Friday, January 25, 2019

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் - மௌனசாட்சிகள்

ஒருசில விசயங்களில் மட்டும்  விரைவில் நடக்க இருப்பதை முன்கூட்டியே  உள்ளுணர்வு எதாவது ஒருவிதத்தில்  எனக்கு உணர்த்தும். என் பிள்ளைகள் விசயத்தில், முக்கியமா என் பெரிய பொண்ணு விசயத்தில் மட்டும் இந்த உள்ளுணர்வு எனக்கு அதிகமா வேலை செய்யும். அவள் எங்க, என்ன தப்பு செஞ்சாலும், அதுக்குமுன்னாடியே அவள்மேல் இனந்தெரியா கோபம் வரும். காரணமே இல்லாம அவள்கிட்ட எரிஞ்சு விழுவேன்.  கடுமையா திட்டுவேன். முன்னலாம் அதை அவ நம்பல. இப்பலாம் என் எரிச்சலை கண்டு அவளே தப்பு செய்யாம கவனமா இருந்துக்குறா. அதேமாதிரிதான் ஒருமுறை ஒரு இக்கட்டான சூழலில் விழுப்புரம் ரயில்நிலையத்தில் ஒரு இரவில் தனியா இருக்குறமாதிரி கனவு வந்தது. வீட்டில் சொன்னா, உனக்கும் விழுப்புரத்துக்கும் சம்பந்தமே இல்ல. அதுமில்லாம ரயில் பயணம் உனக்கு அமையவே அமையாது. இதுமாதிரி நடக்கவே வாய்ப்பில்லைன்னு என்னை சாந்தப்படுத்திட்டாங்க. அதை மறந்து மத்த வேலைகளை பார்த்திட்டிருந்தேன்.
சில மாதங்கள் கழித்து கனவில் கண்டமாதிரி கிட்டத்தட்ட அதேமாதிரியான ஒரு  இக்கட்டான சூழலில் எக்மோர் ரயில் நிலையத்தில் தங்க நேர்ந்தது. என்ன ஒரேஒரு வித்தியாசம், கனவில் நான் மட்டும். நிஜத்தில் என் பொண்ணுங்களும் உடன் இருந்தாங்க. அப்படி தங்கநேர்ந்த நாள் இன்று... என்னமோ தெரில அந்த இடத்தை பதிவாக்கனும்ன்னு தோணுச்சு பதிவாக்கியாச்சுது. 
தமிழ்சினிமா ஆரம்பிச்ச காலத்திலிருந்தே கிராமத்திலிருந்து முதன்முதலா சென்னைக்கு வரும் எந்த கதாபாத்திரத்திரமும் முதலில் பார்க்குறது இந்த சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்னு சொல்லப்படும் எழும்பூர் ரயில்நிலையமாதான் இருக்கும்.  சினிமா பலவளர்ச்சிகளை கண்டாலும் இந்த விசயத்தில் மட்டும் மாறவே இல்ல.
 சென்னையின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் இன்னிக்கும் சிவப்பு நிறத்தில் ஓங்கி நிற்கும் இந்த ரயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வச்சிருக்கும். அந்த கதைகளில் என் கதையும் ஒன்னுன்னு சிரிச்சுக்கிட்டே சொல்றதா?! இல்ல அழுதுக்கிட்டே சொல்றதான்னு தெரில!!!!
சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின்ன்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.

அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் லிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடமிருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர்தான் இந்த எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு வளைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் எக்மோர் ஆக்கிவிட்டார்கள்.

No photo description available.



இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரயில் நிலையம் கட்ட வேண்டுமென ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ம் ஆண்டு இது கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ம் ஆண்டுவரை இங்குதான் செயல்பட்டது.

இந்தப்படம் 1905 ல எடுக்கப்பட்டது அதன்பிறகு 1907 ல இந்த ஸ்டேஷன் மெட்ராஸ் ரயில்வே கம்பெனியின் முக்கிய இடமாக விளங்கியது..
அதன்பிறகு எல்லா வண்டிகளுமே இங்க இருந்துதான் புறப்பட்டது. பின்னர் 1908ல அது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில்வே கம்பனியின் கண்ட்ரோலின் கீழ வந்தது. பின்னர் சௌதர்ன் ரயில்வேயாக  1922 ல செயல்பட தொடங்கியது.  இந்தப்படம் 1925 ல எடுக்கப்பட்டது. பின்னர் பீச் தாம்பரம் எலெக்ட்ரிக் ட்ரைன் 1931 ல தொடங்கப்பட்டது. 

