புதன், அக்டோபர் 30, 2013

அர்ச்சுனன் தபசு,மாமல்லபுரம் - மௌனச்சாட்சிகள்

போன வாரம் மௌனச்சாட்சிகள்ல காணும் திசையாவும் சிற்பங்கள் நிறைந்திருக்கும், சிற்ப நகரமான மாமல்லபுரத்திலுள்ள புலிகுகை, குடைவரைக் கோயிலான அதிரணசண்ட சிவன் கோவில்  மற்றும் கிராம தேவதையான ஸ்ரீதனியமர்ந்த அம்மன் கோவில்லாம் பார்த்தோம். அங்கிருந்து மாமல்லபுரம், பாண்டி பிரியும் ECR ரோட்ல மாமல்லபுரத்திற்கு செல்லும் வழியில் பல்லவ மன்னன் சிலை இருக்கு.  அது கவனிப்பாரற்று இருக்கு. அப்படியே அதை கடந்து நகருக்குள் நுழைஞ்சா முதல்ல நம் கண்ணுல படுறது முகுந்தநாயனார் கோவில் இது தரையில் கட்டப்பட்ட கோவில்.
அதற்கு முன்னே ஒரு சிறிய தகவல். இங்க இருக்குற சிற்பங்கள் மற்றும் கோவில்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள், 
ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள்,
 மற்றும் கட்டுமானக் கோயில்கள்.

இவைத் தவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் கோவிலின் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்புறத்திலும் இருக்கு.

கோவில்களும் தரையில் கட்டப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை கடற்கரையில் கட்டப்பட்டவைன்னு பிரிக்கலாம்.  அந்த வகையில் நாம இப்ப பார்க்க போறது முகுந்தநாயனார் கோவில் கிழக்கு கடற்கரை சாலை வழியா வந்தா இந்த கோவிலை தாண்டித்தான் மாமல்லபுரம் போகமுடியும்.
இது பல கற்களால் ஆன ஒட்டு கோவில் ன்னு சொல்றாங்க இந்த கோவில் பெரும்பாலும் மூடியே இருக்கும். காலைலயும், மாலையிலயும் செடிகளுக்கு தண்ணி தெளிக்க திறக்குறாங்க. மற்றப்படி பராமரிப்பு காரணங்களுக்காக யாரையும் உள்ளே அனுமதிக்கிறது இல்ல.  அதனால,  வெளியிலயே நின்னு தரிசனம் பண்ணிட்டு நாம அங்க இருக்குற மலைகோவில்களை முதல்ல பார்க்கலாம்.
அங்கே போறதுக்கு முன்ன நாம் மாமல்லபுரம் பஸ் ஸ்டான்டை தாண்டி போகணும். அங்கயும் ஒரு நாற்கால் மண்டபம் அழகா வடிவமைக்கப்பட்டிருக்கு. நம்ம ஆட்களுக்கு பயந்தோ என்னமோ அதை பாதகாப்பா கிரில்லாம் போட்டு மூடி வச்சு இருக்காங்க.  அதுக்கு முன்ன தெரிவது பெருமாள் கோவில் மண்டபம். அதையும் தாண்டி  மலை கோவில்களுக்கு செல்லும் போது நம்மை முதலில் வரவேற்ப்பது அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் கொண்ட மலைப்பாறை.

இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கு. இது இரண்டு பாகமா பாறையைப் பிரிக்குது. இதில் தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை முதலியவர்களையும், யானை, சிங்கம்,சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் எல்லாவகையான சிற்பங்களும் இருக்கு . இந்த பாறை சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் இருக்கலாம்.  இந்த பாறையில் அர்ச்சுனன் ஒற்றைக்காலில் நின்று சிவனை நோக்கி தவமிருந்து அஸ்திரங்கள் பெற்ற வராலாறுசொல்லப்பட்டிருக்கு.  அதில் அவர் ஒட்டிய வயிறுடன் மெலிந்து காணப்படுகிறார்.  அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

ஆனா ஆராய்ச்சியாளர்கள், அர்ச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டி சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்க செதுக்கப்பட்டிருக்குன்னு சொன்னாலும்,  ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இதுன்னும் சொல்றாங்க. இந்தச் சிற்பமே ஒரு சிலேடைன்னும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சின்னும் சொல்றாங்க.  மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சின்னும் பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க . என்ன நினைச்சு இச்சிலையை செதுக்கினார்ன்னு அந்த ஆயனார் சிற்பிக்குதான் வெளிச்சம். அதையெல்லாம் தாண்டி நாம மலைமேல் இருக்கும் சில கட்டிடங்கள் பாப்போம்.

