நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல சித்தர்களின் பூர்வீகம், பிறப்பு முதலான தகவல்கள் கிடைப்பது அரிது. இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் சித்தர் வள்ளலாருக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர். அதனால், அவர் பிறந்த தேதி,வருடம் , பெற்றோர், என எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதேப்போல் எந்த ஆண்டுகாலத்தில் பாண்டிச்சேரிக்கு வந்தார்?! எப்பொழுது ஜீவ சமாதியானர் என்பது கூட எவருக்கும் தெரியவில்லை.எல்லாமே செவிவழி செய்தியாக சொல்லப்படுபவைகள்தான்!!!
கடந்த வாரம் நாம ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவ சமாதியினை பார்த்தோம். இந்தவாரம் நாம
பார்க்கபோறது ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சித்தர். எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தித்திற்குள் வேகவேகமாக செல்வதாலும், சில
ஜீவசமாதிக்கோவில்கள் 12 மணிக்கு
முன்பாக நடையடைத்து விடுவதால், சித்தர்களை தரிசிப்பதே முக்கிய குறிக்கோளாய் இருப்பதால் சில
சமாதி கோவிகளில் நின்று நிதானமாக போட்டோ எடுக்கமுடியவில்லை. மற்றும் விஷயம்
தெரிஞ்ச யார்கிட்டயாவது செய்தி சேகரிக்கலாம்ன்னு பார்த்தால், எங்களோடு வந்த குழுவினர் வேறு கோவில்களையும் பார்க்கும்
அவசரத்தில் இருந்ததாலும் சில ஜீவசமாதிகளை சற்று விரிவாக
எழுதமுடிவதில்லை.
வேலூர், திருவண்ணாமலை என மாவட்டங்கள் பிரிப்பதற்கு முன்பாக வட ஆற்காடு, தென்ஆற்காடு என பிரிந்திருந்த காலக்கட்டத்தில் கடலூர், விழுப்புரம் எல்லாம் சேர்ந்தே இருந்தன. சோழர் கால வரலாற்று புதினத்தின் (பொன்னியின்செல்வன்)படி
அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர்
என ஆகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இம்மாவட்டத்தை திருப்பாதிரிப்புலியூர் என்று
அழைத்தனராம். ஆங்கிலேயகளுக்கு இந்த பெயரை உச்சரிக்க கஷ்டமாக இருந்ததால் இந்த ஊருக்கு கடலூர்ன்னு பெயர் வச்சி
அவங்க ரெக்கார்டுகளில் எழுதினாங்களாம். அந்த கடலூரில்தான் இந்த ஓம் ஸ்ரீசக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள் சுமார் 175 வருஷங்களுக்கு முன்னால் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. சிறியவயதிலேயே, தேவி பராசக்தியின் தீவிரமான பக்தராக விளங்கினார். மேலும் வேதபாராயணங்கள், உபநிஷத்துக்கள் அனைத்தும் கற்று தேர்ந்தார். சாஸ்திரங்களை
படிக்கப்படிக்க அவற்றின் வலிமையை அவரால் உணரமுடிந்தது. அதனால் அவர் உச்சரிக்கும்
மந்திர சக்திகளின் அற்புதங்களை அவரால் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. மந்திர
சக்திகளின் அற்புதங்களும் அவருக்கு புரிய ஆரம்பித்தன. தேவியை பூஜிக்க பல
யந்திரங்களை உபயோகிப்பார் என்றும், யந்திரவழிபாட்டில்
மிகசிறந்த வல்லமை பெற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அங்கிங்கெல்லாதபடி
எங்குமே நிறைந்திருக்கின்ற பரம்பொருளை தன்னுள் உணர ஆரம்பித்தார்.
