Wednesday, January 10, 2018

திருமணமாம் திருமணமாம்.... தெருவெங்கும் ஊர்வலமாம்... - மௌனச்சாட்சிகள்

’திருமணம்’ன்ற ஒற்றைச்சொல் அதை உச்சரிக்கபடுபவருக்கும், கேட்பவருக்கு, வாசிப்பவருக்கென ஆளுக்காள் அர்த்தம் மாறுபடும். சிலர் எப்படா கல்யாணம் ஆகும்ன்னு நினைப்பாங்க?! சிலர் ஏன் டா கல்யாணம் கட்டிக்கிட்டோம்ன்னு நினைப்பாங்க. உடலளவில் பலவீனமான பெண்ணை உடல்ரீதியா பலமான ஆணுடனும், மனதளவில் பலவீனமான ஆணை, மனதளவில் உறுதியான பெண்ணையும் இணைத்து வைத்து, சிக்கல் நிறைந்த உலகில் வாழ திருமணம் அவசியமானதாகும். அதேமாதிரி, ‘அந்த மூன்று நாட்களிலும்’ பிரசவ காலங்களிலும் பெண் மானம் காக்க, அவளுக்கு ஓய்வு கொடுக்கவும் அவளை ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்ததால் குடும்ப அமைப்பு உண்டானது.  

தக்க பருவம் வந்ததும் எல்லாருக்கும் தன்னோட கல்யாணத்தை பத்தி ஒரு கற்பனை வரும். அதேமாதிரிதான் தன்னோட பசங்க கல்யாணத்துக்கும்.. எனக்கு என் கல்யாணத்தைப்பத்தி மூணு விசயம்தான் இருந்துச்சு. மயில் கழுத்து கலர் பட்டுபுடவை,  நான் பொறந்ததிலிருந்து அப்பா வேட்டி கட்டி பார்த்ததில்ல. அதனால அவருக்கு ஒரு பட்டு வேட்டி, பாட்டு கச்சேரின்னு வைக்கனும்ன்னு. ஆனா, அப்பாவுக்கு வேட்டி ஆசை மட்டும்தான் நிறைவேறிச்சு. இன்னிய வரைக்கும் அந்த மயில் கழுத்து கலர் புடவை மட்டும் கிடைக்கல :-( . அதேமாதிரி என் பசங்க கல்யாணத்துக்குன்னு ஆசை இருக்கு. மாப்பிள்ளை பெண் அழைப்பு ஒருத்தருக்கு யானை மேல, இன்னொருத்தருக்கு பல்லக்கு, இன்னொருத்தருக்கு குதிரை வண்டின்னு.. அதேபோல பாட்டிமார்களுக்கு ஒரேமாதிரியான பட்டுசேலை, சித்தி பெரியம்மாக்களுக்கு ஒரே மாதிரி, அத்தை, மாமிகளுக்கு ஒரே மாதிரி, அக்கா, தங்கைகளுக்கு ஒரே மாதிரியான புடவை. தாத்தாக்களுக்கு வேட்டி சட்டை, அப்பாக்களுக்கு பேண்ட் சட்டை, அண்ணனுக்கு கோட்டு, தம்பிகளுக்கு ஷெர்வாணி,  முதியோர் இல்லத்துக்கு சாப்பாடு, அன்பு இல்ல குழந்தைகளுக்கு துணி, வரும் மொய் பணத்துல எங்க ஊர் பக்கத்திலிருக்கும் கண்பார்வை அற்றவருக்கான பள்ளிக்கு எதாவது செய்யனும் ன்னு பசங்க கல்யாண ஏற்பாடுகள் பத்தி ஆசை விரியும். 

இதுமாதிரி வித்தியாசமான திருமணங்களை பத்திரிக்கையில் அடிக்கடி பார்க்குறோம். தங்கள் கல்யாணத்துக்கு வந்த பரிசு பொருட்களை அப்படியே ஒரு அனாதை இல்லத்துக்கு கொடுத்திருக்காங்க ஒரு கலெக்டர் ஜோடி. கல்யாணமானதும் உடல், உடலுறுப்பு தானம் செய்றதா பதிஞ்சு வச்ச ஜோடி, ரத்த தானம் செஞ்ச ஜோடி, தங்களுக்கு மொய் செய்ய வேணாம், அதுக்கு பதிலா புத்தகம் கொடுங்கன்னு கேட்டு வாங்கி அதை வச்சு ஒரு நூலகம் தொடங்கின ஜோடி, வானத்துல, தண்ணில, மலை உச்சி, ரயில்லன்னு ஏகப்பட்ட வித்தியாச திருமணங்களை நாம பார்த்திருக்கோம். அதேமாதிரி, வித்தியாசமான திருமண பழக்க வழக்கங்களைதான் இன்னிக்கு மௌனச்சாட்சிகள்ல நாம பார்க்க போறோம்..



திண்டுக்கல் மாவட்டம்,வத்தலக்குண்டுக்கு பக்கத்திலிருக்கும் எழுவனம்பட்டியில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான திருமணம் நடந்திச்சு. எழுவனம்பட்டியை சேர்ந்த  சீலமுத்து, வேலுத்தாயி மகன் முத்து, சாமிக்கண்ணு செல்வி மகள் ரம்யா திருமணம், இவர்களின் 300 ஆண்டுகால பாரம்பரிய முறையில் ஊர் மந்தையில் நடந்தது. காடுகளில் இருந்து பாலா மர இலைகளைக் கொண்டு மணப்பெண்ணிற்கான பந்தலை 12 ராசிகள் அடிப்படையில் 12 உசிலை மரக்குச்சிகளால கட்டினாங்க. மாப்பிள்ளை, மணப்பெண்ணிற்கு சூரியன், சந்திரன் சாட்சிகளாக இரு கம்புகள் நடப்பட்டு தோரணவாயில் கட்டினாங்க. கம்பு, கருப்பட்டி, வெற்றிலை, பாக்கு அடங்கிய மண் சட்டிக்கு இவர்கள் சமுதாய பெரியவர் முதலில் பூஜை செய்ய, அதை தொடர்ந்து மணமக்களும் பூஜை செய்தாங்க.  மாப்பிள்ளை குதிரை வண்டில வர, பொண்ணை அவளின் தாய்மாமன் சுமந்து வர, உறுமி முழங்க, புரோகிதர்களை கூப்பிடாம , ஊர் பெரியவங்க, அவங்க சமுதாய பெருமைகளை பாட்டாய் பாட திருமணம் நடந்தது. இவங்க வழக்கப்படி, தாலியை கீழ வைக்கக்கூடாதாம், அதனால, தாலி செஞ்சு முடிச்சு வந்ததும், மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த ஒரு வயதான சுமங்கலி போட்டுட்டு இருப்பாங்களாம். திருமணத்தன்னிக்கு அதை கழட்டி பூஜை செஞ்சு கல்யாண பொண்ணு கழுத்துல கட்டுவாங்களாம்.  கல்யாணம் முடிந்த பிறகு, மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண்வீட்டார் மரியாதை செய்யும் விதமா உறுமி மேளம் முழங்க தேவராட்டம் ஆடியபடி எதிர்கொண்டு அழைப்பாங்களாம். 



தனிநபர் சார்ந்த சாதி, மதம், வாழுமிடம் சார்ந்து இந்த திருமண சடங்குகள் மாறும். முன்னலாம் திருமணம் மூணு நாட்கள் நடந்துச்சு. திருமணத்தின் முதல் நாளிரவு, திருமணம் மணப்பெண் வீட்டில் நடந்தால் மாப்பிள்ளை அழைப்பும், மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடந்தால் இவங்கதான் எங்க மாப்பிள்ளை, பொண்ணுன்னு சொல்ற மாதிரி ஒரு ஊர்வலம் நடக்கும். இப்ப மாதிரி மாப்பிள்ளை, பொண்ணை ஒன்னா சுத்த மாட்டாங்க. காலையில் திருமணம், திருமணம் நடந்த இரவு மாப்பிள்ளை, பொண்ணு இரண்டு பேரையும் வச்சு ஊருக்கே சொல்ற மாதிரி ஒரு ஊர்வலம் நடக்கும். மறுநாள் பாலியம் கரைப்பதுன்னு சொல்லி திருமணத்தில் வச்சிருந்த முளைப்பாரிலாம் சொந்த பந்தம் சூழ புதுமண தம்பதிகள் ஆறு, குளத்துல கொண்டுபோய் கரைச்சுட்டு வருவாங்க. அப்ப கூட வரும் சம்பந்தி வீட்டார்மீது  குங்குமம், மஞ்சள், ஆரத்தி தண்ணி கொட்டி விளையாடுவாங்க. மூணு முறை இருவீட்டிலும் மறுவீடு அழைப்பு நடக்கும். இதான் பொதுவான தமிழர் திருமண நடைமுறை. அவசர யுகத்தில் அஞ்சு நாள் திருமணம் இப்ப ஒருவேளையா சுருங்கிட்டுது. நெருங்கிய உறவுகள் மட்டுமே இருவேளையும் இருக்காங்க.  தமிழர் திருமணம் பத்தி விரிவா ஒரு பதிவு போடனும்!!!


திருமண சடங்குகள் தமிழர்கள் மட்டுமில்லாம இந்தியா முழுக்கவே பலவிதமா இருக்கு. இதேமாதிரி, உலகம் முழுக்கவே திருமண சடங்குகள் இருக்கு. அதுல வித்தியாசமான  சடங்குமுறைகள் சிலதை பார்க்கலாம். 


சீனாவில் உள்ள யூகர் பழங்குடிகளின் திருமணத்தில், மாப்பிள்ளை மணப்பெண்மீது 3 முறை அம்பு எறியனுமாம்,  அந்த அம்பு கூர்மையா இருக்காதாம். இருந்தாலும்  3 முறை அம்பு பட்டு மணப்பெண்ணுக்கு காயம்லாம் ஏற்பட்டிருக்காம். கண், மூக்குன்னு அம்பு குத்தி ரத்தம் வந்த நிகழ்ச்சிலாம்கூட நடந்திருக்காம்.  கென்யாவில் உள்ள மாசாய் பழங்குடிகளின் திருமணத்தின்போது, மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் தலையிலும், மார்பகம் மீதும் எச்சில் துப்பனுமாம்!!  என்ன கன்றாவி பழக்கமோ!
ஃப்ரெஞ்சு பாலினேசியாவில் பல தீவுகள் இருக்கு. அதில், மார்க்யூசஸ் தீவில் யாருக்கேனும் திருமணம் நடைபெற்றால், மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் தரையில் கம்பளம் மாதிரி தரையில் படுத்துக்கனுமாம். திருமணம் முடிந்ததும் அவர்கள் மீது, திருமண ஜோடி நடந்து போவாங்களாம். நம்ம ஊர்ல இப்படி இருந்தா, பிடிக்காத அத்தை, மாமாவை இதான் சாக்குன்னு மூக்கு மேலயே மிதிக்கலாம். ஸ்காட்லாந்தில் திருமணமான தம்பதியின்மீது அழுகிய உணவுப்பொருட்கள் மற்றும் மீன்களை வீசுவார்கள். இனி உங்க பொழப்பு நார பொழப்புன்னு சொல்லாம சொல்றாங்களோ?! 



சீனாவில் உள்ள துஜியன் பழங்குடியில் திருமணத்திற்கு முன்பு ஒரு மாசத்துக்கு, மணப்பெண் அழுதுக்கிட்டே இருக்கனுமாம். அவளோடு சேர்ந்து, அவ வீட்டை சேர்ந்த  மற்ற பெண்களும், மணப்பெண்ணுடன் இணைந்து அழுவாங்களாம். திருமணத்திற்கு பின்., இதுக்குலாம் வட்டியும் முதலா மாப்பிள்ளை வீட்டை அழ வச்சிடுவாங்கல்ல!!! கஜகஸ்தானில் ஆண், தான் சேர்ந்து வாழ நினைக்கும் பெண்ணை கடத்திக்கிட்டு வந்திருவாராம். அதன்பின், 2-3 நாட்களில் அவர்களுக்கு திருமணம் செய்துவைப்பாங்களாம். இப்படி இருந்தா நம்மூர்ல பாதி பொண்ணுங்க கடத்தப்பட்டிருப்பாங்க. இந்த நடைமுறைக்கு அங்கிருக்கும் பெண்ணிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்களாம்.  



தென்கொரியாவில், திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளையின் பலத்தை அறிய கட்டி வைத்து அடிப்பாங்களாம்.  இந்தியாவிலுள்ள மாங்லிக் சமூகத்தில், மணப்பெண் திருமணத்திற்கு முன்பு மரத்தை திருமணம் செய்ய வேண்டும். ரஷ்யாவில் சிலர் மாஸ்கோவில் உள்ள இறந்த ராணுவ வீரரின் கல்லறையில் திருமணம் செஞ்சிக்குறாங்களாம்.  பப்புவா நியூ கினியில் திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணை கவர, தங்கள் உடலில் சித்திரம் வரைந்தும், பறவை இறகுகளையும் கட்டிக்கொள்ளுவாங்க.


சமீபத்தில் வவுனியா கிராமம் ஒன்றில் தெலுங்கு முறைப்படி வித்தியாசமான திருமணம் ஒன்னு நடந்துச்சு.  மல்காந்தின்ற  பெண்ணுக்கும், அரவித்த குமாரன்ற ஆணுக்கும். ரபான் அடித்து பாசிமாலை அணிந்து மோதிரம் மாற்றி திருமணம் செஞ்சுக்கிட்டாங்க.  இவங்க குலத்தொழில் குரங்கு, பாம்பு வித்தை காட்டுறது,. இது இல்லன்னா விவசாயம், மீன்பிடிதொழில் செய்வாங்க. அதனாலதான் பூக்களால் ஆன மாலை இல்லாம பாசி மாலை அணிந்தாங்க. அதுமட்டுமில்லாம பொண்ணு வீட்டிலிருந்து சீதனாமா பாம்பும், அதை வைக்கும் பாம்பு பெட்டியும் கொடுத்தாங்க. 

இதுமாதிரி வித்தியாசமான சடங்குகள் கொண்ட திருமணங்கள் உலகம் முழுக்கவே உண்டு, ஏதோ எனக்கு தெரிஞ்ச சிலதை இங்க பகிர்ந்துக்கிட்டேன். திருமணம் செஞ்சுக்க ஆயிரம் காரணம் இருந்தாலும், மனிதக்குலம் தழைக்க திருமணம் அவசியம்.   திருமணம் செய்யாம ஒரு மனிதனின் வாழ்வு முழுமையடையாது.  ஒவ்வொரு திருமண சடங்கும் அவரவர் சார்ந்த இனம், மொழி, நாடு சார்ந்த கலாச்சாரத்தை மௌனமாய் அடுத்தவங்களுக்கு எடுத்துரைக்குது.  அதனால, கல்யாணம் கட்டுங்க. ஆனா எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு கல்யாணம் கட்டுங்க, எங்களுக்கும் கல்யாண சாப்பாடு கிடைக்கும். செய்ய வேண்டிய மொய் பணத்தை செய்வோம்ல! டின்னர் செட், குங்குமச்சிமிழ், பிள்ளையார் சிலைன்னு பாக்கி இருக்குல்ல!!!

விரைவில் தமிழர் திருமண சடங்குகள் பத்தி காரண காரியத்தோடு பதிவு வரும்...


நன்றியுடன்,
ராஜி. 

13 comments:

  1. திருமணம் பற்றி நிறைய சொல்லிருக்கீங்க...கடைசியா படிச்சது ரொம்ப பிடிச்சுப் போச்சு அதாங்க அந்தப் பாம்பும் பாம்புப் பொட்டியும்..சீதனமா..அட! நல்லாருக்குஏனு தோனுச்சு...நாய்க்குட்டியோடத்தான் பொண்ணு வரனும்னு சொல்லலாம் போல...ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாய்க்குட்டியா?! இதுல எதும் உள்குத்து எதுமில்லையே கீதாக்கா?!

      Delete
  2. சுவாரஸ்யமான தகவல்கள். இரண்டு பாகமாய்ப் போட்டிருக்கலாமோ!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!? பதிவு அம்புட்டு நீளமில்லையே! இனி வளவளன்னு பிளேட் போடுறதை குறைச்சுக்குறேன்.

      Delete
  3. எனக்கு டாக்டர் கந்தசாமி ஐயா எழுதி இருந்த பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது அது அவர்கள்வழ்க்கங்களை வெகுவாக விரித்து எழுதினது எனக்கு சில சடங்குகள் மட்டுமே நினைவுக்கு வருகிறது எது எப்படி ஆனாலும் / திருமணம் செஞ்சுக்க ஆயிரம் காரணம் இருந்தாலும், மனிதக்குலம் தழைக்க திருமணம் அவசியம்/ என்று எழுதி இருந்ததே பிடித்தது சிலர் அதை மறுதளிக்கிறார்களே

    ReplyDelete
    Replies
    1. மனிதக்குலம் தழைக்க மட்டும்தான் திருமணம். மத்தபடி, கற்பு, கலாச்சாரம்லாம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள். குழந்தைக்கு யார் அப்பான்னு தெரியலைன்னா நாடு, ராஜாங்கம், சொத்துல பிரச்சனை வரும். அதுமில்லாம, ஆரோக்கியமான பிள்ளைய பெத்தெடுக்கவும்தான் குடும்ப அமைப்பு.

      Delete
    2. ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்ட, சடங்கு ரீதியா எந்த உறவும் இல்லன்னா மூணு நாளைக்கு மேல சலிச்சுடும். இதை நான் சொல்லலைப்பா மனநிலை மற்றும் செக்ஸாலிஜிஸ்ட் திருமதி ஷாலினி சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி ஒருத்தரை ஒருத்தர் விட்டுட்டு ஓடிப்போகக்கூடாதுங்குறதுக்குதான் குடும்பம், சடங்கு, சட்டம்ன்னு கமிட்மெண்ட்.

      Delete
  4. திருமணத் தகவல் மையம் ஆரம்பிக்கப் போறீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. இல்ல சகோ. எப்பயாவது தலை அலங்காரம், மெகந்தி, கல்யாண மேடை அலங்காரம்லாம் பார்ப்பேன். அப்படி பார்த்து வச்சுக்கிட்ட பசங்க கல்யாணத்துக்கு உதவும்ல்ல!! அதான்.

      Delete
  5. எத்தனை விதமான சடங்குகள்...

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் இருக்குண்ணே. பதிவின் நீளம் கருதி இத்தோடு முடிச்சுட்டேன்/ அடுத்த பாகத்தை விரைவில் போடனும்.

      Delete
  6. சுவாரஸ்யமான தகவல்கள்..

    எனக்கு ரொம்ப பிடிச்சதே...உங்க பசங்க கல்யாண ஆசை தான்..நீங்க ஆசை பட்ட மாதரியே நடக்க நானும் வாழ்த்துக்கிறேன் ராஜிக்கா..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. மனசுக்குள் ஆசை விரியும்., மணமேடை, புடவை நிறம், சாப்பாடு, தலை அலங்காரம், நகைகள்ன்னு தொடங்கி போட்டோ ஷூட் வரை கனவிருக்கு... இதுக்குலாம் கடவுள் ஆசீர்வதிக்கனும்.

      Delete