Saturday, January 05, 2019

ஐம்பூதங்களால் சிறப்பிக்கப்பிட்ட அனுமன்...


அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று சீதையைச் சேவித்தவன் , அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தவன், ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!ம் கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!  இப்படி பஞ்சபூதங்களால் சிறப்பிக்கப்பட்டவனே அனுமன்.


கீழ்படிய கற்றுக்கொள், கட்டளையிடும் பணி உன்னை வந்து சேரும்ன்ற அறிவுரைக்கேற்ப, ராமனின் சேவகனாய் அவதரித்து, என்றென்றும் சிரஞ்சீவியாகவும், கடவுளாகவும் நமக்கு அருள்புரிபவர் ஸ்ரீஆஞ்சிநேயர். அவரின் ஜென்மாஷ்டமி தினம் இன்று.   சீதையை கண்டுபிடித்தல், இலங்கைக்கு தீவைத்தல், வால்மீகி வதம், ராமர் பாலம்,  போரில் அடிப்பட்டு மயங்கிய ராமர் லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை கொண்டு வந்தது, அயோத்திக்கு ராமர் திரும்ப காலதாமதமானதால் தீக்குளிக்கப்போன பரதனை மனோவேகம் வாயுவேகமா போய் காப்பாற்றியது, ராம அவதாரம் முடிஞ்சு, கிருஷ்ண அவதாரம் வந்தபின்னும் , மகாபாரதப்  போரில் அர்ஜுனனின் தேர்க்கொடியாய்  இருந்து  தீய சக்திகளை கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் அண்டவிடாமல் காப்பாற்றியது என விஷ்ணு அவதாரங்களில்  அனுமனின் பங்கு  அளப்பரியது. அதனால்தான்  கருடபகவானை பெரிய திருவடியாகவும்,  அனுமனை சின்ன திருவடியாகவும் புராணங்கள் போற்றுது . பெரிய  திருவடியான கருடனுக்கு இல்லாத சிறப்பு சிறிய திருவடியான அனுமனுக்குண்டு. அது என்னன்னா, தனிப்படட கோவில்கள் பார்முழுக்க அனுமனுக்கென இருக்கு.

ராமஅவதாரம் நிகழவிருந்த சமகாலத்தில், அதாவது, குழந்தை பேறின்றி இருந்த தசரதன், புத்திரகாமேட்டி யாகம் செய்து , அதன் பிரசாதமான பாயாசத்தை தசரதன் மனைவிகள் உண்டதின் மிச்சத்தின் ஒரு பருக்கையை கருடன் கொத்திக்கொண்டு சென்று, அஞ்சனையிடம் சேர்க்க,  யாகத்தின் பலன் அஞ்சனை, கேசரி தம்பதிக்கும்  கிடைத்து  மார்கழி மாதத்தின் மூலம் நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, தங்கள் அழகு மகனுக்கு சுந்தரன் என பெயரிட்டு, பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.  

அனுமனின் பிறப்புக்கான காரணமாக  இன்னொரு காரணமும் சொல்வாங்க. அது என்னன்னா, ராமர் அவதாரத்தின்போது, தேவர்கள்,விலங்குகள், பறவைகள்ன்னு தங்களது பங்களிப்பை கொடுக்க ஆசைப்பட்டு ஆங்காங்குபலவாறாக அவதரித்தன. ராமஅவதாரத்தில் தன் பங்கும் இருக்கவேண்டி ஆசைப்பட்ட சிவன், தன் மனைவி பார்வதியிடம் சொல்லி,  விலங்குமுகமும், மனிதஉடலுங்கொண்ட ஒரு மகனை பெற்றுத்தரச்சொல்லி கேட்க, ஏற்கனவே அப்படி ஒரு பிள்ளையை(வினாயகரை) வைத்துக்கொண்டு,  தான் பெருத்த மனவேதனை அடைவதாகவும், இன்னொரு பிள்ளையை அதுப்போல என்னால் பெற்றுத்தர ஆகாது என மறுக்க, தன் சிவஅம்சத்தை வாயுதேவனிடம் கொடுத்து, அதை முதலில் தென்படும் பெண்ணிடம் சேர்க்க சொல்லி பணிக்கிறார். அதுப்போலவே சிவஅம்சத்தை சுமந்துக்கொண்டு வான்வழியே செல்ல, மலைமேல் உலவிக்கொண்டிருந்த அஞ்சனையை கண்டு தழுவி, தான் சுமந்து வந்த சிவஅம்சத்தை அவளிடம் வாயுதேவன்  சேர்பித்தார்.   ஒரு கன்னிப்பெண்ணான, தன்னை இன்னொரு ஆடவன் தீண்டலாமா எனக்கேட்க, நான் தழுவியதால் உன் கற்புக்கு யாதொரு பாதகமும் நேராது.   சிவஅம்சத்தோடு கூடிய என் அம்சமும் சேர்ந்து உனக்கொரு மகன் பிறப்பான். அவனால் நீயும் பெருமைப்படுவாய் எனச்சொல்லி அவ்விடம் அகன்றார். அதன்பின் அஞ்சனை, கேசரியை மணந்து  அனுமனை பெற்றாள் எனவும் சொல்லப்படுது. 
ஒருமுறை அஞ்சனை, உணவூட்ட நேரமானதால், பசி தாங்காத சுந்தரன், அப்போதுதான் முளைத்துவரும் இளஞ்சூரியனை, காவி நிறத்திலான  பழமென எண்ணி, சூரியனை பிடித்து வாயில் போட்டுக்கொண்டாராம். சுந்தரன் வாயிலிருந்து சூரியனை  வெளிக்கொணரவேண்டி, தேவேந்திரன் சுந்தரனின் தாடையில் வஞ்ராயுதத்தால் இடித்ததன் விளைவு சுந்தரனின் அழகுமுகம் மாறி இப்ப இருக்கமாதிரி  ஆகிவிட்டதெனவும் சொல்லப்படுது. அனுமன் என்ற சொல்லுக்கு வளைந்த தாடையுடைவன்னு பொருளாம். 


சுக்ரீவன் அரசவையில்  அமைச்சராக இருந்து ஸ்ரீராமரை சந்திக்காமலயே அவரின் பாராக்கிரமத்தை கேள்விப்பட்டு, அவரின்மீது பக்தி கொண்டார். பின்னர், ராமன் சுக்ரீவன் சந்திப்பு நடந்து, அனுமனும், ராமனும் சந்தித்தப்பின் ராமனின் பக்தனாகி ராமனின் அடிப்பற்றியே நடந்தார் அனுமன். கடல்கடந்து சீதையை கண்டதுமுதல், ராமபட்டாபிஷேகம்வரை அனுமனின் பங்கு அளப்பறியது. அதுலாம் சொல்லனும்ன்னா, பதிவு நீளும்...  அதனால,  பர்த்டே பேபியான அனுமனை பத்தி மட்டுமே இந்த பதிவில் பார்ப்போம்...  


அனுமனை வெண்ணெய் காப்பில் பலமுறை தரிசிச்சிருப்போம்.. அதுக்கு காரணம், ராமனுக்கும், ராவணனுக்குமிடையில் நடந்த கடுமையான போரின்போது, ஒரு சமயம்  ராமர், லட்சுமணனை சுமந்துக்கொண்டார்.  அப்போது ராவணன் விட்ட அம்பு மழையால், அனுமனின் உடலில் காயங்கள் ஏற்பட்டது. காயத்தின் எரிச்சல் தாளாமல் அனுமன் துவண்டபோது எரிச்சல் நீங்க ராமர் வெண்ணெய் பூசினாராம். அதனால்தான், நாம் நினைச்ச காரியம் நடக்க, அனுமனுக்கு ஐஸ் வைக்க வெண்ணெய் காப்பு செய்து வழிப்படுகிறோம்.


அனுமன் கோவிலில் பிரசாதமாய் செந்தூரம் கொடுப்பது வழக்கம்.. இதுக்கு என்ன காரணம்ன்னா, அடர்ந்த கானகத்திலும், சீதை செந்தூரப்பொட்டு வைக்கும் வழக்கத்தை விடவில்லை. இதைக்கண்ட, அனுமன் சீதையிடம், தாயே! தாங்கள் நெற்றியில் சிவப்பாய் எதோ வைத்திருப்பதன் காரணமென்னன்னு கேட்க,  தன் கணவனான, ஸ்ரீராமர் நூறாண்டு காலம் வாழவே செந்தூரப்பொட்டு வைப்பதை வழக்கமா வைத்திருப்பதாக சொல்ல,  அங்கிருந்த செந்தூரத்தை தன் உடல் முழுக்க பூசிக்கொண்டார். சீதை காரணம் கேட்க, இத்தூனூண்டு பொட்டு வச்சா, நூறாண்டு ராமர் நல்லா இருப்பார்ன்னா, நான் உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டா எத்தனை நூறாண்டு ராமர் நலமாய் இருப்பார்?! வானம் பூமி இருக்கும் காலம்வரை ராமர் நலனில் பழுது வராதில்லையா என கேட்டு சீதையை வாயடைக்க செய்தாராம். அத்தனை உயர்ந்த பக்தி, அன்பு அனுமனுடையது...

அனுமனுக்கு வெற்றிலைமாலை சார்த்துவதை பார்த்திருக்கோம்.  அதுக்கு என்ன காரணம்ன்னா, அசோகவனத்திலிருந்த சீதையை அனுமன் கண்டபோது அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொள்ள சென்றாள். அவளை தடுத்து, தன்னை இன்னாரென அடையாளப்படுத்தி, ராமனின் கணையாழியை தந்து, ராமன் விரைவில் வந்து சீதையை சிறை மீட்பாரென கூறி, ராமனை சமாதானப்படுத்த,  சீதையின் சூடாமணியை பெற்றுக்கொண்டு அனுமன் கிளம்பும்போது, அருகிலிருந்த வெற்றிலை செடியிலிருந்து ஒரு வெற்றிலையை பறித்து, அனுமனின் தலைமீது வைத்து, சிரஞ்சீவியாய் இருப்பாய் என சீதை ஆசீர்வதித்தாள்.  அதனாலாயே நினைத்தட காரியம், தடையில்லாமல் நடக்க, வெற்றிலை மாலை சாற்றுவதை வழக்கமாய் கொண்டிருக்கிறோம். 


அனுமனுக்கு வடைமாலை சாத்துவதன் ரகசியம் என்னன்னா.. அனுமன் சூரியனை பழமென நினைத்து பிடிக்க சென்ற அதேவேளையில், கிரகணம் உண்டாகும் நேரம் நெருங்குவதால் சூரியனை பிடிக்க, ராகுவும் விரைந்துக்கொண்டிருந்தாராம்.  வாயு புத்திரனது வேகம் அசாத்தியமாய் இருந்ததை கண்டு ராகு  வியந்ததோடு அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.  அனுமனின் வேகத்துக்கு பரிசாக, தனக்கு உகந்த தானியமான உளுந்தால்  உணவுப்பண்டம் தயாரித்து அனுமனுக்கு சார்த்தி வழிப்பட்டால் ராகுவால் ஏற்படும் தோசம் நீங்குமெனவும், அப்படி வணங்குபவர்களை எக்காலத்திலும் தான் கஷ்டப்படுத்த மாட்டேனெனவும் அருளினார். அப்பண்டமும், தன் உடலினைப்போல(ராகு பகவான் மனித முகமும், பாம்பு வடிவமும் கொண்டவர்) நீண்டு வளைந்து இருக்க வேண்டுமெனவும் கண்டிசன் போட்டார்.  அதன்படிதான் வடை மாலை உண்டானது.
இப்படி அனுமனுக்கு நைவேத்தியமா வடை செய்ய, கருப்பு உளுந்தை அதிகமா ஊறவிடாம உப்பும், மிளகும் சேர்த்து அரைச்சு, எண்ணெயில் பொரிச்செடுக்கனும். வெற்றுகைகளில் வடைகளை தட்டக்கூடாது. சுத்தமான வெள்ளை துணியில் வைத்துதான் தட்டனும். வடை தட்டும்போது பேசுதல், இருமுதல், தும்முதலின்போதும் எச்சில் தெரிக்காம இருக்க வாயில் வெள்ளை துணியை கட்டிக்கனும். பொதுவாக அனுமனுக்கு 27, 54, 108, 1,008 என்ற எண்ணிக்கையில் வடைகள் கோர்க்கப்பட்டு வடைமாலை சார்த்தப்படும். அனுமன் ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் சில கோயில்களில் 1,00,008 என்ற எண்ணிக்கையில் வடை கோக்கப்பட்ட வடைமாலை சார்த்தப்படுகிறது.  இதில் 108, 1,008 ஆகியவை `பூரண வடைமாலை’ என அழைக்கப்படுது.  27 என்ற எண்ணிக்கையில் கோக்கப்பட்ட வடைமாலை, நட்சத்திரங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறவும், 54 என்ற எண்ணிக்கையில் கோர்க்கப்படும் வடைமாலை கிரகங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறவும் அனுமனுக்குப் சார்த்தப்படுகிறது.


