிக்கொண்டே பயந்துபோய் இருந்தாள் சிறுமி, ஆனாலும், தைரியத்தை வரவழைத்து இரவு சித்தர் படுத்திருந்த இடத்தை பார்த்தாள். அங்கு சில பச்சை இலைகளும், தங்கத்தால் ஆன சில தகடுகளும் இருந்தன. அதைப்பற்றி ஒன்றுமறியாத சிறுமி சிறிது தூரத்தில் அந்த சித்தர் சாதாரணமாக அமர்ந்திருப்பதை கண்டவுடன் பயம் வந்தது. கூடவே பசிமயக்கமும் சேர்ந்துக்கொள்ள தள்ளாடி நடந்து அவரை தாண்டிச்செல்ல அச்சப்பட்டு நின்றிருக்க,  அவளின் நிலையை கண்ட சித்தர் சிறுமிக்கு சாப்பிட சில பழங்களை கொடுத்தார். பசியாறியதும் சித்தர் சிறுமியிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார். தினமும் இந்த மலைக்கு வருவாயா?என கேட்டார். தயக்கத்துடனே நின்ற சிறுமி ஆம் எனச்சொல்லி தயங்கியபடி நின்றாள்.
சிறுமியின் பயத்தையும், தயக்கத்தையும் கண்ட சித்தர் சிறுமியை தினமும் இங்கு வந்து  எனக்கு பச்சிலையை அரைத்து தருவாகிறாயா?! எனக்கேட்டார். சிறுமியும் பயத்துடனே சரி எனக்கூறி அங்கிருந்து வீட்டுக்கு சென்றாள் தினமும் மாடுகளை மேயவிட்டுட்டு சித்தருக்கு பச்சிலையை அரைத்துக்கொடுத்து வருவதை வழக்கமாய் கொண்டாள் அந்த சிறுமி. அதற்கு சன்மானமாக சித்தர், சிறுமிக்கு ஒரு நாணயம் கொடுப்பார். இப்படியே காலங்கள் சென்றன .ஒருநாள் சித்தர் சிறுமியிடம் நீ இங்கு வரவேண்டாம். நான் வேறு ஊருக்கு செல்கிறேன். என்று புறப்படத்தயாராக நின்றார். சிறுமிக்கோ தினமும் ஒரு காசு கிடைக்குமே இனி கிடைக்காதே! என்ற கவலை. ஆகையால் தயக்கத்தோடு சித்தரை பார்த்தாள் சிறுமி. சித்தரும் கவலைப்படாதே!ஐந்துவருடம் கழித்து நான் இங்கு வருவேன். அப்படி என்னை பார்க்கவேண்டுமென்றால் ஒவ்வொருவருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இங்கே வருவேன் அப்பொழுது வந்து என்னை பார்த்துச்செல் என்றுக்கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டார் .
சிறுமியும் தினம்தினம் அந்த இடத்துக்கு மாடுமேய்க்க சென்றுவிட்டு, சித்தர் இருந்த அந்த  இடத்தில அமர்ந்துகொள்வாள். நாட்கள் செல்லசெல்ல சிறுமிக்கும் சித்தர் வழிபட்டுவந்த லிங்கத்தை வழிபடவேண்டும் என ஆசை எழுந்தது. கையில் கிடைக்கும் சில மலர்களைக்கொண்டு அங்கிருந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்ய ஆரம்பித்தாள் சிறுமி. நாளடைவில் சிறுமியின் போக்கில் பலமாற்றங்கள் ஏற்பட்டது. எப்பொழுதும் பாகித்தியிலையே மனதை செலுத்திக்கொண்டிருந்தாள் .அமைதியாக இருக்கத்தொடங்கினார் .சதா பூஜை சிவா சிந்தனை என்று அவரது வாழ்க்கை இருந்தது,ஒரு சித்ரா பௌணமியன்று சித்தர் அங்குவந்தார்.அவரை கண்ட தயாரம்மாவுக்கு சித்தர் அவருக்கு குருவாக தோன்றினார் .சித்தரும் தயாரம்மாவின் தேஜஸ் பார்த்துவிட்டு ,அவர் பக்குவநிலைக்கு வந்துவிட்டார் என்று தெரிந்து ,தயாரம்மாவுக்கு ,யோகமார்க்கத்தையும் ,ரசவாதவித்தையையும் கற்றுக்கொடுத்தார் .
அன்றுமுதல் சிறுமியின் வாழ்க்கையில் பலமாற்றங்கள் நிகழ்ந்தன, எப்ப பார்த்தாலும் தியானதிலயே இருந்தாள். பெற்றோர்கள் அவளது நிலையைக்கண்டு வருத்தமடைந்தனர். சிறுமியின் தந்தை அவளது மனமாற்றத்திற்காக புதுச்சேரியில் உள்ள தன் தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு வந்தும், சதாகாலமும் தியானமும் மனக்குறையோடு வரும் மக்களுக்கு தகுந்த வழியையும் , பில்லிசூனியம் போன்றவற்றால் அவதியுற்றவர்களை குணமாக்குவதையும் வழக்கமாய் செய்துகொண்டு இருந்தார். தன்னை முழுவதுமாக தவவாழ்க்கையில் அர்பணித்துவிட்டார். இவரின் அடர்ந்த கூந்தல் சீவாமல் சடைபிடிக்க ஆரம்பித்தது. அதனாலாயே இவர் பெயருடன் சடை சேர்ந்து அன்றிலிருந்து சடைதாயாரம்மா என்று அழைக்க ஆரம்பித்தனர். ரசவாத மூலிகை வித்தை மூலம் கஷ்டப்படுபவர்களுக்கு இரும்பை பொன்னாக்கி கொடுத்தார். பச்சிலைமூலம் பலரது நோய்களை தீர்த்துவைத்தார். இவரது சமாதியான காலம் தெளிவா யாருக்கும் தெரியலை..சிலர் இவர் வளவானுரில் ஜீவசமாதியடைந்ததாகவும், சிலர் இவர் பேட்டையான் சத்திரத்தில் சமாதியடைந்த இடமே சடையப்பர் கோவில் என்றும் சொல்கிறார்கள்,எது எப்படியோ இங்கே அவருக்கு சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு ஒவ்வொரு பிரதோஷமும், சிவராத்திரி போன்ற பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லி முடித்தார் ,
நாமும் அந்த பெண் சித்தரை வணங்கி அவரது ஆசிகளை பெற்று அடுத்த சித்தர் சமாதிக்கு பயணமானோம்.மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன். 
நன்றி வணக்கம் 
.நன்றியுடன் 
ராஜி 

