Wednesday, March 18, 2020

நடுவுல கொஞ்சம் கெணத்தை காணோம்.. -தெரிந்த கதை, தெரியாத உண்மை

என் கெணத்தை காணோம். வட்டக்கிணறு, வத்தாத கிணறுன்னு வடிவேலு காமெடியை போல ஊருக்குள் இருந்த கிணறுலாம் காலப்போக்கில் காணாம போயிட்டுது.  



முன்னலாம் பெரும்பாலும் எல்லார் வீடுகளிலும்  சின்னதா ஒரு கிணறு இருக்கும்.  தெருவுக்கு ஒரு பொதுக்கிணறு இருக்கும். வீட்டு கிணத்தை சுத்தி செங்கல் வச்சு சமதளமாக்கி இருப்பாங்க. கொஞ்சம் வசதியிருந்தால் சிமெண்ட் பூசி இருப்பாங்க. பாத்திரம் கழுவ, துணி துவைக்க, பிள்ளைகளை குளிப்பாட்ட என அங்கதான் நடக்கும். மக் தண்ணியை தலையில் கொட்டி குளிக்கும்போது மொத்த உடலும் நனைஞ்சிருக்குமான்னு தெரியாது. பாத்ரூமை விட்டு வெளியில் வரும்போதே வேர்த்து கொட்டுது.  ஆனா, கிணற்றில் சேந்தி அந்த வாளி தண்ணியை அப்படியே தலையில் கொட்டும்போது... மொத்த உடம்பும் நனையும். தண்ணியின் சில்லிப்பில் உடல் மொத்தமும் குளிர்ந்து, பொழுதன்னிக்கும் அந்த புத்துணர்ச்சி இருக்கும்.  வீட்டு கிணறு இல்லாதவங்கலாம்  பொது கிணறில் தண்ணி இரைப்பாங்க. அங்கயும் துணி துவைக்க, பாத்திரம் கழுவன்னு நடக்கும். கூடவே, ஊர்வம்பு, பிள்ளைகளின் படிப்பு, மாமியார் மருமக பஞ்சாயத்து, வைத்தியம்ன்னு ஓடும். கூட வந்தவங்க வேலை முடியும் வரை கூடவே இருந்து, அவங்களுக்கு ஒத்தாசையா துணி துவைச்சு , தண்ணி இறைச்சு கொடுத்து.... விட்டுக்கொடுத்தலும் சகோதரத்துவமும் அந்த கிணற்றோடு போயிட்டுது.

இன்னிக்கு நாம தொலைச்ச அந்த கிணற்றின் வயசு சுமார் 2000க்கு முந்தையது. அதை எப்படி சொல்றேன்னா, தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு " என திருவள்ளுவர் திருக்குறள்ல சொல்லி இருக்கார். அப்படின்னா, திருக்குறளுக்கு முந்தையது இந்த கிணறுன்னு சொல்லலாம்.  கிணற்றில் அகழ் கிணறு, ஆழ்துளை கிணறுன்னு  இரு வகை இருக்கு. ஒரு இடத்தில்  கடப்பாரை, மண்வெட்டி கொண்டு தோண்டும் வகையில் அகலமா குறிப்பிட்ட விட்டத்துல தோண்டுறது அகழ் கிணறு. வெட்டி எடுக்கப்படும் இடத்துல மண் சரிஞ்சு விழுந்துடாம இருக்க, தோண்டும்போது கிடைக்கும் கற்களை கொண்டும், செங்கற்களை கொண்டும் கட்டப்படும். பிற்காலத்தில் சிமெண்ட் பூச்சு வந்துச்சு. 


இன்னும் கொஞ்ச காலத்திற்கு பிறகு, சுடுமண்ணால் ஆன, வளையங்களைக்கொண்டு மண் சரிஞ்சுடாம இருக்க கட்டிக்கிட்டு வந்தாங்க. இதுக்கு உறை கிணறுன்னு பேரு. கடற்கரையோரம், மணற்பாங்கான இடம்ன்னு இந்த மாதிரி கிணறு கட்டப்பட்டது. காலப்போக்கில் சுடுமண்ணுக்கு பதிலா காங்கிரீட்லான உரைகள் வர ஆரம்பிச்சது.  ஒரே உயரமும், அளவும் இருக்குற காங்கிரீட் வளையங்கள் ஒன்னு மேல ஒன்னு   அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண்பூச்சு இருக்கும். சில  வளையத்தின் நடுவுல சின்ன துளை இருக்கும். இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள  நீர்,  கிணற்றுக்கு போயிடும். 