பொதுவா அனுமனைவிட, அனுமனின் வாலுக்கு சக்தி அதிகம்ன்னு சொல்வாங்க.  ராமாயணம் முழுக்க அனுமனின் வாலால் நிகழ்ந்த அற்புதம் நிரவி கிடக்குது.  ராம அவதாரத்தில் சிவனின் அம்சம் போல் தன் அம்சமும் இருக்க வேண்டுமென நினைத்த சக்தி அனுமனின் வாலில் குடிபுகுந்ததாய் சொல்லப்படுது. அனுமனின் வாலை வணங்குதல் பார்வதி தேவியை வழிப்பட்டதற்கு சமமாகும்.   அனுமனின் வாலில்  நவக்கிரகங்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படுது. அனுமன் வழிபாட்டால் நவக்கிரகங்களால் உண்டாகும் தோசங்கள் நீங்கும்.    


மகாபாரத காலக்கட்டத்தில் திரவுபதியின் ஆசையை நிறைவேற்ற சவுகாந்திகா மலரை தேடி, வனமெங்கும் பீமன் அலைந்து, களைத்திருந்தபோது, தான் செல்லும் வழியில் கிழட்டு குரங்கொன்று வாலை நீட்டி அமர்ந்திருந்ததை கண்டு கடுங்கோபம் கொண்டு, ஏய்! கிழடே! பாதையை அடைத்துக்கொண்டு உனக்கு என்ன தியானம் வேண்டி கிடக்கு?1 என வினவ, வார்த்தை முற்றி, தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்கன்னு கேப்டன் போல பீனம் சீற, சரிப்பா, என் வாலை தூக்கி போட்டுட்டு போன்னு அனுமனும் சொல்ல, பீமன் எத்தனை முயன்றும் அந்த வாலை நகர்த்த முடியலியாம். அப்புறம்தான் நான் என்னும் அகந்தையை விட்டு பணிந்தபின் தான், வந்திருப்பவர் அனுமன் என்றும் இருவரும் அண்ணன் தம்பி எனவும் தெரிந்து பணிந்து, எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங்களையும் அளித்து வாழ்த்தியதுபோல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல சவுபாக்கியங்களையும் அருள வேண்டும் என பீமன் வேண்ட. அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. அனுமனின் உடலிலிருந்து வால் தொடங்கும் இடத்திலிருந்து பொட்டு வைக்க ஆரம்பித்து வாலின் நுனிவரை வைக்கனும். முதலில் சந்தனம், பின்னர் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.

ராவணன் அரசவைக்கு தூதாய் வந்தபோது அனுமனை தரக்குறைவாய் நடத்துவதாக எண்ணி, அவனுக்கு ஆசனம் ஏதும் தராமல் அசிங்கப்படுத்தினான் ராவணன். அனுமன் விஸ்வரூபம் கொண்டு தன்வாலால் ராவணனைவிட உசந்த ஆசனம் உண்டு செய்ததும், அனுமன் வாலில் ராவணன் தீ வைக்க, அதன்மூலம் இலங்கையை தீக்கிரையாக்கினதுலாம் நாம் அறிந்த கதைதானே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் பார்ப்பாங்க. ஆனா நான் பல சோறுகளை இங்க சொல்லிட்டேன். அப்படின்னா அனுமனின் வாலில் இருக்கும் சக்தி எம்புட்டு கணக்கிட்டு பாருங்க. 

அனுமன் வாலில் மணி ஒன்று கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீங்க. அதுக்கு என்ன காரணம்ன்னா, தான் ராமனுக்காக காத்திருப்பதை விரைந்து சென்று ராமனிடம் சொல்ல அனுமனை பணித்த சீதை, அனுமனுக்கு தன் வேலையை அடிக்கடி நினைவூட்ட அவன் வாலில் ஒரு மணியை கட்டி அனுப்பினாள், அனுமன் அசைவால் மணி கினுகினுக்க, அதன் ஓசை சீதையையும், சீதையின் கட்டளையையும் அனுமனுக்கு நினைவூட்ட இந்த ஏற்பாட்டை சீதை செய்தாள்.  அதனால்தான் நாமும் நம் கோரிக்கையை அனுமனுக்கு நினைவூட்ட அவன் வாலில் மணியை கட்டி வழிபடுறோம். 

அனுமனின் தோற்றம் பத்தி இப்போதைக்கு இது போதும். பதிவின் நீளம் கருதி, அனுமனின் ஒன்பது அவதாரங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்...

ஜெய் ஆஞ்சயனேயா!

ஸ்ரீராமஜெயம்.. ஸ்ரீராமஜெயம்..

நன்றியுடன்,
ராஜி. 

10 comments:

  1. சிறப்பு... மிகவும் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ ஒரு கதை சொல்லி நம்பவைக்கும் இந்த கர்ணபரம்பரைக் கதைகள் சுவாரசியமானவை இவற்றில் எதை எடுக்க எதை விட என்பதே முக்கியமானது எப்படியோ இக்கதைகளைக் கொண்டு சேர்க்கிறீர்களே பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புராணக்கதைகள் தெரிஞ்சுக்க பிடிக்கும்ப்பா. ஆனா, அதையெல்லாம் உடைச்சு பார்த்துக்கிட்டிருந்தா கடவுள் பக்தியே இல்லாம போகும்.

      Delete
  3. சிறப்பான பகிர்வு.

    வடக்கில் அனுமன் ஜெயந்தி மார்ச்/ஏப்ரல் மாதத்தில் தான்! இங்கே இருப்பவர்கள் அப்போது தான் கொண்டாடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி முரண்படுவதால்தான் கடவுள் நம்பிக்கை குறைய ஆரம்பிக்குது.

      Delete
  4. எனக்கு முருகன் ஆஞ்சு பிள்ளையார் ஃபேவரைட்...ஆஞ்சு படங்கள் எல்லாம் சூப்பர்னா கதைகளும். சூப்பர் ராஜி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முருகன் மட்டுமே கீதாக்கா

      Delete
  5. அனுமனைப் பற்றி அபூர்வமான செய்திகளை அறிந்தோம். தமிழகத்தில், குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூரில் அதிகமான அனுமார் கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் சிரஞ்சீவி என்று மட்டுமே கூட கூறுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப ஊருக்கு நாலு அனுமன் கோவில் வர ஆரம்பிச்சுட்டுது. தஞ்சாவூரில்தான் அதிகப்படியா அனுமன் கோவில் இருக்குன்னு இப்பதான் கேள்விப்படுறேன்ப்பா.

      Delete