அந்த நேரத்தில் சகல ஜீவராசிகளிலும் கோசலையைவிட அத்தனை மகிழ்ச்சியாய் வேறு யாராவது இருந்திருப்பார்களா என யோசித்தால், இல்லைன்னுதான் சொல்லனும். ஏன்னா, தன் மகன் ராமன், அயோத்திக்கு அரசனாகி நாடாளப்போகிறான். நாளைக்கு அவனுக்கு பட்டாபிஷேகம். மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது. ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியோ துக்கமோ எதுவா இருந்தாலும் கணவன்கிட்டதான் பகிர்ந்துப்பாங்க. கோசலையும் தன் கணவன் வருகைக்காய் காத்திருந்தாள்.
ராமனின் பிறப்பு, சகல கலைகளிலும் அவனின் திறமை, அகலிகை சாபம் நீக்கியது, விஸ்வாமித்திரனின் யாகம் காத்தது. கற்புக்கரசியான மகாலட்சுமியின் அவதாரமான சீதையை மணந்தது, காட்சிக்கு எளியவனாய், இன்சொல் மட்டுமே பேசுபவனாய், பழக இனிமையானவனாய், குடும்பத்தார் மட்டுமல்லாது அயோத்தி மக்களின் மனசையும் கவர்ந்தவன். அவன் நாடாளப்போகிறான் என்றதும் நாடே விழாக்கோலம் பூண்டது. நாட்டு மக்கள் தங்கள் வீட்டு பையனே அரசனாவதாய் நினைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து, வீட்டை, தெருக்களை வண்ணப்பொடிகளாலும், காவியாலும் அலங்கரித்ததோடு தங்களையும் அலங்கரித்து பட்டாபிஷேக நிகழ்ச்சிக்காக காத்திருப்பது கோசலையின் காதுக்கு எட்டி ராமனை சுமந்த வயிற்றினை பூரிப்போடு தடவியபடி கணவனுக்காக காத்திருந்தாள்.
பட்டாபிஷேக ஏற்பாடுகள் பற்றி கணவரும், தன் சக்காளத்திகளும் ஆவலோடு பேசுவதை கேட்க, மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வருவார்கள் என அவர்களின் வருகைக்காக தனது இருப்பிடத்தை தயார் செய்து காத்திருந்தாள். தன்னைவிட ராமன்மேல் அன்பும், கவனிப்பும், அக்கறையும் கொண்டு தன் பிள்ளைப் போலவே நேர்த்தியோடு பார்த்துக்கொண்ட தன் இளையவளான கைகேயின் செயலும், அவளின் மகிழ்ச்சியும் அவள் மனக்கண்முன் நிழலாடியது.
ராமன் பிறந்ததும் முதன்முதலில் கைகேயியின் கைகளில்தான் தசரதன் தந்தார். அதுக்கு காரணமாய் தசரதன் சொன்னது, கைகேயி அரச வம்சத்தவள். கைகேய நாட்டின் இளவரசி. அவளுக்கு அரண்மனை சுகபோகங்கள், அதிகாரங்கள், ஆனந்தங்கள் எல்லாமே அத்துப்படி. ஆனால், கோசலையோ எளிமையான குடும்பத்தில் பிறந்தவள். அவளுடைய எதிர்பார்ப்புகளும், தேவைகளும், இயலாமை எல்லைக்குள் அமைதிபட்டுக் கொள்ள வேண்டியவை. ஓர் அரசனுக்குப் பட்டத்து ராணியாக ஆனபிறகும் தன் குடும்ப எளிமை, பணிவு, அடக்கம் எல்லாம் தொடர்ந்து அவளிடம் நீடித்தன. ஆனால், கைகேயி அப்படியில்லை. தனக்கு அடிமை செய்ய தன் அரண்மனையிலிருந்தே தனக்கு அதுவரை பணிபுரிந்து கொண்டிருந்த சேடிப்பெண்ணை உடன் அழைத்து வந்தது முதல், தன் அரச தோரணையிலிருந்து சிறிதும் இறங்காதிருந்தாள்.
