Monday, March 05, 2018

கொத்தமல்லி சாதம் - கிச்சன் கார்னர்

சமைக்குறது ஒரு இம்சைன்னா பள்ளி, கல்லூரி செல்லும் பசங்களுக்கு சமைக்குறது படு இம்சை. சாம்பார், காரக்குழம்பு, பொரியல்ன்னு விதம் விதமா ஆரோக்கியமா  சமைச்சு கொடுத்தாலும் மூணு நாலு டப்பாக்கள் திறந்து பிசைஞ்சு சாப்பிட சோம்பேறித்தனம். டைமும் இருக்காது. அதேநேரம் தேங்காய் சாதம், புளி சாதம், புலாவ், மாதிரி வெரைட்டி சாதம்ன்னா ஸ்பூன்ல அள்ளிக்கொட்டிக்கிட்டு போய் வேலைய பார்க்கும். அதுகளுக்கு ருசியா சமைச்சு கொடுக்க நினைக்கும் அதேநேரத்தில் அதுங்க ஆரோக்கியத்தையும் மனசுல வச்சு சமைக்க வேண்டி இருக்கு.  

இப்ப கொத்தமல்லி சீசன். பத்து ரூபாய்க்கு பெரிய கட்டு கொடுப்பாங்க. கொ.மல்லி சட்னி, துவையல்ன்னு செய்யும் அதேநேரம் கொத்தமல்லி சாதம் செஞ்சு கொடுத்தா பசங்க சந்தோசப்படும். அதுங்க ஆரோக்கியம் கெடாதுன்னு நமக்கும் ஒரு சந்தோசம். இது செய்ய ரொம்ப ஈசியும்கூட...

தேவையான பொருட்கள்...
உப்பு போட்டு உதிர் உதிரா வடிச்ச சாதம்..
வாடாத கொத்தமல்லி 
பச்சை மிளகாய்
உரித்த பூண்டு பற்கள்.
இஞ்சி
பெல்லாரி வெங்காயம்,
காய்ந்த மிளகாய்
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
வேர்கடலை
எண்ணெய்
உப்பு..

கொத்தமல்லிய வேர் நீக்கி மண் போக சிலமுறை அலசி தண்ணிய வடிச்சுக்கோங்க.  அத்தோடு ப.மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு கொரகொரப்பா அரைச்சுக்கோங்க.  வெங்காயத்தை சுத்தம் செஞ்சு நீளவாக்கில் அரிஞ்சுக்கனும். 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிஞ்சதும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை போட்டு சிவக்க விடனும்.  காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டுக்கோங்க.
எல்லாம் சிவந்ததும் அரிஞ்சு வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.
வெங்காயம் நல்லா வதங்கினதும் அரைச்சு வச்சிருக்கும் கொத்தமல்லி விழுதை சேர்த்துக்கோங்க. 
தேவையான உப்பை சேர்த்து கிளறி விடுங்க....

கொத்தமல்லி விழுது பச்சை வாசனை போனதும் ஆற வச்சிருக்கும் சாதத்தை சேர்த்து கிளறிக்கனும். தேவைப்பட்டா எலுமிச்சை சாறு சேர்த்துக்கலாம்.

சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சாதம் தயார். அப்பளம், வடகம் சைட் டிஷ்சா இருந்தா இன்னும் ஜோர். வெங்காய பச்சடியும் ஓகே.

சிறு செடி வகையை சேர்ந்த இந்த கொத்தமல்லி சமையலுக்கு மணமூட்ட பயன்பட்டாலும் சிறந்த மூலிகையாவும் செயல்படுது. இது அதிகபட்சம் 50செமீ வளரும். இந்தியா முழுக்க பரவலா பயிரிடப்பட்டாலும், கொத்தமல்லியை கண்டுபிடிச்சது இஸ்ரேலில்தான். இது கிட்டத்தட்ட 8000 வருசமா பயன்படுத்தப்படுது. தண்டு, இலை, வேர், விதைன்னு  பயன்படுத்துவாங்க. விதைக்கு மல்லி விதை, தனியான்னு பேரு.  கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு  மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கு. கொத்தமல்லி, மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும்.  சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதை அதிகம் உண்பதால் மந்தத்தன்மை உண்டாக்கும்.  கொத்தமல்லியை, சட்னி, துவையல், தொக்கு, ஜூஸ்ன்னு உள்ளுக்குள் சாப்பிடுற மாதிரி கொத்தமல்லி சாற்றை அழகுக்காக மேல்பூச்சாகவும் பூசுறாங்க.

அடுத்த கிச்சன் கார்னர்ல ஈசியான ஒரு ரெசிப்பி எப்படி செய்யலாம்ன்னு பார்க்கலாம்.....

நன்றியுடன்,
ராஜி.

4 comments:

  1. அருமையான கொத்மல்லி சாதம்..... நான் சாப்புட மாட்டேன்,வூட்ல பசங்களே,பண்ணி பசங்களே சாப்புடுவாங்க.......///தனியா......இது இந்தி பேரில்லையா?.....இங்கிலீசில கொரியாண்டர் என்பாங்க.......//பதிவுக்கு நன்றி தங்கச்சி.....

    ReplyDelete
    Replies
    1. தனியா இந்தி பேரா?! அப்ப மல்லி விதைதான் தமிழ் பெயரோ! வெங்கட் நாகராஜ் அண்ணா வந்து இதுக்கு பதில் சொல்வாருண்ணே

      Delete
  2. சூப்பர் அக்கா

    ReplyDelete