இவருடைய சிறியவயதிலேயே இவரது தகப்பனார் காலமானார். ஆகையால்
இவரது சகோதரர்களுக்குள் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. நிலையில்லாத
சொத்துக்களுக்கு ஒருதாய் வயிற்று பிள்ளைகள் அடித்துக்கொண்டு அழிந்துகொள்ளும் துன்மார்க்கர்கள்
மத்தியில் இனி இருக்கவேண்டாம் என்று முடிவெடுத்து .தனது பாகத்தையும் தனது நான்கு சகோதரர்களுக்கும் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு
வெளியேறினார். இந்த சொத்துக்கள் நமக்கு தேவையில்லை இறைவனைக் காண ஆத்மஞானமே தேவை
என்று உணர்ந்து ஆத்மதரிசனத்திற்க்காக காசிக்கு சென்றார். அங்கிருந்து கங்கை, ஹரித்துவார், பண்டரிபுரம், காஷ்மீர், இமயமலை போன்ற பகுதிகளுக்கெல்லாம் சென்றார். இமயமலையில் ஞானானந்தகுருவினை சந்தித்தார் அவரிடம் ஆத்ம
சாதனையை பயின்றார். பறவைகளின் ஒலியையும், நாய்கள் குரைப்பதையும் வைத்து இறைவன் மக்களுக்கு என்ன
சொல்லவருகிறாரோ அதை இந்த உயிரினங்கள் மக்களுக்கு உணர்த்துகின்றன. ஆனால் மனிதன்
மட்டும் இன்னமும் உணராமல் இருக்கிறான் என்று சொல்வார்.
ஒருவழியாக ஆத்மசாதனை கைக்கூடி இறைக்காட்சி
கிடைக்கப்பெற்றார். இந்த பிரபஞ்சதின் ஒவ்வொரு இடத்திலும் .ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு உயிரிலும் இறைவனை கண்டார். எங்கும் எதிலும் இறைவனை
கண்டார். பூமியின் வடிவம்கூட இறைவன்தான் என்று ணர்ந்தார். செடி, கொடி, புல், பூண்டுகளிலெல்லாம் இறைவனின் அருளைக் கண்டார். ஆகையால்
தரையில் கால் வைத்து நடக்கவும் கூசினார். மக்கள் பேசுவதைப் பார்த்து இறைவன் அவர்கள்
உருவில் பேசுகிறார் என்பார். காற்றின் ஒலிகளில்கூட இறைவன் பேசுகிறார் என்பார். கதிரவனின் பிரகாசத்தைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவார். கடலின் அழகையும் ஆழத்தையும் பார்த்து “இறைவா! உன்னை உணர முடிகிறதே என்பார். நெருப்பில் கையைவிட்டு இறைவா! உன்னைத் தொடமுடிகிறதே என்பார். இறைவா! நீ எங்குமிருக்கிறாய். -உன்னை நான் எங்கும் பார்க்கிறேன், உன்னிடம் பேசுகிறேன், விளையாடுகிறேன். இதைவிட எனக்கு என்ன
வேண்டும்?! இப்படியே இருந்தால் போதும் என ஆனந்தக்கண்ணீர் விடுவார். கண்ணீர் தாரை தாரையாக வழியும். சதா சர்வகாலமும் அவர்
கண்களில் கண்ணீர் விட்டுக்கொண்டேயிருப்பார். இறைவன்மேல் எப்பொழுதும் அன்பும் ஆனந்தமுமாக இருப்பார்.
பின்னர் புதுவையைத்தேடி வந்தார். அங்கு ஆள்நடமாட்டமே இல்லாத முதலியார்பேட்டை, காரமணிக்குப்பத்தில் உள்ள ஒரு தோப்பில் எப்பொழுதும்
நிஷ்டையில் அமர்ந்திருந்தார். தினமும்
எந்திர பூஜைகளை தவறாமல் செய்து தேவிபராசக்தியை தினமும் வழிபடுவார். பின்னர்
பக்கதர்களின் குறைகளை கேட்டு அதற்கு நிவாரணம் சொல்லுவார். ஏவல் பில்லிசூனியம் இருப்பவர்களை அதிலிருந்து
விடுவித்தார். மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு பரிகாரம்மூலம் அவர்களுக்கு மக்கட்பேறு
வரம் வாங்கிக்கொடுத்தார். பணமில்லாமல் கஷ்டப்படும் ஏழைமக்களுக்கு ரசவாத வித்தைகள்
மூலம் பொருளுதவியும் செய்துகொடுத்தார் இல்லாதவர்களுக்கு
தேடிச்சென்று வைத்தியம் பார்ப்பார். இந்த சித்தர் இறைவன்மேல் ஏகாந்தத்தில்
நிலைத்தவுடன் சத்துவ குணத்திலிருந்து நிர்குணத்திற்கு வந்தார். சரி அதென்ன
சத்துவக்குணம் என்றுதானே கேட்கிறீர்கள் .சத்துவ குணம் அல்லது சாத்விக குணம் என்பது
முக்குணங்களில் ஒன்று. முக்குணங்கள் என்பது சாத்விக குணம், இராஜச குணம், மற்றும்
தாமச குணம் என்பதாகும். அதில் முதன்மையானது சத்துவகுணம் இதிலிருந்து தோன்றும் இயல்புகளான ; நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன்
அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, அகிம்சை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), மனத்திருப்தி, மனத்தூய்மை, தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), பணிவு மற்றும் எளிமைத் தன்மை ஆகும். நிர்குணம் என்பது
வடிவமற்ற எதிலும் நிறைந்த பரப்பிரம்மத்துடன் தன்னை உணரும் ஒரு நிலை ஆகும்.
