Friday, March 07, 2014

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் -புண்ணியம் தேடி

வாரம் தோறும் புண்ணியம் தேடிப் போறப் பயணத்துல உலகப் புகழ்பெற்ற கோவில்களோடு தினமும் ஒருவேளை பூஜைகள்கூட நடக்காத சில கோவில்களையும் பார்த்து வந்திருக்கிறோம். அதே வரிசையில்  இன்னைக்கு உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி பார்க்கபோறோம்.

இக்கோவில் வரலாற்று புகழ் மிக்க ஆலயம் என்பதால் இந்த நகரமும் திருகோவிலும் பயணித்த சில வரலாற்று பயணங்களையும் நாம இங்கே பார்க்கலாம். தென்னிந்திய வரலாற்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம்னா அதில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கும், மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கும் உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பல சாதனைகளையும், சோதனைகளையும் தாண்டிவந்தது இந்த கோவில்ன்னு சொன்னா மிகையாகாது.

இது 1784 ல வரையப்பட்ட படம். அப்பொழுது அங்குக் கரைப்புரண்டோடும் ஆறும், அதன் பின்னியில் கோவிலும் தெரிகிறது. மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம்தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கு. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த டெல்லி சுல்தான்களின் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520 ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623 முதல் 1659 வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும், மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது.

1736 ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோவிலின் கலைப் பொருட்களை பாதுகாக்காவிட்டாலும், அழிக்கவில்லை என்பதே மிகப் பெரிய ஆறுதலான விஷயம்.  இதற்குப் பிறகுதான் இந்த வைகை நதியின் குறுக்கே பென்னிகுவிக் பாலம் கட்டப்பட்டு இருக்கும் அதன்பிறகு புலம் பெயர்வு நடந்து இருக்கலாம். அந்த பாலத்தை யானை கட்டும் பாலம் எனவும் சொல்வாங்க. பழையக் காலத்தில் மன்னர்களின் யானையை இதில்தான் கட்டுவாங்க. இப்ப இருக்கிற மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. கோயில்மற்றும் மனனர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும், குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டு இருக்கு.

இது 1798 ல வரையப்பட்ட கோவிலின் மாதிரி படம். இதெல்லாம் இப்ப எந்த வாசல இருக்குனு மீனாக்ஷி அம்மனுக்கே வெளிச்சம். முதன் முதலில் குலசேகர பாண்டியனால் இந்தக்கோயில் கட்டப்பட்டதென்றாலும், அந்தக்கோயிலை நாயக்கர்கள் மிகச்சிறப்பாக மாற்றினர்.  நாயக்கர்கள் மதுரையை 16முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். அதனால் தங்களது ராஜமுத்திரையின் பிரதிபளிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.இனி கோவிலின் அமைப்பை பார்க்கலாம்...,

 இது ஒரு பழைய தெலுங்கு புத்தக பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அதன்படி இந்த கோவிலின் பரப்பு 750x830 அடி பரிமாணத்தில் 25 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பணிரெண்டு கோபுரங்களும், தெய்வங்களும் மற்றும் அவதாரங்களின் சிலைகளாலும்  அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்குப் பெரியக் கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச்சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிடப் பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கிறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்ககூடிய அமைப்பில் இருக்கிறது இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும். இதில் மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு.

 
இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இது முடிவு பெறாமல் இருக்கிறது. கோயில் மதில்சுவருக்கு உள்ளேயே இருப்பவை ஆடிவீதிகள் என்றும், மதிலுக்கு வெளியே உள்ளவை சித்திரை வீதிகள் என்றும், பிறகு ஆவணி மூல வீதிகள் பிறகு மாசி வீதிகள் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு மேற்காக நீண்டுள்ள இந்த முழு அமைப்பும் நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியில் உள்ள அந்த சித்திரை வீதிகளை ஒரு வலம் வந்து நான்கு கோபுரங்களையும் பார்த்தப் பின்னர் அம்மன் வாயில் வழியாக உள்ளே நுழைவோம். சரி இனி, இந்த கோவிலின் ஸ்தல வரலாற்றைப் பார்க்கலாம்.....,

இந்தப் படம் சிவனைத் தொழும் இந்திரன்.ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திரன் ஒருமுறை ஒரு துர்தேவதையைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறிய முற்பட, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் இங்கே இருக்கு .அதற்கு இந்திர விமானம்ன்னு சொல்கிறாங்க.

மேலும், மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி ஒருமுறை கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது. அதனை தேவர்களின் வேலையென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்றுக் கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு சொன்னாராம் குலசேகரனும் கோவிலைக் கட்டி முடித்தான் என சொல்லபடுகிறது. இதில் இடப்பக்கம் இருப்பது வியாபாரி தனஞ்சயன் சிற்பம்.  வலப்பக்கம் இருப்பது குலசேகரன் சிற்பம் இந்த இரண்டு சிற்பங்களும் பொற்றாமரைக் குளத்தின் வடக்கு பக்கத்தில் உள்ளது.

இது மீனாட்சி ஆட்சி நடக்கும் இடமல்லவா!? ஆகையால் முதலில் தாயாரை தரிசித்துவிட்டு இறைவனை தரிசிக்கலாம். இப்ப நாம முதலில் வசந்த மண்டபம் வழியே கோவிலுக்குள் செல்லலாம். 22 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த மண்டபத்திற்கு மூன்று புறம் பாதை இருக்கு . 333x105 அடிகள் என்ற அளவில் செவ்வக வடிவில் இந்த மண்டபம் இருக்கிறது. மண்டபத்தின் மேற்குக் கோடியில் உள்ள மார்பிள் இருக்கை இறைவன்-இறைவியின் ஆசனமாக உபபோகப்படுத்தப்படுகிறது. வசந்தோத்சவம் என்று சொல்லப்படுகிற இளவேனிற்கால திருவிழா வைகாசி மாதம் இந்த மண்டபத்தில் வைகாசி மாதம் (மே/ஜுன்) நடைபெறுகிறது. இந்த மண்டபத்தை திருமலை நாயக்கர் கட்டினார். இதை புதுமண்டபம் ன்னும் சொல்வாங்க.


 இந்த மண்டபத்தின் தூண்களில் சிவன், மீனாட்சி, அவர்களின் திருமணம் மேலும் மதுரையை நிர்மாணித்த விஸ்வநாத நாயக்கர்லிருந்து திருமலை நாயக்கர் உட்பட பத்து நாயக்கர்கள் மற்றும் அவரது துணைவிகள் இவங்க சிலைகள் இருக்கு.  நிறைய யாளிகள் சிலையும்  குதிரைக் குளம்புகள், சிப்பாய்களின் தோள்களில் தாங்கி இருக்கிற மாதிரி சிற்பங்கள் நிறைய இருக்கு.

இதன் உத்திரங்களில் நிறைய ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. புது மண்டபத்தில் நிறைய அழகான சிற்பங்கள் இருக்கு அதில் ஒன்று இரண்டு என வரிசை படுத்தினால் முதலில்....,

1. ஏகபாதமூர்த்தி
2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
3. குதிரை வீரர்கள்
4. கஜயுகர்
5. தடாதகைப் பிராட்டியார்
6. சூரியன்
7. புலிக்குப் பால்கொடுத்தது
8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
9. சந்திரன்
10. சுந்தரேஸ்வரர்
11. துவாரபாலகர்கள்
12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
 13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
14. கருங்குருவிக்கு உபதேசம்
15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
17. பதஞ்சலி
18. வியாக்ரபாதர்
19. பத்ரகாளி
20. ஊர்த்துவ தாண்டவர்
21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
22. பிரம்மா
23. தேவேந்திரன்
24. அர்த்த நாரீஸ்வரர்
25. சங்கர நாராயணர்
26. அதிகார நந்தி
27. கைலாச பர்வதம்
28. திரிபுரஸம்ஹாரம் வரை நிறைய சிற்பங்கள் இருக்கு.

