Tuesday, August 29, 2017

சத்தான முருங்கக்கீரை, கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்

சிப்ஸ், கேக், பானிப்பூரி, பிஸ்ஸா, பர்கர்,சாக்லேட்ஸ் நான் சின்ன புள்ளையா இருந்தபோதுலாம் இவ்வளவு நொறுக்குத்தீனி இருந்துச்சான்னு தெரியலை. சம்பளத் தினத்தன்னிக்கு இனிப்பும், காரமும் வாங்கி வருவார். எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் கால் கிலோவும் வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும்.

அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு  கொடுப்பாங்க.  அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.

நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சலிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.
கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க. 
பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.
தேவையான அளவு உப்பு சேருங்க.
கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.
ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.

அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.
கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரைலாம் லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப.மிளகாய் கூட சேர்த்துக்கலாம்.

மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும்,  முருங்கைக் கீரையில் இருக்கும்  வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!

கேழ்வரகு அடையை ஸ்கூல்ல இருந்து வந்ததும் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. மாசம் ஒரு தரமோ இல்ல ரெண்டு தரமோ செஞ்சுக் கொடுப்போம். 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்
ராஜி. 

11 comments:

  1. ராஜி சூப்பர் டிஷ். இதை நாங்க கேழ்வரகு ரொட்டினு சொல்லுவோம். இதில் காரட், கோஸ் கொத்தமல்லி, எல்லாம் போட்டும் வெஜிடபிள் அடைனும் செய்யலாம். இதையே இன்னுரு விதமான அடைனும் செய்யலாம். அடைக்குப் போடற பருப்பு எல்ல்லாம் போட்டு, அரிசிக்குப் பதிலா கேழ்வரகு மாவு அல்லது கேழ்வரகு ஊறவைச்சு அதையும் சேர்த்து அரைத்து வெங்காயம் எல்லாம் பொடியா நறுக்கிப் போட்டு நார்மல் அடை சுடறது போல செய்யலாம்...பூண்டு இஞ்சி வேணும்னாலும் போட்டு அரைச்சுக்கலாம். நிறைய கறிவேப்பிலையை மாவுல பொடியா கிள்ளிப் போட்டா வாசனையாவும் இருக்கும்.

    இப்படி சப்பாத்திக்குக் கலப்பது போல உருட்டிக்கலந்து செய்வததையே பிசையாமல் கொஞ்சம் அரிசி மாவு கலந்து தோசை சுடுவது போலவும் சுடலாம்.

    சூப்பர் ராஜி. நாளைக்கு டிஃபனுக்கு ஐடியா கிடைச்சுருச்சு உங்க ரெசிப்பிதான்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்/ எனக்குதான் என்ன டிஃபன் செய்யலாம்ன்னு குழப்பமா இருக்கு

      Delete
  2. நல்லதொரு உணவு. ஊரில் இருந்தபோது சாப்பிட்டதுண்டு. இங்கே கேழ்வரகு கிடைத்தாலும் செய்யும் பொறுமை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் உடல் நோகக்கூடாதுன்னு எல்லாருமே நினைச்சுட்டோம்

      Delete
    2. நீங்க சொன்ன டிப்சையும் மனசுல வச்சுக்குறேன்

      Delete
  3. அப்பா இங்கே என்னுடன் இருந்த நாட்களில் வாரத்துக்கு ஒரு தடவை கேள்வரகில் இதே போல் ரொட்டி தட்டி கொடுப்பேன். நாங்கள் இதை ரொட்டி என சொல்வோம். கோதுமை மாவிலும் இதே போல் செய்வதுண்டு, காய்ந்த மிளகாய்க்குப்பதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போடுவேன். தொட்டுக்க எதுவும் வேண்டாம். காரம் உப்பு என சேர்ந்து சும்மாவே கடிச்சி சாப்பிடலாம் போல சுவையாக இருக்கும்.முருங்கைக்கீரை இலகுவாக வெந்த் விடும் என்பதனால் அதை தனியே வதக்க தேவையில்லை என நினைக்கின்றேன்பா. நீரழிவு நோயாளர்களுக்கு அருமையான இரவு உணவு இது. நன்றி ராஜி

    ReplyDelete
    Replies
    1. பச்சை வாசனை வரும்ன்னு லேசா வதக்க்குவேன்க்கா

      Delete
  4. சுவையான பதிவு. வெங்கட் கருத்தை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா நம்ம கேட்டகிரி

      Delete
  5. ஆஹா...அருமையா இருக்கு ராஜிக்கா...


    முன்னெல்லாம் அவ்வளவு பிடிக்காது...ஆன இப்போ ரொம்ப பிடிக்கும்....

    இன்றைய படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு ..அதிலயும் பூண்டு மிளகாய் விழுது செம...

    ReplyDelete
    Replies
    1. இது பழைய பதிவு அனு

      Delete