ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தனித்தன்மையான பழக்க வழக்கம் இருக்கும். சிலர் நகத்தை கடிப்பாங்க. சிலர் தலைமுடியை சுருட்டுவாங்க. அதுமாதிரி இந்த
ஸ்ரீமண்ணுருட்டி சித்தர் தனிமையில் தன்
சிந்தனையினை மனதில் கட்டுபடுத்தும் பயிற்சிக்காக ஒரு கையில் மண்ணை வைத்துக்கொண்டு தன் கட்டை விரலால்
உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் மக்கள் இவரை மண்ணுருட்டி சாமிகள்ன்னு மக்களால் அழைக்கப்பட்டவரை பற்றிதான் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்க்கலாம். பாண்டிச்சேரியில் உள்ள திருவள்ளூவர் பஸ்நிலையம் பின்புறம் அமைத்துள்ள புதுச்சேரி சுதேசி காட்டன் மில் எதிரில் இருக்கும் கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவசமாதி
கடந்த
சில வாரங்களாகவே நாம பாண்டிச்சேரி சித்தர்களின் ஜீவ சமாதிகளை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் போனவாரம் நாம் யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள் ஜீவசமாதியினை தரிசனம் செய்தோம். பொதுவாக சித்தர்கள் என்றால் பொதுவாகவே சித்-அறிவு, சித்தை உடையவர்கள்
சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆன்மீக ஈடுபாடுகள் உடையவர்களானலும் இவர்கள் வெறும்
பொருளியல்வாதிகள் அல்ல, மெய்ப்புலன் காண்பது அறிவு
என்பதிற்கிணங்க, உண்மை அல்லது "நிசநிலையை" அடைய
முயன்றவர்கள் சித்தர்கள். இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப்
பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு
நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்தவர்கள்
சித்தர்கள்.
அந்த வகையில் அவர்களின் இருப்பிடத்தினருகில் கிடைக்கும்
மூலிகைகளைக்கொண்டு மனிதக்குலத்தைக் காத்து வந்தனர். மக்கள்
அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா
ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும் என்றும், யோகப்பயிற்சியிலே
வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல்வலிமையுடன் நீண்டநாள் வாழமுடியும்
என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர். சித்தர்களின் கொள்கை பரமாத்மா
எங்கும் தனியாக இல்லை. நமது உடம்புதான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி
எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே
பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதுதான் சித்தர்களின்
கொள்கை.
யார் இந்த
மண்ணுருட்டி சுவாமிகள், அவரது பூர்வீகம் என்ன?! ஏன்
அவரை மண்ணுருட்டி சுவாமிகள்ன்னு சொல்றாங்க, என இந்த பதிவில் விரிவாக
பார்க்கலாம். திருக்கோவிலூர் என்னும் ஊரில் வைணவ குடும்பத்தில் பிறந்த
முனுசாமிப்பிள்ளை மற்றும் அவரது மனைவி அரங்கநாயகிக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் 3
பெண்பிள்ளைகளும் பிறந்தனர் அந்த ஆண்மக்களில் ஒருவர்தான் இன்று
மண்ணுருட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படும் ராமகிருஷ்ணன். இவர் கல்லூரி
படிப்பெல்லாம் படித்தவர். கல்லூரி இறுதி ஆண்டில் இவருக்கு என்ன நடந்தது என
தெரியவில்லை. சிறிதுசிறிதாக உலக வாழ்வில் இருந்து விடுபட்டார். தன்வீட்டு
தோட்டத்தில் உள்ள பாம்பு புற்றின் அருகே சென்று காற்றில் ஏதோ பேசுவதும், எச்சிலை
தொட்டு ஏதோ கோலங்கள் வரைவதுமாக இருந்த அவரை பார்த்த பெற்றோர்கள் அவருக்கு ஏதோ
ஆகிவிட்டது என்று பதறிப்போய், சிதம்பரம் அருகில் உள்ள
கொத்தட்டை என்னும் ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அந்த அம்மன்
