Monday, June 03, 2013

வெளிச்சம் வருவது எப்போது?! - ஐஞ்சுவை அவியல்

                              

   ஏனுங்க மாமா! மணி 6 க்கு மேல ஆகுது...,  வீடே இருட்டிக்கிட்டு வருது.., விளக்கு ஏத்தி வைக்க கூடாதா?! நாந்தான் கடைவீதிக்கு  போய் இருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா?!

ம்ம் இதோ வெளக்கு ஏத்திட்டு வரேன் இரு.. ஏம்புள்ள, வெளிச்சம் எப்போ வருதுன்னு தெரியுமா?! இதென்ன கூறுகெட்டத்தனமா ஒரு கேள்வி?! எதிர்ல இருக்கும் பொருளெல்லாம் தெரிய ஆரம்பிக்கும்ப்போது.. ..,

ம்ஹூம் தப்பு புள்ள! இதுக்கு பதிலை ஒரு  சாமியார் தன் சீடர்களுக்கு சொல்லியிருக்கார்.., அதை உனக்கு சொல்லுறேன்.

ஒருநாள் குருகுலத்தில..., தன்னோட சீடர்களை பார்த்து...,  சீடர்களே! வெளிச்சம் வருவது எப்போது?!ன்னு குரு கேட்டார்...

அதுக்கு முதல் சீடன்  எதிர் மனையில் கட்டியிருக்கும் குதிரை.., கழுதையா?! குதிரையா?!ன்னு தெள்ளத்தெளிவா பார்க்கும்போது வெளிச்சம் வந்துட்டுதுன்னு அர்த்தம்ன்னு சொன்னான். அடுத்த சீடன்..,  குருவே! அதோ அந்த வயல் ஓரத்தில இருக்குறது பனை மரமா?! இல்ல தென்னை மரமான்னு தெரிய வரும்போது வெளிச்சம் வந்துடுச்சுன்னுசொன்னான். கடைசி சீடன் அதெல்லா இல்ல குருவே!  அதோதோதோதோ தெரியுற மாமரத்துல இருக்குறது மாம்பழமா?! இல்ல மாங்காயா!?ன்னு தெரியும் போது வெளிச்சம் வந்துடும் ஐயா!ன்னு சொன்னான்.

அவங்கலாம் சொன்னதுலாம் சரிதானுங்களே மாமா! 

இல்ல புள்ள! மேலோட்டமா கேள்வியை பார்த்தா அப்படிதான் தெரியும்.. ஆனா, அந்த குருவோட பதிலை கேட்டுட்டு சொல்லு எது சரின்னு.

  “சீடர்களே! நீங்க சொன்ன பதில்லாம் சரியானது  இல்ல.., ”அடுத்தவன் சொல்லாமல் அவன் பசியறிந்து.., அவன் பசியாற உணவை தர்ற அளாவுக்கு நம்ம மனசு எப்போ பக்குவப்படுதோ, அப்போதான் வெளிச்சம் வந்ததா அர்த்தம்”ன்னு சொன்னாரு.இப்ப சொல்லு புள்ள எது சரின்னு?

அந்த குரு சொன்னது சரிதானுங்க மாமா.  பசிக்கொடுமையைவிட மோசமானது உலகத்துல ஏதும் இல்லீங்க மாமா.  ஏனுங்க மாமா! உங்க போன் அடிக்குது பாருங்க. எடுத்து பேசுங்க.

                                      

பேசிட்டேன் புள்ள,நம்ம காத்தமுத்துதான் பேசினான். புதுசா ஃபோன் வாங்க போறானாம்.., என்னை கூப்பிட்டான்.

ஏனுங்க மாமா! உலகத்துல இருக்குற மொழில எத்தனை கோடி வார்த்தைகள் இருக்கு. ஆனா, ஃபோனை எடுத்ததும் ஏன் மாமா “ஹலோ”ன்னு சொல்லுறோம்?!

அது , போனை கண்டுபிடிச்சவன் பேரா இருக்கும்! நமக்கு என்ன தெரியும்?!

இல்ல மாமா!, ”ஹலோ”ன்றது ஒரு பொம்பளை புள்ளையோட பேரு. ”மார்கரெட் ஹலோ”ன்றாதுதான் அவங்க பேரு .டெலிபோனை கண்டுபிடிசாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் இந்த “மார்கரெட் ஹலோ”.அவர் போனை கண்டுபிடித்தவுடன் ”ஹலோ! ஹலோ”!ன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரை நியாபகம் வைத்து கொள்ளம்படி செய்துட்டார்.அந்த காலத்துலையே தன் காதலுக்கும் காதலிக்கும் மரியாதை செய்து இருக்கிறார்! ! ! ! நீங்களும் தான் இருக்கீங்களே!


 ம் ம் ம் எல்லாம் சரி புள்ளே! அவ காதலி தூரமா இருந்து அவன் முன்னேற்றத்துக்கு ஹெல்ப் பண்ணா!. நீ பக்கத்துலயே இருந்துக்கிட்டு...,

 உயிரை வாங்குறேன்னு சொல்றீங்களா?!  நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன்.., அப்புறம் தெரியும் என் அருமை!!

போடி போ. அம்மா வீட்டுக்கு போறாளாம். எந்த பஸ் ஏறனும்? எங்க இறங்கனும்ன்னு கூட உனக்கு தெரியாதே! ஹா!  ஹா! ஹா!

ம்க்கும்.., இது கூட தெரியாதா?! மைல் கல்லை பார்த்தா எம்புட்டு தூரம்ன்னு தெரிஞ்சுடப்போகுது. அப்புறம் அதுக்கு தகுந்தாப்புல பஸ் ஏறிக்க போறேன்.

ஓ அப்பிடியா?! என் செல்லக்குட்டி.., மைல் கல்லை வெச்சு தூரத்தை மட்டுமில்ல. வேற ஒரு விசயத்தையும் தெரிஞ்சுக்கலாம். அது என்னன்னு உனக்கு தெரியுமா?!

தெரியாதே மாமா.

                                          


மைல் கல்லுல இருக்குற   கலரை வச்சு அது எந்த ரோடுன்றதை தெரிஞ்சுக்கலாம் புள்ள.

அப்படியா மாமா! எப்படின்னு எனக்கும் சொல்லிகுடுங்களேன்.

 மைல்கல்லுல மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தா அது, ”தேசிய நெடுஞ்சாலை”.., பச்சை மற்றும் வெள்ளை கலர்  இருந்தா  ”மாநில நெடுஞ்சாலை”  நீலம் மற்றும் வெள்ளை கலர்ல இருந்தா  ”மாவட்டசாலை”* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளைகலர்ல இருந்தா”ஊரக சாலை”ன்னு தெரிஞ்சுக்கலாம் புள்ள. 

ஓ இம்புட்டு விசயம் இருக்கா?! கலர்ல?! ஏனுங்க மாமா! அந்த பப்பாளி மரத்தை வெட்ட சொல்லி எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். இப்போ சும்மாதானே இருக்கீக. வெட்டிடுங்களேன்.

                                     

வேணாம் புள்ள! இருக்கட்டும் யூஸ் ஆகும் புள்ள!.

என்ன மாமா! பத்து ரூபா குடுத்தா இம்பாம்பெரிய பழம் குடுக்க போறாங்க. அதுக்காக ஏன் இந்த மரத்தை வெச்சிருக்கனும். வெட்டிட்டா இடம் சீராகும் எதாவது பூச்செடி வெச்சுக்கலாமே!

இல்ல புள்ள! வாழை மரத்தை போலவே பப்பாளியோட ஒவ்வொரு பார்ட்டும் யூஸ் ஆகும் நமக்கு.., டாக்டர்சுக்கு சவால் விடுற புத்துநோயை குணப்படுத்த, பப்பாளி இலைல எதிர்ப்பு சக்தி இருக்குறதா கண்டுப்பிடிச்சு இருக்காங்க. பப்பாளில இருக்குற என்சைம்கள் புத்துநோயை குணப்படுத்த கூடியதாம்..., குழந்தைகளுக்கு பப்பாளி பழம் குடுத்து  வந்தால் எலும்பு வளர்ச்சியும், பல் வளார்ச்சியோடு பலமாவும் இருக்குமாம். அத்தோட, குழந்தை பெத்த பொன்னுங்களுக்கு குடுத்தா அதிகமா பால் சுரக்குமாம்..,  அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தா னோயும் அண்டாதாம்.., ஆரோக்கியமா இருப்பாங்களாம்.  பப்பாளி பழத்தை முகத்துல தேச்சுக்கிட்டா தோல் சாஃப்டாவும், மினுமினுப்பாவும் இருக்குமாம்.  பப்பாளில இருக்குற, ”பப்பாய்ன்” ன்ற என்சைம்ல இருக்குற ”ஆர்ஜினைன்”ன்றது ஆண்களுக்கு ஆண்மைதன்மை பெருக்குது.. அது மட்டுமில்லாம ரத்த விருத்ஹ்டியும், ஞாபகசக்தியை அதிகரிக்குது. பப்பாளி சாப்பிட்டு வந்தால் பித்தமும் குறையுமாம். தேள் கடிச்ச இடத்துல இதோட விதையை அரைச்சு பூசினா விசம் முறிஞ்சு போகுமாம். இதெல்லாம் நான் சொல்லலை புள்ள! இங்கதான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.

இப்ப சொல்லு மரத்தை வெட்டவா?

வேணாம் மாமா! இவ்வளவு யூஸ் ஆகுற பப்பாளி மரத்தை வெட்டுனா அப்புறம் அந்த ஜோக்குல வந்த குட்டிப்பையன் புத்திசாலித்தனம் போல ஆகிடும்.., 
                                        அதென்ன ஜோக் புள்ள!

ஒரு எல்.கே.ஜி புள்ள தன் மிஸ்சுக்கு ஃபோன் பண்ணி
இன்னிக்கு கோகுல் ஸ்கூலுக்கு வர மாட்டான், அவனுக்கு உடம்புக்கு முடியலைன்னு சொன்னானாம். அதுக்கு மிஸ், நீங்க யார் பேசுறீங்க?ன்னு கேட்டாங்களாம். அதுக்கு அந்த குட்டி பையன், என்னோட அப்பாதான் பேசுறாங்கன்னு சொன்னானாம்.

ஹா! ஹா! ரொம்ப சுட்டி பையந்தான். எனக்கு பசிக்குது எதாவது சமைச்சுட்டு வாயேன்.

சரிங்க மாமா! ரொம்ப நேரமா பேசிட்டு இருந்துட்டோம். நான் போய் சமைச்சு கொண்டாரேன்.

9 comments:

 1. ஹலோ... ஹலோ... இது தான் (ஐஞ்)சுவையான அவியல்... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 2. பல நல்ல தகவல்களை உள்ளடங்கி வந்த இந்த அறுசுவை அருமை

  ReplyDelete
 3. மரத்தை வெட்ட வேணாம்.

  ReplyDelete
 4. மைல் கல்லு மேட்டரே இப்போதான் எனக்கே தெரிஞ்சுது ஹா ஹா ஹா...

  ஐஞ்சுவை கலக்கல் புள்ளே...!

  ReplyDelete
 5. ஹலோ மேட்டர் புதுசு. மைல்கல் சமாச்சாரமும் ஜோக்கும் ரசிக்க வெச்சது. பப்பாளியின் சிறப்பும், குருவின் கதையும் எனக்குத் தெரிஞ்சதா இருந்தாலும் சுவை குறையல இங்கயும் கேக்க. மொத்தத்துல அவியல் செம டேஸ்ட்!

  ReplyDelete
 6. அத்தனை சுவையும் அருமை

  ReplyDelete
 7. அய்ஞ சுவை அவியல் நல்லா இருந்தது கூட்டு பொரியல் ரசம் எல்லாம் கிடையாதா

  ReplyDelete
 8. அவியல் சிறப்பான சுவை.....

  பப்பாளி - இதை ஹிந்தியில் ‘பப்பாயா எனச் சொல்வார்கள். இதன் இலை கூட மருத்துவ குணம் மிகுந்தது......

  ReplyDelete