Image may contain: sky and outdoor
அதன்பிறகு 1953 ல பல புதிய வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக விளங்கியது. இந்த ரயில்வே ஸ்டேஷனின் கட்டிட அமைப்பு இங்கிலாந்தின் கோதிக் ரிவைவல் கட்டமைப்பை கொண்டது. இதை முதன்முதலில் ஜார்ஜ் கர்டிங் என்பவர் நான்கு பிளாட்ஃபார்ம்களுடன்தான் வடிவமைத்தார். இது முடிக்க ஐந்து வருடமாகிட்டது. அதன்பிறகு ராபர்ட் பெல்லொவ்வெஸ் சிஸ்லோம் என்பவர் இதில் கூடுதலாக 136 அடி உயரத்தில்  மணிகூண்டு அமைத்து வடிவமைத்தார். அதில் திருவிதாங்கூர் கட்டிடகலையின் கோபுர அமைப்பும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான்  சில மாறுதல்களுடன் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் இப்ப இருக்குற மாதிரி இக்கட்டிடம் முழுமை பெற்றது.  
இது இன்றைய நிலை.  பெரிய பாலங்களும், ரயில்வே ட்ராக்களும், வாகன இரைச்சல்களும், மக்களின் கூட்டமும், டிராபிக் நெருக்கடியும் இதன் அமைதியான வரலாற்றை இரைச்சல்கள் மிக்கதா மாற்றிவிட்டது. 
Image may contain: sky and outdoor
 இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப்பிள்ளைன்ற தமிழ் கான்ட்ராக்டர். சாமிநாதப்பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.
Image may contain: sky and outdoor
வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்!!!
அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இந்த ரயில் நிலையம் இருந்திருகு.  மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக்கொண்டு கதைப்பேசவே, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம்!! கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச்சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்காங்க.
அக்கால ரயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கு. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கு. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் மட்டும்தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லிசா இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரயிலின் உள்கட்டமைப்பு.
இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை ஓட்டிக்கிட்டே போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி முன்பொரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரயில் பாதைகள் வந்தபிறகு இந்த வசதி நிறுத்தப்பட்டது. இப்படி கார்களில் வந்து ரயில்களுக்கருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக்காலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்!!
No photo description available.
எழும்பூரிலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டதுன்னு சொன்னா நம்பமுடியுமா?! கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகுமூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு கூட்டிப்போவாங்க.  தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாரா இருக்கும். 1964ம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப்பாதை முற்றிலுமா சிதைஞ்சுப்போனதால் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
சிக்காகோவில் உலகப்புகழ்பெற்ற ஆன்மீக உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரயில் நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
Image may contain: one or more people, people sitting, table and indoor
இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய சென்ட்ரல் ரயில் நிலையம்  இன்று, தானே ஒரு வரலாற்று பெட்டகமாய் வெட்கப்படும் கன்னிப்பெண்ணின் கன்னம்போல சிவப்பு நிறத்தில் கம்பீரமாய் நின்றுக்கொண்டிருக்கிறது.
எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்தை சுத்தி பார்த்து, அந்த இடத்தின் அமைப்பை மனசு உள்வாங்கிக்கும். ஆனா, அன்னிக்கு இருந்த அவசரத்துல  இந்த ரயில்நிலையத்தை உள்வாங்கிக்க முடியல. இனியும் அங்க போகும் சூழல் வாய்க்காது, அதனால்தான் முகநூல்ல படத்தை சுட்டு பதிவாக்கிட்டேன். 
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரம் நம் தமிழகத்தின் வடக்கு முனை துவங்கி தென் எல்லையான கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களின் கனவுகளின் நம்பிக்கையும் இந்த சென்னைதான்.

கிராமப் புறங்களிலிருந்து தங்கள் கனவுகளை தேடி இங்கு வரும் அனைவருக்கும் இந்த சென்னை ஒரு அதிசய உலகம். உறவுகளை பிரிந்து இங்கு வரும் அனைவருக்கும் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் ஒரு வாழ்க்கை அமைந்துவிடும். நம்பி வந்தாரை வாழவைக்கும் சென்னை இனி வருபவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்கட்டும்.
நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. அனைத்து தகவல்களும் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சிண்ணே.

      Delete
  2. நிஜத்தில் விழுப்புரம் போனதுண்டா...?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் போயாச்சுண்ணே. அப்பாவிடம் அடம்பிடிச்சு போன 2017 ஜூலை மாசம் விழுப்புரம் டூ திருச்செந்தூர் வரை ரயிலில் போனேன். கனவில் கண்ட மாதிரி கொஞ்ச நேரம் தங்கிட்டுதான் போனேன்.

      Delete
  3. அருமையான பதிவு.படங்களும் அழகு/அருமை....... நன்றி தங்கச்சி,பதிவுக்கு....

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் சுட்ட படங்கள்ண்ணே

      Delete
  4. சுவையான தகவல்கள்.....

    நானும் சில சமயங்களில் இரயில் நிலையத்தில் நீண்ட நேரம் தங்கியது உண்டு.

    ReplyDelete