Friday, March 28, 2014

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 3 - - புண்ணியம் தேடி

கடந்த இரண்டு வாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றோம். போன வாரம் மீனாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு அடுத்து சொக்கநாதரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் நாம முதலில் தரிசிப்பது முக்குருணிப் பிள்ளையார்.
இங்கே இவரைப் பத்தி ஒரு குறிப்பு வச்சு இருக்காங்க. இருந்தாலும் சொல்கிறேன்...,

மதுரையை 16 ம் நூற்றாண்டில் ஆண்ட திருமலை நாயக்க மன்னர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூரில் அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தெற்கு பக்கம் மண்ணை வெட்டி எடுக்கும்போது, இந்த முக்குருணி விநாயகர் கிடைத்திருக்கிறார். உடனே, அவரை இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். திருமலை நாயக்க மன்னன் பிரதிஷ்டை செய்த ஆண்டு 1645. ஒரே கல்லினால் ஆன இந்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி தோறும் 18 படி, அதாவது முக்கால் குறுணி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து நைவேத்தியம் செய்வார்கள். அதுனாலதான் இவருக்கு முக்குருணி விநாயகர்ன்னு பெயர் வந்ததாம். நமக்கு ஏதாவது தடங்கல் வந்தா இந்த முக்குருணி விநாயகருக்கு சந்தனகாப்பும் விருப்பப்பட்ட நாளில் முக்குருணி அரிசியில் கொழுக்கட்டையும் படைத்தால் தடங்கல்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
நாம மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த நாளும் பிரதோஷ நாளும்ங்குறதால உற்சவர் பிரகார உலா தொடங்கிட்டார்.  முதலில் அவரது வாகனமான நந்தியும் (காளை மாடு ), அதன் பின்னே பட்டு பீதாம்பரம் தரித்த யானையும், அதன் பின்னே பல்லக்கில் உற்சவரும் பிரகாரம் சுற்றும் காட்சி நமக்கு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம்.


சரி, இந்த முக்குருணி பிள்ளையாருக்கு மேலும் சில புராண கதைகள் சொல்றாங்க. அதையும் தெரிஞ்சுக்கலாம்.  பழைய காலத்தில இப்ப முக்குருணிப்பிள்ளையார்  இருக்கிற இடத்தில், நடராஜர் இருந்தாராம்.  அவரது பார்வையின் உக்கிரம் தாங்காமல் எதிரே இருந்த வீடுகள் அடிக்கடி எரிந்து போனதாகவும், உயிர் சேதம் கூட ஏற்பட்டதாகவும், அதனைத் தடுக்கும் வகையில்தான் இந்த முக்குருணிப் பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டது எனவும், முக்குருணிப்பிள்ளையார் வந்த பிறகு தீப்பற்றி எரியவில்லையாம். சரி, வாங்க நாம பிரகாரம் சுற்றிவரலாம்...,  
பிரகாரங்களின் தூண்கள் உயரமாகவும், அகலமாகவும் இருக்கு. இந்தப் பிரகாரத்து மூலையில் கொஞ்ச பேர் தியானத்தில் அமர்ந்து இருக்காங்க. பக்கத்தில் சென்று கேட்கலாம் வாங்க!! இங்கே பல சித்தர்கள் ஜீவசமாதியானதாகவும், அதில் ஒரு சித்தரின் ஜீவசமாதி இந்த இடத்தில இருப்பதாகவும், இங்கே இருந்து பிரார்த்தித்தால் மன அமைதியும், நினைத்த காரிய சித்தியும் கிடைக்குமாம். வாங்க நாமளும் சிறிது நேரம் இங்கே உட்கார்ந்து தியானத்தில் செய்வோம். இங்க, மேலும் ஒரு தனி சிறப்பு என்னனா உத்திரத்தில் வரையப்பட்டு இருக்கும் சுழலும் லிங்கங்கள் நாம் செல்லும் திசையெல்லாம் நம்மைப் பார்த்து சுழலுகின்றது.
அடுத்து நாமப் பார்க்கப் போறது சங்கப் புலவர்கள் திருக்கோவில். கடைசங்கப் புலவர்கள் 49 பேருக்கும் இங்கே கோவில் இருக்கிறது. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், வெண்ணி குயத்தியார், காவர்பெண்டிர் ஆகிய பெண்பால் புலவர்களும் இந்த 49 புலவர்களில் இருக்கிறாங்க. மேலும் திருவாலவுடையார்பாணபத்திரர்பொருட்டு சேரமான், பெருமான் நாயனாருக்கு எழுதிய திருபாசுரங்கள் இந்த சங்கப்புலவர்கள் கோவில்ல கல்வெட்டா வடிக்கப்பட்டு இருக்கு. இங்கே சிவபெருமானே தமிழ் சங்கப் புலவரா அமர்ந்து தொண்டாற்றியதும் இங்கு குறிப்பிடபட்டு இருக்கு.  
அடுத்து நாமப் பார்க்கப் போறது கல்யாண மண்டபம். இந்த  மாதத்தில் இங்கு இறைவன் திருக்கல்யாணம் சிறப்பாக கொண்டாடபடும். இங்கே பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த சன்னதிக்கு வந்து முதலில் இங்கிருக்கும் விநாயகருக்கு தேங்காய், பழம், சர்க்கரை, நெய்விளக்கு வைத்து அர்ச்சனை செய்யணும். அப்புறமா சுவாமிக்கும், அம்பாளுக்கும் பூஜை செய்யவேண்டும். தேங்காய் ஒன்று, பழம், சுவாமிக்கு இரண்டு மாலை, அம்பாளுக்கு மாலை ஒன்று, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் கொடுத்து  அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்தால் திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும். பின் அர்ச்சனை செய்த மாலையைப் பத்திரப்படுத்தி வைத்து திருமணம் நடந்த உடன் சன்னதிக்கு வந்து அர்ச்சனை செய்து பழைய மாலையை அர்ச்சகர் கையாலே திருக்குளத்தில் சமர்ப்பித்து விடவேண்டுமென்பது கோவில் மரபு.
நாமக் கோவில் கொடி மரத்தின் தரிசனம் செய்யலாம் வாங்க. முழுவதும் தங்கத் தகடுகளால வேயப்பட்டு, விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கிறது இந்த கொடிமர மண்டபம். சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் உள்ள இந்த மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும்,  நந்தியும், பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அழகா சிற்பங்களா இருக்கு. அதைவிட,  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பம் பார்க்கவே ரொம்ப அழகா பெரிய அளவில் செதுக்கபட்டு இருக்கு.
அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலாரூபங்களும், அடுத்தடுத்துள்ள தூண்களில் அழகாக செதுக்கபட்டு இருக்கு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர்.  சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.