11 comments:

 1. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் தங்கள் வலைத்தளம் உட்பட பதினொரு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது ஸ்ரீசிவசடையப்பர் கோவில் – பாண்டிச்சேரி சித்தர்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உங்கள் வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியானதும் அந்த பதிவு உடனடியாக வலை ஓலையிலும் வெளியாகிவிடும். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
  Replies
  1. இணைத்தமைக்கு நன்றி,நல்ல முயற்சி வலைப்பதிவு எழுதுபர்களுக்கு இது நிச்சயம் ஒரு ஊக்குவிக்கும் செயலாக இருக்கும் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி...

   Delete
 2. சித்தர்கள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் சிறப்பு.

  தொடரட்டும் உங்கள் சிறப்பான குறிப்புகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணே...

   Delete
 3. புதிய, சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. சித்தர்கள் என்றாலே சுவாரஸ்யங்கள் தானே...உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க அண்ணே...

   Delete
 4. அருமை சகோதரி...

  ஆமாம் பாண்டியில் எத்தனை மாதம் இருந்தீர்கள்...?

  ReplyDelete
  Replies
  1. மாதக்கணக்கில் எங்கே அண்ணா இருக்கமுடியும்,ஒரு நான்குநாள் சுற்றுப்பயணமாக சித்தர்கள் சமாதிகளாக தரிசனம் செய்யும் டூர் பேகேஜில் சென்றோம்.பல சித்தர் சமாதிகளை தரிசித்தோம்.சில சித்தர் சமாதிகளை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை,இனி ஒருமுறை சென்று விடுபட்ட சித்தர் ஜீவசமாதிக்கோவில்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆசை உள்ளது.ஆனால் இறைவன் திருவருள் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை

   Delete
 5. பெண் சித்தர்.இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அரிய செய்திகளைக் கொண்ட பதிவு.

  ReplyDelete
  Replies
  1. அதில் சில பெண்சித்தர்கள் சமாதிகளும் உள்ளன அவர்களை பற்றிய குறிப்புகளும் தொடர்ந்து பதிவாக வரும்.உங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்கப்பா..

   Delete
 6. பெண் சித்தர் பற்றி அறிந்துகொண்டோம்.

  ReplyDelete