Saturday, March 14, 2020

கல்யாணத்துக்கு போனதுலாம் இதுக்குதான்!! - கிராமத்து வாழ்க்கை

புளிப்பு மிட்டாய், கமரக்கட், தேன் மிட்டாயை மட்டுமே சாப்பிட்டு வந்த காலத்தில் புது வரத்து இந்த ஆசை சாக்லேட்.  நாலணாக்கு இந்த சாக்லேட் வாங்க கடைக்கு போக, இருட்டு குதிருக்குள் இறங்கி நெல், கேழ்வரகு எடுத்துக்கொடுக்குறதுன்னு பல வேலைகள் செய்வோம்.  இந்த சாக்லேட்டை சாப்பிடுறதுல இருக்கும் சுகத்தைவிட, சாக்லேட் கவருக்குள் கல்லை வைச்சு பிரண்டுக்கு கொடுக்குறதும், சாக்லேட் கவரை இழுத்து விளையாடுறதுலயும்தான் திருப்தியடைவோம்.
ஆசை சாக்லேட்டுக்கு அடுத்து மகா லேக்டோ சாக்லேட்.  இந்த சாக்லேட் அம்புட்டு சீக்கிரம் கரையாது. அரை மணி நேரத்துக்கு வாயில் இருக்கும். மென்னுதான் திங்கனும். எனக்கு இந்த சாக்லேட்டை பிடிக்காது.


கொஞ்சம் வளர்ந்த பிறகு சாக்லேட் கவரில் பொம்மை செய்ய கத்துக்கிட்டு நம்ம கிரஷ்சுக்குலாம் கொடுப்போம். பிறகு, சாக்லேட் பேப்பரில் வாசல் தோரணம்லாம் செஞ்சிருக்கேன். அதுலாம் ஒரு கனாக்காலம்.

அம்மாவோடு மிளகாய், சீயக்காய், கேழ்வரகு, கோதுமை அரைக்க போவேன். இஞ்சினிலிருந்து மெஷினுக்கு வரும் பெல்ட்டை மாத்தும்போது கூடவே இருப்பேன். கொஞ்ச நாளில் மெஷினுக்கு சொந்தக்காரங்க சொன்னாங்கன்னா நான் பெல்ட் மாத்தி விட்டிருக்கேன். மாவு வந்து விழும் அந்த துணிக்குழாயை உதறிவிட ரொம்ப பிடிக்கும். மிளகாய் சீயக்காய் அரைக்கும்போது தும்மல் வந்தாலும், விடமாட்டேன். சின்ன வயசுல கூட்டாஞ்சோறு ஆக்கும்போது மிளகாய் தூள் கேட்டால் வாராவாரம் கேக்குறியான்னு அம்மா திட்டுவாங்க. மெஷினுக்கு ஓடி அந்த துணியை உதறி உதறி மிளகாய் தூளை சேமிச்சு வருவோம்.
ஆயிரம் காரணங்களுக்காக பெரியவங்க கல்யாண வீட்டுக்கு போனாலும், நாம போறதுலாம் இந்த பாக்குக்குதான். கல்யாண வீட்டில் இதை எடுக்குறதுக்கு பேங்கை கொள்ளையடிக்குற மாதிரி பல பிளான் பண்ணனும். இதை சாப்பிட்டா படிப்பு வராது, போதையாகிடும்ன்னு இதை திங்க விடமாட்டாங்க. ஆனாலும், சுட்டுடுவோம்ல! ஏ.ஆர்.ஆர் பாக்கு, ரோஜா பாக்குன்னு நம்மளை நம்பிதான் மார்க்கெட்ல விட்டாய்ங்க.


தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு  முந்தியே கடைகளில் பொட்டு வெடி, சீனி வெடி கிடைக்கும். 1 ரூபாய்க்கு ரெண்டு பொட்டு வெடி, 1 ரூபாய் பாக்கெட்டில் நாலு சீனி வெடி இருக்கும். கையில் பைசா தட்டுப்படும்போதெல்லாம் பட்டாசு வாங்கி வெடிக்குறதுன்னு அந்த ஒரு மாசம் ஓடும். தீபாவளிக்கு முதல்நாள் அப்பா பட்டாசு வாங்கி வந்தால் இந்த சீனி வெடியைதான் முதலில் பார்ப்பேன்.  முதல் நாளில் இருந்து இந்த சீனிவெடியையும், பொட்டு வெடியையும் வெடிக்க ஆரம்பிப்பேன். ஆர்வக்கோளாறில் சீக்கிரமா காலி பண்ணிடக்கூடாதுன்ற எச்சரிக்கையையும், டைம் மேனேஜ்மெண்டையும் அன்னிக்கே கத்துக்கிட்டது இதிலிருந்துதான். தீபாவளி அன்னிக்கு  மாலை யார்க்கிட்ட அதிகமா சீனிவெடி இருக்கோ. அவங்கதான் ராஜா. மாலை நேரம் நெருங்கியதும் ரெண்டு மூணு வெடியை சேர்த்து வைச்சு வெடிச்சு காலி பண்ணுவேன். ஏன்னா, ராத்திரி ஆகிட்டா மத்தாப்பு, சங்கு சக்கரம் மாதிரியான ராத்திரி வெடியை கொளுத்தனுமே! சீனி வெடி திரியை திருகி,திருகி கையெல்லாம் கருப்படிச்சிருக்கும்.  மருந்து வாசம் மறுநாளுக்கும் கைகளில் இருக்கும்.

கொசுவர்த்தி சுருள் மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி



9 comments:

  1. ஆசை சாக்லேட் - :) ஆசை ஆசையாய் சாப்பிட்டது!

    இனிய நினைவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  2. எனக்கு மஹா லாக்ட்டோவும், லாக்டோ கிங்கும்தான் பிடிக்கும்!

    ReplyDelete
  3. ஆகா......கொசுவர்தி.
    இங்கு கஜூ,ஸ்டார் என்று ரொபிகள் கிடைத்தன சுவைதான்.
    சீனவெடி நமது வீட்டில் தடா மத்தாப்பு ,சக்கரம் உண்டு.

    ReplyDelete
  4. அக்கால நினைவுகள் இனிமை

    ReplyDelete
  5. Neenkal Unkal Blogger Google AdSense apply seythu vidunka approval kidaikkum money earn pannalam

    ReplyDelete
  6. அருமையான நினைவுகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  7. மிகவும் ரசித்தேன் சகோதரி...

    ReplyDelete
  8. ம்ம்ம்... உங்கள் கதை கேட்கும்போதே எங்கள் ஞாபகங்களும் (90-கிட்ஸ் ஆக்கும்) வருது...

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கல்யாணத்துக்கு போனதுலாம் இதுக்குதான்!! – கிராமத்து வாழ்க்கை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete