Wednesday, October 16, 2013

இரணியல் அரண்மனை -மௌனசாட்சிகள்

மௌன சாட்சிகளில் ஒவ்வொரு வாரமும் பல கதைகள், போர்கள், அழிவுகள் ஆட்சி மாற்றங்கள், வீர சரித்திரங்களை தன்னுள் அடக்கி இன்றும் நம் தலைமுறையினருக்கு பலகதைகள் மௌனமாக கூறும் இடங்களை பார்த்து வருகிறோம். அதில் இந்தவாரம் உங்களை அழைத்து செல்வது முழுவதும் சிதிலமடைந்த இரணியல் அரண்மனைக்கு....,சரி வாங்க.., உள்ள போலாம்.., இது முழுக்க முழுக்க முழுக்க சிதிலமடைந்த கோட்டை. இங்க புதர்களும், பாம்பு புத்தும் இருக்கு. அதனால, ஒவ்வொரு அடியையும் (கை அடி இல்ல கால் அடி) கவனமா எடுத்து வச்சு வாங்க. அப்புறம் ராஜியக்காதான் கூட்டி போனாள்ன்னு என் மேல பழியை போடாதீங்கப்பு.

இந்த இடம் நாகர்கோயில்ல இருந்து தக்கலை செல்லும் வழியில் தக்கலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கு இந்த இரணியல் அரண்மனை. இங்குள்ள மக்கள் இந்த அரண்மனையை சேரமான் பெருமாளின் கொட்டாரம் அப்படின்னு சொல்கிறாங்க .மேலும் மன்னர் பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு இந்தப்பகுதியை ஆட்சி செய்ததாவும் அதனால இந்த இடத்திற்கு இரணியல்ன்னு பேர் வந்திச்சுன்னும்  இந்தப்பகுதியிலுள்ள சிலர் சொல்கிறாங்க 

நாம நிக்குறது இப்ப அரண்மனையின் வாசலில் உள்ள படிக்கட்டுகளில்...,  ஒருகாலத்தில் ராஜாவும், படைகளும், ஆட்களும், அம்பாரிகளுமா அலங்கரித்த இந்த முற்றம் இப்ப ஆள் அரவம் இல்லாது வெறிச்சோடி கிடக்கு.  ஆனாலும் யாரோ இங்க தண்ணீர்தெளித்து கோலம் போட்டு பூக்களால் சில இடங்களில் அலங்கரிச்சிருக்காங்க.அது இந்த இடத்துல வாழ்ந்த ராஜாவுக்கும், மக்களுக்கும், அவர்களின் வீரத்துக்கும் இங்க இருக்குறவங்க செய்யும் மரியாதையோ என்னமோ!? ..  சரி வாங்க படிக்கட்டுகளில் ஏறி உள்ள போவோம் .

முழுசாவே இடிஞ்சு பாழடைஞ்சு போய் இருக்கு இந்த அரண்மனை. பார்த்து கவனமா வாங்க. இங்க நிறைய பாம்புகளும், குரங்குகளும் இருப்பதால கவனமா இருங்க.  இந்த அரண்மனை 12 ம் நூற்றாண்டில் சேரமன்னன் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டதா சொல்லப்படுது.

இங்க தனியா ஒரு முதல் நிலை மண்டபம் காணப்படுது. மொத்தமா மேற்கூரை விழுந்துட்ட நிலையில் மரச்சட்டங்கள் எல்லாம் அரித்து விழுந்து கிடக்கு.  கல் தூண்கள் தாங்கி இருந்த மண்டபங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணா காட்சியளித்து வெறும் தூண்கள் மட்டும் எலும்புகூடா பார்க்கவே நெஞ்சை பிசையுற மாதிரி காட்சியளிக்குது.  உள்ளே போக கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் இந்த இடத்தை பத்தி வெளி உலகத்துக்கு சொல்லியே ஆகனும். அதனால, மனசுல தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு உள்ள போகலாம் வாங்க....,

காற்றும், வெளிச்சமும் வர்றதுக்காக கட்டிய சுவர்கள், இன்று காற்றும் வெளிச்சமும் தங்கு தடையின்றி வர்ற மாதிரி முழுசுமா அழிஞ்சு கிடக்கு. வழியெல்லாம் உத்தரத்திலுள்ள பலகைகளும், மேற்கூரையும் உடைந்து கிடக்க்கு. செடி, கொடிகளும் புதர்களாய் மண்டி கிடக்கு. பலகைலாம் கால்ல குத்திடாம பார்த்து வாங்க...,

செங்கல்லால கட்டப்பட்ட இக்கோட்டை சுவர்களெல்லாம் மழை, காற்று இவைகளால் அரித்து பாழடைந்து காணபடுது.  கலை வேலைப்பாடுடன் காற்று புகுந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட வட்டவடிவ பெரிய ஓட்டைகள் ஒவ்வொரு ரூம்லயும் இருந்திருக்கு, ஆனா, அதெல்லாம் கூட அரித்து மண்தூளா இருக்கு. இங்க தெரியும் குறுகலான நுழைவாயில் வழியா உள்ள போலாம் வாங்க
இதுதான் முதல்நிலை மண்டபம். நடுவுல் செடிகள் வளர்ந்து காணப்படும் இந்த இடத்துல சதுரவடிவில் பள்ளமான ஒரு பகுதி தெரியுது பாருங்க. அதில் கற்களான ஒரு தொட்டி மாதிரியான அமைப்பு ஒண்ணு இருக்கு. பழைய திருவிதாங்கூர் கட்டிட அமைப்புகளில் இதுலாம் கண்டிப்பா இருக்குமாம். இது,  சூரிய வெளிச்சத்திற்காக அமைக்கபட்ட பகுதின்னு நீங்க நினைக்கலாம். ஆனா அது ஒரு சுரங்க பாதையாம். இங்க இருந்த மகாராஜா அதுவழியா குதிரைரையில போய் பக்கத்தில இருக்கிற சிவன் கோவிலுக்கும், அங்க இருந்த திருவிதாங்கோடு என்னும் ஊரில் இருந்த கோட்டைக்கும் மகாராஜா குதிரையிலே போற அளவு அகலமானதாகவும், பெரியதாகவும் இருந்ததாம் . மேலும், இங்கே இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கும் செல்வதற்கு சுரங்கபாதை வழிகள் இருந்ததாம் .    
சொன்னா நம்புவீங்களான்னு தெரியல. மேல படத்துல இருக்கும் நீலக்கலர் பலூன் மாதிரியான புள்ளி எப்படி வந்துச்சுன்னு தெரியல. கேமராவுல படம் எடுக்கும்போது தெரியல. ஆனா, கம்ப்யூட்டர்ல போடும்போது இது இருக்கு. மத்த படத்துல இல்ல. இது எதனாலன்னும் தெரியல. ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ராஜாவின் ஆவியா இருக்குமோ!  

கல் தூண்கள் இருக்கிற பகுதியை கவனமா கடந்து வாங்க . மேற்கூரைகள் எல்லாம் இடிந்து விழும் நிலையில் இருக்கு. கீழ நிறைய பாம்பு புற்றுகள் இருக்கு. கவனமா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைங்க. இந்த மண்டபத்தின் அடுத்தநிலை அறைக்கு போலாம்.

கலைவேலைப்பாடுடைய கல் தூண்கள் கம்பீரமா காட்சியளித்தாலும் இதை தாண்டி செல்லமுடியாத அளவு புதர்கள்.  அதனால,  இருபத்தி மூன்றாம் புலிகேசி போல பின்னங்கால் பிடறில அடிக்க புற முதுகிட்டு ஓடிடலாம் வாங்க.

 இங்க ஒரு படிக்கட்டு இருக்கு. இது அரண்மனை கட்டிடத்தோடு இல்லாம தனியாக இருக்கு. இது நம்மை எங்க கூட்டிப் போகுதுன்னு பார்க்கலாம் வாங்க.

மேல படத்தில் இருப்பது சதுர வடிவிலான ஒரு பெரிய அறை. அதைச் சுற்றிலும் காற்று வருவதற்கு வசதியா மரத்தில் செய்யப்பட்ட அடைப்புச் சுவர்கள் எல்லாம் இடிந்து உள்ளே செல்லமுடியாத அளவு சிறைக்கூடம் போல தடுப்பு கம்பிகள் மாதிரி உத்திரதிலுள்ள கம்புகள் விழுந்து கிடக்கு.  இங்க கம்புகளின் இடையே ஒரு சமாதி போன்ற அமைப்பு தெரியுது வாங்க கிட்டக்க போய் பார்க்கலாம்.

உள்ள போக முடியாத அளவுக்கு கம்புகள் விழுந்து கிடக்கு.  சுத்தி போலாம்ன்னா புதர் மண்டிக் கிடக்கு.  அதனால, கம்புகளுக்கு இடைல பார்த்துக்கலாம் வாங்க.   நிறையப்பேர் இது சமாதின்னு தப்பா நினைச்சுக்குறாங்க.  ஆனா, இந்த அரண்மனையின் சிறப்பே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டில்.  அழகா அறையின் நடுவுல உயர்ந்த பீடம், அதன் மேல் தான் கலை வேலைப்பாட்டுடன் இந்தக் கட்டில் காட்சியளிக்குது. பீடத்தில் நான்கு தூண்கள், தூண்களின் மேல் கூரை, கூரையைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பூவேலைப்பாடுகள்ன்னு இன்னிக்கும் தெளிவாக் காட்சியளிக்குது ஆனா எல்லாம் கிட்டக்க போய் பார்க்க முடியாம தூரத்திலிருந்து பார்த்து ரசிக்கும்படியாகிடுச்சு. அந்த கட்டில் மேல சில பூக்களை தூவி இருக்காங்க. ஆனா, யாரு?எப்படி அங்கே போனாங்கன்னுதான் தெரியலை. மேலும் அரண்மனைக்கு வெளிய இருந்த ஒரு பெண்மணி சொன்ன தகவல் இந்த கட்டிலில்தான் மகாராஜாவும், மகாராணியும் படுத்து இருந்து உயிரோடு சொர்க்கம் சென்றனராம் .

இது மகாராஜா, மாகராணி குளிக்கும் இடமாம்.   இதைபத்தி சில சுவாரஸ்யமான தகவகல்கள் இங்க இருக்குறவங்க சொன்னாங்க. சுமார் ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நடந்தவிசயமாம் மகாராஜாவும் மகாராணியும் உயிரோடு சொர்க்கம் சென்றதால் ஒரு வயதான பெண்மணி தினமும் மகாராஜாவுக்கு வெத்திலை பாக்கு எல்லாம் சேர்த்து தட்டி இங்கே காணபடுகிற இந்த குளக்கரையில் ஒரு வெற்றிலையில் வைத்து விடுவாராம் அபொழுது மகராஜா அருபமாக வந்து அந்த மூதாட்டி தட்டி வைத்த வெற்றிலையை எடுத்து விட்டு வெறும் இலையின் கீழே ஒரு தங்க காசு வைத்து செல்வாராம் இது ஒவ்வருநாளும் வழக்கமாக இருந்து வந்து இருந்திருகிறது ஒருநாள் அந்த வயதான பெண்மணி அந்த தங்க காசையும்  வெற்றிலை விசயத்தையும் வெளியே சொல்லி தங்க காசையும் காண்பித்தாராம் அதன்பிறகு மகராஜா வெற்றிலையை எடுக்கவும் இல்லையாம் தங்ககாசையும் வைக்கவும் இல்லையாம்.

ஒருவழியா சரித்திர புகழ் வாய்ந்த அரண்மனையை அது இடிந்து கிடந்தாலும் அதை சுற்றி பார்த்து அதன் பெருமைகளையும் தெரிஞ்சுக்கிட்டோம். இந்த கோட்டைக்கு டாட்டா, பை பை சொல்லிட்டு இனி இங்க மலை மேல இருக்குற கோட்டைகளை பார்க்கலாம் வாங்க. இப்ப பத்பநாபபுரம் அரண்மனைக்கு தொடர்புள்ள இரண்டு கோட்டைகளை பத்தி பார்க்கலாம் முதலில் நாம செல்லபோறது மருந்துக்கோட்டை.

மருந்துக்கோட்டை பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்துல 400 அடி உயரத்துல ஒரு குன்றின் மேல கட்டப்பட்டிருக்கு. கீழ இருந்து பார்க்க கோட்டை கம்பீரமா தெரியுது. வாங்க அங்க போறதுக்கு எதாவது வழி இருக்குதான்னு பர்ர்போம். இங்க இருக்குறவங்க கூட அங்க போறதில்லையாம்.  யாரும் வழிகாட்ட முன்வர மாட்டேங்குறாங்குளே! என்ன பண்ணலாம்!? நாமளே போலாம் வாங்க. போற வழிலாம் ரப்பர் தோட்டங்களும்,  மலைபாதைகளுமா செங்குத்தா இருக்கு.  கவனமா போலாம் வாங்க. அதுக்குமுன்னாடி இந்த கோட்டையைப் பத்தி இங்க இருப்பவங்க சொன்ன சில தகவல்களை உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
தூரத்தில் மரங்களுக்கிடையில் தெரியுது பாருங்க அதுதான் இந்த  மருந்துக்கோட்டை.இது பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே  கட்டப்பட்டுள்ளதாம். கோட்டையின் மேற்பரப்பில் 5 கொத்தளங்களும், பெரிய கல்மண்டபம் ஒன்றும் இருக்குதாம்.  கோட்டையின் மேற்பரப்பு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது.   உதயகிரி கோட்டையில் உருவாக்கப்பட்ட பீரங்கி படைத்தளத்திற்கு தேவையான வெடி மருந்துகளைத் தயாரிக்கவும்,  வெடி மருந்துகளை பதுக்கி வைக்கவும் இந்தக் கோட்டை   பயன்படுத்தப்பட்டதாம்.  நம்முடைய துரதிர்ஷ்டம் இதுக்குமேல பதையே இல்ல.  அதனால தூரத்துல இதை பார்த்துகோங்க ஏணி ஒரு சந்தர்ப்பத்தில உங்களை இங்கே கூட்டி செல்லமுடியுமானு பார்க்கிறேன் உதயகிரிக்கோட்டையில் இருந்து இந்த மருந்துக்கோட்டைக்கு சுரங்கப்பாதைகள் கூட இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க .

மேலும் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு இந்த மருந்துக்கோட்டையில்தான் சிகிச்சை நடக்குமாம். சிகிச்சையில் இறந்து விட்ட வீரர்களை மைய கோட்டையில் கொண்டு சென்று போட்டுவிடுவார்களாம். அந்த உடல்கள் பறவைகளுக்கு உணவாகுமாம். அரச குடும்பத்தினர் இறந்தால் மட்டும் எரியூட்டுவார்களாம். அந்த சாம்பல் திட்டுகள் கூட இப்ப காணப்படுதாம். இந்த மருந்து கோட்டையை சுத்தி நிறைய காவல் தெய்வங்கள் மலையில் போகும் வழியில் பாதி பகுதியில் காணபடுது. அதனாலயே நமக்கு வழிக்காட்ட வர இங்கிருக்குறாவங்க பயப்படுறாங்க.

சரி இனி மையக்கோட்டையை பத்தி பாப்போம்.  அங்க போகும் பாதைகள்லாம் அழித்து ரப்பர் மரங்களை நட்டுவிட்டார்களாம். போவதற்கு வழியில்லை சிரமப்பட்டுதான் போகணும்ன்னு அங்க இருந்த பெரியவர் சொல்றார். அதோ தூரத்துல மலையின் மேல் தெரிகிறதே அதுதான் மைய கோட்டை.  நீங்களும் பார்த்துக்கோங்க. இனி கோட்டையின் அமைப்பை பத்தி பாப்போம் .

இது மருந்துக்கோட்டையிகிருந்து தக்கலை போகும் வழில அரை கிலோமீட்டர் தூரத்த்துல இருக்கு.   200 அடி உயரமுள்ள குன்றின் மேல் கட்டபட்டிருக்கு.   இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை வடிவிலேயே கட்டபட்டிருக்கு. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தக் கோட்டையை இப்பகுதி மக்கள் சவக்கோட்டைன்னு சொல்கிறாங்க.   அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்களை எரியூட்டுவதற்காக இந்தக்கோட்டையை கட்டினார்களாம் அதற்கு ஆதாரமாக கோட்டையின் உட்பகுதியில் சாம்பல் மேடுகள் இப்பவும் திட்டுத்திட்டா காணபடுதாம் .