கோவிலில் 3 நாட்கள் தங்கி இருந்தால் எப்பேர்ப்பட்ட
வியாதியும் குணமாகிவிடும் என்பது அங்குள்ளவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ராமகிருஷ்னன் என்னும் மண்ணுருட்டி சுவாமிகள் அங்கு 9 நாட்கள் தங்கி இருந்தும் அவர் மனநிலையிலும், நடவடிக்கைகளிலும்
எந்தவித மாற்றமும் நிகழவில்லை. அங்கே
தீவிரமான ஆத்ம சாதனையில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவரை அந்த கோவிலில்
காணாத பெற்றோர்கள் பதறிப்போய் அவரை தேட ஆரம்பித்தனர். ஆனால் அவரோ யாரிடமும்
சொல்லாமல் திருவண்ணாமலைக்கு சென்று ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
எப்படியோ அவர்
திருவண்ணாமலையில் இருக்கும் விவரம் அவரது பெற்றோர்களுக்கு தெரியவர, அவர்கள் திருவண்ணாமலைக்கு சென்று கெஞ்சி கூத்தாடி அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஊருக்கு வந்தபிறகும் அவரது
செய்கைகளில் எந்தவித மாற்றமுமில்லை. தனக்குத்தானே
சிரிப்பதும் இயற்கைகளுடன் பேசுவதும் காற்றில் கைகளால் கோலம்
போடுவதுமாக இருந்துள்ளார். அடிக்கடி தங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள பாம்பு
புற்றின் அருகே போய் அமர்ந்துகொள்வார். யார் உணவு கொடுத்தாலும் சாப்பிடமாட்டார் தன்னுடைய தாயார் உணவு கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவார். அவரின் நிலையினை கண்ட
பெற்றோர்கள் திரும்பவும் இவருக்கு வைத்தியம் செய்யப்போய் வீட்டைவிட்டு போய்
விடக்கூடாதே என அவர் போக்கிலேயே விட்டுவிட்டனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனின்
தாயார் காலமாகிவிடவே, அவருக்கு செய்யவேண்டிய இறுதிகாரியங்களை
செய்துவிட்டு இந்த மகான் கடலூரை நோக்கி பயணமானார்.
கடலூரில் வீதிவீதியாக சுற்றி திரிந்தார். யாரேனும் உணவு கொடுத்தால் அதை வாங்கி உண்பார். இப்படி இருக்கும்போது ஒருமுறை கடலூரில் ஒரு வீட்டின்முன் சென்று யாசகத்திற்க்காக உணவு
கேட்டார். அந்த வீட்டு பெண்மணி அப்பொழுதான் சமையல் செய்து முடித்துவிட்டு திண்ணையில் வந்து அமர்ந்திருந்தார். ஆகையால் அந்த
பெண்மணி இவரது பைத்தியக்கார கோலத்தை பார்த்து இவருக்கு முதலில் உணவு கொடுக்கவேண்டுமா என்ற எண்ணத்திலும், உடல் அலுப்பிலும், உனக்கு உணவு இல்லை என்று
விரட்டிவிட்டார். சிறிது நேரத்தில் அந்த பெண்மணியின் கணவர் வந்து சாப்பிடுவதற்க்காக
அமர்ந்தபோது, இந்த பெண்மணி உணவு பரிமாற பாத்திரத்தை எடுக்கும்போது அதில் சமைத்த
உணவுகள் எல்லாம் மாயமாய் மறைந்து போய்விட்டதை பார்த்து கணவனிடம் நடந்த கதையினை சொல்லி இருக்கிறார். கணவனும்
மனைவியும், வந்தவர் சாதாரண பிச்சைக்காரர் இல்லை பெரியமாகான் என்று உணர்ந்து அவரைத்தேடி ஓடினர். அங்க தெருஓரத்தில் இருந்த
ராமகிருஷ்னனிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.அ வரும் அவர்களை மன்னித்து தன் போக்கில் சென்றுவிட்டார். இதேப்போல் கடலூரில் உள்ள ஒரு வக்கீல் தொழில் செய்து வந்த
ஒருவரின் வீட்டிற்கு சென்று உணவு கேட்டார்.அவர்கள் இந்த மகானுக்கு வாழை
இலையில் உணவு பரிமாறினார். இந்த மகானோ வாழை இலையில் உள்ள
உணவுகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை உண்டார். மகானும் சாப்பிட்டு எழுந்த =போது
அந்த இலையை எடுத்து போடவந்த வேலைக்காரன் இவரும்
தோற்றத்தையும், இவர் உணவு உண்ணும் முறையையும் பார்த்து
அருவருப்படைந்தான். இதை உணர்ந்த மகனோ அந்த இலையிலையே வாந்தி எடுத்தார். அவர் எடுத்த
வாந்தியானது மல்லிகை மலரின் வாசனையாக வீசியது. அவரை அவமதித்த அந்த வேலைக்காரனும்
சில நாட்களில் கொடிய வியாதி வந்து அவதியுற்று இறந்து போய்விட்டான்
அதன்பிறகு கடலூரிலிருந்து
பாண்டிச்சேரிக்கு பயணமானார். பாண்டிச்சேரியில் சித்தானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அருகே ஆழ்ந்த தியானத்தில்
ஈடுபட்டார். இவர் தனிமையில் அமர்ந்து தன் சிந்தனையை கட்டுப்படுத்தியவர் என்று
சொல்லப்படுகிறது. தனிமையில் அமர்ந்து சிந்தனையை கட்டுப்படுத்தும்போது, ஒரு கையில் மண்ணை வைத்துக்கொண்டு தன் கட்டை விரலால்
உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் மக்கள் இவரை மண்ணுருட்டி சாமியார் என்று அழைக்க
ஆரம்பித்தனர். அதேபோல் பாண்டிச்சேரி பொம்மையார்பாளையத்தில் உள்ள தாழைக்காட்டு
ஓடையின் கரையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இருந்தார் .அப்பொழுது மழைபெய்து
ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ளத்தில் சித்தர் ஓடையின் மணலில்
கழுத்துவரை புதைந்து விட்டார். மறுநாள் வெள்ளம் வடிந்தபோது அந்தவழியே சென்ற
வழிப்போக்கன் கழுத்துவரை மண்மூடி இருந்த சித்தரை பார்த்து மண்ணை அகற்றி அவரை
மண்ணில் இருந்து வெளியே எடுத்தான். மண்ணுக்குள் இருந்து வெளியே வந்த சித்தர் ஏதும்
அறியாததுபோல் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்.
ஒருசமயம் காட்டுமன்னார்குடியில்
இருக்கும் அவரது தம்பி கோபாலகிருஷ்ணன்
மறைந்துவிட்டார். இந்த செய்தியை சிலநாள் கழித்து இந்த மகானை சந்திக்கவந்த அவரது
உறவினர் தெரிவிக்கும் முன்பே அவரிடம் தன்
தம்பியின் மறைவை பற்றி குறிப்பிட்டதும் அவரது
உறவினர் ஆச்சர்யப்பட்டு போனார். அந்த உறவினர் இந்த மகானுடன் சிலநாட்கள் தங்கி செல்ல
ஆசைப்பட்டார். அப்பொழுது இந்தமகான் அந்த உறவினரின் மடியில் தலைவைத்து
படுத்திருப்பாராம். சிலசமயம் அந்த உறவினரின் மடியில் படுத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுவாராம். அவர் ஏன் அழுகிறார் என்பது அந்த உறவினருக்கும்
அங்கிருக்கும் மக்களுக்கும் புரியவில்லை
.உறவினர் சிலநாட்கள் இந்த மகானுடன் தங்கி இருந்து ஊருக்கு விடைபெற்று செல்லும்பொழுது ஒரு கார்விபத்தில் அகால மரணமடைந்தார். அப்பொழுதான் அங்கிருந்த மக்களுக்கு
இந்த மகான் அழுதது புரியவந்தது. அதுப்போல முத்தியால்பேட்டையிலுள்ள ஒரு அன்பரின்
வீட்டு திண்ணையில் இவர் அமர்ந்திருந்தபோது தனது சகோதரனின் மகனது திருமணத்திற்கு உறவினர்கள் அழைக்கவந்தபோது ,மீண்டும், தான் பந்தபாசங்களில் சிக்க விரும்பவில்லை என்று அவர்களை
கண்டு வேகமாக சென்றுவிட்டார் .
இந்த சித்தருடன்
இருக்கும் அன்பர்களான ஜீவரத்தின உடையார் மற்றும் அவரது நண்பர் அய்யம்பெருமாள் உடன்
சென்று சாப்பாட்டிற்காக இந்த சித்தரை அழைக்க சென்றனர். அப்பொழுது ஜீவரத்தினம்
உடையாரின் வீட்டின்முன் ஒரு பிச்சைக்காரன் தோன்றி அவருடைய மனைவியாகிய தங்கமணி
என்பரிடம் உணவு கேட்டான். அந்த அம்மையாரும் ஒரு இட்லியை கொடுத்தார். அதை
தின்றுவிட்டு அந்த பிச்சைக்காரன் அந்த அம்மையாரிடம் இங்கே யாராவது சாப்பாடு
போடுவார்களா என்று கேட்டான். அதற்கு அந்த அம்மையார் அதுபற்றி தனக்கு தெரியாது. நீ சென்று வெளியே விசாரித்துக்கொள் எனக்கூறி வீட்டினுள் சென்றுவிட்டார். பிறகு ஜீவரத்தினம் உடையார் இந்த மகானை குதிரைவண்டியில்
அழைத்துவந்தார். வீட்டிற்குள் வந்து உணவருந்த உட்கார்ந்த மகான் அந்த அம்மையாரிடம் உலையை போடு உணவை கொண்டுவா என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த அம்மையாரும் ஆச்சர்யமாக பார்க்க இதற்கு முன்வந்த பிச்சைகாரனது குரலும், இவரது
குரலும் ஒன்றாகவே இருப்பதைக்கண்டு வியந்துபோனார்.