இந்த ஓம் ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமிகள் ஏகாந்தத்தில் நிலைத்திருந்த சமயத்தில் ஓம் ஸ்ரீஞானானந்த
சுவாமிகளின் சந்திப்பு ஏற்பட்டது. இமயமலையில் இருவரும் ஆத்மசாதனை பயிலும்போது
இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பிறகு சுவாமிகள் புதுவைக்கு வந்து தங்கியிருந்தபோது, ஞானானந்த சுவாமிகளின் சந்திப்பு மீண்டும் புதுவையில்
ஏற்பட்டது. சுவாமிகள் ஆனந்தமயமாக காட்சியளித்தார். அவரின் லட்சுமிகடாட்சமான முகத்தை
கண்டு மக்கள் அவரின் சக்தியை உணர்ந்தார்கள். சுவாமிகளிடம் ஆசி பெற்றவர்களின் நோய்
குணமாகியது. அப்பகுதி மக்களின் துன்பம் சிறுக சிறுக மறைந்தது. யாராவது தங்கள்
கஷ்டத்தை சுவாமிகளிடம் சொன்னால், இதோ இறைவன் இருக்கிறானே!! கஷ்டமெங்கே!? ஆனந்தமாக
இருக்கிறான். சந்தோஷமாக போ” என்பார்.
வந்தவரின் கஷ்டம் அக்கணமே மறைந்து விடும்.
அங்கிருந்த மக்களுக்கு சுவாமிகளை தரிசனம் செய்தால் அன்று
பூராவும் எந்தவித பிரச்னையுமின்றி சந்தோஷமாக இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார்கள். இவர்
தங்கள் குறைகளை தீர்த்துவைக்கும் மகான் என்று நம்பினர். அவரது பேரன்பு பிரபஞ்ச
முழுவதும் பரவத் தொடங்கியது. ஒருநாள் மாலை ஒரு அடர்ந்த தோப்பில் அமைதியாக
அப்படியே உட்கார்ந்திருந்தார். எதையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தார். ஒரு
திக்கையே நோக்கி தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்தவர்களுக்கு
ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு வினவினார்கள். அங்கே, ஆண்டவன் சிரிக்கப் போறான்டா ஆயிரமாயிரம் பேர் வாழப் போறாண்டா “ எல்லோரும் ஏறிப்போக பெரிய வண்டிவர போகுதடா என்று துள்ளிக்
குதித்தோடினார். தன் வேட்டியை எடுத்துக்காட்டி, “துணி வரப்போகுதடா, துணி வரப்போகுது” என்று சிரித்தார். சற்று நேரம் கழித்து மீண்டும் “எல்லோரும் ஏறிப் போக பெரிய வண்டி வரப்போகுது- எப்போதும்
ஓடும் “ என்று சிரித்துக் கொண்டிருந்தார்.
சில காலம் அமைதியாக இருந்தார். இரவிலும் பகலிலும் தூங்குவது
இல்லை. ஒருநாள் விடியற்காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு தரிசிக்க
வருவோரையெல்லாம் நாளைக்கு வாங்கோ, நாளைக்கு வாங்கோ”என்றார். ஒவ்வொருவரையும் பார்த்து கரம்கூப்பி கும்பிட்டு சொன்னார்.
