Tuesday, June 10, 2014

உடல்சூட்டை தணிக்க கேப்பை கூழ் - கிச்சன் கார்னர்

முப்பது, நாப்பது வருசத்துக்கு முன்னாலலாம் பெரும்பான்மையான வீடுகளில் காலைல பழைய சாதம், மதியம் கூழ் இல்லன்னா களி, நைட்டுக்குதான் சாதம். சில வீடுகளில் அதுகூட கிடையாது. இட்லி, தோசைலாம் தீபாவளி பொங்கல் நாட்களில்தான். 

கடந்த பத்து இருபது வருசக் காலங்களில் கூழ், களி சாப்பிடுறதை கௌரவக் குறைச்சலா நினைக்க ஆரம்பிச்ச நம்மாளுங்க இதையெல்லாம் சாப்பிடுறதைக் குறைச்சுக்கிட்டாங்க. கடந்த அஞ்சு வருசக் காலமா நீரிழவு நோயாளிகள், உடல் எடையை குறைக்குறவங்கலாம் மட்டும் சாப்பிடலாம்ன்ற எண்ணம் மக்கள் மத்தியில உண்டாகிடுச்சு. இப்போ கூழ், களி சாப்பிடுறது ஒரு ஃபேஷனாவே ஆகிட்டுது. வீதியோர தள்ளுவண்டிக் கடைகளில்  வாங்கி சாப்பிடுறாங்க நம்மக்கள்.

கூழ், களி சாப்பிடுறது நல்ல விசயம்தான். ஆனா அதுக்காக வீதியோரக் கடைகளில் சாப்பிடனுமா!? என்ன தண்ணில செஞ்சாங்களோ!? கூழ் தரும் சொம்புலாம் சுத்தமா இருக்குமா!? வீதிகளில் இருக்கும் தூசு, தும்புலாம் அதுல விழுமே! அதனால, ஒரு பத்து நிமிசம் செலவு பண்ணால் நம்ம வீட்டிலேயே சுத்த பத்தமா செஞ்சு சாப்பிடலாமே! 

தேவையான பொருட்கள்: 
கேழ்வரகு மாவு  - ஒரு கப்
பச்சரிசி அல்லது நொய் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு

கேழ்வரகை வாங்கி வந்து கல், மண் போக கழுவி முளைக்கட்டி வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைச்சு வச்சுக்கோங்க. விருப்பப்பட்டால் ஒரு கிலோ கேழ்வரகுக்கு, கால் கிலோ கம்பும், கால் கிலோ சோளமும் கலந்து அரைச்சுக்கலாம்.

ஞாயித்துக்கிழமை கூழ் காய்ச்சனும்ன்னு நினைச்சா சனிக்கிழமைக் காலையே, ஒரு கப் கேழ்வரகு மாவை, தண்ணி விட்டு கரைச்சு புளிக்க விடனும்.
ஞாயித்துக் கிழமை சாயந்திரம் பச்சரிசி (அ) நொய்யை ரெண்டு மணிநேரம் ஊற விட்டு, அடிக்கணமான பாத்திரத்தில் குழைய, குழைய கஞ்சியாய் காய்ச்சிக்கனும்.


தீயை சிம்ல வச்சு, புளிச்ச கேழ்வரகு மாவை தண்ணியாய் கரைச்சு, வெந்திருக்கும் கஞ்சியில் கொட்டி, கைவிடாம கிளறி விடவும். 

கொதிச்சு வரும்போது உப்பு சேர்த்துக்கோங்க.


கோதுமை நிறம் மாறி கேழ்வரகுப் போல பிரவுன் நிறத்துக்கு வர ஆரம்பிக்கும். கூடவே அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைச்சிடுங்க. சுவையான கூழ் ரெடி.  மறுநாள் அதாவது, திங்கட் கிழமை காலைல அந்த கூழ்ல மேல ஏடு மாதிரி கூழ் காய்ஞ்சிப் போயிருக்கும். அதை எடுத்துட்டு, உள்ள இருக்கும் கூழ்ல கொஞ்சம் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கட்டி இல்லாம பிசைஞ்சு கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கனும். 

சிலருக்கு கூழை தண்ணியாய் குடிக்க பிடிக்கும், சிலருக்கு கெட்டியாய் குடிக்கப் பிடிக்கும். அதனால, அவங்கவங்க விருப்பத்துக்கேத்த அளவுக்கு தண்ணி சேர்த்துக்கோங்க. விருப்பப்பட்டா மோர், வெங்காயமும் போட்டுக்கலாம்.  சிலர் பொடிசா வெட்டிய  மாங்காயும் சேர்த்துப்பாங்க. கூழ் கரைக்கும்போது கையால கரைச்சா நல்லா இருக்கும். கையால கரைக்குறதான்னு நினைச்சா க்ளவுஸ் போட்டுக்கோங்க.  மிச்சம் இருக்கும் கூழை வெளில வச்சாலும் ரெண்டு நாள் தாங்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சா ஒரு வாரம் தாங்கும். 

இப்ப அடிக்கும் வெயிலுக்கு வாரம் ஒரு நாளாவது அவசியம் கூழ் குடிக்கலாம். என் பசங்க மதியம் லஞ்சுக்காக ஸ்கூலுக்கு கொண்டுப் போய் சாப்பிடுவாங்க. கூழ் சாப்பிடுறதால கால்சியம் சத்து அதிகமா கிடைக்குது, பசி போது சுரக்கும் அமிலச் சுரப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை நிலையாய் வைத்திருக்க உதவுது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்குது.நார் சத்தும் கூழ்ல அதிகம் இருக்கும்.

