Friday, October 18, 2013

குலத்தெய்வம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்


எங்க குடும்பம் கூட்டு குடும்பம். வேலை விசயமாவும், பிள்ளைகளின் படிப்புக்காகவும் சொந்த ஊரை விட்டு அங்கங்க இருந்தாலும், எதாவது பண்டிகை, நல்லது, கெட்டதுகளில் ஒண்ணா சேர்வதை வழக்கமா வச்சிருக்கோம்.  அதுப்போல ஒரு நிகழ்ச்சிதான் வருசத்துக்கொரு முறை குலத்தெய்வம் கோவிலுக்கு போறது...,

குலத்தெய்வ கோவில்ன்னு சொன்னதும் மேல்மலையனூர், மருவத்தூர், திருத்தணி, சமயப்புரம்ன்னு பெரிய பெரிய கோவில்லாம் கற்பனை பண்ணாதீங்க. வேலூர் டூ திருவண்ணாமலை ரோட்டில கண்ணமங்கலம் கிராமத்திலிருந்து உள்ள்ள்ள்ள்ள போனா கொளத்தூர்ன்னு ஒரு குக்கிராமம் வரும். அங்கதான் இருக்கு எங்க குலத்தெய்வமான கன்னியம்மன் கோவில்.

சுத்திலும் நெல், வேர்க்கடலை, மஞ்சள், கரும்பு விளையும் வயல் வரப்பும், வாழை, தென்னை மரம் சூழ்ந்த ஒரு புளிய மரத்துக்கு கீழ சிலை ரூபமில்லாத,  7  கல்லே தெய்வமா அருள் புரியும் இடம்தான் எங்க கோவில்.

பொங்கல் பண்டிகை முடிந்து எதாவது ஒரு ஞாயித்துக்கிழமைல அங்க போவோம். பஸ் வசதி இல்லாததால் ஒரு வேன் வாடகைக்கு பிடிச்சுக்குவோம். 
எங்க குடும்பம் பெருசு. என் மாமனாரோட தம்பிங்க 4 பேர். அவங்க பிள்ளைங்க, என் வீட்டுக்காரர் கூட பிறந்தவங்க 5 பேர் அவங்க பிள்ளைங்க,  அடுத்த வீட்டுக்கு வாழப்போன பொண்ணுங்க, மருமகப்பிள்ளைங்க, நண்டு சிண்டு நட்டுவாக்களி உடபட எப்படியும் 50 பேர் தேறும்..வேன் மட்டுமில்லாம கார், வண்டின்னு கிளம்பிடுவோம். அங்க ஹோட்டல்லாம் கிடையாது. அதனால, விடிகாலைலயே எழுந்து காலைக்கும், மதியத்துக்கும் சமைச்சு எடுத்துக்குவோம். முதல் நாளே சொல்லிக்குவோம் யார் என்ன சமைச்சு கொண்டு வரோம்ன்னு.

பெரிய அக்கா இட்லி, சின்ன மாமியார் பொங்கல், தங்கச்சி கிச்சடி, அத்தை கேசரி, நான் இடியாப்பம்ன்னு செஞ்சு கொண்டு போவோம். குட்டீசுக்கு மினி இட்லி உட்பட எங்க மெனுவில் இருக்கும். கோவில் பக்கத்துல இருக்கும் புளிய மரத்து கீழதான் சாப்பாடு.

எல்லோரும் ஓடி, ஓடி பரிமாறி எல்லோருக்கும் பசி ஆத்துனா, நான் மட்டும் ஃபோட்டோ எடுக்குறேன்னு சொல்லி வேலைக்கு டிமிக்கி கொடுத்தாச்சு!!


நாளைய பெண்மனிகளாகப் போகும் எங்க கண்மனிகள் கோலம் போடுதுங்க!


ஆண்கள் பூஜைக்கு தேவையான தண்ணி, பழம், பூலாம் வாங்கி வந்து பூஜையை ஆரம்பிக்க..., கூடவே ஹெல்ப் பண்றேன்னு குட்டீசுகள் ஆட்டம் போட பூஜை நடக்கும்...,

பெண்கள் கல் அடுப்பு மூட்டி பொங்கல் வைப்பதில் பிசியா இருப்பாங்க.  அடுப்பெரிக்க பகக்த்து வயக்காட்டுல இருந்து பசங்க போட்டி போட்டுக்கிட்டு குச்சி, வரட்டிலாம் எடுத்து வந்து தருவாங்க. அதை வச்சு ரெண்டு நாள் மொத்த குடும்பத்துக்கும் சமைக்கலாம். அம்புட்டு கொண்டு வருவாங்க. பொங்கள் வச்சதும் மாமாலாம் சேர்ந்து காஃபி போட்டு எங்களுக்கு தருவாங்க. வருசத்துக்கு ஒரு முறை மட்டும் இப்படி நடக்கும். வீட்டுக்கு வந்தா ஜுரத்துல இருந்தாலும்..., மூச்ச்ச்ச்ச்ச்.


