Tuesday, April 18, 2017

கூழ் குடிப்பது ஆரோக்கியத்துக்கா இல்ல பேஷனுக்கா?! - கிச்சன் கார்னர்

வீட்டுல கேப்பை களி, அடை, புட்டு, கூழ் சாப்பிட்டா கேவலம். அதுவே ஹோட்டல்ல சாப்பிட்டா கௌரவம்ன்னு நினைக்குறோம். இப்ப தெரு முக்குலலாம் தள்ளு வண்டில கூழ் விக்குறாங்க. பேஷனுக்காகவோ இல்ல ஆரோக்கியத்துக்காகவோ இல்ல குறைஞ்ச செலவுல வயிறு நிரையுதுன்னோ கூழ்  எல்லாரும் குடிக்குறாங்க.  அதை வீட்டுல செஞ்சு குடிங்கப்பான்னு சொன்னா தெரியாது, டைமில்லன்னு சொல்வாங்க.  செய்முறையும் ஈசி. சமைக்கும்போதே இதையும் செஞ்சுடலாம். இதுக்குன்னு  ரொம்ப மெனக்கெட வேணாம். 

அப்பப்ப ஒருகிலோ கேழ்வரகுக்கு கால்கிலோ சோளம், கால்கிலோ கம்பு  வாங்கி சுத்தம் செஞ்சு காய வச்சு அரைச்சு வச்சுக்கனும்.  விருப்பப்பட்டா கேழ்வரகை முளைக்கட்டிக்கலாம். இப்பலாம் கடையில் ரெடிமேடா கேழ்வரகு மாவு கிடைக்குது. அதுலாம் எந்தளவுக்கு அது தரமானதுன்னு தெரியாதுல்ல.  அதனால நாமே ரெண்டு மூணு மாசத்திற்கொருமுறை அரைச்சு வச்சுக்கிட்டா நல்லது. அரைக்கும்போது கொஞ்சம் உப்பு சேர்த்து அரைச்சுக்கிட்டா சீக்கிரம் வண்டு வைக்காது.

இனி கூழ் செய்முறைக்கு போவோம்...

தேவையான பொருட்கள்.
கேழ்வரகு மாவு -  2 கையளவு
நொய் அல்லது பச்சரிசி
உப்பு.

முதல் நாள் காலையிலேயே கேழ்வரகு மாவை உப்பு போடாம தோசை மாவு பதத்துக்கு கரைச்சு வெச்சுக்கோங்க. 

ஒரு சிலர் கைப்பக்குவம் சீக்கிரம் புளிச்சு போகும். எனக்குலாம் சட்டுன்னு புளிக்காது. அதனால ரெண்டு பகல் வெயில்லயும், ஒரு நைட் வீட்டுக்குள்ளயும் வைப்பேன்.


நொய் இல்லன்னா பச்சரிசிய ஒரு மணிநேரம் ஊற வைங்க.

உப்பு போட்டு குழைய குழைய நல்லா வேக விடுங்க.

புளிச்ச மாவை நீர்க்க கரைச்சு கொதிக்கும்  கஞ்சில சேருங்க. தண்ணியா இருக்கனும் இல்லன்னா கட்டி கட்டியாகிடும்.


உப்பு சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. அடிக்கடி கிண்டிக்கிட்டே இருக்கனும். இல்லாட்டி அடிப்பிடிக்கும்.


நல்லா அல்வா பதமாய் சுருண்டு வரும்போது நிறுத்திடுங்க.

சுவையான கூழ் ரெடி. ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு பத்து நாள்  வரை நல்லா இருக்கும். வெளில வச்சா அதிகப்பட்சம் நாலு  நாள் நல்லா இருக்கும். சில்வர் பாத்திரத்தில் கூழ் செஞ்சா களிம்பேறிடும். அதனால, அலுமினியம் அல்லது மண்பானை நல்லது. இது இல்லாதவங்க வீட்டிலிருக்கும் பாத்திரத்தில் சமைச்சு பிளாஸ்டிக் டப்பாவுல எடுத்து வச்சுக்கோங்க.


ஐயே! கை வெச்சு இப்படி கரைப்பாங்களான்னு டீசன்சீலாம் பார்க்கக்கூடாது. கைய நல்லா அலம்பிட்டு கூழெடுத்து ஒரு பாத்திரத்துல போட்டு   கட்டி இல்லாம  அடிச்சுக்கனும். தேவையான அளவு உப்பு போட்டு மோர், வெள்ளை வெங்காயம், வெள்ளரி, மாங்காயை பொடிப்பொடியா நறுக்கி போட்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப சாப்பிடலாம். என் சின்ன பொண்ணு கூழ்ல எதும் சேர்க்காம சாம்பார் இல்ல காரக்குழம்பு மேல டிசைன் செஞ்சு சாப்பிடும்.


மாங்காய் ஊறுகாய், சுண்டைக்காய், மோர்மிளகாய், கொத்தவரங்காய், சுட்ட கருவாடுலாம் சைட் டிஷ்சுக்கு  ஏத்தது.

இனி கேழ்வரகை பத்தி சில தகவல்களும் பயன்களும்....

கேப்பை, ராகின்னு சொல்லப்படுற   கேழ்வரகு4000 ஆண்டுகளுக்குமுன் எத்தியோப்பியர்களால் இந்தியாவுக்குள் அறிமுகமாச்சு. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்ல கேழ்வரகு விளையுது.  இது வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதியில் விளையும் பயிர். வண்டல் மற்றும் களி மண்ணில் விளையும். இதன் விளைச்சலுக்கு அதிகம் நீர் தேவையில்லை.  இந்தியாவில் மட்டுமில்லாம  ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானிலும் பயிர் செய்யப்படுது. 

கேழ்வரகிலுள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்யும். உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தும். கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகள் வலுப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.  லெசித்தின்  மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள்  கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரும்பு சத்து மற்றும் ரத்த சோகையை குணப்படுத்துது. உடலின் வெப்பநிலையை சீராய் வைத்திருக்க உதவுது. குடலுக்கு வலிமை தரும்.  உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற  நோய்களும் கேழ்வரகு குணப்படுத்தும்.

இவ்வளவு நல்ல விசயமிருக்கும் கேழ்வரகின் அருமையை புரிஞ்சுக்காம சமூக அந்தஸ்துக்காக கண்டதை திண்ணு புதுப்புது நோயை வரவச்சுக்கிறோம். இனியாவது மாறுவோம்...

நன்றியுடன்....
 ராஜி.

18 comments:

  1. வயிறும் உடம்பும் ஜில்... ஜில்...

    மனம் அதை விட...~~~

    ReplyDelete

  2. பயனுள்ள பதிவு .உடல் உழைப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு இது... சும்மா 24 நாலு மணிநேரமும் சேரில் உட்கார்ந்து இருப்பவர்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுவது மிக கடினம்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா மன்னிக்கவும்..எல்லா உணவுகளை விட சீக்கிரம் ஜீரணம் ஆவது இதுதான்

      Delete
  3. //சமூக அந்தஸ்துக்காக கண்டதை திண்ணு புதுப்புது நோயை வரவச்சுக்கிறோம். இனியாவது மாறுவோம்...//

    உண்மைப்பா ராஜி ..வெளிநாட்டுக்காரன் இறக்கி தள்ளிவிட்ட ஓட்ஸ் கோதுமை யால நோய் அதிகரிச்சி போயிருக்கு நம்ம மக்களுக்கு நாட்டில் ..
    இந்த களி ஒரு கோப்பை குடிச்சாலே போதும் ..நல்லதொரு ஹெல்தி ரெசிப்பிக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சல்

      Delete
  4. வணக்கம் சகோ
    இந்த மாற்றம் உடல் நலம் பேண அல்ல
    நிச்சயமாக பேஷன் ஷோ மாதிரியான மாற்றமே...

    நிச்சயம் இதுவும் மாறும்

    ReplyDelete
    Replies
    1. மாறினால் நல்லதுண்ணே

      Delete
  5. நல்லதொரு பகிர்வு. கேழ்வரகு கூழ் உடம்புக்கும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. எங்க வீட்டுல எல்லாரும் சாப்பிடுவோம்

      Delete
  6. வெய்யில் காலத்துக்கேற்ற நல்ல குறிப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. கேப்பை இவ்வளவு நல்லது செய்யுமா ?கேட்பவன் கேனையாக இருப்பின் கேப்பையில் நெய் வடியும் என்று ஏன் சொல்கிறார்களோ :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

      Delete
  8. இவ்ளோ நல்ல விஷயம் சொல்லிட்டு கடைசில ஃபரிட்ஜ்ல வைச்சு சாப்பட சொல்றீங்களே..அதையாச்சும் இயற்கையா சாப்பிடுவோமே தோழி..

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரிட்ஜை நாம சரிவர உபயோகப்படுத்துறதில்ல சகோ. பொதுவா தமிழகத்து பாரம்பரிய உணவுகள் எதும் சட்டுன்னு கெட்டுப்போகாது. கேப்பைக்களி, இட்லி, தோசை, புளிச்சாதம், வெல்ல இட்லி, கூழ்...... இப்பத்தைய காலக்கட்டட்த்தில் ஃப்ரிட்ஜ்ல வக்குறது தப்பில்ல. அதுக்காக மாசக்கணக்குலயும், மீந்து போனதுலாம் தூக்கி வைக்கப்படாது.

      Delete
  9. நல்ல பகிர்வு ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

      Delete