இதைப் பாத்தவர்களுக்கு உடல் சிலிர்த்தது. சுவாமிகள் ஏதோ முக்கியமான செய்தி சொல்லப்
போகிறார் என்று நினைத்தனர். மறுநாள் பொதுமக்கள், பக்தர்கள் என எல்லோரும் சுவாமிகளைப் பார்க்க வந்தார்கள். ஆனால்
அன்று ஆடி மாதம் 23ம் நாள் என்று சொல்லப்படுகிறது .வருடம் யாருக்கும் சரியாக
தெரியவில்லை. ஓம் ஸ்ரீபரமானந்த சத்குரு சுவாமிகள் பரமானந்தத்தில் திளைத்து
சமாதியில் மூழ்கி விட்டார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. ஆத்ம சாதகர்கள், பக்தர்கள், ஞானிகள்
என அனைவரும் கூடி விட்டனர். புதுவை முதலியார்பேட்டை, காராமணிக்குப்பத்தில் சுவாமிகளின் அவருடைய அருள் உடலை
அவர்கூறிய இடத்திலேயே சமாதி செய்தனர். சுவாமிகள் வழிபாடு செய்த லிங்கம் சமாதியின்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுவாமிகள் குறிப்பிட்டபடியே அந்த இடத்தில் “நெசவாலை” ஒன்றும், ரயில் தண்டவாளமும் பிற்காலத்தில் உருவானது. சுவாமிகள் வாழ்ந்த காலத்தைச் சரியாக
கணக்கிடுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிலர் செவிவழியாக சொல்வது
என்னன்னா இங்கு இவர் கி.பி. 1830 லிருந்து
கி.பி.1860 வரை இருந்திருக்கலாம் என சொல்கின்றனர். ஆனால் யாருக்கும்
சரியான வருடம் தெரியாது.
இந்த ஆலயத்தில் சுவாமிகள் பூஜித்த இயந்திரமும் இன்னமும்
இங்கே இருக்கிறது. சில நாட்களுக்கு பிறகு அன்றைய பிரெஞ்சு அரசு சுவாமிகள் கூறிய
அரங்கன்தோப்பை பார்வையிட்டு கட்டிடம் கட்டும் பணியை தொடங்கினர். தொடர்ந்து ரயில்
சேவைக்கான பணியை தொடங்கியபோது மக்கள் ஆச்சர்யப்பட்டு போயினர்.சித்தர்கள்
முக்காலம் உணர்ந்தவர்கள் அல்லவா?! ஒவ்வொரு வருடமும் ஆடி 23 -ம் தேதி குருபூஜையாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும்
பௌர்ணமி பூஜையும் வியாழன்தோறும் குருவார பூஜையும், திங்கள்கிழமை சோமவார பூஜையும் பிரதி வெள்ளிக்கிழமை அகவல் பாராயண பூஜையும், தினந்தோறும் மதியம் சமபந்தி போஜனமும், பிரதோஷம் மற்றும் மாத பௌர்ணமி நாட்களிலும் இங்கு அன்னதானம்
நடைபெறுகிறது. இங்கே ஒரு விசாலமான தியான மண்டபமும் இருக்கு. புதுவைக்கு செல்லும்
வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமி பீடத்தில் தரிசனம் செய்து அவர் அருளை பெற தரிசனம்
செய்யலாம். மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை
தரிசிக்கிறேன் .
விரிவான விளக்கம் நன்று சகோதரி...
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா ...
Deleteசிறப்பு . இதுவரை அறியாத ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சித்தர் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி
ReplyDeleteஇன்னும் நிறைய சித்தர்கள் ஜீவசமாதிகள்,நம் அருகில் இருந்தும் அதன் பெருமையை உணராமலே இருக்கிறோம்.தெரிந்துகொண்டமைக்கு நன்றி.
Deleteஉலகின் இப்போதைய குறையை தீர்க்க இவர் அருளை வேண்டுவோம்.
ReplyDeleteநிச்சயமாக,ஆனால் நடபபவை எல்லாம் பார்க்கும் பொழுது,இது மனிதனின் அகங்காரத்திற்க்கான தண்டனை போல் இருக்கிறதுங்க,அண்ணா...
Deleteசிறப்பான செய்திகள்.
ReplyDeleteசித்தர்கள் பற்றிய பதிவுகள் தொடரட்டும்.
சித்தர்கள் தொடர்ந்து சிறப்புடன் வலம் வருவார்கள்அண்ணா...
Deleteசித்தர்கள் வரிசையில் மேலும் ஒருவர் அறிந்தோம்.
ReplyDeleteசித்தர்களின் மகுடத்தில் வாரம் ஒரு மாணிக்கக்கற்கள் நமது பதிவின் மூலம் பதித்துக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் அதை ரசித்துக்கொண்டு இருப்பதற்கு நன்றிகள் மாதேவி ..
Delete