Friday, November 03, 2017

ஒரே நேரத்தில் கோடானு கோடி சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டுமா?!


 உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்....  தானத்தில் சிறந்தது அன்னதானம், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.... அன்னம் இட்ட வீட்டில் கண்ணம் வைக்காத...ன்னு உணவின் பெருமையை சொல்லிச்செல்லும் பழமொழிகள் ஏராளம்....   "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” ன்ற சாமவேதத்தில் இருக்கும் ஒரு வரியின் பொருள்   எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்குது... என்பதாகும். உணவே உலகில் வாழும் அத்தனை ஜீவராசிக்கும் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி.  அன்னமானது பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்..... பராசக்தியின் அம்சமான பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாக காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.  


பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்

அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்

மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

 அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் ஆண்டவனுக்கே  அமுது படைக்கும் விழாதான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் மாலை வேளையில்   சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.


பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் இருக்குறதால  அமிர்த கலைன்னு சொல்வாங்க. அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்னிக்கு அறுவடையான புது நெல்லை அரிசியாக்கி சோறாக்கி  சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்,  சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது இடப்பாகத்திலேக் கொண்ட அந்த சிவனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.


தில்லையில்  தினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் செய்து, சுவாமிமேல் சாற்றிய அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுது எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்ன்னு பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை. அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். லிங்க ரூபம் நீள் வட்ட வடிவம். அரிசியும் நீள் வட்டவடிவம்.  அதனால், அரிசி சிவரூபம் என்பர். அன்னாபிஷேகத்தன்று இறைவன்மேல் சாற்றப்படும் அனைத்து பருக்கைகளும் சிவனின் அம்சம். அதனால், அன்னாபிஷேகராக காணப்படும் சிவனை தரிசித்தால் கோடானு கோடி சிவனை ஒருசேர தரிசித்தற்கு சமம். 


சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்னுதான் சாதம், சோறுன்னு சொல்லப்படும் வெறும் அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையது. ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே நாம் அனைவரும், சிவனும், நாமும் வேறல்ல. ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிந்து, நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி, நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி சிவனுக்குள் தன்னை   அடைக்கலமாகின்றது.  ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பதை அன்னம் நமக்கு உணர்த்துகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். 


ஐப்பசி பௌர்ணமியன்ன்னிக்கு காலையில சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.  பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு  சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகனம் எனப்படுது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறும்.பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக ஐவன் தருவார்,   இரண்டாம் காலம் பூஜை முடிந்தபின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.  மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ, கோவில் கிணற்றிலோ கரைக்கப்படும்.  எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்கன்னு இந்த மாதிரி செய்வது வழக்கமாம்....

எல்லா சிவன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கும். அதிலும் குறிப்பா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் இருக்கும் லிங்கத்திருமேனி பெரியதாகியதால் காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிடும். சோழநாடு சோற்றுடைத்துன்னு சொல்றதுக்கு தகுந்தமாதிரி  அறுவடையான புத்தம்புது அரிசி,  மூட்டை மூட்டையாக வந்து குவியும். நெற்களஞ்சியமென பேரெடுத்த தஞ்சை, அதன் சுற்றுவட்டார உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக கொடுப்பாங்க. அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும்., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து சேர சேர ஐயனின் திருமேனிமேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படும்.  எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படும்.

இதேமாதிரி, குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் கோவிலிலும் அன்னாபிஷேகம் சிறப்பா நடக்கும்.  பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடத்தி, பிறகு, எப்போதும்போல  மற்ற பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.  மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாரதனை நடக்கும். இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின்மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக்கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் பூஜிப்பான். இத்தலத்தின் சிறப்பு இதுதான்.  

