Friday, July 12, 2013

தாழக்கோவில், திருக்கழுக்குன்றம் II - புண்ணியம் தேடி ஒரு பயணம்

 போன வாரம் திருக்கழுக்குன்றம் மலை மேல இருக்குற ”திருமலை” கோவிலையும், ரெட்டை கழுகு வரலாற்றையும் சொன்னேன். பார்க்காதவங்க  ஒரு எட்டு இங்க  போய் பார்த்துட்டு வந்துடுங்கப்பா!!  இன்னிக்கு, புண்ணியம் தேடி போகப்போறது போன வாரமே சொன்ன மாதிரி மலை அடிவாரத்துல இருக்குற “தாழக்கோவில்” பத்தி..., போலாமா?!

பிளாக்குல, வீட்டுலலாம் நம்ம மக்களைலாம் இம்சை பண்றது போதாதுன்னு இங்கயும் வந்துட்டாளேன்னு என்னை ஸ்டாப் பண்றதுக்காக மழைலாம் அனுப்பி தடுக்க பார்த்தார் கடவுள். இதுக்கெல்லாம் அசறும் ஆசாமியா ராஜி?!

இருந்தாலும் போய் பார்த்துட்டோமில்ல!!
ஒரு வேளை பிரபல பதிவர் வர்றாங்க!! அவங்கள வரவேற்கனும்ன்னு ஒருத்தருக்கும் தோணலியேன்னு கடவுளே தூறலையே மாலையாக்கி அனுப்பினாரோ என்னமோ!? அப்படிதான் இருக்கும். சரி, சுய பினாத்தல் போதும். கோவில் பத்தி சொல்லித் தொலைன்னு நீங்க முணுமுணுக்குறது எனக்கு கேக்குது.., இதுக்கு மேல விட்டா கல்லுலாம் பறக்கும்...., ஓக்கே.., கோவில் பத்தி பார்க்கலாம்...,

இந்த தலத்திற்கு அந்தகவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தல புராணம் உள்ளது..,

இறைவன் பெயர்: பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
இறைவி பெயர்: திரிப்புரசுந்தரி 
தல விருட்சம்: வாழை
தீர்த்தம்: சங்கு தீர்த்தம்
 கோவிலின் முதல் வாயிலை தாண்டி உள்ள போறதுக்கு முன்னால இந்த கோவில் பத்தின பெருமைகளை பார்க்கலாம். இந்த கோவில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் நான்கு கோபுரங்களுடன் இருக்கு. இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே ராஜக்கோபுரம். ஆலயும் மூன்று பிரகாரங்களுடன் இருக்கு, இக்கோபுர வாசல் வழியே உள்ளே வந்தால்.., நேரெதிர் 4 கால் மண்டபம் இருக்கு. வலது பக்கம் இருக்குற மண்டபத்துல கோவில் அலுவலகம் இருக்கு. அலுவலக மண்டப சுவர்களில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் இருக்கு. இடது புறம் 16 கால் மண்டபம். இந்த தூண்கள்ல அழகிய சிற்பங்கள் இருக்கு. 4 கால் மண்டபத்தை தாண்டி 2 வது கோபுரம். கோபுரத்தின் இரு புறமும் விநாயகரும், சும்பிரமணியரும் இருக்காங்க.  
இந்த கோவிலுக்குள் நுழைந்தவுடன் என் பக்தியை!! மெச்சியும் எனக்கு மட்டுமில்லாம உங்களுக்கும் என் மூலமா  புண்ணியத்தை தர்ற மாதிரி சிவன் எங்களுக்கு லைவ் நந்தி  தரிசனம் தந்தார்.
கோவிலின் சன்னிதி வீதியில் திருவாடுதுறை ஆதீன கிளை மடம் ஒண்ணு இருக்கு.

இங்க சித்திரையில் பெருவிழா நடக்குமாம். கொடியேற்றம், யாகசாலைலாம் மலை மேல நடக்குமாம். திருவிழாக்கள்லாம் தாழக்கோவிலில்தான் நடக்குமாம்.சித்திரைப்பெருவிழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் உற்சவத்தில் இரவிலும் சுவாமி அதிகார நந்தியிலும், பஞ்ச மூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவது இன்னிக்கும் நடக்குதாம். ஆடிப்பூர விழாவில் அம்பாள் எழுந்தருளி மலையை வலம் வருவது வழக்கமாம்...,   
                    
மிகப்பழமையான கோவில் இது. நாற்புறமும், நான்கு பெரிய கோபுரங்கள் இருக்கு. கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டிருக்கு. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். 
குளக்கரையில் நந்தி இருக்கு. வெளிப்பிரகாரத்தில் வடக்கு வாயிலை வலம் வரும்போது வடக்கு சுற்றில் நந்தி தீர்த்தமும் கரையில் நதியும் இருக்கு. இங்கிருந்து பார்க்கும்போது மலைக்கோவில் அழகா காட்சி அளிக்குது.
கோவிலின் உள்புறம் முதல் வாயிலை கடந்து செல்லும் முதல் பிரகார சுற்று.
மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேஷ்வரர்) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை “கஜப்பிரஷ்ட” அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலின்கோற்பவர், பிரம்மா, திர்க்கை ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. கூடவே சண்டேஷ்வரரும் இருக்கார். மறுபக்கத்தில் தீர்த்தக்கிணறும் உள்ளது. நித்திய வழிபாடுகள் சிறப்பா நடக்குறதாக அங்கிருக்குறவங்கலாம் சொன்னாங்க.

ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான் அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் இருக்கு. இதன் கலயழகு பார்க்க கண்கொள்ளாக் காட்சி.


நான்கு கால் மண்டபம், ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர். இருவரையும் வணங்கி, ஐந்து நிலையுடைய உள் கோபுரத்துக்குள் போனால இக்கோபுரம் இக்காலத்துக்கு ஏற்றவாறு வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி அளிக்கின்றது. உள் நுழையும்போது இடதுப்புறம் ”அனுக்கிரக நந்திகேஸ்வரர்” தன் தேவியுடன் காட்சி தருகின்றாற். உள் நுழைந்து வலமாகப் பிரகாரத்துல வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி இருக்கு.  இப்பிரகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சன்னதி இருக்கு.
திருக்கழுக்குன்றம்  வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 1400 ஆண்டுக்கால பழமையானதாம். கோவில் சுவர்களில் நிறைய பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டு குறிப்புகள் இருக்கு. 
இப்பிரகாரத்தில் ஆதமநாதர் சன்னதி(பீடம் மட்டுமே இருக்கு). ஆறுமுகப்பெருமான் சன்னதி அழகாக இருக்கு. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக்கல்லில் எழுதி வச்சிருக்காங்க. பக்கத்துல அழகான முன் மண்டபத்துடன்அம்பாள் சன்னதி இருக்கு.
தாழக்கோவில் கிழ்க்கு கோபுரம் ஏழு நிலைகளை கொண்டது.  உச்சியில் 9 கலசங்கள் இருக்கு. கோபுரத்தில் சிற்பங்கள் இல்லாதது தனி சிறப்பு. கருங்கல்லில் செதுக்கப்பட்ட துவாரபாலகர்கள் சிலை வெகு அழகு. இடதுப்பக்கம்  பதினாறு கால் மண்டபம் இருக்கு. இம்மண்டபத்தின்  பக்கமா திரும்பி வெளிப்பிரகாரத்தை சுத்தி வரும்போது விநாயகர் மண்டபம், ஆமை மண்டபம்லாம் இருக்கு. ஒவ்வொரு தூணும் சிற்பங்கள் மூலம் பல கதை சொல்லும்.
இதன் எதிரில் மாணிக்கவாசகர் சன்னதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாச்சலேஸ்வரருக்கும் தனித்தனி கோவில்களாக அமைந்திருக்கு, அண்ணாமலையார் சன்னதி, பராமரிப்பு வேலைகள் நடைப்பெறுகின்றன.
அம்பாள் சன்னதியில் தூண்கள்லாம் கலை நயத்தோடு இருக்கு, அம்பாளுக்கு ஸ்ரீசக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டிருக்கு. ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாள் மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் நடக்குதாம்.மற்ற நாளெல்லாம் பாத பூஜை மட்டுமே நடக்குமாம். அம்பாளின் கருவறையை சுற்றி அரும்போது சுவற்றில் அபிராமி அந்தாதி பாடலை சலவைக்கல்லில் எழுதி வச்சிருக்காங்க. அதை படிச்சுக்கிட்டே போனா நல்லது. 
கருவறையின் உள்ளே, கிழக்கு திசை பார்த்தவாறு அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். 
 அம்பாளுக்கு எதிரில் “பிரத்யட்ச வேதகிரீஸ்வரர்” சன்னதி இருக்கு. அடுத்து நடராச சபையில் மூர்த்தி,  சிறிதாயினும் அழகாய் இருக்கு. வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலப்பக்கம் உள்ள அகோர வீரப்பத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள்சென்றால், உள்சுவற்றில் சூரியன், சன்னதியும், அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலான அறுபத்தி மூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும் இருக்கு. பைரவர் தன் வாகனமின்றி  தனியே இருக்கார்.
 


மூலவர் சதுர பீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர்”ன்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கார்.

கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையதாம். 
கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர்ம் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கைலாம் சன்னதி கொண்டு இருக்காங்க.சண்டேஸ்வரர் தனி சன்னதி கொண்டு இருக்கார். உட் பிரகாரத்துல சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.
தாழக்கோவில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால்  அமைக்கப்பட்ட மிகப்பழமையான கோவில் கஜப்பிரஷ்டை அமைப்புடையது.
ஆண்டுதோறும்  இங்க நடைப்பெறும் சித்திரை மாத திருவிழாவின் ஏழாவது நாள் தேர்திருவிழா நடக்குமாம். பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் போது தேர் அசைந்து வரும் காட்சி காண கண் கோடி வேணுமாம்.
சன்னதிக்கு எதிரில் உள்ள தெருவின் கடைசியில் சங்கு தீர்த்தம் இருக்கு. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குளத்தில் சங்கு பிறக்குமாம், இதுவரை கிடைத்த சங்குகள் ஆலையத்தில் வச்சிருக்காங்க.
திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாசத்துல ஒரு திங்கள் கிழமையில 1008 சங்குகளால வேதகிரீஸ்வரருக்கு அபிசேகம் நடைப்பெறுமாம். 1008 ல சங்கு தீர்த்தத்துல கிடைச்ச சங்குலாம் இருக்குமாம். சங்கு தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து சாமிக்கு அபிசேகம் நடைபெறுமாம்.
2011 ம் ஆண்டு இந்த குளத்துல கடைசியா சங்கு கிடைச்சிருக்கு. இதோடு 2023ம் வருசம் கிடைக்கும் (கணக்கு சரிதானே!?) சங்குத்தீர்த்ததுல  விடியற்காலைல நீராடி மலையை கிரிவலம் வந்தால் நோய்கள் நீங்கும், நினைச்சது நடக்கும்ன்னு ஒரு நம்பிக்கையாம்.
சங்கு தீர்த்துல ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே நல்லா இருக்கு. நீராழி மண்டபமும்,  பக்தர்கள் குளிக்க படித்துறை மண்டபமும் இருக்கு.
செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில் செங்கல்பட்டிலிருந்து 14 கிமீ தூரத்திலும், மகாபலி புரத்திலிருந்து சுமார் 10 கிமீ தூரத்திலும் இந்த தலம் இருக்கு. செங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கு செல்லும் பஸ்லாம் இந்த கோவில் வழியே போகுது, கோவில் கிட்டயே இறங்கிக்கலாம்.
     
இந்த கோவில், தினமும் காலையில 6 மணி முதல் பகல் 1 மணி வரையிகும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை போய் வாங்க.

அடுத்த வாரம் வேறொரு கோவிலோட சந்திக்குறேன். 

17 comments:

 1. வாரா வாரம் கோவில் வாரம்.. சங்கு கிணறு கேக்கதுக்கே ஆச்சரியமா இருக்கு... நிச்சயம் ஒருநாள் போக வேண்டும்

  ReplyDelete
 2. சங்கு - வியப்பு...! படங்களின் மூலம் நாங்களும் கோவிலை வலம் வந்தாச்சி... நன்றி...

  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete

 3. என் பெயருக்கு ஒரு அருச்சுனை செய்யச் சொன்னேனே செய்தியளா
  இல்லையா ?.....மனசே சரியில்ல ராஜி அம்மா .என் தளம் ரொம்ப டல்லா
  இருக்கு சாமிக்கிட்ட சொல்லி சங்கடத்தைத் தீர்த்து விடு. ஒக்கே :))))

  ReplyDelete
 4. இத்தனை பிரமாண்டமான கோவில் ...இப்போதுதான் கேள்விப் படுகிறேன்....பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. சிறப்பான கோவில் பற்றிய தகவல்கள் உங்கள் தளம் மூலம் தெரிந்து கொண்டேன். சிற்பங்கள் பார்க்கவே ஒரு முறை செல்ல வேண்டும் எனத் தோன்றிவிட்டது....

  ReplyDelete
 6. அர்ச்சனை செஞ்சு உங்க அட்ரசுக்கு பிரசாதம் அனுப்பி இருக்கேன் அக்கா! இனி உங்க தளம் பிச்சுக்கிட்டு போகும் பாருங்க

  ReplyDelete
 7. புண்ணியம் தேடி உண்மையில் எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் ...அப்படியே இல்லவச இணைப்பா ..புளி சாதம் லட்டு விலை எல்லாம் கொடுத்தீர்கள் என்றால் உபயோகமாக இருக்கும்

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ஆஹா ராஜி ராஜேஸ்வரியா மாறிட்டாங்களா. அருமை

  ReplyDelete
 10. அருமையான திருத்தலப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 11. நாங்களும் கோவிலை தரிசித்தது போன்ற ஓர் உணர்வு. நன்றி

  ReplyDelete
 12. உங்கள் பதிவின் மூலம் நானும் கோயிலை நேரில் பார்த்த உணர்வு அக்காள்.

  ReplyDelete
 13. நன்னா எழுதரேள்! துளசி கோபால் மாதிரி.
  உங்கள் இருவர் எழுத்து நடை (தமிழில்-ஸ்டைல்) மாறுபட்டாலும்..இரண்டுமே படிக்கத் தூண்டும் பதிவுகள்.

  ReplyDelete
 14. கோயில் பற்றி அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

  சங்குதீர்தம் நேரில் பார்த்து வியந்த நினைவுகள் வருகின்றன.

  நன்றி.

  ReplyDelete
 15. about Thirukalukundram Temple History click

  http://www.thirukalukundram.in

  ReplyDelete
 16. about Thirukalukundram Temple History click

  http://www.thirukalukundram.in

  ReplyDelete