வியாழன், அக்டோபர் 17, 2013

இது நிஜமா?! பொய்யா?! இல்ல ஃபேஸ்புக் மோசடியா!?போன வெள்ளிக்கிழமை காலைல தூங்கி எழுந்ததும் வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு இருந்தேன். பக்கத்துல என் பையன் பல் விளக்கிக்கிட்டு இருந்தான். அப்போ சடார்ன்னு ஒரு சுமோ வந்து நின்னுச்சு. நம்ம இம்சை தாங்காமத்தான் யாரோ அடியாட்களை அனுப்பி இருப்பாங்கன்னு பயந்து வீட்டுக்குள்ள ஓடி வூட்டுக்காரரை கூட்டி வந்தேன். (நம் மேல் விழும் அடியை தாங்கிக்க ஒரு தியாகி வேணுமே! அதுக்குதான்.)

அம்மா கட்சி கரை வேட்டி கட்டிய ஒரு ஆள் இறங்கி பவ்யமா நின்னார். சரி, இது நம்மளை தேடி வந்த ஆட்கள் இல்லன்னு புரிஞ்சு போய்.., மாமா உங்கள தேடி யாரோ வந்திருக்காங்கன்னு கூவிட்டு, உள்ள வாங்க சார்ன்னு சொன்னேன். வீட்டுக்காரர் வந்ததும், சார், நாங்க திருவண்ணாமலை கிரிவலப்பாதையில ஒரு ஆசிரமம் வச்சிருக்கோம். அங்க இருக்கும் சாமியாரை தேடி ஜப்பான்ல இருந்து ஜாக்கி சான் வருவாப்ல, அமெரிக்காவுல இருந்து ஒபாமா வந்து ஐயாக்கிட்ட அருள்வாக்கு கேப்பாங்க, அப்பேற்பட்ட ஐயா இந்த வழியா போகும்போது உங்க வீட்டைக்காட்டி இங்க நல்லவங்க குடி இருக்காங்க!! அவங்களுக்கு நான் அருள் வாக்கு சொல்லனும்ன்னு சொல்லி உங்க வீட்டு வாசல்ல இருக்கார். வாங்கன்னு கூப்பிட்டாங்க.

என்ன, ஏதுன்னு கார் வரை போய் நானும், என்னவரும் போய் நின்னோம். அப்ப அவர், தன் பெருமைலாம் சொல்லி, நீங்க செஞ்ச தர்மமதான் உங்களை இங்க என்னை கொண்டு வந்திருக்கு, லட்சுமி, சரஸ்வதி போல 2 பொண்ணும், முருகன் போல பையனும் உங்களுக்கு வாரிசா இருக்காங்க, உங்க வீட்டுக்கு வந்து அருள் வாக்கு சொல்லி உங்களை ஆசீர்வதிச்சும் விபூதி கொடுத்துட்டு போறேன். அதுக்கு உங்க அனுமதி வேணும்ன்னு சொன்னதும் என்னவர்  லேசா தயங்கி சரி, வாங்கன்னு வீட்டுக்குள்ள கூட்டி வந்தார்.

வந்தவர் சேர்ல உக்காந்து, ஆன்மீகத்துல சில வார்த்தைகள் சொல்லி பிள்ளைகள் பற்றியும், நான் என் வீட்டுக்கு ஒரே பொண்ணுன்னும் சரியா சொன்னதும், இன்னும் கூடுதலா நம்பிக்கை வந்து என்னவர் கொஞ்சம் நிமிர்ந்து தைரியமா உக்காந்தார்.  

எங்க முகமலர்ச்சியை கண்டதும், 110 வருடம் உயிரோடு இருந்து ஜீவசமாதியான எங்க குருநாதருக்கு, நாளை மறுநாள் குருபூஜை கொண்டாடுறோம், அதுக்கு 10000 பேருக்கு அன்னதானம் செய்யுறோம். அதுக்கு நீங்க ஒரு பத்து மூட்டை அரிசி கொடுங்கன்னு சொல்லி குண்டை தூக்கி போட்டார். 

எங்களுக்கு அவ்வளவு வசதிப்படாது ஐயா! அதனால, பெட்ரோல் செலவுக்கு மட்டும் இந்தாங்கன்னு 200 ரூபாய் கொடுத்து அனுப்பிட்டார். நாங்கலாம் மெய்மறந்து நிக்கும் வேளையில் என் பையன் மட்டும் கார் நம்பரை குறிச்சு வச்சுக்கிட்டான். அவங்க போனதும் எங்ககிட்ட கொடுத்தான். அதை என்னவரோட போலீஸ் ஃப்ரெண்ட்கிட்ட கொடுத்து ட்ரேஸ் பண்ண சொன்னபோது, நீ கம்ப்ளெய்ண்ட் கொடுங்கன்னு சொல்றாங்க. 

இப்ப எங்க குழப்பம் என்னன்னா! நிஜமாவே அந்த சாமியாருக்கு நடந்தது நடக்க போறது சொல்லும் சக்தி இருந்தா, என்னை பத்தியும், பிள்ளைகள் பத்தியும் சொன்னவர் ஏன் என் வீட்டுக்காரர் பத்தி சொல்லல. ஏன்னா, எங்க ஏரியாவுல என்னை பத்தியும், குழந்தைகள் பத்தியும் நல்லா தெரியும். என் புகுந்த வீட்டு பத்தி அவங்களுக்கு தெரியாது.

ரெண்டாவது குழப்பம்.., என்னதான் என் குடும்ப சூழல் பத்தியும், பசங்க என்ன படிக்குறாங்கன்னும் அக்கம் பக்கம் விசாரிச்சு வந்தாலும், பிள்ளைகள் பற்றிய நுணுக்கமான, என் வூட்டுக்காரர்கூட தெரிஞ்சுக்காத நட்சத்திரம், ராசி பற்றி சரியாய் சொன்னதெப்படி?!

இப்படி குழம்பி பிள்ளைகளுக்கு பள்ளிக்கு போக நேரமாவதுக்கூட தெரியாம குழம்பி தவித்திருக்கும் நேரத்துல என் வூட்டுக்காரர் கேட்டாரே ஒரு கேள்வி!! அப்படியே நான் ஷாக்காகிட்டேன்..,

நீ ஃபேஸ்புக்குல குடும்பத்தை பத்தி போட்டியா?! வீட்டு அட்ரஸ் போட்டியா!? அதான் இப்படி தேடி வந்தாங்களா!?ன்னு கேட்குறார். என் குழப்பத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்க பிரதர்ஸ்.

இது நிஜமா?! பொய்யா?! இல்ல ஃபேஸ்புக் மோசடியா!?

48 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா இத மாதிரி என் கூட வேலை பாக்குறதா என்னோட விசயங்கள் பலதை பேசி நான் இல்லாத நேரத்துல ஆட்டைய போட்டுருக்காங்க....அப்ப இந்த பேஸ் புக்லாம் கிடையாது.....மாமாட்ட சொல்லுங்க இது வேற நெட்வொர்க்குன்னு......நாமதான் உசாரா இருக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா இனி உசாரா இருக்கேன்.

   நீக்கு
 2. ராஜி!
  நீங்க நம்மள மாதிரி இருப்பதானால் கொஞ்சம் அடிச்சு விட வாய்ப்பு இருக்கு; இருந்தாலும் நீங்க சொன்னது உண்மையெனில், அவர் என்ன சொன்னாலும், நீங்க எதுக்கு ரூபாய் 200 கொடுத்தீர்கள்!

  ரூபாய் 200 பெரிய பணம் இல்லையா; ஒரு எட்டணா இல்லை சாமியார் வேஷம் போட்டதிற்கு ஒரு ரூபாய் போட்டு கொடுத்து இருக்கலாம்

  மாமா பாவம்; அட உங்க மாமாவைத்தான் சொன்னேன்! எதுக்கும் உங்க அட்ரஸ் கொடுங்க! இந்தியா வந்தா செலவுக்கு பணம் கம்மியா இருந்தா உங்க வீட்டுக்கு வந்து வாங்கிக்க வசதியா இருக்கும்.

  200 ரூபாய் எமந்ததற்கு ஒரு பிளஸ் வோட்டு +1

  பின்குறிப்பு:
  முன் பின் தெரியாதவன் எவன் வந்தாலும் வீட்டினுள் விடாதீரகுள்---என்னைத் தவிர!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரையும் உள்ள விட மாட்டேன். காலை நேரம் அவர் இருக்கும்போது வந்ததாலதான் வீட்டுக்குள் வர நேர்ந்தது.

   நீக்கு
 3. ஹஹஹா..அக்கா, அடுத்த வாரம் வருவதற்காக இன்னொரு சாமியார் வந்துகிட்டு இருக்கார். (முகநூல் பார்க்க)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொல்லும் சாமி வந்தா தட புடலா விருந்து வச்சு நல்லா கவனிச்சு!? அனுப்புவேன்

   நீக்கு
 4. ராஜி மேடம் உஷாரா இருங்க. எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லக்கூடாது.

  ஏமாற்றுவதற்கு என்று ஒரு கூட்டம் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி காத்துக்கொண்டு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா இனி உசாரா இருப்பேன்.

   நீக்கு
 5. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிங்க. உங்க அக்கறைக்கு மிக்க நன்றிங்க!

   நீக்கு
 6. பதில்கள்
  1. எப்பவாவது இப்படி ஆகிடுவேன் அண்ணா!

   நீக்கு
 7. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கைப் பாடமாக இருக்கட்டும். (200 ரூபாயில் புத்தி கொள் முதல் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் 200 ரூபாயோட போச்சேன்னு ஒரு நிம்மதி பெருமூச்சு.

   நீக்கு
 8. நல்ல வேளை வந்தது 200 றோட போச்சு .பத்து மூட்டை
  அருசியைக் கொடுத்திருந்தால் மனம் எவ்வளவு வலிக்கும் .
  தப்பிச்சன்டா சாமி என்று இந்த அனுபவத்தைக் கடைப் பிடியுங்க
  தங்கச்சி .நாங்களும் தான் :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி கவனமா இருந்துக்குவேன்க்கா

   நீக்கு
 9. எப்படியோ இன்னும் கவனமா இருந்துக்குங்க

  பதிலளிநீக்கு
 10. ஏமாற்று எல்லா ரூபத்திலும் உண்டு. உங்களுக்கு அது சாமியார் ரூபத்தில் போல! ஏன்? இந்தப் பதிவு எழுதுபவங்கள் பலர் துடிக்கப் பதைக்க ஏமாற்றுகிறார்கள். பொய் கூசாமல் சொல்லுகிறார்கள்.கிடைத்தால் பணமோ, பொருளோ லவட்டி விடுவார்கள்.
  நம் தலையில் ஏமாற வேண்டுமென்று எழுதியிருந்தால் அப்படியே ஆகும் , என்ன? அவதானமாக இருந்தென்ன?
  ரொம்ப படித்து 6 இலக்கத்தில் சம்பளம் எடுத்தும், அடுத்தவரை எமாற்றுவதையே கலையாகக் கொண்டவர்களுக்கு இந்த இணையம் ஒரு "காமதேனு".
  எவரையுமே நம்பும்படி இல்லை?
  நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போக முடியாது. இவர்களுடன் வாழ்ந்தே யாகவேண்டும்.
  இப்போ என் இந்தப் பின்னூட்டத்தை அந்த ஏமாற்றுப் பெயர்வழிகள் படிப்பார்கள், ஆனால் தானில்லை
  என்பதுபோல் ஜோரா நடிப்பார்கள்.
  திருடனைக் பிடிக்க ஓடுபவர்களுடன் சேர்ந்தோடும் திருடன் போல்.
  நடிப்பு,ஏமாற்று அவர்களுக்குக் கைவந்த கலை.
  மிக விபரமாக இணையத்தில் பகிர்வதைத் தவிர்த்தால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது இணையத்தால் வந்த பிரச்சனை இல்லன்னு மட்டும் புரியுது!

   நீக்கு
 11. இன்னும் ஒரு வாரத்திற்குள் ஜப்பானில் இருந்து சுடோகு சாமியார் உங்கள் வீட்டுக்கு வருவார். ஜப்பானில் இருந்து வருவதால் கொஞ்சம் பார்த்து ஒரு 5000 ரூபாய் கொடுங்கள். உங்க சமுகம் நல்ல இறுக்கும்

  பதிலளிநீக்கு
 12. சாமியார்ன்னு யாரும் வந்திடக் கூடாதே.... உடனே அருள் வாக்கு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க நம்மவர்கள்...!!!!

  அந்த ரகத்தில் நீங்களுமா தோழி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னதான் மத்தவங்க அனுபவங்களை கேட்டாலும் இதுப்போன்று ஏமாறுவது சகஜம்தான் அருணா! என்ன இழப்பு 200 ரூபாய் என்பதால பாதிப்பு இல்ல. இதுவே பெருசா இருந்தா!?

   நீக்கு
 13. நீங்கள் குழம்பிப்போனாலும்
  அடுத்தவர்களுக்கு பதிவின் மூலம்
  தெளிவூட்டியமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஒரு படிப்பினைதான் அப்பா!

   நீக்கு
 14. கவனமா இருங்க ராஜி .இப்பெல்லாம் திருடங்க ஹைடெக்கா யோசிக்கறாங்க :))
  ஆனாலும் 200 ரூபா அதிகம்தான் !!! உங்க மகன் மிக விவரமானவன் ..!!! நம்பரை நோட் பண்ணிருக்கானே :))..

  ராசி நட்சத்திர விபரங்கள் ... அநேகமாக உங்கள் குடும்பத்தினரின் நட்சத்திர ஜாதக குறிப்பு COPY எப்படியாவது தவற விட்டிருப்பீங்க ..அது யார் கிட்டயாச்சும் கிடைச்சு அவர்கள் பயன் படுத்தியிருப்பாங்க ..இன்னொரு விஷயம் இனி கடிதங்கள் வந்தால் முகவரியைக்கூட ஷ்ரெடரில் போட்ட பின் குப்பையில் வீசுங்க data திருடங்க எவ்விடத்திலும் இருக்காங்க ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாதகக்குறிப்பை எங்கயும் மிஸ் பண்ணலைங்க. அதனாலதான் குழப்பமே!

   நீக்கு

 15. ////லட்சுமி, சரஸ்வதி போல 2 பொண்ணும், முருகன் போல பையனும் உங்களுக்கு வாரிசா இருக்காங்க,///

  கிருஷ்ணன் போல இருக்கும் என்னைப் பற்றி ஒன்றும் சொல்லலீயே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னாரே! உங்க சகோதரர் வூட்டம்மாக்கிட்ட பூரிக்கட்டையால வாங்குவார், அமெரிக்காவுல இருந்தாலும் உங்களுக்கு ஒரு சாக்லேட் கூட கொடுக்க மாட்டார்ன்னு

   நீக்கு
 16. இப்படிதானுங்க மோடின்னு ஒரு சாமியார் ஊருக்குள்ள வந்திருக்கிறாராம் பாத்துகுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா சாமி! நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கலாம்! எதுலயாவது கோர்த்து விட்டு வீட்டுக்கு சுமோ அனுப்பிடாதீங்க!!

   நீக்கு
 17. அனுபவமாக எடுத்துக்கொண்டு, இனிமேலாவது விழிப்புடன் இருங்கள்! வேறென்ன சொல்ல?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் விழிப்போடு இருப்பேன்

   நீக்கு
 18. இப்படியெல்லாம் நிறைய பேரு கிளம்பிட்டாங்க! நாமதான் உஷாரா இருக்கணும்! நல்ல வேளை கொஞ்சமாய் ஏமாந்தீங்களே!

  பதிலளிநீக்கு
 19. எத்தனையோ வகையில் ஏமாற்றுகிறார்கள். நானும் ஏமாந்திருக்கிறேன்-வேறு வகையில்!

  பதிலளிநீக்கு
 20. பத்து மூட்டை அரிசிக்கு வந்தது 200 ரூபாயோட போச்சு

  பதிலளிநீக்கு
 21. ஒவ்வொரு நாளும் இப்படி சேவை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பலர் வருகிறார்கள். அவரால் சொல்வது பொய் என்று தெரிந்தும் சில நேரங்களில் ஏதாவது கொடுத்து அனுப்புவது உண்டு. இல்லையென்றால் எளிதில் இடத்தை விட்டு நகர மாட்டார்கள்

  பதிலளிநீக்கு
 22. இப்படியும் சில மனிதர்கள்....

  பதிலளிநீக்கு
 23. I am from village near Thiruvannamalai, the same thing happened in our home 12 years ago. That Cheat Swamyar with rudraksha mala and few assistance in white & white costumes came in Sumo, they used the same dialogues and same approach. He asked rice bags and my mom ended up paying few hundreds. He somehow collected basic information about our family.

  He even said the same dialog "I will visit only those home where kind heart people live"

  பதிலளிநீக்கு
 24. வெளியில் முன்பின் தெரியாத யாராவது “ உங்கள் பெயர் என்ன? எங்கே இருக்கிறீர்கள்? ” என்று கேட்டால், ஏன் எதற்கு என்று சண்டைக்கே போய் விடுகிறோம். ஆனால் இண்டர்நெட்டில் இலவச மென்பொருள் என்ற பெயரில் BIODATA கேட்டால் அப்படியே கொடுத்து விடுகிறோம். FACE BOOK –போன்றவற்றில் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் பதிவு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

  பதிலளிநீக்கு
 25. நானும் பலன் சொல்கிறேன் ! தங்கள் பையன் மிக்க புத்திசாலி! நல்ல எதிர்காலம்!
  முன்னுக்கு வருவான் ஆமாம்! பணம் கொடுத்தது கரை வேட்டிக்குப் பயந்தா ! பகத்திக்கு உகந்தா?

  பதிலளிநீக்கு
 26. நல்ல முன்னேற்றம் ...குடு குடுப்பைகாரர்கள் காரிலும் வர ஆரம்பித்து விட்டார்கள் !
  த .ம 16

  பதிலளிநீக்கு
 27. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 28. அப்படியே இங்கேயும் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

  பதிலளிநீக்கு
 29. இப்பல்லாம் நம்ம செல்ஃபோன கூட நெட்ல போடக்கூடாதாம். அதை வைத்தே நம்முடைய விலாசத்தை மட்டுமல்லாமல் நம்முடைய profileல் நாம் இடும் அனைத்தையுமே கண்டுபிடித்து சொல்லக் கூடிய தளங்கள் உள்ளனவாம். ஆனா நாள் நட்சத்திரத்தக் கூடவோ போட்டு வச்சிருந்தீங்க? ஆச்சரியமாத்தான் இருக்கு!

  பதிலளிநீக்கு