ஆனா, கூழ் சமைத்ததும் சாப்பிடக் கூடாது. குறைந்தது எட்டு மணிநேரம் கழிச்சுதான் சாப்பிடனும். சுடுக்கூழ் சளிப்பிடிக்கும்ன்னு சொல்வாங்க.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்குறேன்.

26 comments:

  1. ஒரு காலத்துலே நம்ம பாட்டி வீட்டில் ஆடி மாசத்தில் ஒரு நாள் கூழ் ஊத்துவாங்க. திண்ணையில் அண்டாவில் கூழ் வச்சு விளம்புவோம். இதை அம்மனுக்கு நேர்ச்சையா வருசாவருசம் செய்வாங்க.

    அன்னிக்கு வீட்டுலே சொந்தக்கார கும்பலேநிறைஞ்சு கலகலன்னு இருக்கும். அதை நினைவுபடுத்திட்டீங்க.

    நான் இங்கே எப்பவாவது களி (மைக்ரோவேவில் ) கிண்டுவேன். மீதி இருப்பதை மறுநாள் கூழாகக் கரைத்துக் குடிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. களியும் உடம்புக்கு நல்லதுதான்மா!

      Delete
  2. இந்த வெய்யில் நேரத்தில் தேவையான தகவல் இது ... நன்றி

    ReplyDelete
    Replies
    1. அடிக்குற வெயில்ல நாமளே ஆம்லேட் ஆகிடுவோம் போல! அதனாலதான் பதிவு போட்டேன் ராஜா!

      Delete
  3. அப்படியே இந்தக் கூழைக் கொஞ்சம் ஊத்திக் கொடும்மா தங்கச்சி
    வெய்யில் வெக்க தாங்க முடியல இந்த நாட்டில இப்போ
    34 கிறாத் பூமாதேவி கொதிச்சுப்போய் இருக்கா அடும்பங்ககரைப்
    பக்கம் போகவே முடியல வேத்துக் கொட்டுது ம்ம்ம்ம்ம் .....:))))
    ஒரு பாடல் காத்திருக்குது ஓடிப்போய் படியுங்க பிடிச்சிருந்தா
    ஓங்கி ஒரு குத்துக் குத்துங்க எனக்கில்ல தமிழ்மணத்தில :))

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் என்ன!? நிறையவே செஞ்சுத் தரேன்க்கா! கண்டிப்பாய் தமிழ்மனத்துல குத்துறேன்.

      Delete
  4. சுவையோ சுவை! நன்மையோ நன்மை!

    ReplyDelete
    Replies
    1. இப்பத்திய உணவுகள் சுவை மட்டுமே கொண்டுள்ளது. நன்மை!?

      Delete
  5. உடம்பிற்கு மட்டுமல்ல... மனதிற்கும் COOL

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அண்ணா!

      Delete
  6. அட இந்தப் பாட்டை வாழ வையுங்கப்பா !
    http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post_2799.html

    ReplyDelete
    Replies
    1. வாழ வச்சாச்சுக்கா!

      Delete
  7. ஏன் உடனே சாப்பிட கூடாதுன்னு சொன்ன டிப்ஸ் அட்டகாசம்.ஆனால் இப்டி விடாமல் கிளறுவது என்வரை செம டென்சன் அக்கா! கட்டி படாமல் இருக்க வேற ஏதாவது டிப்ஸ் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. இருக்கே! உன் வீட்டுக்காரரை கிளறச்சொல்லிங்க சகோ! இதுக்கெல்லாம் என்னை ஆலோசனை கேட்டுக்கிட்டு...,

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!

      Delete
  9. கூழ் குடித்ததில்லை. ஆனால் கேழ்வரகு கஞ்சி குடித்திருக்கிறேன். இதையும் செய்யச் சொல்லி பார்க்க வேண்டும். பகிர்வுக்கு தாங்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. கூழ் குடிச்சு பாருங்க. உடல் சூடு குறையும்.

      Delete
  10. பயனுள்ள பகிர்வு
    செய்து பார்க்க வேண்டும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் செஞ்சுப் பாருங்கப்பா!

      Delete
  11. நிலக்கடலைத் துவையலுடன் கேழ்வரகுக்கூழ் குடிப்பது சுவையோ சுவை! சுகமோ சுகம்!!

    பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை நிலக்கடலை துவையலோடு கூழ் குடிச்சதில்லை. அடுத்த முறை சாப்பிட்டு பார்க்குறேன்.

      Delete
  12. "ஒரு பத்து நிமிசம் செலவு பண்ணால் நம்ம வீட்டிலேயே சுத்த பத்தமா செஞ்சு சாப்பிடலாமே! """

    saturday ooravekanum, sunday seyyanum, monday sapdanum, ithuku 10 minits tha aguma???? itha yarum kekamatingala.......

    ReplyDelete
  13. அதான் நீங்க கேட்டுட்டீங்களே! 2 நாள் வேலைன்னாலும் சட்டுன்னு சமைச்சுடலாம் பிரதர்.

    ReplyDelete
  14. கூழ் குடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது - அம்மாவின் கிராமத்தில் குடித்தது......

    ReplyDelete