நம் முன்னோர்களின் நீர் மேலாண்மையை விசயம் தெரிஞ்சவங்க பெரிதாய் பாராட்டுவாங்க. மழைநீர் தெருவில் ஓடி, சிறு ஓடையாய் மாறி கிணறு,குட்டைக்கு போய் அங்கிருந்து  குளம்,  வாய்க்கால், ஏரி, கண்மாய்,  ஆறு, அணைன்னு சேமிச்சு மிச்சமீதியைதான் கடலுக்குனு  நீரை சேமிச்சு வாழ்ந்திருக்காங்க. கிணற்றில் ஆண் கிணறு, பெண் கிணறுன்னு ரெண்டு வகை இருக்கு. வீட்டில் பயன்படுத்தப்படும் கிணறு பெண் கிணறு, விவசாயத்திற்காக கழனிகளில் வெட்டப்படும் கிணறு ஆண் கிணறுன்னு வகைப்படுத்தி வச்சிருக்காங்க.   
கிணறு பெரும்பாலும் வட்டவடிவில்தான் வெட்டுவாங்க. எங்கோ சில இடத்தில்தான் சதுர வடிவில் இருக்கும். கிணற்றை வட்டவடிவில் வெட்ட காரணம் என்னன்னா, வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் சேர்றதால உருவாகுது. பொதுவா ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால்தான் அந்த காலத்தில் பெரிய பெரிய கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகள் இருக்குற மாதிரி பார்த்துப்பாங்க.  கிணற்றின் எடை தாங்கும் திறன் அதிகரிக்கவே கிணறு வட்டமாக இருக்குற மாதிரி பார்த்துப்பாங்க.

குழாய்களிலும், கேன்களிலும் நீரை பார்த்த இந்த கால பிள்ளைகளுக்கு கிணற்றின் அருமையும், அதோடு நெருக்கமாய் வாழ்ந்த நம் வாழ்க்கையின் அருமையினையும் தெரியாது. மழைநீரை சேமிக்க கிணறு போல் வேறு அமைப்பு கிடையாது. மழை நீரை உள்வாங்கி, பின் மக்களுக்கே தரும் இந்த கிணறு. 

கிணறு  ஈசான்ய வாயு மூலைல எந்த மூலை தாழ்வா இருக்கோ அங்கே தோண்டனுமாம்.  இடத்தை சரியா மூலைவிட்டமா பிரித்து அந்தக்கோட்டுல கிணறு வராம தோண்டனும்.   ஒரு கொய்யாமரத்தில் கட்டையை Y வடிவில் எடுத்துக்கிட்டு இருகையிலும் அதன் கீழ்பகுதியைப் பிடிச்சுக்கிட்டு அந்த கட்டையின் v வடிவத்தை கீழே தரையை நோக்கி காட்டிக்கிட்டே இடத்தை சுற்றி வரும்போது,  தண்ணீர் உள்ள இடத்தில் கட்டைக்கு அதிர்வு கிடைக்கும்.  கடிகார சுற்றுப்படி சுத்துனா நல்ல தண்ணின்னு, எதிர்பக்கமா சுத்துனா உப்பு தண்ணி இருக்கும்ன்னும் சொல்வாங்க. பெரும்பாலும் இதுமாதிரியான முறை பொய் சொன்னதில்லை. என்னதான் நீரோட்டம் பார்த்து இடத்தினை தேர்வு செஞ்சாலும் எறும்பு புற்றுகள் அங்க இருக்கான்னு பார்த்தும், கால்நடைகளை அந்த இடத்தில் மேயவிட்டு ஆடுமாடுகள் எங்க உட்கார்ந்து அசை போடுதோ அங்கேயும் தோண்டலாம். சிலர் கொத்தனார்கள் பயன்படுத்தும் தூக்கு கூண்டை சுழல விட்டு எவ்வளவு விட்டத்திற்கு நீரோட்டம் இருக்கும்ன்னு பார்ப்பாங்க. தேங்காயை உள்ளங்கையில் வச்சுக்கிட்டு நீரோட்டம் இருக்கான்னும் பார்ப்பாங்க. 

மழைக்காலத்தில் கிணறு தோண்டக்கூடாது.  அதேப்போல் கடுமையான கோடைக்காலத்திலும் கிணறு தோண்டக்கூடாது. சுண்ணாம்பு படிவ சுக்கான் பாறைகள் இருந்தால், அதை உடைத்து கிணறு தோண்டலாம். கண்டிப்பாக நல்ல தண்ணீர் கிடைக்கும். மணல் சரியும் இடங்களில் ஒரேடியாக கிணற்றை தோண்டக்கூடாது கொஞ்சம் கொஞ்சமா தோண்டனும். இல்லன்னா மண் சரிஞ்சு உயிர்பலி நேரும். கிணறு தோண்டும்போது அழுகிய முட்டை வாசனை வந்தால் உடனே நிறுத்திடனும். ஏன்னா, அங்க மீத்தேன் மாதிரியான நச்சு வாயு வெளிவரும்.  கிணறு தோண்டி தண்ணி வந்ததும் அதிகபட்சமா  7லிருந்து 10 அடி ஆழம் மட்டும் தோண்டினா போதும். இல்லன்னா தண்ணியின் சுவை மாறிடும். கிணறு தோண்டினதும் கிணற்றினுள் சூரிய வெளிச்சம் படுற மாதிரி ஜன்னல் வச்ச மூடி போடனுமே தவிர இரும்பு தகட்டை கொண்டு மூடக்கூடாது. கிணறு தோண்டிய ஒருமாசத்துக்கப்புறமா கிணத்திலிருக்கும்  தண்ணியெல்லாம் வெளியேத்தி களிமண் படிவங்கள் இருந்தால்  அதை தூர் வாரினப்பின் தண்ணி கலங்கலா இருக்கும். அதில் ஆலம்ன்னு சொல்லப்படும் சுண்ணாம்பு பொடியை தூவி விட்டால் ஓரிரு நாளில் தண்ணி தெளிஞ்சுடும், அப்புறம் பயன்படுத்தலாம். வருசம் ஒருக்கா கண்டிப்பா கிணற்றை தூர்வாரனும். 

இப்படி வருசம் ஒருக்கா கிணற்றினை தூர் வாருவது நீர் ஊற்று சிறப்பா வேலை செய்ய உதவும். வழிந்தோடும் மழை நீரை கிணற்றில்  அப்படியே  விடக்கூடாது. கிணறு இருக்குற இடத்தைச் சுத்தி, சிமெண்டோ இல்ல காங்கிரீட்டோ போட்டு மூடக்கூடாது. அப்படி போட்டுவிட்டால் அங்க மழைநீர் தேங்காது. மழைநீர் தேங்க கிணற்றை சுற்றி மண்ணாவே இருக்கனும்.  பிள்ளைகளா! கிணறு தோண்டினதும் அதுல நெல்லிக்காய் மரக்கட்டைகளை போட்டு வச்சேன். அதான் இந்த தண்ணி இனிக்குதுன்னு  எங்க ஊரில் ஒரு தாத்தா சொல்வாரு. அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரில. 


நாம் தொலைச்சது  நம் பாட்டன், பூட்டன்,முப்பாட்டன் சொத்தான 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஈரமுள்ள கிணறுகளை மட்டுமல்ல, நம் நெஞ்சின் ஈரத்தையும்தான். நம் அண்டை மாநிலமான கேரளத்தில்கூட கிணற்றின் அருமையை புரிஞ்சு வச்சுகிட்டு கிணறு வச்ச வீட்டை இன்னும் கட்டுறாங்க. ஆனா, நாம்?! ஆழ்துளை கிணற்றினை தோண்டி வரம்பில்லாம தண்ணியை உறிஞ்சு எடுத்து நீரை வீணாக்கிக்கிட்டிருக்கோம். எதிர்கால சந்ததியினரை நீருக்கு அல்லாட வைக்கப்போறோம்.

இனியாவது திருந்துவோமா!?

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. ஊ...ஹூம்...   திருந்தவே மாட்டோம்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்டா எப்படி சகோ?!

      Delete
  2. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது நடுவுல கொஞ்சம் கெணத்தை காணோம்.. -தெரிந்த கதை, தெரியாத உண்மை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  3. அருமை அக்கா...தப்புன்னு உணர்ந்தாத் தானே திருத்த .. ம்ம்

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் உணரலைன்னா பாடுபடுவது நாமில்ல!! நம் சந்ததியினர்தான். சொத்து சுகம் சேர்த்து வச்சும் ஏதும் பிரயோசனமில்ல!

      Delete
  4. வாய்ப்பில்லை ராசா... வாய்ப்பில்லை...

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லைன்னா அவஸ்தைப்படுவோம்.

      Delete
  5. // கிணற்றில் சேந்தி அந்த வாளி தண்ணியை அப்படியே தலையில் கொட்டும்போது... மொத்த உடம்பும் நனையும். தண்ணியின் சில்லிப்பில் உடல் மொத்தமும் குளிர்ந்து, பொழுதன்னிக்கும் அந்த புத்துணர்ச்சி இருக்கும்//
    நினைக்கும் போதே சில் லுன்னு இருக்கு

    ReplyDelete
  6. //ஆடுமாடுகள் எங்க உட்கார்ந்து//
    என்னாது உக்காந்தா?

    ReplyDelete
  7. இழந்தவை எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது - கிணறும் இப்படியே.

    இன்றைக்கும் திருச்சி கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் கிணறு உண்டு. திருவரங்கத்திலும் சில வீடுகளில் இருக்கின்றது.

    ReplyDelete
  8. எங்கள் கிராமத்து வீட்டில் இருக்கிறது. அந்த நீரைத்தான் உபயோகிப்போம்

    ReplyDelete