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவதுதான் அன்னாபிஷேகம் எனப்படும். இப்பலாம் பலக்கோவில்களில், தங்கள் பக்திக்கும் கற்பனை சக்திக்கும் தகுந்தவாறு, அன்னம் சாற்றி பழங்கள், பட்சணங்கள் கொண்டு இறைவனின்  முகத்தை கொண்டு வருகின்றனர், இன்னும் சிலகோவில்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும்  படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்று பெரும்பான்மையான சிவன் ஆலயங்களில் அன்னதானம் சிறப்புற நடக்கும். இந்நாளில் உபவாசம் இருந்து, மஹாபிஷேகம் செய்து, பின் சிவனுக்கு அன்னாபிசேகம் செய்த பிரசாதத்தை உண்ணும்போது என்றென்றும் பிடி சோற்றுக்கு அல்லலுறும்  நிலை உண்டாகாது.  வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து 

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்

குஞ்சரக் கூட்ட முதலான சர்வ

கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து,  அனைத்து உயிர்களும் பசி, பிணி, பஞ்சத்தில் அல்லலுறாமல் இருக்க எம்பெருமானை வேண்டிக்கொள்வோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி

28 comments:

 1. அன்ன அபிஷேகம்... ஆனந்த தரிசனம். விவரங்கள் படித்தேன். படங்கள் அழகு.

  ReplyDelete
 2. தகவல்கள் நன்று புகைப்படங்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ... உங்களுக்கு மிகவும் தெளிவு.

  ReplyDelete
  Replies
  1. கூகுள்ல சுடுவதுதான்ண்ணே. அதில்லாம ஃபேஸ்புக்ல, கூகுள் பிளஸ்ல வரும் சாமி படம்லாம் சேர்த்து வச்சுப்பேன். அது கெடக்குது லாப்டாப்ல 100 கணக்குல சாமி படம்

   Delete
 3. நமசிவாயம். இறைவன் அருள் பூரணமாய் கிட்டட்டும்

  ReplyDelete
  Replies
  1. நல்ல வாழ்த்துரைக்கு நன்றி சகோ

   Delete
 4. கடின உழைப்பு உங்களது! அற்புதமான தகவல்கள். அன்னத்துக்கும் பஞ்ச பூதங்களால் உண்டான விளக்கம் அருமை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 5. பூந்தோட்டம் அருகில் உள்ள கருவேலி என்ற ஊரில் கோவில் கொண்டிருக்கும் ஸர்குணேஸ்வரர் - ஸர்வாங்க நாயகி ஆலயத்தில் இன்று மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தடையின்றி நடக்கிறது.

  சென்னையில் நான் குடியிருக்கும் 2800 அடுக்கு வீடுகள் கொண்ட குடியிருப்பில் அமைந்துள்ள அண்ணாமலையார்-உண்ணாமுலையம்மன் திருக்கோவிலிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6.3௦ மணிக்கு. வந்துவிடுங்கள். இறைவனின் அருள் பெறுங்கள்!

  -இராய செல்லப்பா சென்னை

  ReplyDelete
  Replies
  1. நேத்தே மொபைல்ல உங்க கருத்தை படிச்சுட்டேன்பா. நான் திருவண்ணாமலைக்கு போய் இருந்தேன்., கிரிவலம் சுத்திட்டு அங்ககயே அன்னாபிஷேகம் காட்சி பார்த்துட்டு வந்தேன்பா

   Delete
 6. எதையாவது சொல்லி நல்ல காரியங்கள் நடை பெற்றால் வாழ்த்துவோமே

  ReplyDelete
  Replies
  1. aஅமாம்பா. நல்லது நடந்தா சரி

   Delete
 7. தரிசித்தேன் அன்னபிஷேகத்தோடு ஐயனை அறிந்தேன் படங்கள் பகிர்வு மிக அருமை விளக்கங்களும் அருமை ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 8. அன்னாபிஷேகம்...

  அழகிய படங்களுடன் சிவ தரிசனம் ...

  மிக சிறப்பு ராஜிக்கா..

  ReplyDelete
 9. அருமையான படங்களுடன் அரிய தகவல்கள்...! பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 10. அன்னாபிஷேகம் - சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 11. லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம். சிவபெருமானைப் பற்றி அரிய செய்திகள். அழகான புகைப்படங்கள். மனம் நிறைவாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 12. அன்னபிஷேகம் பற்றிய தகவல்கள் , அழ்கிய சிவ தரிசன, படங்கள் எல்லாம் சிறப்பு ராஜி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete