Wednesday, January 09, 2019

வாழ்வில் தோற்றுப்போன ஊர்மிளா - வெளிச்சத்தின் பின்னே

ஒருவீடு இருவாசல்ன்னு பாலச்சந்தர் படம் ஒன்னு வந்து, அப்ப டிடில போட்டாங்க. படம் அப்ப மொக்கையா தெரிஞ்சது, ஆனா, அந்த படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருத்தி சினிமாவில் சைடு ஆக்டரா வரும். சைடு ஆக்டர்களின் வேலை, படும்பாடு, அவமானம்ன்னு அந்த படத்துல காட்சிப்படுத்தி இருப்பாங்க. அந்த படத்துக்கு பிறகு சைடு ஆக்டர்களை சினிமாவி கவனிச்சு பார்க்க ஆரம்பிச்சேன். கதாநாயகன்/கிகளைவிட அழகும், திறமையும் அதிகமுள்ள ஆட்கள் சைடு ஆக்டரா இருக்காங்க. அதேமாதிரிதான் புராணகதைகளிலும் தங்களோட பங்களிப்பு, தியாகம், வலி, வேதனை வெளிச்சத்துக்கு வராத  நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு. அதுலாம் நேரம் கிடைக்கும்போது வெளிச்சத்தின் பின்னே பகுதியில்  ஒவ்வொருத்தரா பார்க்கலாம்.  இன்னிக்கு ராமாயணத்தில் வரும் ஊர்மிளா கதாபாத்திரத்தை பார்க்கலாம்.

ராமாயணத்தில் ராமன்-சீதையின் பிரிவு, லட்சுமணனின் தியாகம், பரதனின் அன்பு, குகனின் நட்பு, அனுமனின் பக்தி... இப்படி  பல பாத்திரங்கள் பேசப்பட்டது. அம்புட்டு ஏன்?! நெகட்டிவ் கேரக்டர்களான ராமனை காட்டுக்கு அனுப்பிய கைகேயி, எதிரி ராவணன், அவன் தம்பி விபீஷ்ணன், ராவணனின் மனைவி மண்டோதரி,  வாலியையெல்லாம் சிலாகிக்கும் ஆட்கள் உண்டு. ஆனா, ராமாயண கதைக்காக பலர் செஞ்ச தியாகத்தைவிட ஊர்மிளா, செஞ்ச தியாகம் அதிகம். அவளை பொறுத்தவரை எல்லாமே திணிக்கப்பட்டவையே! ஆனாலும் அதிகம் பேசாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாள்.

சீதாதேவி கண்டெடுத்த பெண். சீதாதேவி அரண்மனைக்கு வந்த ஒரு வருடம் கழித்து பிறந்தவள்தான் இந்த ஊர்மிளா. ஆம் ஜனகர்-சுனைனா தம்பதியின் மூத்தமகளே இந்த ஊர்மிளா. ஆனால் மிதிலையின் இளவரசி மைதிலி, விதேக நாட்டின் இளவரசி வைதேகி, ஜனகனின் மகள் ஜானகி என நியாயமாய் தனக்கு வரவேண்டிய பட்டங்கள் அனைத்தும் வளர்ப்புக் குழந்தை சீதைக்கு சென்றதை பற்றி  அவள் கவலைப்பட்டதே இல்லை. 

பார்த்ததும் சீதைக்கு ராமன்மேல் காதல் உண்டானது. கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. ஆனா, இலவச இணைப்பா சீதையின் சகோதரிகளான ஊர்மிளா,  மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்த்திக்கும் முறையே லட்சுமணன், பரதன் சத்ருக்கனுக்கும் திருமணம் நடந்தேறியது.  விஷ்ணுவின் கையிலிருக்கும் சங்கும் சக்கரமும்  பரதன் சத்ருக்கனாயும்,  ஆதிசேஷன் லட்சுமணனாய் அவதாரமெடுத்தாங்க. அவர்களை, தந்தைக்கும், சகோதரிக்காகவும் திருமணம் செய்துக்கிட்டாலும் ஊர்மிளாவும் மற்ற சகோதரிகளும் தமது கணவர்மார்களுடன் மனமொத்துதான் வாழ்ந்து வந்தாங்க. அதிலும், இரண்டாமிடத்திமிலிருக்கும் ஊர்மிளாவுக்கு இரண்டாமிடத்திலிருக்கும் லட்சுமணனுடன் திருமணம். அவனும் தன் இரண்டாமிடம் பற்றி வருத்தப்படாதவன் என்பதால் இருவருக்கும் இயல்பாகவே ஒத்துப்போனது. மனசு ஒத்துப்போனால் மகிழ்ச்சிக்கு குறைவேது?! மனசுக்குள் காதல் இருந்தாலும் ஒருபோதும் ஊர்மிளாவோடு இணைந்தானில்லை. ராமனுக்கு ஊழியம் செய்வதிலேயே நாட்கள் கழிந்தது. ஊர்மிளா குணநலன்களில் சிறந்து விளங்கினாள். சிறந்த பதிவிரதையானதால் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறியும் திறனை தன் பூஜை, விரதங்களால் அடைந்தாள்.  ஊர்மிளாவிடமிருந்தே பல விரதமுறைகளையும், சுமங்கலித்துவம், கணவன் மற்றும் குடும்பங்களை காக்கும் ரட்சா காப்பு சக்திகளை அடையும் வழிமுறைகளையும் சீதை கற்றாள். அப்படி ஊர்மிளா சொல்லித்தந்த விரதமுறைகளே அசோகவனத்தில் சீதைக்கு அரணாய் நின்று அவளை காத்தது. 

திருமணம் முடிஞ்சு அயோத்தியில் எல்லாரும் சந்தோசமாய் வாழ்ந்த காலத்தில் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க தசரதன் விரும்பி நாள் குறித்தான். பெற்ற அன்னையைவிட பாசம்காட்டிய கைகேயி பரதன் 14 வருடம் நாடாள, ராமன் 14 வருடம் காட்டுக்கு போகனும்ன்னு வரம் கேட்க தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதின்னு சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்கமாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்ப ஆயத்தமானான்.
கோவத்துல வார்த்தைகளை விட்டுட்டு, அப்புறமா யோசிப்பவங்க அதிகம். அதுமாதிரி மனைவி ஊர்மிளா என்ன சொல்வாளோ?! தன்னோடு வருவேன்னு சீதாதேவி ராமருடன் புறப்பட்டமாதிரி கிளம்பிடுவாளோ! அவள் வந்தால் ராம-சீதாவை சரிவர கவனிக்க முடியாதேன்னு உள்ளம் கலங்கியபடி தன்னோட அறைக்கு லட்சுமணன் வர்றார். அங்க ஊர்மிளையை கண்டதும் அவருக்கு தூக்கிவாரி போட்டது.  சர்வ அலங்காரத்துடன் மஞ்சத்தின்மேல் எழிலாய் கிடந்தாள் ஊர்மிளா. ராமர் காட்டுக்கு போவதை நினைத்து ஊரே கலங்கி நிற்க, இவள் இப்படி இருக்கிறாளே என கடுங்கோபம் கொண்டு ஊர்மிளாவை தகாத வார்த்தையால் பேசினான் லட்சுமணன். காட்டுக்கு லட்சுமணன் போகக்கூடாதென ஊர்மிளா வாதிட்டாள். 

அடுத்த அரசனை நியமிப்பது அரசவை, நாடு சம்பந்தப்பட்ட விஷயம்.  அதில் ஒரு அரசன், தன்மனைவி பேச்சைக் கேட்பது எந்த வகையில் நியாயம்? அப்படியே மனைவி பேச்சை கேட்டு தசரதன் ராமரை காட்டுக்கு போகச்சொல்ல, ராமர் காட்டுக்கு போவது மகன் தந்தைக்காற்றும் உதவி. ராமரோடு சீதா காட்டுக்குபோவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. நீங்கள் ஏன் அவர்களோடு போகிறீர்கள்?! உங்களை ஒன்றும் தசரத-கைகேயி காட்டுக்கு போகச்சொல்லவில்லையே! தன்னோடு வரச்சொல்லி ராம-சீதா அழைக்கவில்லையே. பிறகு எதற்கு காட்டுக்கு போகிறீர்கள்?! என வாதிட்டாள்.

காட்டுக்கு சென்றே தீருவேன் என லட்சுமணனும் பிடிவாதம் பிடிக்க,  உன் தந்தை,  தன் மனைவி பேச்சைக் கேட்டு நடக்கும்போது நீயும் அப்படி ஏன் நடக்கக்கூடாது? என கணவனை சீண்டுகிறாள் ஊர்மிளா. ஆனா, அவள் பேச்சைமீறி லட்சுமணன் கிளம்புகிறான். ஆரத்தி எடுத்து. கணவனை வழியனுப்ப முன்வரும்போது, தன் காலில் விழப்போகும் ஊர்மிளாவைத் தடுக்கிறான் லட்சுமணன். நான் இதற்கெல்லாம் தகுதியில்லாதவன். என்னை ஒரு நல்ல தம்பியாக உலகம் போற்றலாம். ஆனா, நான் நிச்சயமாக ஒரு நல்ல கணவன் இல்லை என்பது எனக்கே தெரியும் என்று சொல்லி கடுங்கோபத்துடன், மனைவியின்மீது உச்சக்கட்ட வெறுப்போடு காட்டிற்கு செல்கிறான்..
கணவன் தன்மீது கோபத்துடன் அங்கிருந்து சென்றாலும் அதைத்தான் ஊர்மிளாவும் விரும்பினாள். ஏன்னா, இதைத்தானே ஊர்மிளா எதிர்பார்த்தது. தானும் இலட்சுமணனுடன் வனவாசம் போனாலோ இல்ல அரண்மனையில்  அவரை எண்ணி வருத்தத்துடன் இருப்பதை லட்சுமணன் உணர்ந்தாலோ  இலட்சுமணன் தன் கடமையை முழுமையாக செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்த ஊர்மிளா. அதனால்தான்,  தான் ராஜவாழ்க்கைக்கு ஆசைப்படுவதுபோல நடித்து இலட்சுமணனை கோபம்கொள்ள செய்தார். இனி வனவாசம் முடியும்வரை அவர் ஒரு நொடிகூட தன் நினைவு இல்லாமல் அவருடைய கடமையை முழுமனதுடன் செய்வார் என நம்பினார் ஊர்மிளா.  இலட்சுமணன் அங்கிருந்து சென்றவுடன் தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி மனதிற்குள் அழுதாள் ஊர்மிளா. 
தாத்தாவின் நாட்டிலிருந்து திரும்பிய பரதன் நடந்ததை கேள்விப்பட்டு, தாயை திட்டி, மரவுரி தரித்து தானும் காட்டுக்கு போகும்போது அவனை தடுத்தாள் ஊர்மிளா. தசரதனை இழந்து ராமனும் காட்டுக்கு சென்று சரியான தலைமை இல்லாமல் நாட்டு மக்கள் அவதிப்படுறாங்க. அதில்லாம ஏற்கனவே இரு பிள்ளைகளை காட்டுக்கு அனுப்பிய கைகேயி, கோசலை , சுமித்ரா என்னும் மூன்று தாய்மார்கள் மனம் நொந்து போயிருக்கிறார்கள். அதில்லாமல் கணவனை பிரிந்து என்னை போலவே என் தங்கையும் கணவனை பிரிந்திருக்க வேண்டுமாவென பரதனிடம் அனைவரின் நலனுக்காகவும் வாதிட்டாள். 
ஊர்மிளாவை மறந்து வனவாசத்தில் இராமன்-சீதைக்கு பாதுகாப்பு கவசமாக இலட்சுமணன் இருந்தான்.  இலட்சுமணனுக்கு பாதுகாப்பு அரணாய் ஊர்மிளாவின் பவித்திரமான அன்பும் தியாகமும் இருந்தது. இரவும் பகலும் தன் அண்ணனையும் - சீதையையும் காக்க எண்ணிய இலட்சுமணன் தன் தூக்கத்தை 14 ஆண்டுகள் தியாகம் செய்தால் நன்றாய் இருக்குமெனவும், பிற்காலத்தில் இது உதவுமென்பதை முன்கூட்டியே உணர்ந்த ஊர்மிளா,  தூக்கத்தின் கடவுளான நித்ராதேவியிடம் லட்சுமணன் 14 வருடங்கள் தூங்காமல் இருக்கவேண்டுமென வரம் கேட்டாள். நித்ராதேவி அதற்கு சம்மதிக்க மறுத்துவிடடாள்.  தன் கணவனின் கடமைக்காக அவருடைய தூக்கத்தையும் சேர்த்து நான் தூங்குகிறேன் என நித்ராதேவியிடம் கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார் ஊர்மிளா.
தூங்குவது மிகப்பெரிய தியாகமா? எந்த பொறுப்பில்லாம ஹாயா தூங்கலாம்ன்னு நினைச்சுக்கலாம். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு சோறு தண்ணியில்லாம,   நாள் கிழமைன்னு இல்லாம  14 ஆண்டுகள் இலட்சுமணனுடைய தூக்கத்தையும் சேர்த்து தூங்குவது சாதாரண வேலை இல்ல. இதனால் அவரின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கக்கூடும்ன்னு தெரிஞ்சேதான்  தன் கணவன் மீது கொண்ட காதலுக்காக அதனை செய்ய முன்வந்தார் ஊர்மிளா.