ஊர்த்துவதாண்டவர், காளியின் சிலாரூபங்களும் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள ஒரு வயதான பெண்ணின் சிலை காஞ்சனமாலான்னு சொல்கிறாங்க. இந்த வயதான தாய், மீனாட்சியை வளர்த்தவராவார். தன் மகளை ஒரு ஆண்டிக்கு (சிவபெருமான்) மணமுடித்துவிட்டோமே என்று அவர் கவலைப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு இருக்கும் விதமாக அமைந்து உள்ளது இச்சிலை.
இப்ப நாம சுந்தரேஸ்வரர் சன்னதி சுற்றுக்குள் செல்லலாம் வாங்க. இங்கே எல்லாம்வல்ல சித்தர் சன்னதி இருக்கிறது. இந்த எல்லாம்வல்ல சித்தர் அங்கே உள்ள மக்களுக்கு பல்வேறு சித்துக்கள் செய்தாராம். கண்பார்வை இல்லாதவருக்கு கண் பார்வையும், பேச முடியாதவர்களை பேசவும் வைத்திருக்கிறார்.  அதைக் கேள்விப்பட்ட மன்னன் அவரை சபைக்கு அழைத்தானாம்.  அதை மறுத்த சித்தர் ஒருநாள் ராஜாவும், அவரும் கோவிலில் நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய சூழலில் மன்னன் அவரது சக்தியை சோதிக்க என்னினானாம்.  சித்தரிடம் ஒரு கட்டு கரும்பை கொடுத்து இந்த கல்யானைக்கு சாப்பிடக் கொடுக்கமுடியுமான்னு கேட்க...., எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்ததாம். தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அந்தச் சித்தரின் நினைவாக இந்த சன்னதி எழுப்பப்பட்டுள்ளதாம். இன்றும் எல்லா வரம் கொடுக்கும் சித்தரின் திருவிளையாடல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த பிரகாரத்தின் தெற்கு சுற்றில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகிலேயே உத்சவ விக்கிரகங்கள் இருக்கும் அறையும் இருக்கு. பிரகாரத்தின் மேற்குப் பகுதியின் கடைசியில் மார்பிள் கற்களால் ஆன காசி மற்றும் பெனாரஸ் விஸ்வநாதரைக் காணலாம். அந்தச் சிலைகள் காலம் சென்ற பெனாரஸ் மன்னர் ஒருவரின் தென்னிந்திய புனித யாத்திரையின்போது அவர் மதுரைக்கு வந்தபோது கொடுத்து. இந்த சுற்றினுள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை . 

அதன் வடக்கு பாகத்தில்  துர்கையம்மன் சன்னதி இருக்கு. அதற்கு அடுத்து ஒரு கடம்ப மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில் இந்திரன் அமர்ந்து, சிவனை சிந்தித்து வழிபட்டதாகக் சொல்லபடுகிறது.  இன்னமும் அந்த மரம் கவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நடைப்பாதை மூலையில் ஒரு சாட்சிக் கிணறு இருக்கு.


