Friday, November 08, 2013

ஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இன்னிக்கு புண்ணியம் தேடி போற பயணத்துல நாமப் பார்க்கப் போறது ”திருவடிசூலம்”. இந்த தலம் ”திரு இடைச்சுரம்”ன்னும் ”திருவடி வலம்” ன்னும் முன்னலாம் அழைக்கப்பட்டதாம். அது காலப்போக்கில் திருவடிசூலம் ன்னு சொல்லப்படுது. 
செங்கல்பட்டிலிருந்து திருப்போருர் போற வழியில சுமார் 10 கி மீ தொலைவில் போகும் போதும், செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போற பாதையில 3 கி மீ தூரத்தில் போருர் செல்ல ஒரு பாதை பிரியும். அதன் வழியே 7 கி மீ தொலைவில் பயணம் செஞ்சா இந்த கோவில்   வந்து சேரலாம்.  இந்த திருவடிசூலம் திருக்கோவிலுக்கு செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கு. பஸ்லாம் திருவடிசூலம்  திருக்கோவிலின் அலங்கார வளைவுக்கிட்டயே நிக்குது.  அங்க இருந்து சுமார் ஒரு கி மீ தூரத்துல கோவில் இருக்கு. மலைகள் சூழ்ந்த இயற்கை எழிலில் வயல்களை ஒட்டி இந்த கோவில் அமைஞ்சிருக்கு!!
இந்தக் கோவில்சுமார் 2000 வருடங்களுக்கு முந்தையதுன்னு சொல்றாங்க. கிழக்கு பார்த்த சன்னதிதான். ஆனாலும் தெற்கில் நுழைவாயிலை கொண்டிருக்கு. நுழைவாயிலுக்கு முன்பு வெளியே இடப்புறம் வரசித்தி விநாயகர் அருள் பாலிக்கிறார்.  வலப்புறம்  திருக்கோவில் திருக்குளம் இருக்கு.  நுழை வாயிலில்  நேரே தெரிவது தாயார் சன்னதி. இடப்புறம் இருக்கும்  விநாயகரைத் தொழுது, வலமாகப் பிராகாரம் சுற்றி வரும்போது  சுப்ரமணியர் சன்னதி வருது.

தாயார் சன்னதிக்கு நேரே 10 வருடங்களா வளர்ந்து நிற்கும் ஒரு புற்றும் , அதன் அருகில் ஒரு நந்தியும் காணபடுது அதற்கு ஒரு கூரையும் அமைச்சிருக்காங்க.  ஆனா அதனோட வரலாறு என்னன்னு யாருக்கும் தெரியலை ஆனாலும், கோவிலுக்குள் காண்பவை யாவுமே வணக்கத்துக்குரியதுன்றதால புற்றை வணங்கிட்டு போலாம்.
வலபுறமமா திருகோவிலை சுற்றி வந்தா வள்ளி தெய்வயானை உடன் சுப்ரமணியரை தரிசிக்கலாம்.  பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே இருக்கு. இந்த இடத்தை ஆண்ட மன்னர்கள் வழிபட்டது தாயார் பிரம்மாண்டேஸ்வரியைதானாம்.
வலப்புற மூலையிலிருந்து பார்க்கும் போது ஒரு கலையரங்கம் இருக்கு . அங்க வேதபிரசங்கங்கள் நடைபெறுவதற்கும், இங்கே உளவார பணிகள் செய்யும் சிவனடியார்கள் இளைப்பாறவும் பயன்படுது.
பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமா இருந்த இந்த இடத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் சரிவர பால் தரலை. சந்தேகப்பட்ட மாடு மேய்ப்பவன் அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் போய் தானாக பால் சொரிவதைப் பார்த்திருக்கான். இவ்விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைப் பார்த்திருக்காங்க.  பின் இந்த இடத்துல கோயில் கட்டி வழிபாடு செஞ்சிருக்காங்க. . அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' ன்னும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை' (கோ - பசு) ன்னும் அழைக்கிறாங்க. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.
நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியா போய்க்கிட்டு இருக்கும்போது, நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏற, ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்ப அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை பார்த்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார்? ன்னு மாடு மேய்ப்பவன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி சொல்லி இருக்கார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறி, அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். மாடு மேய்ப்பவன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியலை.

மாடு மேய்ப்பவனாக  வந்தவன் அழகு மிகுந்தவனா இருப்பதைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்' என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற மேய்ப்பவனாக  வந்தவன் சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, ”இடைச்சுரநாதா!'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்' என்ற பெயரும் பெற்றார்.
கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி மட்டுமே இருக்கு. பக்கத்தில் வில்வமரம் இருக்கு. குரங்குளின் தொல்லைகள் இருபதினால் மூலவர் வாயில் பெரும்பாலும் திறந்து வைப்பதில்லை.  மூலவர் சன்னதி நோக்கி செல்லும் வாயில் கல்சுவரில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் திருஉருவங்கள்  பொறிக்கப்பட்டிருக்கு.  பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து ஒரே மரமா காட்சியளிக்குது.  சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தின் வடிவில் அருள் புரிகின்றனர் என்பதால்,  இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என பக்தர்கள் நம்புகின்றனர். 

பிரம்மாண்டேஸ்வரி  தெற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கூடவே இரண்டு சிவலிங்கங்களும் இருக்கு. .தட்சிணாமூர்த்தியின் சீடர்களுள் ஒருவரான சனத்குமாரர் தன் பொற்பாதங்களை இங்கு பதித்து மரகதலிங்கமான ஸ்ரீஞானபுரீஸ்வரரை பூஜித்திருக்கிறார். கெளதமரிஷியும் இடைச்சுரநாதரை ஆராதித்துப் பல பேறுகள் பெற்றுள்ளார்.
இத்தல விருட்சம் பதினோரு முக வில்வதளம்.  இது ரொம்ப விசேஷமானதுன்னு சொல்றங்க. இதை ஞான புரீஸ்வரருக்கு சாற்றி வணங்கினால் எண்ணியது ஈடேறும் ன்னு சொல்றாங்க. இக்கோவில் முழுக்க கருங்கல் கட்டுமானம்.வெளிச்சுற்றின் ஈசான்ய பாகத்தில் பிரம்மாண்டேஸ்வரர் மேற்க்கு நோக்கி அருள்பாலிக்கிறார்
பிரம்மாண்டேஸ்வரர் சன்னதியின் முன்பக்கம் அமர்ந்திருக்கும் நந்தி வாகனத்தோடு அருள்பாலிக்கிறார்.  அதன் பின்னில் மலைவளம் நிறைந்த பகுதியும் மழை மேகங்களும் சேர்ந்து திருகோவிலை மேலும் அழகுபடுத்தி காட்டுகின்றது,

சுவாமி, அம்பாள் விமானங்கள்,  ஸ்ரீகாஞ்சி மடத்தின்  திருபணிகளுள் சேர்த்து புதுபிக்கபட்டிருக்கு.  திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் சேர்த்து இத்திருக்கோவில் பராமரிக்கபடுது.
இனி தெற்கு வாயில் வழியாக இமயமடகொடி என்னும் கோவர்தனாம்பிகை தாயார்   சன்னதிக்குள் போவோம்.  பொதுவா அம்பாள் தன் பாதங்களை  ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.


திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால நீ இங்கயே இரு! என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் ன்னு சொல்றாங்க. காலில் ஊனம் இருக்குறவங்க இவளிடம் வேண்டிக்கொண்டால் குணமாவதுடன், தன் ஊணம் குறித்த கவலை நீங்கி மனதில் அமைதி உண்டாகும்ன்னும் சொல்றாங்க.
உள் முகப்பு வாசலில் பிரவேசித்து, மண்டபம் கடந்து, வந்தால் சைவ குறவர்கள் நால்வரைத் தரிசிக்கலாம். பைரவரையும் அடுத்து காணலாம்.
கருவறை அகழி அமைப்புடையது. அம்பிகை தெற்கு முகமா நின்ற திருக்கோல நாயகியாய் எழிலுற அருள்பாலிக்கிறார்.  இத்தலத்து தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமா காட்சியளிகின்றது.

ஸ்ரீஞானபுரீஸ்வரர் மரகதலிங்கம் ஒரு சுயம்பு லிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிதது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. சதுரபீட ஆவுடையார். குலோத்தூங்க சோழன் கல்வெட்டு ஆலயத்துள் இருக்கிறது. அதில் குலோத்துங்கனின் ஆலயப்புனருத்தாரணம், நித்திய பூஜை, மற்றும் விளக்கெரித்தல் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கு.இந்த திருக்கோவில் பல்லவர் பாணியிலும், விஜயநகர மன்னர்களின் கட்டுமான மாகவும் அமைந்திருக்கு.
.
ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்ரா பெளர்ணமி, பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை இங்கு விசேஷமாக நடத்தபடுது. சிவராத்திரி 4 காலங்களிலும் முறையாக பூஜை நடைபெறுகிறது. பிரதோஷ விழா சிறப்பாக் கொண்டாடப்படுது. தினமும் இரண்டு கால ஆராதனை நடக்கிறது. புதன் தசை, புதன் புக்தி, ஜாதகத்தின் புதன் நீசமாயிருக்கப் பிறந்தவர்கள் இந்த ஞானபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து ஒருமண்டலம் அருந்தினால் தோல் நோய்கள் குணமாகும். தம்பதியரிடம் அன்யோன்யம் பெருகும்.

இத்திருகோவில் காலை 7-30 முதல் 11-00 மணி வரையிலும், மாலை 4-30 முதல் 7-00 மணி வரையிலும் திறந்திருக்கும்.  மேலதிக தகவல்கள் வேண்டுவோர் இத்திருகோவிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் செல்லப்பா குருக்களை 9444948937 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


 திருக்கோவில் தரிசனம்லாம் முடிச்சுட்டு அங்க இருக்கும் நம் முன்னோர்களுக்கு தேங்காய், வாழைப்பழம்லாம் தந்து பசியாத்தி அவங்க ஆசியையும் வாங்கிட்டு அங்க இருந்து கிளம்பலாம். மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு கோவில் பத்தி புண்ணியம் தேடி போற பயணத்துல தெரிந்து இறைவன் அருள் பெறலாம். நன்றி வணக்கம்.
 

27 comments:

  1. மிக அழகான புகைப்படங்களோடு தல வரலாற்றினையும் சுவையாக பகிர்ந்து ஆலய தரிசனத்திற்கு அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை பாராட்டி கருத்துரைத்தமைக்கும் நன்றி சகோ!

      Delete
  2. தமிழ்நாட்டில் சுற்றுலா தளங்களை மேம்படுத்தி வைத்தாலே மிகப் பெரிய வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கும். 90 சதவிகிதம் ஆதரவற்ற நிலைமை தான். படங்களின் மூலம் நன்றாகவே புரிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கூற்று சரிதான் ஜோதிஜி. பழமை வாய்ந்த அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கோவில்கள் கூட கேட்பாரில்லாமதான் இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
    2. உண்மையாக போற்ற பட வேண்டிய பதிவு

      Delete
  3. அருமையாக விளக்கி உள்ளீர்கள் ஒரு கோவிலை நேரில் தரிசித்தது போல படங்களும் அதனை பற்றிய விளக்கங்களும் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது ..

    ReplyDelete
    Replies
    1. கோவிலை தரிசித்தமைக்கு நன்றிங்க அமிர்தா!

      Delete
  4. படங்கள் அனைத்தும் பளிச் பளிச்..

    ReplyDelete
    Replies
    1. கேமராவை சர்ஃப்ல போட்டு ஊற வச்சு அப்புறம் வாசிங் மெஷின்ல போட்டு எடுத்ததால படம்லாம் பளிச். பளிச்

      Delete
  5. இன்றைய தல தர்சனத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள ”திருவடிசூலம்”. தலம் தர்சித்தோம்.

    நிறைந்த வரலாற்றுத்தகவல்கள் தல வரலாறுகளுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க மாதேவி!

      Delete


  6. தல வரலாறும் வர்ணனையும் சரி படங்களும் சரி நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை தந்துவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. கோவிலை தரிசித்தமைக்கு நன்றிங்க ஐயா!

      Delete
  7. அருமையான விளக்கங்களும் படங்களும் பகிர்வுக்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  8. படங்களே அழகிய கதை சொல்லிச் செல்வது சிறப்பு. தல புராணம் தரிசனம் செய்ய வேண்டுமெனும் ஆவலை மிகுவிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் கோவிலை தரிசிக்க செல்லுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. ஆலய தரிசனத்திற்க்கு மிக்க நன்றி சகோ!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா!

      Delete
  10. அழகான படங்கள்... இந்த தல வரலாறு எப்படிக் கிடைக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. கோவிலில் இருக்கும் தகவல் பலகைகள் மற்றும் கோவில் அலுவலகத்திலும் பார்த்தும் கேட்டும் தெரிந்துக் கொள்வேன்

      Delete
  11. அருமையான தரிசனம்.. கூடவே அழகான விளக்கங்களூம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்!

      Delete
  12. சிறப்பான படங்கள் மற்றும் ஆலய தரிசனம். மிக்க நன்றி.

    ReplyDelete
  13. அழகியப் படங்களுடன் ஆலயத் தரிசனம் அருமை

    ReplyDelete
  14. ஆலய வரலாற்றினையும் சிறப்புகளையும் மிக அழகாக சொல்லியது அருமை

    ReplyDelete