புது மண்டபம் தாண்டி, கிழக்கில் முடிவடையாத ராஜகோபுரம் உள்ளது. இந்தப் பெரிய கோயில் கோபுரம் 174x107 அடிகள் அளவிலான அடிப்பரப்பைக் கொண்டுள்ளது. நுழைவாயில் 22 அடிக்கு உள்ளது. இதன் ஒரே கல்லினால் ஆன தூண்கள் கிட்டத்தட்ட 30 மீட்டர்கள் இருக்கின்றன. இந்த கட்டிடப் பணியை ஆரம்பித்த திருமலை நாயக்கர் பணிகள் நிறைவடையும் முன்னே காலமானார். ஆகையால்தான் முற்றுபெறாமல் இருக்கிறதோ என்னமோ!? இது ராஜ கோபுரத்தின் பழையபடம். இந்த படத்தை மார்ச் 1858 ட்ரிப் லினெயஸ் என்கிற போட்டோகிராபர் எடுத்து இருக்கிறார். அவர் 1822 ம் ஆண்டு பிறந்தவர் 1902 மறைந்து விட்டார்
இந்த படத்தை பொது பயன்பாட்டுக்கு தந்தவர் லேடி டெனிசன் 
இது அந்த முற்று பெறாத ராஜ கோபுரத்தின் தற்போதைய நிலை. இந்த நந்தி இருக்கும் இடத்தில் ஒரு சதுர வடிவ கிணறு இருந்தது. அதை மூடித்தான் இப்பொழுது இந்த நந்தி எழுப்பப்பட்டுள்ளது பழையப் படத்தில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தெளிவாக இருக்கிறது ஆனால் இப்பொழுது  கடைகள் ஆக்கிரமித்து சிலைகள் வெளியே தெரியவில்லை.

 கிழக்கு கோபுரத்தில்  (ஒன்பது தளங்கள்) 161'3". 1011 சிற்பங்கள் இருக்கு. இது கிழக்கு கோபுரத்தில் பக்கத்தில் இருக்கும் பிரதான நுழைவு வாயிலின் பழைய படம். இதன் முழு விவரங்களையும் மௌனசாட்சிகளில் பிறகு பார்க்கலாம்

அடுத்து நாம பார்க்கப் போறது அம்மனை தரிசிக்க செல்லும் பிரதான நுழைவாயில் இது கிழக்கு சித்திரைவீதியிலேயே, இராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே இருக்கு இந்த கோபுரம் ஒரு நுழைவாயில் போன்ற வளைந்த அமைப்பில் இருக்கு. இது அம்மன் சந்நிதிக்கு நேரே இருக்கு இதுவும் 1858 ல எடுத்த படம்.

அடுத்து நாமப் பார்க்கப் போறது அம்மனை தரிசிக்க செல்லும் பிரதான நுழைவாயில். இது கிழக்கு சித்திரைவீதியிலேயே, இராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே இருக்கு. இந்தக் கோபுரம் ஒரு நுழைவாயில் போன்ற வளைந்த அமைப்பில் இருக்கு. இது அம்மன் சந்நிதிக்கு நேரே இருக்கு. முன்பு, இந்த வழிகளில் கடைகள் இருந்தன. இப்பொழுது கடைகள் அப்புறபடுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர் பராமரிக்கின்றனர். இது தற்போதைய நிலை. இனி அடுத்து நாம கோவிலின் வெளிப்பக்கம் வலம் வரலாம். முதலில் தெற்கு பக்கம் இருக்கிற கோபுரத்தை பார்க்கலாம்...,

ஒன்பது தளங்கள் கொண்டது இந்தத் தெற்கு கோபுரம் 170'6" உயரத்துடன் 1511 சிற்பங்கள் . வெளிச்சுற்றுகளிலேயே உயரமாக மிகவும் கம்பீரமாக இந்தக் கோபுரம் இருக்கு. இதன் பழைய படங்கள் கூட இருக்.கு பதிவின் நீளம் கருதி அதை இணைக்கவில்லை. தெற்குக் கோபுரத்திலிருந்து போனா பெரியார் பஸ் ஸ்டாண்ட் போய்டலாம்(நான் சொன்னது சரியா!? தவறா!?ன்னு தம்பி தமிழ்வாசியும், ரமணி அப்பாவும்தான் சொல்லனும்).

அடுத்துப் பார்க்கப் போறது வடக்கு கோபுரம். கிழக்குக் கோபுரத்தை ஒத்து கட்டப்பட்டுள்ள இந்த வடக்கு கோபுரம் ஒன்பது தளங்களுடன் 160'6" உயரமுடையது. மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்களே இதில் இருக்கு. கோபுரத்தின் பெரும்பகுதி சிறிய தூண்பிள்ளைக்கால்கள் போன்றவைகளால் பின்னப்பட்டிருப்பதினால் , சிலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்.



அடுத்து மேற்குக் கோபுரம் நாம் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து வரும்போது முதலில் தெரிவது இந்த மேற்குக் கோபுரம். படிஞாயிறு கோபுரம்ன்னும் சொல்வாங்க. இது அந்த காலத்தைய போட்டோ.

இது தற்போதைய மேற்கு கோபுரத்தினுடைய நிலை. இதில் ஒன்பது தளங்கள் இருக்கு 163'3" உயரத்துடன் 1124 சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோபுரம் டவுன்ஹால் ரோடு வழியாக சென்றால் ரயில்வே ஸ்டேஷன் போகலாம்.

இனி கோவிலுக்குள் செல்லலாம். அதற்கு முன்பு நாம தெரிஞ்சுக்க வேண்டிய சில தகவல்கள்...,


இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களைத் தவிர மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் சிவன் மற்றும் தாயார் சன்னதிகளில் இருக்கு  வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜக்கோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி). நாம் மொத்தம் இந்த ஐந்து  வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் பிரதான வாயிலாக சொல்லப்படுகிறது. 

கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையையில் இருக்கும்  இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருப்பதாகச் சொல்லபடுகிறது. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம்படி இருக்கின்றது. இங்குப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் எடுத்துகொள்ளும் பழக்கமும் இங்கு பொய்சொன்னால், சொன்னவங்களுக்கு உடனடி தண்டனைகள் கிடைப்பதாகவும் சொல்லபடுகிறது.

இந்த திருகோவிலின் இரண்டாம் நிலையில் ஐந்து இடங்களும் மிகவும் முக்கியமானவை....,

1. அஷ்டசக்தி மண்டபம் (அம்மன் கேட்)
2. மீனாட்சி நாயக்கர் மண்டபம்
3. ஆடிவீதிகள் (உள்கோயில் பிரகாரம்)
4. சித்ர கோபுரம்
5. முதலி மண்டபம்

இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் இருப்பது வன்னி மரத்தடி விநாயகர் ஆலயம். இது ஆடிவீதி என்றும் சொல்வாங்க. கற்கள் பதிக்கப்பட்டு, அழகாக இருக்கு. வன்னி மரத்தடி விநாயகர் ஆலயத்தில், பெண்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக தொட்டில் கட்டி, வழிபாடு செய்யும் பழக்கம் இருக்கு.

மாலை நேரம் நெருங்கி வருவதால், கோவிலை இயற்கை வெளிச்சத்தில் அடுத்தவாரம் பார்க்கலாம். முன்னலாம் இங்க கேமரா கொண்டுச் செல்ல அனுமதி கிடையாது. இப்ப இந்தக் திருக்கோவில் தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்படுவதால் மொபைல் கேமராவிற்கு அனுமதி உண்டு. அதற்குக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாம் இங்க திருக்கோவில் ஸ்தல வரலாறும், அதன் பரிணாம வளர்ச்சியையும் சேர்த்தே பார்ப்பதினால் என் மொபைல் கேமராவையும் தாண்டி நிறைய படங்கள் இணையதளத்திலிருந்து எடுக்க வேண்டுயதாகிவிட்டது. இனி இந்தத் திருக்கோவில் வரலாற்றின் தொடர்சியை அடுத்தவாரம் பார்க்கலாம்...., 
இறைவன் மற்றும் இறைவியின் பொற்பாதங்களுக்கு மலர்களைக் காணிக்கையாக்கிவிட்டு நான் கிளம்புறேன். 

நன்றி! வணக்கம்!

25 comments:

  1. Replies
    1. மதுரைக்கு நான் போகலைண்ணா! மார்ச் 3 ந்தேதி அப்பா, அம்மா, தூயா போய் வந்தாங்க. ஜூன் மாசம் போக வேண்டிய வேலை இருக்கு. அப்ப பிரகாஷ் வீட்டுக்கும், ரமணி அப்பா வீட்டுக்கும் போய் வரனும்ன்னு பிளன் இருக்கு.

      Delete
    2. எப்போது மதுரை போனீர்கள்...? ஏன் ரமணி ஐயாவையும், இனிய நண்பர் தமிழ்வாசியையும் சந்திக்கவில்லை....?

      எழுத்துப் பிழை என்பதால், மீண்டும் கருத்துரை...

      ஜூன் மாதம் திண்டுக்கல்லில் சந்திக்கலாம் சகோதரி...!

      Delete
    3. ரைட்டுங்கண்ணா!

      Delete
  2. பல படங்கள் பொக்கிசங்கள்...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நெட்டுல சுட்டதுங்கண்ணா!

      Delete
  3. விளக்கமான தகவல்களுடன் இந்த வாரம் கோவில் தரிசனம் அருமை.

    எனக்கு ஒரு சந்தேகம் சகோ, வரலாற்று ஆசிரியையாக இருக்கும் நீங்கள் எப்பொழுதிலிருந்து கட்டிடக்கலை வல்லுனராக மாறினீர்கள்?

    படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்து சிறபக்கலைக்கு படிச்சுக்கிட்டிருக்கேன் சகோ!

      Delete
    2. இப்படிப்பட்ட ஒரு படிப்பாளியை நான் பார்த்தது இல்லை சகோ. அதனால நான் கொஞ்சம் தள்ளியே நின்றுக்கொள்கிறேன்.

      Delete
  4. மிக அருமை..பழைய படங்கள் அழகாய் உள்ளன..இப்போ கடைகளுக்கும் கூட்டத்துக்கும் இடையே கலைநயம் கட்டிடநயம் எல்லாம் மறைந்துவிட்டன..

    ReplyDelete
    Replies
    1. ஆங்காங்கு குப்பைக் கூளாங்கள், மனிதக்கழிவுகளால் துர்நாற்றமும் கூட...,

      Delete
  5. மிக அருமையான தகவல்களுடன் ஆலய தரிசனம் அற்புதம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  6. வழக்கம் போல் ஜோர்!! அடுத்த முறை போகும்போது படங்களை எடுத்து விடுங்கள்.. நீங்களே எடுக்கும் படங்கள் உங்கள் புத்தகத்தில் வரட்டும்!!

    ReplyDelete
  7. மதுரைக்காரன் பார்த்தறியாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் படங்களை வெளியிட்டமைக்கு நன்றி பல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  8. அருமையான பகிர்வு....

    விவரங்களும் படங்களும் மிக அருமை. அதிலும் பல வருடங்களுக்கு முன் எடுத்த படங்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பழைய படங்கள் இணையத்தில் சுட்டவைண்ணா!

      Delete
  9. கோவில் தரிசனம் அருமை. கோயிலுக்கு இரண்டுதடவை வந்துள்ளேன்.பழையபடங்கள் காணக்கிடைத்தது மிக்கமகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

      Delete
  10. அருமையான பழைய படங்களும் கோவில் தருசனப்பகிவும் சூப்பர் பார்த்து ரசித்த ஆலயம்.

    ReplyDelete
  11. அருமை ராஜி.

    ரொம்ப நாளா நான் தேடிக்கிட்டு இருந்த வரைபடங்களும் பழைய காலத்துப் படங்களும் பகிர்ந்து கொண்டதுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்ப்பா.

    ReplyDelete
  12. மதுரை வந்தீர்களா ?
    வரவில்லை என் நினைக்கிறேன்
    வந்திருந்தால் நிச்சயம்
    தொடர்பு கொண்டிருப்பீர்கள்
    பதிவு மிக அருமை

    நாங்கள் மீனாட்சியம்மன் கோவில் குறித்த
    முழு விவரங்களை உங்கள் மூலம்தான்
    அறிகிறோம்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமையான பதிவு!
    மதுரை மீனாட்சியின் வேறு பெயர்களை இங்கு தெரியப்படுத்தவும்...
    நன்றி!!!

    ReplyDelete