Friday, October 25, 2013

அருள்மிகு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோயில்.திருநீர்மலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கோயம்பேட்டுல இருந்து மதுரவாயல் வழியா பெருங்களத்தூர் போற பை-பாஸ்ல மலைக்கு மேல ஒரு கோவில் இருக்கு. அந்த வழியா போகும்போது பஸ்சுல இருந்து பார்த்திருக்கேன். அதேப்போல சினிமாவுல நிறைய தரம் இந்த ஊர் பேரை கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இதுவரை கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலை.

அந்த இடம் “திருநீர்மலை” பொதுவா குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு மனசுல பதிஞ்சுட்டதால, இது ஒரு முருகன் கோவில்ன்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, இது ஒரு பெருமாள் கோவில்.  இந்த கோவில் பல்லவரத்திலிருந்து 8 கி.மீ. துரத்துல இருக்கு. கோவிலுக்கு போறதுக்கு பல்லாவரத்தில் இருந்து நிறைய பஸ்கள் இருக்கு. 
108 திருப்பதிகள்ல இதுவும்ஒண்ணு. மலை மேலயும், கீழேயும் ரெண்டு பெரிய கோயில்கள் இருக்கு.   ரெண்டு கோவில்களிலும் பெருமாள்  நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாக் கருதப்படுது. சரி, நாம மலை அடிவாரக் கோவிலை முதல்ல பார்க்கலாம்.

மலையடிவார கோவிலின் மூலவர் நீர்வண்ணப்பெருமாள்  நின்ற திருக்கோலத்தில், தாமரைமலர் பீடத்தில்  அபய ஹஸ்த முத்திரைகளுடன் மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்/ அதனால, அவர் பேரு  நின்றான்  தாயார் அணிமாமலர்மங்கை, தனிக்கோவில் கொண்டு நாச்சியாரா எழுந்தருளியிருக்கிறார்.
ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்கனும்ன்னு ஆசை வந்ததாம். அவர், இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தாராம். பெருமாள், அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தாராம். அப்ப வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமா இங்கு தங்கும்படி வேண்டினாராம். சுவாமியும் அதுப்படியே அருளினாராம்.

இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் ன்னும், தலத்திற்கு திருநீர்மலை ன்னும் பேர் வந்திச்சாம்.  நீல நிற மேனி உடையவர் என்பதால இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' ன்ற பேரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்குது.  இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி  வால்மீகி காட்சி தருகிறார்.
இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாக் காட்சி தருவதால், திருமணம் கைக்கூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குது.

இங்கே கோபுரம் ராமருக்கு கொடிமரம் நீர்வண்ணருக்கு கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே இருக்கு. வால்மீகிக்காக ராமராவும், நீர்வண்ணப்பெருமாளாவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால, இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகிறார்கள். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமா ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைந்துள்ளது.
ராமர் சன்னதிக்கு பக்கத்துல அனுமன் தொழுத  நிலையில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவா பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
ஆண்டாளும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.  
மலை அடிவார கோவிலில் மூலவர் ரங்கநாதர் சன்னதியின் பின்புறம் இருந்து பார்க்கும்  போது மலைக்கோவில் அழகாக காட்சி தருது. பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டிïர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் பாட்டுக்கள் பாடியுள்ளார்.
இத்தங்களின் பெருமையை குறிப்பிடும் போது திருமங்கையாழ்வார்    நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கார். பூததாழ்வார் ஒரு படி மேலே போய்  ஸ்ரீ ரங்கத்தை வணங்கிய பலனை கிடைக்கும்ன்னு சொல்லி இருக்கார்.
அவ்வுளவு சிறப்புமிக்க இந்த மலையடிவார கோவிலை தரிசனம் செய்து விட்டு இபொழுது மலைமேல் இருக்கும் மூலவர் - (இருந்தான்) சாந்த நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம்,  கிழக்கு நோக்கிய காட்சியிலும். மூலவர் - (கிடந்தான்) ரங்கநாதன், மாணிக்கசயனம், தெற்கே நோக்கிய காட்சியிலும். தாயார் - ரங்கநாயகி. (தனிக் கோவில் நாச்சியார்) . கிழக்கே நோக்கிய காட்சியிலும் மூலவர் - த்ரிவிக்ரமன் (நடந்தான்) , நின்ற திருக்கோலம், கிழக்கே கிழக்கு நோக்கிய காட்சியிலும் தரிசிக்கலாம்.
இது தோயாத்ரிமலை செல்லும் நுழைவு வாயில். இந்த இடம் பழைய காலத்தில் காண்டவ வனம் என அழைக்கப்பட்டதாம்.  இந்த வாசல் காண்டவ  வனத்தின் தோயாத்ரி வனவாசல் என்று குறிப்பிடப்படும். தோயம்ன்னா "பால்' ன்னு அர்த்தமாம்.  இந்த அலங்கார வளைவின் உள்புறம் அழகாக கலை நயத்துடன் செதுக்கப்பட்டிருக்கு.
இந்த அலங்கார வளைவைக் கடந்து 250 படிகளை ஏறிச் போனால், மலைக்கோயிலை அடையலாம்.
மலையேறும் பாதையில் வாயு மைந்தன் அனுமன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.  அவருக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கி விட்டு தோயாத்ரிமலை படிகளை ஏறனும்.  
ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி போகும்போது...,  அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் அவர்கள் கண்களை விட்டு அகலவே இல்லையாம். மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்காங்க.  எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்டனும்ன்னு உருக்கமா பெருமாளை வேண்டிக்கிட்டாங்களாம். அப்ப  சுவாமி "போக சயனத்தில்' ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தாராம். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுது.
கீழ்ப்படத்தில் காணப்படுவது கல்கி மண்டபம்.  இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்ததாம். அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியலையாம். ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்திருக்கிறார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமா இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினாராம்.  இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள் புரிகின்றனர்.
ஈரடியால் மூவுலகும் நடந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என கேட்பது போல திரிவிக்கிரம அவதார நிலையில் நடந்த வராகவும் இங்கு காட்சி தருகிறார்.
இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமா இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்க்கு. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
கொடிமரத்தின் முன்பு கருடாழ்வார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் அவருக்கு நேரே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள்பாலிக்கிறார்.அவருடைய தொப்புள் கொடியிலிருந்து பிரம்மாவும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் நாம் இங்கு தரிசிக்கலாம்  
கோவில் கொடிமரம் அழகாக காட்சியளிகிறது வைகானச ஆகம விதிப்படி இரு வேளை பூஜை நடக்கிறது.
மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்குது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்குது. அப்ப.  இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்குது.
பொதுவா எல்லா கோயில்களிலும் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனா, இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி , மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
 தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, "ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்' எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்குது.
ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல, குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமா வாழ..,  குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும். அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.  
ஒரு வழியாக மலைமேல் உள்ள பெருமாளையும், பால நரசிம்மரையும், ரங்கநாதரையும் தரிசித்து விட்டு மலைமேல் இருந்து இறங்கி தீர்த்த குளத்திற்கு போலாம்.
இந்த திருக்குளம்  3 ஏக்கர் பரப்பளவில் ,நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் இது. கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல்,  இங்கு  குளம் ஒன்று, ஆனால், இதில் கலந்திருக்கும் தீர்த்தம் நான்குஇந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன.
சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, "முக்கோட்டி துவாதசி' ன்னு சொல்றாங்க.

இக்கோவிலில் காலை 8 முதல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் 7.30 மணிவரையிலும் பெருமாளை தரிசிக்கலாம்.

ஒரே மூச்சில் நான்கு கோலத்தில் பெருமாளை தரிசனம் செய்த திருப்தியோடு இங்கிருந்து கிளம்பலாம்.  புண்ணியம் தேடி போற பயணத்துல அடுத்த வாரம் வேறொரு கோவிலில் சந்திக்கலாம். நன்றி! வணக்கம்!

23 comments:

  1. அண்மையில் வண்டலூர்- மதுரவாயல் நெடுஞ்சாலையில் போனபோது திருநீர்மலை கண்ணில் பட்டது. சென்னையிலேயே இருந்தபோதும் இதுவரை அங்கு போனதில்லை. உங்கள் பதிவு, உடனே செல்லும்படி எனக்கு வந்த உத்தரவாகக் கருதுகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! சீக்கிரம் போய் இறைவனை தரிசித்து அருள் பெறுக!

      Delete
  2. அடடா... அடுத்த முறை சென்னை வரும் போது செல்ல வேண்டும்... படங்களுடன் சிறப்புகளுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் பாருங்கண்ணா! இறைவன் அருள் உங்கள் குடும்பத்தாருக்கு கிடைக்கட்டும்.

      Delete
  3. அவ்வ்வ்வ்வ்வ்! சமீபத்துல திருநீர்மலை போயிட்டு வந்தப்ப இந்த இடத்தைப் பத்தி எழுதணும்னு குறிப்புல்லாம் எடுத்து ரெடி பண்ணி வெச்சிருந்தேன். இவ்வளவு அழகா எழுதி, தெளிவான படங்களையும் போட்டு நான் எழுத வழியில்லாமப் பண்ணிட்டியே தங்கச்சிம்மா!

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதினால் என்ன? நீங்க எழுதினால் என்ன? எப்படியோ புண்ணியம் நம் குடும்பத்துக்குதானே அண்ணா!

      Delete
  4. ரொம்ப பொருமைங்க உங்களுக்கு....

    இருந்தாலும் பாராட்டபடவேண்டிய விஷயமே...
    புகைப்படங்கள் அழகாக வந்திருக்கு....

    நானும் இந்த கோயிலை பார்த்ததில்லை.... கண்டிப்பாக இந்த முறை முயல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் கோவிலுக்கு போங்க. வேண்டியது கிடைக்குமாம்.