நாட்கள் சென்றன. அவரை தரிசிக்கவரும் ஆண்களுக்கு மண்ணை எடுத்து
கொடுப்பார். அது விபூதியாக மாறும். பெண்களுக்கு மண்ணை எடுத்து கொடுக்கும்போது குங்குமமாக மாறுமாம். சிறுவர்களுக்கு கொடுக்கும்போது மண் மிட்டாயாக
மாறிவிடும். இப்படி இருக்கையில் அவருக்கு திடீரென அண்ணாமலையாரின் அழைப்பு கிடைக்க
ஆரம்பித்தது, உடனே தனது சீடர்களை அழைத்து தனது இறுதி முடிவை
அறிவித்தார். இறுதிக்காலம் நெருங்கியது. மகான் நோய்வாய்ப்பட்டார். அவருக்கு
அச்சுதனார் என்னும் டாக்டர் சிகிச்சையளித்தபோது இறுதிக்காலத்தை நெருங்கிய
இந்தக்கட்டைக்கு இனி எதற்கு வைத்தியம் என்னை ஜீவரத்தினம் உடையார் வீட்டுக்கு கூட்டிச்செல்லுங்கள்
என்று கண்டமங்கலத்தில் உள்ள ஒரு அன்பர் உதவியுடன் குயவர்பாளையத்தில்
உள்ள ஜீவரத்தினம் உடையார் வீட்டுக்கு வந்து, அங்க தனது சிஷ்யர்களுக்கு தான் பெற்ற ஞானக்குறிப்புகளைலாம் உபதேசித்தார். பின்னர் 1963-ம் ஆண்டு
ஜனவரி மாதம் 16 -ம் தேதி மாட்டு பொங்கல் அன்று பரம்பொருளுடன் இரண்டற
கலந்தார். இவரது ஜீவசமாதியை ஜீவரத்தின உடையாரின் தோட்டத்தில்தான்
வைக்கவேண்டும் என்று சொல்ல, சிலரோ வேறு இடம் சொல்ல, அங்கே
மகானின் உத்திரவுக்காக சீட்டுக்குலுக்கி போட்டு பார்த்தனர். அதில் கோவிந்தசாமி
முதலியார் தோட்டத்தில் ஜீவசமாதி அமையவேண்டும் என வந்தது. அதன்படி இந்த
இடத்தில அவரது ஜீவசமாதி எழுப்பப்பட்டது. இந்த இடம் ஒருகாலத்தில் பெரிய
தென்னம்தோப்பாக இருந்தது. பக்கத்தில் சுடுகாடு, பின்புறம்
குளம் என்று விசாலமாக இருந்தது. மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் இவரது ஜீவசமாதி
தெரியுமாம். இப்பொழுது பார்த்தால்
ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கும் இடத்திற்கு செல்ல ஒரு
மெக்கானிக் கடையின் பக்கத்தில் செல்லும் ஒரு சந்து வழியாக மட்டுமே சென்று தரிசனம்
செய்யும் நிலையில் இருக்கின்றது. இந்த இடம்கூட ஒரு வீட்டின் முற்றம்போல்தான்
இருக்கு.
கடந்த தமிழ்வருடமான விகாரி வருடம் தை மாதம் 25ம் தேதியும், ஆங்கில வருடம் பிப்ரவரி மாதத்திலும் 08-02-2020 -ம் ஆண்டு
சனிக்கிழைமை பூச நட்சத்திரமும் கூடிய நன்னாளில் இவரது 55-வது
குருபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று இந்த ஜீவசமாதி ஆலயத்தில் சிறப்பு
ஹோமமும் அபிஷேகமும் நடைபெற்றது. நாமும் வாய்ப்பு கிடைத்தால் இந்த சித்தரின் ஜீவசமாதிக்கு தரிசித்து அவரது அருளை பெறுவோம். மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தரின் ஜீவ
சமாதியிலிருந்து உங்களை தரிசிக்கிறேன்.
படங்கள் உதவி:காணொளிசேமிப்பகம்.