அங்க போக வழிகள் சரிவர இல்லாததால உங்களை அங்கே கூட்டி போக முடியலை. யாராவது தைரியமா காவல் தெய்வ பயமில்லாம நமக்கு வழிக்காட்ட முன் வந்து, அங்கிருக்கும் காவல் தெய்வங்கள் அருள் புரிந்தால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நாம் அங்க போலாம் .

ஒரு சின்ன இன்ஃபர்மேஷன், எல்லோராலயும் அதிகம் தெரிந்திராத, வெ:ளிச்சத்துக்கு வராத அதே நேரத்துல வரலாற்று சிறப்புமிக்க சில இடங்களையும், கோவில்களையும் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கும் அந்த இடங்களுக்கு செல்வதற்கு வழிகாட்டியாகவும், அங்க செல்ல முடியாதவர்களுக்கு அதை காணும் ஒரு வாய்ப்பா அமையட்டும்ன்னுதான் பதிவிடுறேன்.

இந்த பதிவை மட்டும் படிச்சுட்டு, உரிய பாதுகாப்பும், உள்ளூர்வாசிகளின் துணையுமில்லாம அங்கெல்லாம் போகாதீங்க. ஏன்னா, காவல் தெய்வங்களின் கோவத்துக்கு ஆளாக நேரிடும். நாகர்கோவில் சுற்றியுள்ள முக்கியமான கோட்டைகளையும், கோவில்களையும் பார்த்தாச்சு. இனி வரும் வாரங்களில் வேற ஒரு இடத்தில் இருக்கும் மௌனச்சாட்சிகளை பார்க்கலாம். இப்ப டாட்டா, பைபை, சீ யூ.

42 comments:

  1. வரலாற்று சிறப்பு வாய்ந்த பல கோட்டைகளை அருமையா அறிமுகப் படுத்துறீங்க அக்கா... மிகவும் நன்றி... இன்னைக்கு அறிமுகப் படுத்தி இருக்கும் கோட்டைகளின் நிலையைப் பார்க்கையில் மனம் லேசாய் கணக்கிறது.. :( .. இது பொன்ற பழைய கோட்டைகளை அரசங்காம் த்ங்களுடைய பொறுப்பில் எடுத்து பராமரிப்பு செய்தால் நம் அடுத்த தலைமுறைக்கும் வரலாற்றை சான்றுகளுடன் அனுபவித்து அறியும் வாய்ப்பு கிட்டும்... ஹ்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் பிரியா! இரண்டாயிரம் சதுர அடில கட்டி இருக்கும் சாதாரன செங்கல் வீட்டுக்கே ஆயிரம் கதை சொல்லும் நாம், ஒரு அரசன் வாழ்ந்த இடத்தை எப்படி வச்சிருக்காங்க பார்க்கும்போது மனசு வலிக்கதான் செய்யுது.

      Delete
  2. வணக்கம்
    இரணியல் அரண்மனை பற்றிய தகவல் மிக அருமையாக எழுதியுள்ளிர்கள்.உண்மையில் எவ்வளவு கஸ்டப்பட்டு ஒவ்வொரு இடமாக ஏறி இறங்கி தகவலை திரட்டி பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்
    வாசிக்க வாசிக்க இரணியல் அரண்மனை கதை நன்றாக உள்ளது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இது கதையல்ல ரூபன். நிஜம். நம் கண் முன்னே ஒரு சரித்திர குறியோடு அழிந்து கொண்டிருக்கு

      Delete
  3. உங்கள் தைரியம் நிச்சயம்
    பாராட்டுக்குரியது
    படத்தில் பார்க்கும்போதே சிதலமடைந்த
    கோட்டைகள் ரொம்பப் பய...முறுத்....து...து
    அருமையான புகைப்படங்களுடன்
    அரிய தகவல்களுடன் கூடிய சுவாரஸ்யம்மிக்க
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டும் போகலைப்பா. நாகர்கோவில் நண்பர் ஒருவரும் துணை வந்தார். ஆமா. அவராலயும் ஒரு கட்டத்துக்கு மேல எங்களை கூட்டி போக முடியல். காவல் தெய்வம், ஏவல்ன்னு சொல்லி பயமுறுத்தி அதுக்கு மேல போக விடாம பண்ணிட்டாங்க.

      Delete
  4. அருமையான படங்களுடன் இரணியல் அரண்மனை பற்றிய தகவல்களை அறிந்தேன்... உங்களின் தேடலுக்கு பாராட்டுகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  5. வரலாற்றுச்சிறப்புமிக்க சில இடங்களை இன்றைசமூகம் புறக்கணிப்பது வேதனைதான்....

    நான் பார்த்தும் பல இடங்களில் இதுபோல் வேதனை அடைந்ததுண்டு

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம்ம தமிழ்நாடு இதுப்போன்ற கலைப்பொக்கிஷங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. இதுக்கு கேரள மாநிலம் பரவாயில்ல

      Delete
  6. மீண்டும் சந்திரமுகின்னு படம் எடுத்தா ..இந்த பேய் கோட்டைகளில் படம் பிடிக்கலாம் !
    த.ம 6

    ReplyDelete
    Replies
    1. சந்திரமுகி 2 படத்துக்கு கண்டிப்பா இடம் சரியா இருக்கும். நம்ம சினிமா ஆட்கள் கண்ணுக்கு எப்படி இந்த இடம் தப்பியதுன்னுதான் தெரியல

      Delete
  7. எவ்வளவு பெரிய பொக்கிஷம் வீணடிக்கப்பட்டிருக்கிறது அக்கா ... என்ன ஒரு முட்டாள்தனம் ... ஆனால் இந்த மாதிரி விசயங்களில் வெள்ளைக்காரனை அடிச்சிக்க முடியாது ,.,, பழைய பாரம்பரியத்தின் மேல் பற்று அதிகம் என்று அவர்களின் பாதுகாப்பில் தெரிகிறது ... அறிய தந்த பதிவுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அரசா! பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட இதுப்போன்ற இடங்களை செம்மையாக பராமறிக்குறாங்க, ஆனா, நாம!? படங்களில் காணப்படும் கல் கட்டிலை போல ஒரு கட்டிலை இப்ப நம்மால செய்ய முடியுமா!? இது வெறும் கட்டிடம் மட்டுமல்ல அரசா! அங்கிருந்தவங்க வீரம், காதல், கொடை, சதி, கேளிக்கைகளை வெளி உலகத்துக்கு பரை சாற்றும் ஒரு இடம். அது அழியறதை நாம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தா அடுத்த தலைமுறையினருக்கு இதெல்லாம் போய் சேராது

      Delete
  8. இரணியல் அரண்மனை, மருந்துக்கோட்டை, சவக்கோட்டை என்று வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அழகிய நடையில் வண்ணப்படங்களோடு தந்தமைக்கு நன்றி! ஒவ்வொரு கோட்டைக்குள்ளும் சுவாரஸ்யமான கதைகள் இருக்கும் அந்தப் பகுதியில் இருக்கும் பதிவர்கள் அவற்றை எழுதலாம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா. எங்க வீட்டு பக்கமும் ஒரு கோட்டை இருக்கு. அதை பத்தியும் விரிவா எழுதுறேன்.

      Delete
  9. நல்ல தகவல் உண்மையில் உங்க பதிவுகள் அந்த இடங்களை நேர்ல பார்த்த மாதிரி படங்கள் இருக்கு அதைபதின தகவல்களும் நல்லா இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க அமிர்தா!

      Delete
  10. இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு எங்களை அழைத்துப் போக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    ''கேமராவுல படம் எடுக்கும்போது தெரியல. ஆனா, கம்ப்யூட்டர்ல போடும்போது இது இருக்கு. மத்த படத்துல இல்ல.'' இது ஓர் ஆச்சர்யமான விஷயம்தான்.

    ReplyDelete
    Replies
    1. மத்தப் படத்துல இல்லை. குறிப்பிட்ட படத்துல மட்டும் அந்த ப்ளூ டாட் இருந்தது நிஜம்தானுங்க! அங்கிருந்தவங்க சொல்வதுப்போல உண்மையா இருக்குமோ!?

      Delete
  11. // ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ராஜாவின் ஆவியா இருக்குமோ!
    // யோவ் ஆவி ராஜி அக்கா படம் பிடிக்கும் போது ஏன்யா குறுக்க வந்த ராஸ்கோலு, அக்கா பயபடுது பாரு :-))

    ReplyDelete
    Replies
    1. ஆவிக்கு அக்காங்குற பயம் போய்ட்டுது. அதான். இனி கண்டிப்போடு இருக்கனும். அப்பதான் இதுப்போல விளையாட்டுலாம் விளையாட மாட்டான்.

      Delete
  12. // ஒரு வேளை எல்லோரும் சொல்ற மாதிரி அங்க சுத்தும் ராஜாவின் ஆவியா இருக்குமோ!
    // எக்கா நீங்க நிஜமாவே அப்பாவியா, இல்ல இந்த ஆவிய பார்த்ததால அப்பாவி ஆகிடீங்களா #டவுட்டு :-))))))

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்ல சீனு! அங்க போகும்போது கூட வந்த நண்பர் எவ்வளாவோ முயற்சி பண்ணியும் அங்கிருக்கும் உள்ளூர் வாசிகள் ஒருத்தரும் அந்த கோட்டைகள் சுத்தி காட்ட வரலை. காரணம் அங்கிருக்கும் மலைகளையும் அங்க இருக்கும் பொக்கிஷங்களை பாதுக்காக்க சில காவல் தெய்வங்களை ராஜாக்கள் ஏவி இருப்பாங்களாம். அவைலாம் திரும்ப பெறாத காரணத்தால அங்க மலை மேல சுத்திக்கிட்டு இருக்குறதா நம்புறாங்க. அதுப்போல இருக்கலாமில்லியா!?

      Delete
  13. மெதுவாத் தான் நடந்து வந்தேன்க்கா ஆனாலும் பாருங்க இந்த அரசன் பின்னாடி இருந்து தள்ளி விட்டதால கால்ல முள்ளு குத்திருச்சு


    # நாங்கல்லாம் பதிவுக்குள இறங்குனா முத்தெடுக்காம விடுறது கிடையாது :-))))

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசனும் வர வர விளையாட்டு பிள்ளையா மாறிக்கிட்டே இருக்கார். பேசாம கால் கட்டு போட்டுட வேண்டியதுதான்!

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. அருமையான தகவல்கள் (வரலாறு) அடங்கிய அற்புதமான பதிவு, பதிவு நடை மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சீனு!!

      Delete
  16. அருமையான படங்களுடன் இரணியல் அரண்மனை பற்றிய தகவல்களை அறிந்தேன்... பாராட்டுகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஸ்ரீ!

      Delete
  17. arumai arumai arumai thanks

    ReplyDelete
  18. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இடம், இன்று சிதிலமாய் இருப்பது வேதனை அளிக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. அந்த இடங்களை பார்க்கும்போது மனசை எல்லாம் என்னமோ பண்ணுதுங்க ஐயா!

      Delete
  19. உங்கள் பதிவை படிக்கும்போது நாங்களே நேரில் சென்று பார்ப்பது போன்றே இருந்தது.... ஒரு அருமையான டிரக்கிங் கேம்ப் போன அனுபவம் போல இருந்தது. படங்களும், தொகுத்து அளித்த விதமும் மிக சுவாரசியம்...

    ReplyDelete
    Replies
    1. பதிவை படித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  20. அரிய தகவல்கள் படங்களுடன் அருமையான கட்டுரை!

    ReplyDelete
  21. சிறப்பான தகவல்களுடன் அருமையான பதிவு. நிறைய மெனக்கெட்டு தகவல்களை தந்திருக்கிறீங்க....பாராட்டுகள்.

    ReplyDelete
  22. பாழடைந்து போனாலும்
    சரித்திரம் சொல்லும் இடம்...
    பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  23. பிரமாதம்............சான்சே இல்ல!!

    ReplyDelete