Wednesday, September 22, 2010

எங்கே செல்கின்றன நம் பாதைகள்?

                இன்று எங்கள் வீட்டில் குடியிருக்கும் பெண்மணி வந்து, விரைவில் நாங்கள் குடியிருக்கும் உங்கள் வீட்டை காலி செய்துவிட்டு , வேறு வீட்டுக்கு போகபோகிறோம் என்றார்கள். அப்புறம் பேச்சு எங்கெங்கோ போய் கடைசியில்  தோட்டத்தில் உள்ள பூச்செடிகளின் மீது வந்தது.

                  டிசம்பர் பூச்செடி என் பொண்ணு ஆசையாசையாய் வைத்தது. இப்போதான் தளதளனு வந்திருக்கு. இந்த சீசனில் கண்டிப்பா பூக்கும். ம்ஹும், போகும்போது வெட்டிப் போட்டுவிட்டுதான் போகணும் என்றாரேப்  பார்க்கலாம்.  சில நொடிகளுக்கு  எனக்குப் பேச்சே வரவில்லை. ஒருவாறாக அவர்களை வழியனுப்பிவைத்துவிட்டு, யோசித்தேன்.

                      ஒருப் பூச்செடியே  அடுத்த ஒருவருக்கு விட்டுக் கொடுக்காத அளவிற்கு மனித மனங்கள் (என்னையும் சேர்த்துதாம்ல)  இன்று சுருங்கி விட்டதை எண்ணி வேதனைப் பட்டேன்.

                    இந்த அறிவியல்  யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.

                 என் மனம்  பால்ய  காலத்திற்கு சென்றது (கொசுவர்த்தி சுருள் ஏத்திட்டீங்களா? )

                  அன்று, பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் திண்ணை வைத்துதான் வீடுக் கட்டுவார்கள்.  அது எதற்கு என்றால் வழிப் போக்கர்கள் ஓய்வெடுக்கவென்று . அந்த திண்ணை இப்போது எங்கே?

                  ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

                    மாலை வேளைகளில் (அப்போதெல்லாம்  T.V.என்ற முட்டாள் பெட்டி இல்லை). அத்தின்னை பலரூபமெடுக்கும் . சிறார்கள் தத்தம் வயதுக்கும்,பாலினத்திற்கேற்பவும்  பல குழுக்களாக ஆங்காங்கு விளையாடுவர். அம்மாக்கள் ஒருபுறமும், அப்பாக்கள் ஒருபுறமும், அண்ணன்கள்,அக்காக்கள் மறுபுறமும் தத்தம்  வயதுகேற்ப பிரிந்து உக்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்  இல்லையில்லை தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுக் கண்டுகொள்வார்கள்.

                       குழந்தையின் உடல்நிலையிலிருந்து. வீடு கட்டுவது, பணமுடை, ஊர்பயணம், மகனின் திருமணம், அப்பாவின் தெவசம்  வரை அங்கேயே செலவில்லாமல் முடிந்த கதை உண்டு.

                        அப்புறம் தண்ணி எடுக்க போவது. பெரும்பாலும் குடிநீர் கிணறு ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அல்லது குலத்தங்கரையில்தான்    இருக்கும், அதற்கு வயதுவந்த பெண்களும், சிறார்களும், பெரியவர்களும் தனியாகப் போகாமல் ஒரு குழுவாக போவார்கள். அந்தக் குழுவில் நம் வீட்டு அண்ணனோ இல்லை கோடி வீட்டு சித்தப்பாவோ சைக்கிளை உருட்டிக் கொண்டு கண்டிப்பா போவார். ஏன்? தண்ணி எடுக்கவும் அவர்களை காபந்து பண்ணி கூட்டிவர  மட்டுமின்றி  சந்து வீட்டு  யசோதாக்கவை கடலை போடவும் .அதற்கு துணை நம்மை போன்ற சின்ன பிள்ளைகள்தான்.   (25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) அண்ணனிடமிருந்து வளையலோ, சாந்தோ அங்கிட்டு போகும், அங்கிருந்து  பலகாரங்களோ கடிதமோ இங்கிட்டு வரும் அதில் கண்டிப்பாக நமக்கு பங்குண்டு. .(அவிங்க மாட்டுனா முதல் அடி  நமக்குதான்). காதலையும் தாண்டி மற்றவர்களை பாதுக்காக்க வேண்டி வரும் மனிதநேயம் இன்று எங்கே?

