Friday, June 27, 2014

சுவாமிமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

நம்மில் எத்தனைப் பேருக்கு பிரணவ மந்திரமான “ஓம்”க்கு பொருள் தெரியும்!!? அட, நமக்கு தெரியலைன்னா பரவாயில்ல. ஆனா, உலகத்தையே காக்கும் கடவுளுக்கு தெரியலைன்னா!? அதெப்படி கடவுளுக்கு அதன் பொருள் தெரியாம போகும்!? அப்படி தான் அறியாததை யார்கிட்ட கத்துக்கிட்டார்!? பிரணவ மந்திரமான “ஓம்” இந்துக்களுக்கு மட்டும் உரியதா!? இப்படி பல விடைகளுக்கான பதிலை இன்றைய பதிவில் பார்க்கலாம். வாங்க!!


ஓம் என்பது ஆதி சப்தம்! அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே! ஒ



* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்!

* பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்!



அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்!

அடிப்படை அ+உ+ம 
அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம்
அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன் 



சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள்,  கிறிஸ்த்து, அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குது.., நம்பிக்கையில்லையா!? 

"ஓம் நமஹ"-ன்னும்,  "ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" ன்னு சமணத்துலயும்....,

வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ”ஓம்” சேர்த்துதான் உச்சரிப்பார்கள். நாம்  நமச்சிவாயத்தோடு “ஓம்” சேர்க்குற மாதிரி மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் உடன்”ஓம்” சேர்த்து வணங்குவது பௌத்த மதம்.

சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்! 

"ஏக் ஓம்கார்" என்று சீக்கியத்தில் உண்டு. இதை உச்சரித்தவர் குருநானக்.

ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! என கிறித்துவத்தில் உண்டு. ”ஓம்”ன்னு குறிப்பிடலையே ஒழிய  ”வார்த்தையாய் இருந்தார்”ன்னு சொல்லாம சொல்றார்.

இதேப் பொருள்படுமாறு நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடி இருக்கார்.





கும்பக்கோணத்திலிருந்து மேற்கே ஐந்து கிமீ தூரத்தில் இருக்கு சுவாமிமலை. இதற்கு திருவேரகம்ன்னு மற்றொரு பெயரும் இருக்கு. இது முருகப்பெருமானின் நான்காவது படைவீடாகும். சுவாமிமலைன்னு அ சொல்லப்பட்டாலும் இது மலை இல்லை. செயற்கையாய் உருவாக்கப்பட்ட குன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால் இக்கோவில் “கட்டுமலை”ன்னும் அழைக்கப்படுகிறது. 


இந்த கோவில் இரண்டு அடுக்குகளாகவும், மூன்று பிரகாரங்கள், மூண்டு கோபுரங்கள் கொண்டுள்ளது கீழ் அடுக்கில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வரர் சன்னிதி, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிக் கொண்டு அருள்புரிகின்றனர்.  அவர்களை வணங்கி அப்பனுக்கே பாடம் சொன்ன கதையை தெரிந்துக் கொள்வோம்....,
 
படைப்பு கடவுளான பிரம்மனுக்கு தான் என்ற ஆணவம் தலை தூக்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வேளையில் முருகப் பெருமானை சந்திக்க நேர்ந்தது. இருவருக்குமிடையில் பேச்சு எங்கெங்கோ சென்று, பிரணவ மந்திரத்திற்கு வந்தது.  படைப்புத் தொழிலைச் செய்யும் உமக்கு பிரணவ மந்திரமான “ஓம்”க்கு பொருள் தெரியுமா!? என முருகன் கேட்டான். பிரம்மனால் பதிலுரைக்க முடியாமல் போகவே, முருகன் பிரம்மாவின் நான்கு தலியிலும் கொட்டி பிரம்மனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலை முருகனே செய்தார்.

 பிரம்மன் சிறையில் இருப்பதை கேள்வியுற்ற  திருமால் சிவபெருமானிடம் சொல்லி  சிவபெருமானும், முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற...,  தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க...,  முருகனும் எல்லோரும் அறிய பிரணவ மந்திரத்தின் பொருள்  கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது



அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைக் கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி.    தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம். தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு வஸ்திரம் சாத்தி, தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள் . இதற்கு திருப்படி பூஜை என்று பெயர். அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும் விநாயகரை வணங்கி கொள்கிறோம். இக்கோவிலில் முருகப் பெருமானின் வாகனமாக  மயில் கிடையாது. பிணிமுகம் என்ற யானை தான் முருகனது வாகனம்.  ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாதபெருமானை வணங்கி, இந்திரன் வென்றதால்  தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


மூலவர் 6அடி உயரத்துடன், கையில் தண்டம், தலையில் உச்சிகுடுமி, மார்பில் பூணுலுடன் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்றக் கோலத்தில் காட்சித் தருகிறார்.  பீடம் சிவ பீடம், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.


ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத்திலும், சந்தன அபிஷேகத்தின்போது பாலகுமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் சுவாமிநாதர். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும்" வேறு வேறு அல்லர் என்பதும் புலனாகும். 


சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' எனக் கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள் அதன் பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி தலவிருட்சமாக இத்தலத்தில் இருக்கிறாள்.


இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் பாடியுள்ளனர், நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்டது இத்தலம்.


இப்பொழுது கோவில் புணரமைக்கும் வேலை நடைப்பெற்றுக் கொண்டிருக்கு. தங்கத்தேர் கட்டும் வேலையும் நடப்பதாகச் சொல்லப்பட்டது. அதற்கு நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றதுன்னு அறிவிப்பு பலகைகள் வச்சிருக்காங்க.  பழனி, திருச்செந்தூர், திருத்தணி போல பரப்பரப்பும், கூட்ட நெரிசலும் இல்லாம அமைதியாய் இருக்கு. 

சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்டது  இத்தலம். . இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றனவாம். 




அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் இத்திருக்கோயிலின் பங்குண்டு. இது வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.




”அஜீரணத்தைப் போக்க ரசம் சாப்பிட்டு குணம் அடையலாம்” என்றும், 'உடம்பு தளரும்போது நம் ஆன்மாவுக்கு மோட்சத்தைத் தரவல்லது, ஸ்வாமிநாதரின் பேரருள் மட்டுமே!' என்று இரு பொருள்படுமாறு  

வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!

  சொக்கநாதப் புலவர் பாடி இருக்கார்.


அடுத்த வாரம் சுவாமி மலைக்கு அருகில் இருக்கும் ”திருவலஞ்சுழி” வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் சந்திக்கலாம்.

நன்றி! வணக்கம்!
 

12 comments:

  1. படங்கள் நல்லாருக்கு எங்கள் ஊர் அருகில் உள்ள கோவில் என்பதால் நிறைய முறை சென்றிருக்கிறேன் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  2. எப்படி ராஜி இத்தன இடங்களுக்குப் போய் தெளிவா மத்தவங்களுக்குப் புரியுறமாதிரி பதிவிடுறீங்க? அருமை..வாழ்த்துக்கள்! தொடருங்க..அப்போதான் நாங்க அலைச்சல் இல்லாம பல இடங்களும் பாக்க முடியும் :)
    ஓம் (a u m எழுத்துகளின் ஒலி ) என்று ஒலிக்கும் பொழுது நாம் மூச்சு விடும் முறை நல்லது என்று ஒரு அமெரிக்காவில் ஒரு யோகா ஆசிரியை சொன்னார். அங்கும் மத பேதமில்லாமல் அனைவரும் 'ஓம்' சொல்கின்றனர்.

    ReplyDelete
  3. அற்புதம் - அனைத்தும்...

    ReplyDelete
  4. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவைப் பற்றியும் ஓம் எனும் ஒலி பற்றியும் நல்ல எளிமையான விளக்கம். உங்கள் பதிவின் வழியே மீண்டும் எனக்கு சுவாமிமலை தரிசனம். நானும் மூன்றுமுறை சென்று இருக்கிறேன்.
    த.ம.5

    ReplyDelete
  5. சுவாமி மலை அழகு, விளக்கங்கள் அருமை.

    ReplyDelete
  6. படங்களும், தகவல்களும் அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  7. படங்களும் தகவல்களும் நன்று.....

    ReplyDelete
  8. சுவாமிமலை நேரில் தர்சிக்கமுடியவில்லை உங்கள் பகிர்வில் கண்டுகொண்டேன்.

    ReplyDelete
  9. இந்தப் பதிவை படித்ததும், சுவாமிமலை நேரில் சென்று தரிசித்ததைப் போல் இருந்தது.....

    பிரணவ மந்திரம் “ஓம்” விளக்கம் பலே...... அருமையான பதிவு... நல்வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

    வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    ReplyDelete