ராம-ராவணனுக்கிடையிலான  போரில் இராமனுடைய படைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருந்தவன் இராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித். அவனை வதைப்பது என்பது இராமனுக்கே சவாலாய் இருந்தது. ஏன்னா, இந்திரஜித்  வாங்கி வந்த வரம் அப்படி. எவன் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனால் மட்டுமே, தான் கொள்ளப்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் இந்திரஜித். அதன்படி இலட்சுமணின் தூக்கத்தையும் சேர்த்து ஊர்மிளா 14 ஆண்டுகள் தூங்கியதால் மேகநாதனை கொல்லும் தகுதி பெற்ற ஒரே ஆளாக இலட்சுமணன் இருந்தார். அதனால் மேகநாதனையும் கொன்றார், ஊர்மிளாவின் இந்த தியாகம் மட்டும் இல்லையெனில் இராமனால் போரில் வெல்வது மிகக்கடினமாய் இருந்திருக்கும். 
போரில் வெற்றியடைந்து அயோத்தி திரும்பிய இராமன் மற்றும் சீதையை எல்லோரும் கோலாகலமாக வரவேற்று எல்லோரும் மகிழ்ந்திருந்தனர். ராமர் பட்டாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், இலட்சுமணன் ஊர்மிளா மேலிருந்த கோபத்தால் ஊர்மிளாவை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ஊர்மிளா மனம் நொந்தாள்.  தன் சகோதரியின் முகத்தில் கவலைரேகை ஓடுவதைக்கண்ட சீதை அதற்கான காரணத்தை கேட்டபோது, இலட்சுமணனை வனவாசம் அனுப்ப தான் அரங்கேற்றிய நாடகத்தையும், அவருக்குக்காக 14 ஆண்டுகள் உறங்கியதையும் கூறிய ஊர்மிளாவை ஆயிரம் சீதை சேர்ந்தாலும் உன் ஒருத்தியின் பவித்திரத்திற்கும், தியாகத்திற்கும் ஈடாகாது என கண்ணீர் விட்டு அணைத்த சீதை, லட்சுமணனிடம் உணர்த்தியபின் ஊர்மிளாவிடம் மன்னிப்பு கோரினார் லட்சுமணன்.
சீதை அக்னிப்பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளாவின் கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச்சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், சீதையால் அதை மீற முடியுமா?!  பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப்பட்டதால்தானே ராமன் பேசாமல் இருந்துவிட்டான். அதனால்தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென  சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். சீதா-ஊர்மிளாவின் தாய் தந்தையர் திருமணம் செய்வித்து கொடுத்ததோடு சரி. ஒருமுறைகூட அயோத்திக்கு வந்து எப்படி மகள்கள் இருக்காங்கன்னு பார்க்கவே இல்ல. அதனால் சீதை உட்பட மற்ற சகோதரிகளுக்கும் தாயாய் ஊர்மிளா இருந்தாள்.
ராமர் பட்டாபிஷேகம்லாம் முடிஞ்சு எல்லாரும் நிம்மதியாய் இருந்த காலக்கட்டம் தொடங்கியது. ராமரும் சீதையும்கூட தங்கள் வாழ்க்கையை ஆரம்பிச்சாங்க. நாமும் இல்லற வாழ்க்கையை தொடங்கலாம்ன்னு நினைச்ச ஊர்மிளாவுக்கு அடுத்த இடி விழுந்தது. சோர்வுடன் வந்த லட்சுமணன், 14 வருடங்களாய் தூங்காத தூக்கத்தை இனி தூங்கனும். உன் மடியை கொடுன்னு படுத்துறங்க ஆரம்பிச்சான். அவனது தூக்கம் 14வருடங்கள் தொடர்ந்தது.
எந்த ஒரு காலக்கட்டத்திலும் ஊர்மிளா தன் பங்களிப்பை அளிக்க தவறவே இல்லை.  ராமன் நாடாளும்போது, சீதை கருத்தரித்தாள். மாறுவேடம்கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக்குளிக்க சொன்னதை வெகுண்டெழுகிறாள்.  சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசிடக்கூடாதேன்னுதான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான்ன்னு அவளை சமாதானப்படுத்த பலர் முயற்சிக்கையில்,    ஊர்மிளா ராமனிடம்,  இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள்லாம் நீ வனவாசம் போகக்கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவிமடுக்கவில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்குதான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம்தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என  கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை.