ஒரு வழியா அபிசேகம், அலங்காரம்லாம் முடிஞ்சு படையலுக்கு சாமியை ரெடி பண்ணியாச்சு.

எங்கள் குலமும், குடும்பமும் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு பூஜை நடக்கும். இதுல ஒரு காமெடியான விசயம் நடக்கும்.., அது என்னன்னா சீனியாரிட்டி படிதான் சாமி கும்பிடனும்.., அதாவது முதல்ல மாமனார், அடுத்து எங்க மாமியார்.., அதுக்கடுத்து சின்ன மாமனார்கள், அவங்க வொயிஃப்ஸ், அடுத்து எங்க தலைமுறைகள்ல்ல என் மூத்தார்ல ஆரம்பிச்சு கடைசி கொழுந்தனாரும், அவர் வொயிஃப்ல வந்து முடியும். அதுக்கடுத்து அடுத்த தலைமுறையான எங்க வாரிசுங்க வரிசையா சாமி கும்பிடுவாங்க. எதாவது வேலையா சீனியாரிட்டி மாறிட்டா.., தீர்ந்தது... , எங்க அம்மா கும்பிடாம நீங்க எப்படி கும்பிடலாம்ன்னு செல்ல சண்டை இழுப்பாங்க.

சாமிக்கு படைச்ச பாணகம், பொரிலாம் கொடுப்பாங்க.

அடுத்து பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் கொடுப்பாங்க. இதுக்கே வயிறு நிரம்பி போகும்..., ஆனா, மதியம் சாப்பிட்டே ஆகனும்ன்னு காரமடை சித்தர் சொல்லி இருக்குறதால..,

அவங்கவங்க கொண்டு வந்த புளிச்சாதம், எலுமிச்சைசாதம், வெஜ்.பிரியாணி, சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், ஃப்ரைடு ரைஸ், புது மாப்பிள்ளை வாங்கி வந்த ஸ்வீட், மிக்சர், புது மாட்டு பொண்ணு சமைச்ச கத்திரிக்காய் கொத்சுன்னு கொஞ்சமே கொஞ்சம் சாப்பாடும், நாலு வண்டி கதையுமாய் மதிய சாப்பாட்டு பந்தி நடக்கும்.

கோவில் எதிரில் இருக்கும் குளம்..., இது புண்ணிய தீர்த்தமான்னுலாம் தெரியாது. 

பக்கத்து கழனில இருக்கும் பம்ப் செட்டுல ஒரு ஆட்டம் போடுவோம். புதுசா கல்யாணம் ஆன ஆண்கள், புது பொண்டாட்டி வேணாம், வேணாம்ன்னு சொன்னாலும் தங்கள் வீரத்தை காட்ட கிணத்துல டைவ் அடிச்சு பசங்களுக்கு நீச்சல் சொல்லி தருவாங்க.

கோவில் பக்கத்துல இருக்கும் ஒரு மலை. கல்யாண புதுசுல, சின்ன பிள்ளைங்களா இருந்த நாத்தனார், மச்சினரை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போனதுண்டு. இப்பதான் வயசாகி போச்சே! மலை மேல ஏற மூச்சு வாங்குது, கால் முட்டிலாம் வலிக்குது! பசங்களும் முன் போல மலை மேல ஏற ஆசைப்படுவதில்லை. மலைப்பாறை முழுக்க எங்க பேருங்க இருக்கும். ம்ம்ம்ம்ம்ம் அதுலாம் லவ்வுல இருந்த காலம்!!

பாரதிராஜா போல பெரிய கேமரா மேன் ஆக வேண்டிய என்னை கல்யாணம் கட்டி கொடுத்து குடும்பம் என்னும் சிறு வட்டத்துக்குள்ள அடைச்சிட்டாங்க. அதனால, இப்படிலாம் படம் எடுத்து என் கலைத்தாகத்தை தீர்த்துக்குறேன். சிவனேன்னு தேன் குடிச்சுட்டு இருந்த பட்டாம்பூச்சியை ஒரு க்ளிக்.