அர்ச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம் ன்ற மண்டபம் இருக்கு.   இதுக்கு உள்ளதான் கோவர்த்தன சிற்பத் தொகுதி இருக்கு.   பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்ததாம்.. பின்னார் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டதாம்.

இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு, கன்றுகளையும் காப்பாத்த கோவர்த்தனக் குன்றைக் குடையா எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இந்தக் கதை தமிழ்ப் பாடல்களில் மிகவும் புகழப்பட்ட ஒன்று. இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள்.
சிற்பத்தின் நடுவே ஒரு கையால் மலையைத் தூக்கியபடி கண்ணன் நிற்க, அருகே பலராமன், பயந்து நடுங்கும் ஓர் ஆயனை அணைத்து ஆறுதல் தருகிறார். இனி பயமில்லை என்பதால், மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் ஆகியோர் தத்தம் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறார். இருவர் ஜோடியா நடனம் ஆடுறாங்க.. ஒருவர் மாட்டிடமிருந்து பால் கறக்கிறார். மாடு வாஞ்சையுடன் தன் கன்றை நாவால் நக்குது. ஒரு ஆய்ச்சி தலையில் சுருட்டிய பாய், ஒரு கையில் உறியில் கட்டி வைத்திருக்கும் பால், தயிர் சட்டிகளுடன் நிற்கிறாள். ஒருவர் தோளில் ஒரு சிறு குழந்தை உட்கார்ந்துள்ளது. சற்றே பெரிய குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கையில் பிடித்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மாடுகள் நம்மைப் பார்க்கிற மாதிரி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன முல்லை நிலக் காட்சியை அப்படியே அற்புதமாகச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள்.

அனந்தசயன சிற்பத் தொகுதி கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில இருக்கு. இங்க குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் இருக்கு.  இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.
மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்கு. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் இருக்காங்க. அடுத்து நாம பார்க்க போறது கலங்கரை விளக்கம்.
கலங்கரை விளக்கத்தில் மேல ஏறி செல்ல ஒருவருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுது.   இதுல கவனமா ஏறனும். படிகள்லாம் குறுகலா வளைந்து வளைந்து போகுது. கைப்பிடித்து செல்லும் பகுதியும் அவ்வளவு உயரமா இல்ல.


சின்ன பிள்ளைங்களை கூட்டிசெல்லும போது கவனமா கூட்டிப் போகனும் உயரத்துல போகும் போது தலை சுத்தல் வரலாம். அதெல்லாம் தாண்டி உச்சிக்கு போய்ட்டா மொத்த மாமல்லபுரத்தையும் அங்கிருந்து பார்க்கலாம்.

சுற்றிபார்க்கும் போது நாலா புறமும் மாமல்லபுரத்து அழகு தெரியுது . கதிரவனும் மெல்ல மெல்ல அந்தி சாய தொடங்கிவிட்டான.   அந்திசாயும் வேளையில் கலங்கரை விளக்கத்தின் நிழல் கீழ விழ தூரத்தில் கடற்கரை கோவில் அழகாக காட்சியளிக்குது.

கலங்கரை விள்க்கதிலிருந்து நேரா தெரிகிற குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் ஒண்ணு இருக்கு.

இது முன்பு கலங்கரை விளக்கமாக பயன்பட்டது ன்னு சொல்றாங்க.  இங்க கற்கள் அழகா செங்கற்களை போல் அடுக்கி வைக்கப்பட்டு காற்று வருவதற்கு துளைகளும் உள்ள நான்கு பெரிய தூண்களும், மேல வரி கற்களும் வைத்து மூடப்பட்ட நிலையில் அழகாவும் அதே நேரம் கவனிபாராற்றும் இருக்கு.

இதற்கு கீழே ஓலக்கணீசர் ன்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில் இருக்கு. அதன் சிற்பங்கள் எல்லாம் மிகவும் அழகாக செதுக்கப்பட்டு இருக்கு.

கோவிலுக்குள் சிங்க முகங்கள் கொண்ட தூண்களும், உள்பக்கம் சிற்பங்கள் செதுக்கப்பட்ட சில மாடங்களும் காணப்படுது அதனுள் விக்ரகங்கள் இல்ல. 

பக்கவாட்டில் படிக்கற்கள் இருக்கு.  ஆனா அவை மேலே போகாமலயே முடிஞ்சு போகுது.  பார்க்க ரொம்ப  அற்புதமா இருக்கு. எங்களுக்கு முன்ன சென்ற வெளிநாட்டு ஜோடிகள் வாவ் பியூட்டிஃபுல்ன்னு சொல்லிட்டு போகும்போது எம்புட்டு மகிழ்ச்சியா இருந்துச்சு தெரியுங்களா!?  ஆனா, நம்ம உள்ளூர் ஜோடிகள் அந்தி சாய்வதால் அவ்வவ் ..ன்னு சொல்லிக்கிற அளவு  நந்துக்குறாங்க. பிள்ளைக்குட்டிகளை கூட்டி போவதால அங்கிருந்து சீக்கிரத்துலயே கிளாம்பிட்டோம்.

நாம் பார்க்க வேண்டிய இடங்கள் மாமல்லபுரத்துல இன்னும் நிறைய இருக்கு . ஆனா அந்தி சாய்ந்து கொண்டு வருவதால, நம்ம ஆளுங்க பண்ணும் இம்சைகள் காண சகியலை. அதனால, மிச்சத்தை அடுத்த வரும் வாரங்கள்ல மௌனச்சாட்சிகள்ல பார்த்துக்கலாம்.

14 கருத்துகள்:

 1. சுவையான பகிர்வு! ஒவ்வொன்றை பற்றியும் சிறப்பாக விவரித்தமை நன்று! அருமையான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க சகோ!

   நீக்கு
 2. மாமல்லபுரம் பற்றி இத்தனை தகவல், படங்களுடன் பார்த்ததில்லை. பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி!

   நீக்கு
 3. அழகான படங்களோட பதிவு சூப்பர்... த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை பற்றிய கருத்துக்கும் நன்றி ஸ்பை.

   நீக்கு
 4. மலைமேல் இருக்கும் சில கட்டிடங்கள் வியக்க வைத்தது... படங்களுடன் தகவல்கள் மிகவும் அருமை சகோதரி... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அனைத்தும் அற்புதமாய் இருக்கிறது.எவ்வளவு கஷ்டப்பட்டுப் படம் எடுத்திருக்கிறீர்கள் .ஆச்சரியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா!

   நீக்கு
 6. உங்கள் பதிவைப் படித்ததும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இரண்டு முறை நான் மகாபலிபுரம் சென்று வந்த காட்சிகள் ஞாபகம் வந்தது. இங்குள்ள லைட் ஹவுஸை மையப்படுத்தி எம்ஜிஆர் – சரோஜாதேவி நடித்த கலங்கரை விளக்கம் திரைப்படக் கதை தொடங்கும். என்றும் மாறாத மகாபலிபுரம் காட்சிகளை படமாக்கி தந்தமைக்கு நன்றி!
  எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. Mamalapura thuku oru 15 years munadi poie eruthom. full and full lovers, college boys& girls. athanala veedu periyavuka nera beechku poga sollidaka. padikira kalathuleya eathai eallam pakanum nu romba asai. kadaisi varai nirai vera illai. eani eapa chennai varathu eapa pakurathu? unmayileya nega Romba GREAT. theliva, photovoda explain panurika. Keep it your job.

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள சகோதரிக்கு! நான் ஒருமுறைதான் இந்த பதிவுக்கு கருத்துரை பதிந்து இருந்தேன். ஆனால் ஏதோ தொழிநுட்பக் கோளாறு காரணமாக இது மூன்று தடவை பதிவாகியுள்ளது எனவே அவற்றுள் இரண்டினை நீக்கி விடவும்.

  பதிலளிநீக்கு