இராமன் விஷ்ணுவின் அவதாரம், சீதையோ,  இலட்சுமியின் அவதாரம், இலட்சுமணனோ ஆதிசேஷனின் அவதாரம். அவர்கள் தங்களின் கடமையை செய்வதற்காக செய்த தியாகங்களை காட்டிலும் மனித பிறவியான ஊர்மிளா தன் கணவர்மீது கொண்ட காதலுக்காக செய்த தியாகம் மிகப்பெரியது. அந்த 14 ஆண்டுகளும் அரண்மனையின் எந்தவித சுகபோகங்களையும் அனுபவிக்காமல் தன் கணவரை போலவே விழித்திருக்கும் நேரத்தில் வனவாச வாழ்க்கையே வாழ்ந்தார் ஊர்மிளா. இராமன் மற்றும் சீதாவின் காதலுக்கு எந்தவிதத்திலும் குறையாத காதல் இலட்சுமணன் மற்றும் ஊர்மிளாவிற்கு இடையேயான காதல். 

ராமாயணத்தில் மனைவிக்கான கடமை, தாய்க்கான கடமை, மகன், சகோதரன், தலைவன், குரு, நண்பன்.. என அனைவருக்குமான கடமை சொல்லப்பட்டிருக்கு. ஆனால் மனைவிக்கான கணவனின் கடமையை எந்த இடத்திலு சொல்லப்படவே இல்லையென சீதை பூமிக்குள் புதையுண்டபின் அழுது அரற்றி ராமனிடம் வாதிடுகிறாள். 
அழகும்,குணநலனும், அறிவும், ஆற்றலுமென சீதைக்கு சற்றும் குறைவில்லாதவள் ஊர்மிளா. ஆனாலும், அவதாரமூர்த்தியையே மணந்தாலும் தியாகவாழ்க்கையே வாழ்ந்து வந்தாள்.  சகோதரிகளுக்கு தாயாய், மனைவியாய், மருமகளாய், தலைவியாய் திறம்பட வாழ்ந்த ஊர்மிளாவின் தியாகம் விளக்கினடியிலிருக்கும் இருள்போல வெளிவராமலே போனது...  அவளுக்கான தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றவளாகவே முடிந்து போனது அவளது கதாபாத்திரம்.

மீண்டும் ஒரு பேசப்படாத கதாபாத்திரத்துடன் வருவேன்..

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. ஊர்மிளா தியாகம் சிறப்பானது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. ஆனா, பிரதிபலனை எதிர்பாராமல் செய்த தியாகம். அவள் வாழ்க்கையில் எல்லாமே திணிக்கப்பட்டவையே. ஆனாலும் முழுமனசோடு எல்லாத்தையும் தாங்கிக்கொண்டாள்.

      Delete
  2. அருமையான கதை......அழகான படங்கள் சொல்லிய சேதிகள்.....மறுபக்கம் என்று ஒன்று எல்லாவற்றிலுமே,உண்டு............ நன்றி தங்கச்சி,பதிவுக்கு..........

    ReplyDelete
    Replies
    1. நாம முக்கியமான கதாபாத்திரத்தை பார்த்து அத்தோடு விட்டுடுறோம். ஒரூ கட்டிடம் எழும்ப ஒவ்வொரு பொருளும் முக்கியம். எதுவுமே தேவையின்றி இருக்காது. அதுமாதிரிதான் புராணக்கதையிலும்...

      Delete
  3. ஊர்மிளாவினுள் உறங்கிக் கொண்டிருந்த இத்தனை ப்ரச்னைகளையும் சொன்னதற்கு பாராட்டுக்கள்.
    //மீண்டும் ஒரு பேசப்படாத கதாபாத்திரத்துடன் வருவேன்//
    வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. எப்பயுமே நம்மை பற்றி மட்டுமே சிந்திக்காம அடுத்தவர் மனநிலையிலிருந்தும் யோசிக்கனும். அப்படி யோசித்ததன் விளைவுதான் இந்த பதிவு.
      பொங்கல் கழிச்சு இப்படி ஒரு பேசப்படாத கதாபாத்திரம் வரும்.

      Delete
  4. சூப்பர் ராஜி! எழுப்பப்பட்ட கேள்விகள் ..இதில் ஊர்மிளையைப் பற்றி லைட்டாகச் சொல்லியிருந்தார் முரளி சகோ சீதை ராமனை மன்னித்துவிட்டாள் என்ற தலைப்புக்கு எபியில் எழுதிய கதையில்....

    அடுத்து என்ன கேரக்டர்னு அறிய ஆவல்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நீங்க யூகிக்கமுடியாத கதாபாத்திரத்தோடுதான் வருவேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா.

      Delete
  5. நல்ல பகிர்வு. இப்படியான தியாகம் செய்த ஒருவருக்கு தர வேண்டிய மதிப்பை தராமல் இருப்பது சரியல்ல.... ஆனாலும் அப்படித்தான் நடக்கிறது....

    ReplyDelete
  6. ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete