Tuesday, August 15, 2017

ஆறு தலை முருகா! ஆறுதலை தர வா! - ஆடிக்கிருத்திகை


ஊரு உலகத்துல எத்தனையோ ஆயிரம் மொழி கிடக்கு. அதுல எந்த மொழிக்காவது கடவுள் இருக்கா?! ஆனா, நம் தாய்மொழியாம் தமிழுக்குன்னு தனி கடவுள் இருக்கார். தமிழைப்போலவே அழகும் இளமையும் கொண்டவர் முருகக்கடவுள்.இம்முருகனுக்கு கிருத்திகை நாளில் விரதமிருப்பது வழக்கம். மாதத்தில் ஒரு கிருத்திகை வரும். வெகு சில மாதத்தில் இருமுறையும் வரும். ஆனாலும், தை, ஆடி, கார்த்திகை கிருத்திகை மிக விசேசமாக கொண்டாடப்படுது. அதுக்கு என்ன காரணம்ன்னு பார்க்கும்முன் முருகனின் தோற்ற மகிமையை பார்ப்போம்...

தமிழ்க்குடி உருவான நாளிலிருந்து இயற்கை அழகு எல்லாத்துலயும் முருகனை கண்டனர்.  அதனால, தங்கள் இனக்கடவுளாக முருகனை வரித்துக்கொண்டனர். "முருகு"ன்ற சொல்லிற்கு அழகு, இளமைன்னு அர்த்தம். அதனால, முருகன்ன்னா அழகன்ன்னு அர்த்தமாகுது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் .

முருகன்ன்ற  பேருக்கு அழகு, இனிமை, இளமை, தெய்வத்தன்மை, மணம், மகிழ்ச்சி ஆகிய ஆறு தன்மைகளை தன்னகத்துள் கொண்டவன்னும் பொருள்படும். முருகன்ன்னா உயர்வானவன். அதனாலதான் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு கோவில் எழுப்பி கொண்டாடினர்.  முருகன் குறிஞ்சி  நிலத்து கடவுள்ன்றதால குறிஞ்சிக்கிழான்னும் பேருண்டு. இதுமட்டுமில்லாம, கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்,  பக்தர்களின் இதயக்குகையில் வசிப்பதால் குகன், அசுரர்களை வெல்ல படை நடத்தி சென்றதால் சேனாதிபதி, வேலினை கொண்டிருப்பதால் வேலன், கங்கையால் தாங்கி வரப்பட்டதால் காங்கேயன், அப்பனுக்கு உபதேசித்ததால் சுவாமிநாதன், சரவணப்பொய்கையில் சேர்ந்ததால் சரவணன், ஆறு பிள்ளையாய் இருந்தவனை ஒன்று சேர்த்து ஒரு பிள்ளையாதலால் கந்தன், ஆறு முகங்களை கொண்டதால் ஆறுமுகன், விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன்.... இப்படி அவனின் பெயர்க்காரணத்தை சொல்லிக்கிட்டே போகலாம்.... 

கார்த்திகை விரதம் உண்டான வரலாற்றை பார்ப்போம்....



சிவனிடம் வரங்கள் வாங்கி, அதனால் உண்டான மமதையால் தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை கங்கை தாங்கி, வாயுபகவானின் துணையோடு சரவணப்பொய்கையில் கொண்டு போய் சேர்த்தாள். 


ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். ஒருநாள் அம்மையும், அப்பனும் தங்கள் பிள்ளையை காண வந்தனர். ஓடோடி வந்த பிள்ளைகள் அறுவரையும் அன்னை சேர்த்தணைக்க ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய குழந்தையாய் முருகன் மாறினான்.


கார்த்திகைப்பெண்களின் சேவையினை பாராட்டி அவர்களை நட்சத்திர பட்டியலில் சேர்ப்பித்தோடு, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிப்படுவோருக்கு முருகனின் அருளும், முக்தியும் பரிபூரணமாய் கிட்டுமென அன்னை அருளியதோடு அன்றிலிருந்து முருகன் கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவான் எனவும் சொன்னாள். இதுதான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. 'ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே' என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு  கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.


கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கியமாகும்.  நட்சத்திரத்தில் 'கிருத்திகை' முருகனின் நட்சத்திரம்.  மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை கிருத்திகை.  மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.


முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரிய கண் இமைக்கும் நேரத்தில் காற்றை கிழித்து வருமாறு உருவம் கொண்டது. அழகிய மயில் அழகனுக்கு வாகனாமானது எத்தனை பொருத்தம்?! அழகோடு வேகமாய் பறக்கும் ஆற்றலும் கொண்டது. பக்தர்களின் துயரினை துடைக்க வரும் முருகனுக்கு மயில் வாகனமானது.  மயில் மனித மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. சிறு சத்தத்துக்கே அச்சமுறும் தாவர பட்சிணியான மயில் , மாமிசபட்சிணியான கொடிய விசம் கொண்ட பாம்பின்மீது மயில்  முருகன் எல்லா சக்திகளையும் அடக்கி ஆட்சி செய்வதோடு, முருகனால் முடியாதது எதுமில்லை என்பதையும்  காட்டுகிறது.


கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.    காலமாற்றத்தில் உப்பில்லாமல் உணவு படைப்பது நின்று போயிற்று..


எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும்.  பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் திருத்தணி முருகன் கோவில்தான் ஆடிக்கிருத்திகைக்கு மிக விசேசமானது. இந்நாளில், திருத்தணி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவர்.  இங்கிருக்கும் சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் இரவு வேளையில் தெப்போற்சவம் நடக்கும். 


கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கேற்ப பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். 



ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.

வேலுண்டு வினையில்லை.....மயிலுண்டு பயமில்லை...

ஓம் முருகா துணை.... 
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 
வீரவேல் முருகனுக்கு அரோகரா! 
ஞானப்பண்டிதனுக்கு அரோகரா! 
பழனி முருகனுக்கு அரோகர!
பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469509

நன்றியுடன், 
ராஜி.

17 comments:

  1. அருமையான ஆடிக் கிருத்திகை விளக்கப் பதிவு.பல விடயங்களை அறிந்து கொண்டேன், நன்றி..........பதிவுக்கு......

    ReplyDelete
  2. அருமை நீண்ட கருத்து ஆழமிக்க எழுத்து வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. ஓம் முருகா.. முருகன் என் இஷ்ட தெய்வம். அதுசரி, முருகனுக்கு ஆறுதலைத் தரவா என்று நீங்கள் கேட்பதுபோல இருக்கிறதே தலைப்பு!

    தம மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. கவனிக்கலை சகோ! திருத்திட்டேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோ

      Delete
  4. ஆடிக்கிருத்திகை சிறப்பு பற்றி விரிவான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  5. எங்களுக்கு இஷ்ட தெய்வம்! ரொம்பப் பிடித்த தெய்வம் மனதிற்குகந்த தெய்வம்! பதிவு அருமை!!

    ஆறுதலை தர வா என்று இருக்க வேண்டுமோ!!! (தரவா - தர வா!!)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் முருகர்தான் இஷ்ட தெய்வம்.. உக்கார , எழுந்துக்க.... என எப்பயும் அவனைத்தான் துணைக்கு கூப்பிடுவேன்.

      பெருமாள் கோவில்ல நின்னுக்கிட்டு முருகான்னு சொல்லிட்டுதான் சுயநினைவுக்கு வந்து பெருமாளை கூப்பிடுமளவுக்கு முருகன் பைத்தியம் நான்..

      Delete
    2. நான் முறுக்கு பைத்தியம் :)

      Delete
    3. சைட் டிஷ் நினைப்போ

      Delete
  6. அழகன் முருகனுக்கு ...அரோகரா!

    ReplyDelete
  7. முருகர்தான் அப்பாவை மிஞ்சிட்டார்ன்னா, நீங்க அவரையே மிஞ்சி ஆறு தலை முருகனுக்கு ஆறுதலை தருகின்றீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன் சகோ

      Delete
  8. அழகன் முருகன் பற்றிய சிறப்புப் பகிர்வு - சிறப்பான பகிர்வு.

    த.ம. +1

    ReplyDelete