இப்ப நாம உள் பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள மரத்தினாலான மேடை போன்ற அமைப்புடைய பாதையில் நிற்கிறோம். இப்ப நமக்கு வலப்பக்கம் இருக்கிற பளபளப்பான மண்டபம் தான் வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபம். வெள்ளி அம்பலம்னா என்னனு தெரிஞ்சுக்கலாம்...,

முதலில் அம்பலத்தாடும் அய்யன் பஞ்ச சபைகளுள் முதன்மையானது பொன்னம்பலம். அது தில்லையிலே இருக்கு. பஞ்ச சபைகளுள் இரண்டாவது, வெள்ளியம்பலம். அது மதுரைல இருக்கு.  அடுத்து தாமிர  அம்பலம். அது திருநெல்வேலிலயும், அதனை அடுத்த அம்பலம்  ரத்னசபை திருவாலங்காட்டினிலும், அதனை அடுத்த சித்திரசபை குற்றாலத்திலும் இருக்கு.  ஐந்து சபைகளிலே மதுரையின் வெள்ளியம்பலதிற்க்கு என்ன சிறப்புன்ன நடராஜ பெருமான் கால்மாற்றி ஆடும் திருகோலம் இங்குதான் நிகழ்ந்தது.

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும்,  வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடியக் கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் என சொல்லபடுகிறது. இந்த  வெள்ளியம்பலத்தின் இருபக்கத்திலும் பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் ஐயனைத் தொழுத நிலையில் இருக்கிறாங்க. நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி அன்பின் மிகுதியால் வேண்ட அவனுக்காக  இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் ( திருவிளையாடற் புராணம் -கால் மாறி ஆடிய படலம்)த்தில் சொல்லப்பட்டு இருக்கு.
நாம இப்ப சுந்தேரேஸ்வரர் கோவில் கருவறைக்குள் இருக்கிறோம். விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இந்த கருவறையைப் பத்தின சுவையான தகவல் ஒன்று உண்டு. மீனாட்சி அம்மன்  கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு ஒரு முஸ்லிம் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை, கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். முஸ்லிம்கள்  அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்ததாம். சிதைக்கப்பட்ட லிங்கத்தில் இப்பவும் கம்பி கொண்டு இடித்த தடங்கள் இபோழுதும் இந்த லிங்கத்தில் பார்க்கலாம் அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.
பொன்னாலான தாமரையையே தன் சன்னிதியில் கொண்டிருக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும்,  தூய தாமரை மலர்களை இறைவனின் பாதத்தில் சமர்பித்துவிட்டு, இருவரின் அருளாசியோடு புண்ணியம் தேடும் நம் பயணத்தைத் தொடரலாம்.....,

9 comments:

  1. ஒன்பது வருடங்கள் முன்பு சென்றது! மீண்டும் ஒருமுறை தரிசிக்க வேண்டும்! அருமையான தகவல்கள்! 48 ஆண்டுகள் மூடப்பட்ட வரலாறு அறியாத ஒன்று! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மீண்டும் ஒருமுறை போய் பாருங்கள் நிறைய மாறுதல்கள் தெரிகின்றன ...

      Delete
  2. முக்குருணி விநாயகர் இடத்திலும் கூட படம் எடுக்க அனுமதி இல்லையே சகோ... எப்படியோ எடுத்து விட்டீர்கள்... பலப்பல தகவல்களுடன் சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இபொழுது கோவில் தொல்லியல் துறை கட்டுபாட்டில் வந்துவிட்டது 50 ரூபாய் டிக்கெட் போட்டோ எடுக்க மூலவரை தவிர மீதி எல்லா இடமும் போட்டோ எடுத்துகொள்ளலாம் ஆனால் மொபைல் காமேரவிற்கு மட்டும்தான் அனுமதி ..அண்ணா ..

      Delete
  3. தகவல்கள் அனைத்துமே அருமை.......

    நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ..

      Delete
  4. முக்குரிணி பிள்ளையாரைக்காட்டிய தாங்கள் அதற்குபக்கத்திலுள்ள மேல் உள்ள சூழலும் லிங்கம் இருப்பதை தாங்கள் அறியவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. சங்க புலவர்கள் சன்னதிக்கு மேலே

      //இங்க, மேலும் ஒரு தனி சிறப்பு என்னனா உத்திரத்தில் வரையப்பட்டு இருக்கும் சுழலும் லிங்கங்கள் நாம் செல்லும் திசையெல்லாம் நம்மைப் பார்த்து சுழலுகின்றது.//

      குறிப்பிட்டு இருக்கிறேன் சகோ ..சிரமங்கள் பல இருந்தாலும் நான் கஷ்டப்பட்டு தகவல் சேமித்து இங்கே பகிர்ந்து கொள்வது எல்லோருக்கும் எல்லா கோவில்களை பார்க்கும் சந்தர்பம் கிடைபதில்லை அவர்களுக்காக ..இங்கே இந்த புண்ணியம் தேடி பயணம் பதிவு தொடங்கி இருக்கிறேன் அதுனால மேலோட்டமாக படிக்காம முழுவதும் படிங்க சகோ ..கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  5. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த பகிர்வும் படங்களும் அருமை அக்கா.

    ReplyDelete