      Delete
  5. திருக்கோவில் படங்கள் அதை தொகுத்தவிதம் எல்லாம் அருமை ..கோவிலை நேரில் தரிசித்த புண்ணியம் உங்களையே சேரும் ..

    ReplyDelete
    Replies
    1. புண்ணியம் தேடிதான் கோவிலுக்கே போறது. அதை பதிவா போட்டா போனசா இன்னும் கொஞ்சம் புண்ணியம் சேருதா!? நன்றிங்க அமிர்தா!

      Delete
  6. அருமையான கோயில் .. நானும் பொய் இருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்கள்!? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!

      Delete
  7. அருமையாக படங்களுடன்
    கோவில் குறித்து
    பதிவு செய்துள்ளீர்கள்

    புண்ணியம் தேடிய பயணம்
    சிறப்பாகத் தொடரட்டும்

    எங்களுக்கும் இதுபோன்ற
    அருமையான பதிவுகள் கிடைக்கட்டும்..
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!

      Delete
  8. அழகான படங்களுடன் தெளிவான குறிப்புகள்... எந்த ஊருக்குப் போனாலும் கேமரா எடுத்துட்டுப் போயிருவீங்க போல....

    ReplyDelete
  9. superb pictures and different writing style

    ReplyDelete
  10. நேற்று தான் ...வீட்டம்மணி இத்திருத்தலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்..இன்று முழு விபரமும் கிடைக்கப் பெற்றேன்! வாழ்க வளர்க..உம் ஆன்மீகத் திருப்பணி!

    ReplyDelete
  11. நல்ல தெளிவான பதிவு. மிக அழகான படங்கள். வெகு நாள் முன்பு, 108 வைணவத் தலங்களையும் தரிசிக்க வேண்டுமென்று, சென்னையின் அருகிலுள்ள தலங்களை தேடித்தேடி போனேன். இப்போது, திரு நீர்மலை போவது எளிதாகி விட்டது. மாமனார் வீடு பம்மலில் திரு நீர் மலை போகும் சாலையில். அங்கே போகும்போதெல்லாம், பெருமாளையும் குசலம் விசாரித்துவிட்டு வர சௌகர்யம். அமைதியான கோயில். சோளிங்கர் மாதிரி குரங்கு தொல்லையில்லை. சுற்றுப்புறமும் பசுமையாக இருப்பதால், நல்ல மன அமைதி தரும் கோயில். என்னுடைய பழைய நினைவுகளை அசைபோட வைத்தமைக்கு நன்றி, அன்புடன் வெங்கட்

    ReplyDelete
  12. அழகான படங்களும்....அருமையான பகிர்வு...

    ReplyDelete
  13. திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன 108 திவ்ய தேசங்களில் 61, இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
    பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது வருட வருமானமே கோடிகளை தாண்டும் 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்வியமாக நிர்வகிக்கபட்டு வந்தது தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி. சக்தி கவனித்து (கபாளிகரம்) செய்து வருகிறார்
    1.மலை மற்றும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவில் பெருமாளுக்கு மட்டுமே சொந்தமானது
    நிர்வாக அதிகாரி பி. சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் ஏயேசு சபை அல்லோல்யா ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டு அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருகிறது ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேய் பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர் யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது .
    2. மலையே கோவில் அதுதான் திருநீர்மலை ஆதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உடபகுதியிலே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் அனுப்பபடுகிறதாம் .
    3.இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார் வேலை செய்பவர்கள் பெயர் மட்டுமே இந்து ஆனாள் அவர்கள் திடீர் சபை கிருத்துவ கூட்டத்தினர்.
    4. கோவில் அண்ணாதான உண்டியல் வருமானம் மாதவருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது
    5.பக்தர்களை

    ReplyDelete
  14. திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன 108 திவ்ய தேசங்களில் 61, இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
    பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது வருட வருமானமே கோடிகளை தாண்டும் 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்வியமாக நிர்வகிக்கபட்டு வந்தது தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி. சக்தி கவனித்து (கபாளிகரம்) செய்து வருகிறார்
    1.மலை மற்றும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவில் பெருமாளுக்கு மட்டுமே சொந்தமானது
    நிர்வாக அதிகாரி பி. சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் ஏயேசு சபை அல்லோல்யா ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டு அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருகிறது ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேய் பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர் யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது .
    2. மலையே கோவில் அதுதான் திருநீர்மலை ஆதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உடபகுதியிலே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் அனுப்பபடுகிறதாம் .
    3.இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார் வேலை செய்பவர்கள் பெயர் மட்டுமே இந்து ஆனாள் அவர்கள் திடீர் சபை கிருத்துவ கூட்டத்தினர்.
    4. கோவில் அண்ணாதான உண்டியல் வருமானம் மாதவருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது
    5.பக்தர்களை

    ReplyDelete