// சித்தர்களின் கொள்கை பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்புதான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதுதான் சித்தர்களின் கொள்கை. //
ReplyDeleteஅற்புதம்...
உண்மைதானுங்க அண்ணா,பொதுவாகவே சித்தர்கள் என்று அவர்களை அவர்களாகவே வெளிப்படுத்தும் வகையில் இரண்டு வகையினர் உண்டு.தங்களை சித்தர்கள் என்று பிரகடனப்படுத்துபவர்கள்.தங்களை சித்தர்கள் என்று பகிரங்கமாக தெரிவிக்காமல் ரகசியம் காப்பவர்கள்.நிதர்சனத்தில், சித்தர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களை, நாம் சந்தித்தாலும் அவர்கள் சித்தர்கள் தான் என்பதை நம்மால் சாதாரணமாக அறிந்து கொள்ள முடியாது.
Deleteவெளிப்படையாக பிரகடனப்படுத்தியவர்களையே மனித வடிவில் இருப்பதால், அவர்களின் நிஜ ஸ்வரூபத்தை அறிய முடியாதபோது ரகசியம் காப்பர்வகளை, நிச்சயமாக நம்மால் சாதாரணமாக சந்திக்க முடியாது.உண்மையில் அவர்கள் ஒருவகையில் ரகசியம் காப்பதே மற்றவர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே.உங்கள் கருத்துகளுக்கு நன்றிங்க அண்ணா..
மக்களை இந்தக் கொடுமையான அரக்கனிடமிருந்து காத்து அருளுங்கள் சித்தர்களே... வணங்குகிறோம்.
ReplyDeleteசமஉயிர்களையும் நம்மை போன்று இவ்பூலகில் வாழ்பவை என்ற எண்ணம் கூட இல்லாத மனிதனின் அகங்காரத்தின் விளைவு ,இன்றைய பேரழிவு.கொரானா மனிதர்களை வாட்டி வதைத்தாலும் மறுபுறம் மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு அமைதியான முகத்தையே காட்டுகிறது .உலக நிலையில் இன்று பார்த்தால் தீவிரவாதம்,மனிதத்தன்மையற்ற
Deleteஉணர்வின் எல்லைக்கே சென்று,மனிதனுக்கு மனிதனே இரக்கமற்றுக் கொல்லும் உணர்ச்சிகள்தான் அதிகமாகிவிட்டது. மனிதனைக் காக்கும் உணர்ச்சிகள் எங்கும் இல்லை.மனிதனுக்குள் அரக்க உணர்வு மேலோங்கிவிட்டது.மதம் இனம் மொழி என உண்டாகி இன்று மனிதனை மனிதனே ஒரு நொடிக்குள் கொன்று குவித்து கொண்டிருக்கின்றான். அதைத்தான் இயற்கை இன்று கொரானா வடிவில் செய்கின்றது.மனிதன் என்று மாறுகிறானோ அன்றே இயற்கையும் மாறி அவன்மேல் அன்பு செலுத்த தொடங்கிவிடும் ..
அருமை.இதுவரை அறியாதது. எப்படி இவ்வளவு விவரங்களை சேகரித்தீர்கள்
ReplyDeleteநான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்
சில சித்தர்களுக்கு தெளிவான வரலாறு இல்லை..பெரும்பாலான விஷயங்கள் செவிவழி செய்திகளாகவே தொகுக்கப்பட்டவை நன்றி.கிருஷ்ணதேவராயர் கதையை படித்தேன் ,ரசித்தேன்,எத்தனைமுறை படித்தாலும் அலுப்புத்தட்டாத கதை அருமை...
Deleteபாண்டிச்சேரி சென்றபோது கேள்விப்பட்டேன். பார்க்கும் சூழல் அமையவில்லை. அக்குறையினை இப்பதிவு தீர்த்தது. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
ReplyDeleteபரவாயில்லை நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளுங்கள்.ஆனால் சித்தர்களை தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வமே,அவர்களை தரிசிக்கும் வழியை நமக்குள் ஏற்படுத்தும் நன்றிங்க அப்பா.
Deleteசித்தர் பற்றி அறிந்து கொண்டோம்.
ReplyDeleteஅருகில் இருந்தும் சிலருக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் அப்படி இருப்பவர்கள்,இனியாவது ஒரு முறையேனும் சித்தர்களை சந்தித்து அவர்களின் பூரண ஆசிகளை பெறவேண்டும் என்பதே நமது பதிவின் நோக்கம்.சித்தர்கள் நமது பதிவில் தொடர்ந்து வலம் வருவார்கள் மாதேவி.
Delete