மாடுலர் கிச்சன், டிஷ் டிவி, லேப்டாப், டிவிடி, சினிமா, பார்க், இணையம்ன்னு இருந்தபோதும் போரடிக்குதுன்னு அடிக்கடி சொல்வேன். ஆனா, இயற்கையோடு, இயற்கையா வாழ்க்கை நடத்துறாங்க. பேச்சு துணைக்கு கூட ரெண்டு வீடுகள்தான். ஹாஸ்பிட்டல், ஸ்கூல், கடைகண்ணிலாம் கூட 4 கிமீ தூரத்துல இருக்கு. வீட்டை சுத்திலும் மா, பலா, வாழை, எலுமிச்சை, மருதாணி, மஞ்சள், நெல்ன்னு பயிர்கள் மத்தியில் சந்தோசமான ஒரு வாழ்க்கை வாழுறாங்க அவங்களை பார்க்கும்போது எனக்கு பொறாமைதான் வரும்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்ச்ச்ச்ச்ச்ச்சை வயல்கள்தான். அங்கொண்ணு, இங்கொண்ணுன்னு மொத்தமே அந்த ஊரில் ஒரு நூறு வீடுகள்தான் இருக்கும். அத்தனை வீட்டில் இருந்தும், தாத்தா, மாமா, சித்தப்பா, மகன்னு யாராவது ஒருத்தர் ராணுவத்துக்கு போய் இருப்பாங்க. 

அஞ்சாப்பு படிக்கும் என் மச்சினர் மகள் எனக்காக செஞ்சு கொடுத்த பொக்கே! அவள் கொடுத்த போது கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. எல்லா குடும்பத்தை போலவும், எங்கள் குடும்பத்திலயும் போட்டி, பொறாமை, சண்டை, கோவம்லாம் இருக்கு. ஆனா, வருசத்துக்கொரு முறை இப்படி போகும்போது, போகும்போது சண்டைக்கோழிகளா போனவங்க,  சாடை மாடையா பேச ஆரம்பிச்சு.., வீட்டுக்கு வரும்போது பழசை மறந்து ஒத்துமையா வருவோம். மீண்டும் எப்ப கோவிலுக்கு போவோம்ன்னு நாட்களை எண்ண ஆரம்பிச்சுடுவோம்!

பிள்ளைங்க ஒத்துமையா இருக்கனும்ன்னுதானே பெரியவங்க நித்தமும் சாமிக்கிட்ட வேண்டிக்குறாங்க. அந்த ஒத்துமைக்காகத்தானே கோவில், குளம், சாமிலாம். வீடு ஒத்துமையா இருந்தாலே அக்கம் பக்கத்தில் சண்டை குறைஞ்சு எல்லோரும் ஒத்துமையா இருக்க முடியும். அது அப்படியே வளர்ந்து ரெண்டு நாட்டுக்குள்ளயும் கூட பகை உணர்ச்சி இருக்காது இல்லியா!?

அடுத்த வாரம் புண்ணியம் தேடி உங்களுக்கு தெரிஞ்ச கோவில்களுக்கு பயணமாகலாம்.
 

27 comments:

  1. பட்டாம்பூச்சி க்ளிக் சூப்பர்... இது போல் எல்லோரும் சேர்ந்து போவது மனதிற்கு என்றுமே மகிழ்ச்சி தான்... இதை விட சந்தோசம் எது...? அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    பேர் எல்லாம் எழுதி வைத்துள்ளீர்களா...? அடுத்த முறை க்ளிக் pl.

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அண்ணா!

      Delete
  2. பாரதி ராசாவுக்கு அப்புறம் நீங்கதான் அக்கா எங்களுக்கு கிராமத்த சுத்தி காமிச்சிருக்கீங்க.. :-)

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் வந்திருக்கனும்..., அப்பா, அம்மா சதி பண்ணிட்டாங்கப்பா!

      Delete
  3. கிராமத்தையும், குலதெய்வம் கோயில் வழிபாட்டையும் சிறப்பாவே படம் பிடிச்சிருக்கீங்க.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அதனாலதாம் எல்லோரும் இந்த அனுபவத்தை இழக்க கூடாதுன்னு கோவிலுக்கு போறது.

      Delete
  4. வணக்கம்
    இப்படியான நிழ்வை வாழ்நாளில கூட மறக்கமுடியது ..அக்கா உங்களுடன் வந்த உறவுகளையும் கிரமத்தின் பசுமை எல்லோரம் அமர்ந்திருந்து... உணவு உட்கொள்வது....... கிராம வாழ்க்கை வாழ்க்கைதான்.......பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபனன்-

    ReplyDelete
  5. வணக்கம்
    இப்படியான நிகழ்வை வாழ்நாளில் கூட மறக்கமுடியது ..அக்கா உங்களுடன் வந்த உறவுகளையும் கிராமத்தின் பசுமை எல்லோரும் அமர்ந்திருந்து... உணவு உட்கொள்வது....... கிராம வாழ்க்கை வாழ்க்கைதான்.......பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபனன்-

    ReplyDelete
  6. கூட்டுக் குடும்பம், குலதெய்வம் வணக்கம், கிராமத்து படையல் என்று படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பட்டணவாசிகள் பலருக்கு இவை காணாமல் போன கனவுகள்தான். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. மிகவும் எளிமையாக ஒரு கிராமத்து பூஜையை நேரில் கண்டது போல இருந்தது இந்த பதிவு

    ReplyDelete
  8. கூட்டுக் குடும்பம் அருமை பற்றி எனக்கும் நல்லா தெரியும் எனக்கும் சொந்த ஊர் நெல்லை கிராமத்தையும், குலதெய்வம் கோயில் வழிபாட்டையும் சிறப்பா சொல்லியிருக்கிங்க நன்றி

    ReplyDelete
  9. என்னது பக்கத்தில ஒரு குளம் இருந்தா அது உங்களுக்கு தீர்த்த குளமா? ..நல்லாத்தான் காட்டுறாங்கப்பா பிலிம்மு ...படங்கள் எல்லாம் சுப்பர் ..

    ReplyDelete
  10. குலதெய்வமும் புண்ணியம் தேடிய பயணமும் அருமை!

    இன்றைய வலைச்சரத்தில் உங்கள் அறிமுகமும்...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இயற்கை எழில் கொஞ்சும் கோவிலும் கிராமமும் அருமை! அந்த பட்டாம் பூச்சி க்ளிக் செம சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நல்ல பதிவு... நாங்க கிராமத்தில் லாரில இப்படிதான் போவோம்... நினைவுகளை மீட்டுட்டீங்க...

    ReplyDelete
  13. அடடா.... எங்க குல தெய்வத்தை ஞாபகப்படுத்திய பதிவு.... நானும் எழுதறேன்....

    ReplyDelete
  14. ரசித்தேன்! பனை மட்டையில் செய்த ப்ளேட் கிடைக்கிறது; விலையும் மலிவு! குழந்தைகள் இட்லி சாம்பார்; சாதம் ரசம் மோர் சாப்பிட வசதியாகவும் இருக்கும்

    ReplyDelete
  15. பட்டாம்பூச்சி படம் கொள்ளை அழகு..எனக்கு உங்களை பார்த்து பொறாமையா இருக்கு சகோதரி..இதுக்காக நிஜமாவே நீங்க கொடுத்து வச்சிருக்கீங்க,வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. பசுமையான கிராமத்தில் அழகான குலதெய்வ பயணம் அருமை.

    ReplyDelete
  17. தமிழ் மனம் 11. நாளைக்கு உங்கள் கேள்விக்கு இடுகையில் பதில்!

    ReplyDelete
  18. நிம்மதி தரும் அழகான அனுபவம்..
    கிராமங்களில் இருக்கும் குலதெய்வங்கள்
    கோவிலுக்கு செல்வதே தனி மகிழ்ச்சிதான்...
    அழகான புகைப்படங்கள்..

    ReplyDelete
  19. ஹைய்யோ!!!!! ராஜி அமர்க்களமான பதிவு.

    கூட்டுக் குடும்ப ஆசைக்கு மனம் ஏங்குதுப்பா!

    எங்க அம்மம்மா வீட்டுலேதான் நாங்க பண்டிகைகள் கொண்டாடுவோம். உள்ளூரில் இருக்கும் சித்திகளும் மாமாக்களும் அவர்கள் குடும்பமும் சேர்ந்து அன்றைக்கு ஒரு நாள் செம மகிழ்ச்சியா இருக்கும். ஹூம்.....

    ReplyDelete
  20. "கொஞ்சமே கொஞ்சம் சாப்பாடும், நாலு வண்டி கதையுமாய் மதிய சாப்பாட்டு பந்தி நடக்கும்."
    "போகும்போது சண்டைக்கோழிகளா போனவங்க, சாடை மாடையா பேச ஆரம்பிச்சு.., வீட்டுக்கு வரும்போது பழசை மறந்து ஒத்துமையா வருவோம்". மறக்க முடியாத மறக்க க்கூடாத அனுபவங்கள். நல்லதோர் பதிவு

    ReplyDelete
  21. மறக்க முடியாத பதிவு. பசிக்குதுக்கா....

    ReplyDelete