Monday, January 07, 2019

அனுமனுக்கு இம்புட்டு பலம் வந்தது எப்படி?! -ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! அனுமன் ஜெயந்தின்னு ஊரே அல்லோகலப்பட்டதே! கோவிலுக்கு போனியா?!

நான் என்னிக்கு கோவிலுக்கு போனேன்!! எனக்கும் சாமிக்கும்தான் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரமாச்சுதே!  ஆனா, புராண கதைகள் கேட்க பிடிக்கும். அனுமன் கதையை சொல்லேன்.

அனுமன் பிறந்த கதைதான் உனக்கு தெரியும்ல!  கடவுள் அவதாரமாவே இருந்தாலும் ராமனை பலமுறையும், குருஷேத்திர போரில் அர்ஜுனனி தேர்க்கொடியாய் இருந்து கிருஷ்ணரையும் அனுமன் காப்பாத்தி இருக்கார்ன்னு கதைகளில் கேட்டிருப்பே. அனுமனுக்கு அந்த பலம், வேகம் எப்படி வந்தது?! சிரஞ்சீவியாய் சாகாவரம் பெற்றது எப்படின்னு இன்னிக்கு  சொல்றேன். ஒருமுறை இந்திரனுக்கும் அனுமனுக்கும் சண்டை வந்தது. ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டாங்க.  இந்திரன் அனுமனை தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடிபட்ட அனுமன் இடதுதாடை உடைபட்டு கீழே விழுந்து கிட்டத்தட்ட சவம்போலவே கிடந்தார். தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு சவமாய் கிடந்ததை பார்த்து வருந்திய வாயுபகவான் தனது பிள்ளையான அனுமனை மடியில் கிடத்திக்கொண்டு தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால, புல்பூண்டு முதற்கொண்டு தேவர்கள்வரை எல்லா ஜீவராசிகளும் கஷ்டப்பட்டது. எல்லாரும் பிரம்மாகிட்ட போய் தங்கள் கஷ்டத்தை எடுத்து சொன்னாங்க. பிரம்மா எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாயுதேவன்கிட்ட போனார். அங்க இறந்துகிடந்த மகனை மடியில் போட்டுக்கிட்டு பரிதாபமாய் கிடந்த வாயுபகவான்மேல் இரக்கம்கொண்டு. அனுமனை தொட்டு தடவி உயிர்பிச்சார்.

இந்த குழந்தைதான் ராமாவதாரத்தில் ராவணன் உள்ளிட்ட அசுரர்களால் உங்களுக்கு வரவிருக்கும் துன்பங்களிலிருந்து விடுவிக்கமுடியும். அதனால் இவனுக்கு தேவையான பலத்தையும், உங்க ஆசீர்வாதத்தையும் கொடுங்கன்னு பிரம்மா தேவர்கள்கிட்ட சொன்னார். வாயுபகவானும் மனம் குளிர்ந்து பழையபடி தனது பணியினை செய்வார்ன்னும் பிரம்மா சொல்ல, சூரியன், தனது ஒளியில் 100-ல் 1 பங்கை கொடுத்தார். பிரம்மா, அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாக்குவதாய் வாயுபகவானுக்கு வாக்களித்தார். காற்றாலோ அல்லது நீரினாலோ அவனுக்கு மரணம் சம்பவிக்காதுன்னு வருணனும், எமகண்டத்தினாலும் நோயினாலும் அனுமன் பாதிக்கப்படமாட்டான்னு எமனும், யுத்தகளம் முதற்கொண்டு எப்போதும் சோர்வே அடையமாட்டாரென குபேரனும், இதுவரை செய்யப்பட்ட எந்த ஆயுதத்தாலும் பாதிக்கம்மாட்டாரென தேவலோக சிற்பி விஸ்வகர்மாவும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்படாமல் பிரம்மஹத்தி தோஷம் அண்டாதென விஷ்ணுபகவானும்,விரும்பிய வடிவமெடுக்கவும் பய உணர்ச்சி சிறிதுமின்றியும் இருக்கும் வரத்தை பரமசிவனும், நினைத்த இடத்துக்கு, நினைத்த நேரத்தில் போகும் வரத்தை லட்சுமிதேவியும், யுத்தகளத்தில் தோற்காத வரத்தை பராசக்தியும், அறிவாற்றலை சரஸ்வதிதேவியும் தந்தருளி அனுமனை ஆசீர்வதித்தார்கள். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயுபகவானும் மீண்டும் தனது இயக்கத்தினை தொடர்ந்தார். அனுமனும், பராக்கிரமசாலியாவும், ஞானியாகவும், புத்திக்கூர்மையுடன் சிறந்து விளங்கி ராம அவதாரத்தில் தன் பங்கினை சிறப்பாய் செய்தார்ன்னு புராண கதைகள் சொல்லுது.

இப்படியே எதாவது கதை சொல்லிக்கிட்டே இரு, நீ சொல்றதுலாம் உண்மைன்னு நானும் நம்பிக்கிட்டே இருக்கேன். நான் நம்பிக்கிட்டே இருக்கேன்னு நீயும் கூடுதலா கதை விட்டுக்கிட்டே இரு மாமா.

சரி புராண கதை சொன்னால்தான் நம்ப மாட்டே. அப்பள கதை சொல்றேன். அதையாவது நம்பு.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பேராலயும், ஒவ்வொரு விதத்திலுமென நாடு முழுக்க கிடைக்குது அப்பளம். இது நம்ம சாப்பாட்டுல மட்டுமில்லாம  இலக்கியம், கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள்ன்னு  எல்லாத்திலயும்  இதன் ருசி பதிவாகி இருக்கு. அப்பளத்துக்காக மட்டும் அடிச்சுக்காம அப்பளத்தின் பூர்வீகம்  பீகார் மாநிலம் ன்னும், இல்லயில்ல கர்நாடகான்னும் அடிச்சுக்குறாங்க.  கேரளா மற்றும் குமரி மாவட்டத்தை ஒட்டிய இடங்களில் அப்பளத்துக்கு பப்படம்ன்னு பேராம்.  கர்நாடகத்தில் ஹப்பளமாம்!  இன்னும் சில இடத்தில் அப்பளா..ன்னும் இதுக்கு பேரு. இப்ப எல்லா இடத்திலும் பப்பட்ன்னு ஆகிடுச்சு. 

அப்பளம்ன்னா எல்லாருக்குமே பிடிக்கும்ல! 

ஆமாம் புள்ள! சுட்ட அப்பளமும், டீயும் விருந்தாளிக்கும் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் முன்பு இருந்ததாம். பிரியாணியோடும், புட்டு மற்றும் உப்புமாவோடும் அப்பளம் பரிமாறும் வழக்கம் இப்பயும் சில இடத்தில் இருக்காம். அப்பளம் உளுந்துல மட்டுமில்லாம, அரிசி, மரவள்ளிகிழங்கு மாவு.. மாதிரியான மூலப்பொருட்களில், மிளகு, சீரகம், தக்காளி, புதினா, கரம் மசாலான்னு விதம் விதமா மத்த மூலப்பொருட்கள் சேர்த்தது, வடடவடிவிலும், சேவலாகவும் அப்பளம் கிடைக்குது. இரண்டு அப்பளங்களை ஒண்ணா சேர்த்து டக்கர் அப்பளம், கலர் அப்பளம், சக்கரம், பேட், ரிங்க்,ன்னு பல வடிவத்தில் கிடைக்குது. பப்பட்ன்னா சமப்படுத்துதல்ன்னு அர்த்தம்.   

அப்பளத்தை நிறைய எண்ணெய் ஊத்தியும் பொரிக்கலாம். கொஞ்சமா எண்ணெய் வறுக்கவும் செய்யலாம். சிலர்  அப்பளத்தை சுட்டும் சாப்பிடுவாங்க.  மீதமான அப்பளத்துல குழம்பு, கூட்டும்,  அப்பளத்துவையளும் செய்யலாம். தொட்டுக்க எதுமே இல்லன்னா, நாலு அப்பளத்தை பொரிச்சும் உடைச்சு  போட்டு,கொஞ்சமா மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து  கொஞ்சூண்டு  தேங்காய் எண்ணெய் கலந்தால் அப்படியா சாப்பிடலாம். சூப்பரா இருக்கும்.  மாதா  ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும். மாங்காய் ஊட்டாத சோற்றை அப்பளம் ஊட்டும்.  என்ன இதிலிருக்கும் அதிகப்படியான உப்புதான் பிபி உயர்த்தும்.  

போதும் மாமா! டீட்டெய்லு. இப்பவே பக்கம் பக்கமா எழுதுறேன்னு முகநூல் முதற்கொண்டு எல்லா இடத்திலும் கேலி பேசுறாங்க.அதனால், ட்வீட்டர்ல  சுடட இரண்டு படைத்ததை பாரு. அப்படியே என் கேள்விக்கும் பதிலை சொல்லு. பொங்கல் பண்டிகை வருதே வீட்டை சுத்தப்படுத்தும் வேலை இருக்கு. நான் போறேன். 
என்ன புள்ள இது அதிசயமா இருக்கு.  இனி தமிழ் மெல்ல பிழைச்சுக்கும் போல!!
கவலைப்படாத மாமா. தப்பும் தவறுமா உன்னைய மாதிரி நாலு பேர் இருக்கும் வரை அந்த நல்ல காரியம் நடந்துடாது.  
பேஸ்புக்ல இருக்கும் பெண்களில்  பாதிப்பேர் பேக் ஐடிதான் போல!   

ஆமா மாமா! அதுக்கு தனியா லெக்சர் அடிக்காம இந்த கேள்விக்கு பதில் யோசி, நான் போய் வேலையை பார்க்குறேன்.  ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது.  அதை எப்படி  பிரிச்சு எடுக்குறது?! ன்னு  ராஜாவுக்கும் மந்திரிக்கும்  குழப்பம். அங்க ஒரு தராசு மட்டும்தான் இருக்கு.  ராஜா அதை எடுத்திக்கிடடார். ஆனா, மந்திரி தராசு இல்லாமயே சரியா விடையை சொல்லிட்டார். அது எப்படி?!
மாமா செல்லும்முன் சகோதரர்கள் யார் சொல்றீங்கன்னு பார்க்கேன்.

நன்றியுடன்,
ராஜி 

17 comments:

 1. தங்ககாசு நேரடியாக அனுப்பி வைத்தால் உடனே விடை சொல்றேன்.

  அப்பளம் விடயம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. பொங்கச்சீரை முதல்ல அனுப்பவும். அப்பாலிக்கா நான் பரிசும், எதிர்சீரும் தரேன்

   Delete
 2. பப்படம் அருமை...

  அப்புறம் தராசு இல்லாமயே என்னால் சொல்ல முடியாது...!

  1) 24 செம்பு காசுகளை மூன்றாக பிரித்து, (3 x 8) முதல் இரண்டு குவியலை தராசின் இருபக்கமும் வைக்க வேண்டும்...
  2) தராசு இரண்டு பக்கமும் சமமாக இருக்கா...? அப்படி என்றால் கீழே இருக்கும் குவியலில் தான் தங்க காசு உள்ளது...
  3) இப்போ கீழே உள்ள குவியலை எடுத்து மறுபடியும் 3+3+2 என்று பிரித்து, முதல் இரு மூன்றை தராசின் இருபக்கமும் வைக்க வேண்டும்...
  4) என்னது, மீண்டும் தராசு இரண்டு பக்கமும் சமமாக இருக்கா...? அப்போ மீதம் உள்ள இரண்டில் தான் தங்க காசு உள்ளது...
  5) மறுபடியும் அந்த இரண்டு தங்க காசு எடுத்து தராசின் இருபக்கமும் வைக்க வேண்டும்...
  6) எந்த பக்கம் இறங்குகிறதோ, அதை எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளவும்...

  ReplyDelete
  Replies
  1. இப்படியா கண்டுபிடிச்சாங்க?! எனக்கும் தெரியாது. தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். எனக்கு தங்க காசுலாம் வேணாம்ண்ணே.

   Delete
  2. சூப்பர் டி.டி. உங்கள் திறமையை மெச்சுகிறேன். இந்த புதிரை இவ்வளவு சுலபமாக விடுவித்த உங்களுக்கு பரிசளிக்க வேண்டாமா? 23 செம்பு காசுகளும் உங்களுக்கே. சன்மானமெல்லாம் கை நிறைய கொடுக்க வேண்டாமா?

   Delete
  3. ஹா... ஹா... நன்றி அம்மா...

   Delete
 3. அனுமனுக்கான சக்தி - நல்ல தகவல்....

  அப்பளம் - வடக்கில் ரொம்பவே பிரபலம். நம்மைப் போல அல்லாமல் சாப்பாடுடன் இல்லாமல், சும்மாவே இங்கே சாப்பிடுவார்கள். ராஜஸ்தான் பகுதியில் அப்பள சப்ஜி என்று செய்து அதை சப்பாத்திக்கு தொட்டுக்கையாக வைத்துக் கொள்வார்கள். அப்பள சப்ஜி எப்படிச் செய்ய வேண்டும் என்பதை என் பக்கத்தில் எழுதி இருக்கிறேன்.

  ராஜஸ்தானின் அப்பள சப்ஜி - https://venkatnagaraj.blogspot.com/2018/09/blog-post_4.html

  உங்கள் கருத்துரை கூட அப்பதிவில் உண்டு!

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கு தெரிஞ்சதுலாம் பொருட்காட்சி, எக்சிபிஷன்ல பொரிச்சு தரும் பெர்ர்ர்ர்ரிய டெல்லி அப்பளம்தான் தெரியும்.

   Delete
 4. அனுமனைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. ட்விட்டர்ல படிச்ச தகவல்ப்பா

   Delete
 5. ஹனுமான் தகவல்கள் சுவாரஸ்யம். எனக்கு உளுந்து அப்பளத்தைவிட அரிசி அப்பளம் பிடிக்கும். காரம் போட்ட மெகா அப்பளம் எப்பவோ சின்ன வயசில் திருவிழாவிலோருத்தரம் சாப்பிட்டிருக்கேன். உலக மகளிர் எண்ணிக்கை தகவல் புன்னகைக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. பாதிக்கு பாதி பேக் ஐடி சகோ.

   Delete
 6. அனுமன் கதை புதிது...வாயுபகவான் என்றைக்குப் போற்றுதற்குரியவரே,அதில் மாற்றுக் கருத்தில்லை.../////அப்பளமாமில்ல,அப்பளம்.......அதான் வாரத்துக்கு ரெண்டு தடவை சாப்புடுறோமே.....பெர்சா ஒண்னும் தெரியிறதில்ல....அருமையான சிறிய அவியல்....பப்பட் செம டேஸ்ட்........

  ReplyDelete
  Replies
  1. அப்பளத்தை தினத்துக்கும் சாப்பிட்டாலும் அதன்மீதான விருப்பம் குறையாதே!

   Delete
 7. அனுமனுக்கு அசாத்திய சக்தி வந்த விஷயம் சூப்பர். நம் புராணங்களில் இப்படி எத்தனையோ இருக்கு.
  எனக்கு என்னவோ பப்படத்தை விட அப்பளம்தான் பிடிக்கும், அதுவும் சுட்ட அப்பளத்திற்கே என் ஓட்டு.


  ReplyDelete
 8. அனுமன் கதை தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கு. அப்ளக்கதையும். கேரளத்துல பப்படம் தானே...அப்பளமும் பப்படமும் பிடிக்கும்.

  மகளிர் தகவல் வியப்பு.

  டிடி சொல்லிவிட்டார்னு நினைக்கிறோம். டிடி புதிர்களில், கணக்குகளில் கலக்குகிறார்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 9. ஜெய் ஸ்ரீராம் ...அனுமன் கதை புதுசு ஆனா ரொம்ப சுவாரஸ்யம் ராஜி க்கா...

  அப்பளம் எப்பவும் நமக்கு ஸ்பெஷல் தான் அவரசத்துக்கு கை கொடுக்கும் ஆபத்பாண்டவன்...

  படங்கள் எல்லாம் ரசிக்க வைத்தன..

  ReplyDelete