இத்தனை பகட்டும் வெளியில் இருந்தாலும், பகட்டின் அளவுக்கு உள்ளே மென்மையும்,அன்பும் பூரணத்துவமாய் அவளிடம் குடி கொண்டிருந்தது. , அவளின் அன்பை, கருணையை, இரக்கத்தை,கைகேயியின் மனதின் இன்னொரு பக்கத்தை, வெளியே தெரிந்த அதிகாரத் தோரணை நீறு பூத்த நெருப்பாக மூடியிருந்தது. பேச்சில் கம்பீரம் இருந்தாலும், எதிரே இருப்பவரின் வயது, பதவியை அனுசரித்துதான் வார்த்தைகள் வெளியே வரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தசரதன் தன் குழந்தையை முதலில் அவள் மடியில் தவழவிட்டிருக்கிறான். பின்னால் நாடாளப் போகும் குழந்தை, ஏற்கெனவே ஒரு நாட்டின் இளவரசியாக வாழ்ந்தவள், இப்போது ராஜ மகிஷியாக இருப்பவள் பொறுப்பில் வளருவதுதான் பொருத்தமா இருக்கும். அதனால்தான் தனது மூத்தமகனை கைகேயிடம் தசரதன் தந்தார். அவரது எதிர்பார்ப்புக்கேற்ப, ராமனுக்கு ராஜ தந்திரம், போர்க்கலைகள், தர்ம நியதிகள் என அனைத்தும் அன்னைக்கு அன்னையாய், குருவுக்கு குருவாய் இருந்து கைகேயி போதித்தாள். ஆக, ராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதில் தன்னைவிட கைகேயிதான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வாள் என கோசலை நினைத்தாள்.
அடுத்து, இரண்டாவது இளையவலான சுமித்திரை. கைகேயியின் அதிகார தோரணை, ராஜவம்சம், அறிவாற்றல் இவையெல்லாம், கைகேயியிடம் நெருங்கி பழக கோசலையை தடை செய்தது. அதனால், தனது சுகதுக்கங்களை சுமித்திரையிடமே கோசலை பகிர்ந்துக்கொள்வாள். ராமன்மீதான சுமித்திரையின் அன்பும் கைகேயி, கோசலைக்கு சற்றும் குறைந்ததில்லை. தனது இரண்டு மகன்களில் லட்சுமணனை ராமனின்சேவைக்காகவும், சத்ருக்கனனை பரதனின் சேவைக்காகவும் அர்ப்பணித்தவள், . தானும் கைகேயியும் ஆளுக்கு ஒரு பாகம் அவிர்பாக பாயசத்தைக் கொடுத்ததால், அதனால் தனக்குப் பிறந்த குழந்தைகளை ஒரு நன்றியறிதலாக இப்படி மூத்தாள் குழந்தைகளுடன் பழக விட்டிருப்பாளோ? அவர்களும் தாயின் விருப்பம் போலவே ராமனுடனும், பரதனுடனும் ஒன்றிப் போய்விட்டார்களோ! எப்படி பார்த்தாலும் சுமித்திரையும் ராம பட்டாபிஷேகத்தில் பேராவலோடு இருப்பாள். அவளுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வோம் என காத்திருந்தாள்.
நேரம் கடந்தது.. ஆனாலும், ஒருவரும் தனது இல்லம்தேடி வரவில்லை. அதனாலென்ன?! தானே அவர்களை போய் சந்திப்போம் என கோசலை கிளம்பினாள். முதலில் கைகேயியைப் பார்க்கப் போவோமென கோசலை கைகேயியின் அரண்மனையை அடைந்தாள். அவளது அந்தப்புரத்தில் கைகேயி, அரண்மனை பிரதான ஜோதிடரிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது. சரி, பேசி முடிக்கட்டுமென அவர்களுக்கிடையே புக விரும்பாதவளாக வாயிலுக்கு வெளியே காத்திருந்தாள். தன் தலையில் இடிவிழப்போவதை அறியாதவளாய் கைகேயியை சந்திக்க காத்திருந்தாள்.
பேரதிர்ச்சியை நேரில் கண்டவராய் ஜோதிடர் சொல்லிக்கொண்டிருக்க, அந்த பேரதிர்ச்சியை கைகேயி கவலையுடன் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் பேச்சிலும் ராமன், பரதன் பெயர்கள் அடிபடுவதும் கோசலைக்கு கேட்டது. சரி, ராம பட்டாபிஷேக சந்தோஷத்தைப் பிறகு பகிர்ந்து கொள்ளலாம். இப்போது கைகேயி கவலையோடு இருக்கிறாள் என அங்கிருந்து நகர்ந்து தன் இல்லம் சென்றாள். ஆனாலும், அவளது மனது, ராமர் பற்றி ஜோதிடம் பார்க்க இப்போது என்ன நேர்ந்தது?! என கோசலை குழம்பி தவித்தாள். அன்றிரவு தூக்கத்தை தொலைத்த கோசலை விடிந்ததும் முதல்வேலையாய் அரண்மனை தலைமை ஜோதிடரை அழைத்துவரச்சொன்னாள். அவரிடம் நேற்று நடந்ததை, கைகேயியும் அவரும் பேசியதை கேட்க நேர்ந்ததை பற்றி எடுத்துக்கூறியதுடன், தான் கணித்த ஜோதிடக்குறிப்புகளை கோசலைக்கும் எடுத்துக்கூறினார் ஜோதிடர். அதைக்கேட்டதும் இடிவிழுந்த மரமாய் நிலத்தில் சாய்ந்தாள் கோசலை. ஜோதிடம் பலிக்கும். அப்படியானால், அதில் சொல்லி இருக்கும் இழப்புக்கும், பரிகாரத்துக்கும் தன்னை தயார் செய்துக்கொண்டு ஒருவாறாய் கைகேயியின் வரத்துக்கு உயிர் தந்து ராமனை காட்டுக்கு அனுப்ப மறுப்பேச்சு பேசாமல் அமைதியாய் இருந்தாள்.
ராமன் காடு சென்றான். பரதன் ராமனின் பாதுகையை அரியணையில் வைத்து சீரும் சிறப்புமாய் நாடாண்டான். வாலி வதம், ராவண வதம் முடிந்து, ராமர், லட்சுமணன், சீதை மீண்டும் அயோத்தி வந்தனர். அரண்மனை வந்த ராமன் முதலில் கைகேயியை வணங்கி நின்றான். இதனைக்கண்டும் கோசலையும் அமைதியாய் இருந்தாள். இதனைக்கண்டலட்சுமணன் வெகுண்டெழுந்தான். எல்லோரும் கலைந்து சென்றபின் கோவத்தோடு கோசலை இல்லம் சென்றான்.
கைகேயி தன் மகன் பரதனுக்காக சதிவலை பின்னி ராமனை காட்டுக்கு அனுப்பினாள். ராமன் எதையும் மனதில் கொள்ளாமல் தன்னை வளர்த்த கைகேயியை வணங்கி நின்றான். ராமனின் சொந்தத் தாயான நீங்கள் எப்படி ராமன் காட்டுக்கு செல்ல அனுமதித்தீர்கள்?! சரி, கணவனின் வரத்துக்காக அன்று அமைதியாய் இருந்தாலும், இன்றாவது உங்கள் மகனின் நிலைக்காக கைகேயியிக்கு எதிராக ஏன் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை? தன் மகனுடைய மகுடம் பறிக்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தமில்லையா? வாரிசு உரிமைப்படி, நியாயப்படி, சட்டபூர்வமாகவே உங்கள் மகனுக்கு கிடைக்க வேண்டிய உரிமை கைநழுவிப் போனதற்காக அன்று நீங்கள் ஏன் கோபப்படவில்லை? கைகேயி வரம் கேட்டிருந்தாள். தசரதன் வரம் தருவதாய் வாக்கு கொடுத்திருந்தார். இது அவர்கள் இருவரும் தனிப்பட்ட விசயம். அந்த தனிப்பட்ட விசயம் தன்னையும் தன் மகனையும் தாக்குவதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்?! உங்கள் மனக்கசப்பை சிறிதும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் இருந்த, இருக்கும் காரணமென்ன?! கைகேயி அரச வம்சத்தவள், தான் அவ்வாறில்லை என்ற தாழ்வு மனப்பான்மை காரணமா? அப்படியே இருந்தாலும், தசரத மகா சக்கரவர்த்தியின் முதல் மனைவின்ற அந்தஸ்து பெரியதில்லையா? அந்த உரிமையில் நீங்கள் கைகேயியின் ஆணவக் கோரிக்கை நிறைவேறாதபடி செய்திருக்க முடியாதா? தசரதன் அவளுக்கு வரத்தின்மூலம் பரதன் முடிசூட வேண்டும் என்று கைகேயி வலியுறுத்தும்போது ராமனை சக்கரவர்த்தியாக்கி, பரதனை ராமனுக்கொப்பாக இன்னொரு தேசத்துக்கு அரசனாக ஆக்கியிருக்கலாமே? அல்லது பரதனே ஒட்டுமொத்தமாய் நாடாளட்டும். ஆனால் ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டாமெனவாவது தசரதனிடம் கேட்டிருக்கலாமே!இந்த சமரச சிந்தனை ஏன் உங்களுக்கு தோன்றவில்லை என பலவாறாய் தனது ஆதங்கத்தை லட்சுமணன் கொட்டி தீர்த்து, காட்டுக்கு சென்றதால்தானே சீதை அயலானிடம் சிறைப்பட்டு ராமன் அவதிப்பட்டு நரக வாழ்வை வாழ நேர்ந்ததென முடித்தான்.
“ஆனால், நான் என் மகனை முற்றிலுமாக இழந்திருப்பேன். அந்த ரகசியம் தெரியுமா உனக்கு?” என ஒற்றைக் கேள்வியில் லட்சுமணன் வாயை அடைத்தாள் கோசலை. மறுப்பேச்சின்றி நின்ற லட்சுமணனை கண்ட கோசலை ஆமாம் லட்சுமணா! கைகேயியும், ஜோதிடரும் பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்க நேர்ந்ததும், அயோத்தி நாட்டின் அமைப்புப்படி அந்த நேரத்தில் யார் அரசனாய் இருப்பார்களோ அவர் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் சொன்னதை கைகேயிடம் சொன்னதை கேட்டுத்தான் ராமன் உயிரை காப்பாற்றவே தான் அமைதியாய் இருந்ததாகவும், தன்னைப்போலவேதான் ராமனுக்கு தாயினும் மேலாய் கண்ணும் கருத்துமாய் வளர்த்த கைகேயியும் கணவனை இழந்தாலும் ராமன் உயிர்ப்பிழைக்க நினைத்தே பரதன் நாடாள, ராமன் காட்டுக்கு செல்லும் வரம் கேட்டாள். ராமன் உயிர்பிழைத்திருக்க வேண்டியே தானும் அமைதியாய் இருந்ததாய் கோசலை லட்சுமணனிடம் தன் நிலையை எடுத்துக்கூறினாள்.
நான் யாருக்காகப் பேசுவது? புது வாழ்வு துவங்கப்போகும் என் மகன் ஆயுள் நிலைப்பது முக்கியமா? ஆண்டு அனுபவித்து, வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் கணவன் உயிர் முக்கியமா?! என கைகேயி யோசித்ததைப்போன்றே தானும் யோசித்துதான் கைகேயியின் வரத்துக்கு எதிராய் எதுவும் கருத்து கூறவில்லை. அதேநேரத்தில் பரதன் உயிரிழப்பதையும் நான் விரும்பவில்லை. அவன் அரியணையில் அமரக்கூடாதென கடவுளிடம் தினமும் வேண்டிக்கொண்டிருந்தேன். தன் வேண்டுதலும் பலித்து எனது எந்த புதல்வர்களும் அந்த அரியணையில் அமராமல் இக்கட்டான அந்த 14 வருடமும் அந்த அரியணை காலியாவே இருந்தது. அதுமில்லாமல், இந்த சூழ்நிலையை விட்டால் பிறகெப்போதும் தசரதன் கைகேயிக்கு அளித்த வரத்தினை நிறைவேற்ற முடியாது. கணவன் அளித்த வரத்தினை செயல்படுத்துவதும் மனைவியின் கடமைகளில் ஒன்று. அதையும் தான் நிறைவேற்றிவிட்டதாய் தன் நிலையை கோசலை எடுத்து சொன்னாள்.கோவம் தணிந்து தாயாய், மனைவியாய், நாட்டின் அரசியாய் தன் கடமையை சரிவர நிறைவேற்றிய கோசலையின் கால்களில் தன் கோபம் முற்றிலும் நீங்கியவனாய் லட்சுமணன் விழுந்து பணிந்தான்.
60,000 மனைவிகளில் கோசலை, கைகேயி, சுமித்ரை மட்டுமே நமக்கு தெரிஞ்சிருந்தாலும் கைகேயி மட்டுமே ராமாயணம் முழுக்க நெகட்டிவ் கேரக்டரே ஆனாலும் கைகேயியின் பெயரே அடிபடும். ராமனை பெற்ற கோசலை பாத்திரம்கூட அதிகம் பேசப்பட்டிருக்காது. நாடாள வேண்டிய மகனை காட்டுக்கு அனுப்பவும், கணவன் உயிரிப்பார் என தெரிஞ்சும் கைகேயியிக்கு கணவர் அளித்த வரம் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் நாடாள வேண்டிய மகனை காட்டுக்கு அனுப்ப துணிந்த அந்த தாயின் தியாகத்தினை ராமாயணம் அதிகம் பேசப்படாமலே போனது வருத்தமே!
மீண்டும் ஒரு அதிகம் பேசப்படாத கதாபாத்திரத்தோடு வருவேன்...
ராஜி.
சில தியாகங்கள் அப்படித்தான் சகோதரி...
ReplyDeleteஅப்படியாண்ணே?! நல்லது.
Deleteசிறப்பான பகிர்வு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஅறிந்திராதது. கோசலை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதும் அறியாதது.
ReplyDeleteஆனால் இதெல்லாம் மூல ராமாயணத்திலேயே இப்படித்தானா என்று பார்க்கவேண்டும்.
தென் கோசல நாட்டு மன்னன் அஜன் - இந்துமதியின் புதல்வன் தசரதன்,
Deleteவடகோசல நாட்டு மன்னன் கோசலராஜனின் மகள்தான் இந்த கோசலைன்னும் ஒரு வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு இருக்கு.
ஆனா, கம்பராமாயணத்தில் கோசலை சாதாரண வீட்டு பெண்ன்னுதான் சொல்லுது. ஒருவேளை, கைகேயியின் குணநலனை விவரிக்க இப்படி எழுதப்பட்டதான்னு தெரில.
ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டம்போல கதைகளை மாற்றிக்கொண்டிருக்காங்கன்னு மட்டும் தெரியுது.
நான் கேட்க நினைத்த கேள்விக்கு நீங்க இதுல பதில் சொல்லியிருக்கீங்க கோசலை கோசலை நாட்ட்டவளாச்சே என்று...
Deleteநீங்க சொல்லியிருப்பது போல பல கதைகள் மாற்றங்கள் அவரவர் இன்டெர்ப்ரிட்டேஷன். இது புதுசு முற்றிலும். இங்கு சொல்லப்பட்டிருக்கும் கதையும்...
கீதா
வால்மீகி கதையின் கருவை கொண்டு கம்பர் உட்பட மற்றவர்களும் அவரவர் காலம்,சூழல், வாழ்வியல்முறைப்படி மாற்றங்கள் செய்தே ராமாயணம் எழுதப்பட்டிருக்கு.
Deleteசில கதைகளின்படி சீதை ராமனுக்கு சகோதரி முறைன்னு வரும். இதுக்கெல்லாம் என்ன சொல்வீங்க கீதாக்கா?!
பேசப்படாத பாத்திரத்தைப் பற்றி பேசிய விதம் அருமை.
ReplyDeleteஇன்னும் பேசுவோம்ப்பா
Delete