                       ஆனால் இன்று வீட்டுக்கு வீடு குழாய், மோட்டார் இருந்தும் அண்டைஅயல் வீட்டினருடன் தண்ணீர் தகராறு பெரும்பாலும் பக்கத்து வீட்டினருடன் சண்டையிட முதல் காரணம் தண்ணீர்தான்.

                      அன்று யார் வீட்டிலும், யார் வீட்டு குழந்தையையும் பெற்றோர் விட்டுவிட்டு   ஊர்பயணம் மேற்கொள்வர். அவர்கள் வரும்வரை, குழந்தை   அவர்கள் வீட்டிலியே  சாப்பிட்டுட்டு அங்கேயேத்  தூங்கும். ஆனால், இன்று யாரை நம்பி நம் குழந்தைகளை நாம் விட்டுச் செல்கிறோம். குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி கடைக்கு போய்வரும் பெற்றோர் எத்தனை?

                ரோடில் அடிபட்டு விழுபவனை தூக்கிவிட எத்தனைப் பேர் வருகின்றனர்?

              அடிப்பட்டு, அனாதையாய்
              வீழ்ந்து விட்ட
              பிணத்தைப்  பார்த்துக் கொண்டு
             செல்கின்றன
              "நாளைய பிணங்கள்"

              எப்போதோ எங்கோப் படித்த  கவிதையே நினைவுக்கு வருகிறது.

               பள்ளிக்கு சாப்பாடுக்  கட்டிக் கொடுக்கும்போதே அரிசிவிலை  கிலோ முப்பது ருபாய் அதனால் தானம் பண்ணாமல் நீமட்டும் சாப்பிடு.  பென்சிலை நீ ஏன் அவனுக்கு கொடுத்தே அது உங்க மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்தது னு சொல்லிக் கொடுக்கிறோம். அவர்கள் பெரியவர்கள் ஆனதும் பகிர்தல் என்பதே மறந்துவிடுமோ னு எனக்கு பயமா இருக்கு.

                  நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் நம் உறவு முறைகளையே சுருக்க கற்றுக் கொடுத்துவிட்டோம். அத்தை,மாமி,பெரியம்மா, சித்தி இந்த அத்தனை உறவுகளும் aunty  என்றாகிவிட்டது. அதேப்போல் சித்தப்பா,பெரியப்பா,மாமாலாம்  uncle என்றும்,  தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் எல்லாம் சுருங்கி grand-parents என்றாகி ரொம்ப  காலமாச்சு.

                 நம்        தவறான பழக்க வழக்கங்களால் கலப்பட உணவு, மாசடைந்த காற்று, சுகாதார சீர்கேடான உலகத்தைதான் நம் எதிர்கால் சந்ததிக்கு பரிசளிக்கப் போகிறோம். அந்த தொல்லைகளைத்  தாங்க நம் பிள்ளைகளுக்கு தோள் கொடுக்க அண்டை அயலாரை (உண்மையான) நட்புடன் விட்டுச் செல்ல வேண்டாமா?

                        *இது என்னுடைய முதல் கட்டரை (படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்). எப்படி ஆரம்பிப்பது முடிப்பது எனத் தெரியவில்லை நீளம்   எனக்கே உறுத்துது.  மன்னித்து பிழைகளைப் பொறுத்து எப்படி உள்ளது என பின்னூட்டமிடுக
 நன்றி மற்றும் தோழமையுடன்                 



1 comment:

  1. thozhare pudhiyaraa neengal? naanum kiramaththaandhaan. ungal karuththu arumai. aanal ezhuththu nadaidhaan konjam improvement pannikkanum,spelling mistakes niraiya irukku.
    vaazha valamudan. valarga nalamudan.

    ReplyDelete