Wednesday, November 27, 2013

சென்னை மெரினா பீச் லைட் ஹவுஸ் - மௌனச்சாட்சிகள்

ஒரு கல்யாணத்துக்கு சென்னை வந்திருந்த நாங்க எங்கப் போறதுன்னு பேசிக்கிட்டு இருக்கும்போது, மத்த இடத்துக்குலாம் போனா அதிக செலவாகும். அதனால, மெரினா பீச் போலாம்னு முடிவு பண்ணி போனோம்.  

அங்கப் போனப்புறம்தான் தெரிஞ்சது 20 வருசத்துக்கப்புறம் பொது மக்கள் பார்வைக்காக லைட் ஹவுசை திறந்து விட்டிருக்காங்கன்னு. போன வாரம் முழுக்க சென்னை ஹாட் டாபிக்ல இதுவும் ஒண்ணு.சரி, வந்தது வந்துட்டோம்ன்னு லைட் ஹவுஸுக்கு ஒரு விசிட் அடிச்சோம். கிட்ட போகும்போதே பெரிய க்யூ நின்னுட்டு இருந்துச்சு. 
நாமளும் க்யூல நின்னாச்சு. நுழைவுக் கட்டணமா 10 ரூபாயும்,  கேமரா கொண்டுப் போக 25 ரூபாயும் வசூலிக்குறாங்க.  லைட் ஹவுஸ் மேல போறதுக்குண்டான படிலாம் குறுகலா இருக்குறதால நம்ம பேக்லாம் கொண்டு போறது ரொம்ப சிரமம். அடுத்தவங்களுக்கும் இடைஞ்சல். அதனால, உள்ள பேக்லாம் கொண்டு போக அனுமதி இல்ல.  

நம்ம பேக்லாம் வச்சுட்டு போறதுக்கு வசதி இருக்கு. ஆனா, எந்தவித டோக்கன் சிஸ்டமும் இல்ல. அதனால, கூட வந்தவங்கக்கிட்ட பேக்லாம் கொடுத்துட்டு லைட் ஹவுஸ் மேல ஏறினோம்.   
இந்த லைட் ஹவுசோட அடிப்பாகம் உருளையான வடிவிலும்,  கோபுரம் முக்கோண வடிவிலும் இருக்கு.  தூரத்துல இருந்து பார்த்தாலும் தெளிவா தெரியுற அளவுக்கு சிகப்பு மற்றும் வெள்ளை வரிகள் குறுக்கு வாட்டில் பட்டைகளா தீட்டப்பட்டிருக்கு.

வானிலை ஆய்வு மைய அறிவுரைப்படி, 1994–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதுக்கப்புறமா சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இப்பதான் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து இருக்காங்க. உட்கார்ந்து பீச் மற்றும் லைட் ஹவுஸ் அழகை ரசிக்க உள்பக்கம் அழகான புல்வெளிகளும், சிமெண்ட் பெஞ்சும் அமைச்சு இருக்காங்க.
லைட் ஹவுஸ்குள்ள போறதுக்கு முன்னாடி இதன் வரலாற்றை கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம். 1796–ம் வருஷம் ஜார்ஜ் கோட்டையில் இருக்கிற பிரிட்டிஷ் அதிகாரிகளுடைய மெஸ் மற்றும் பண்டமாற்று நிலையமா செயல்பட்ட இப்ப இருக்கிற கோட்டை மியுசியத்தின் மேல பெரிய கண்ணாடி குடுவை கொண்ட எண்ணையில முக்கிய திரிகளுடன் செயல் பட்டு இருந்ததாம். அப்ப கடற்கரை இந்த கோட்டையின் சுவர் வரை இருந்திருக்கு. அது வியாபார கப்பல்களுக்கும், போக்குவரத்து கப்பல்களுக்கும் உதவியா இருக்க  முதல் கலங்கரை விளக்கம் அமைக்கபட்டதாம்.
இப்படியே பழைய கதையை பேசிக்கிட்டு இருந்தா பின்னால நிக்குறவங்க நகர்ந்து போறதுக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால லிஃப்ட்ல போய்க்கிட்டு பேசலாம். படி ஏற முடியாதவங்க மேல செல்ல லிப்ட் அமைச்சு இருக்காங்க.   படிக்கட்டு வழியாகவும் மேல போகலாம்.  மொத்தம் 10 மாடிகள் கொண்ட இந்த லைட் ஹவுஸ் கோபுரத்தில் 9 வது மாடிவரை லிப்ட் இயக்கப்படுது. 10வது மாடிக்கு நாம படிக்கட்டு ஏறித்தான் போகனும். மாமல்லபுரம் லைட் ஹவுஸ் மாதிரி இல்லாம இங்க பாதுகாப்பு வசதிகள் அருமையா அமைக்கப்பட்டு இருக்கு. பொதுமக்கள் பார்வை இடுவதற்கு வசதியா கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கு. சரி இப்ப நாம மேலே வந்துட்டோம்.  இந்த இடத்தைச் சுத்தி உள்ள சென்னை நகரம் ரொம்ப அழகா தெரியுது. நமக்கு நேரா தெரிவது திருவல்லிக்கேணி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்.
 சரி, இப்ப இரண்டாவது லைட் ஹவுஸ் பத்தி பாப்போம்.   பூக்கடை பகுதியில் 161 அடி உயரத்தில் குழல் வடிவ கற்களால் ஆன பிரத்தியேகமான அமைப்பு கொண்ட கட்டிடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் வடக்கு பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தனர். இது ஜனவரி 1884 ம் வருஷம் 1 ம் ல இருந்து இயங்க ஆரம்பிச்சுதாம்.   நம்ம பின்னால நிறைய கூட்டம் இருபதுனால அடுத்த  இடத்துக்கு போய்ட்டு மிச்சக் கதை பார்க்கலாம்.  
மேல இருக்கும் படத்துல பார்ப்பது மேற்கு பக்க குடியிருப்புகளும், கடற்கரையும் சேர்ந்த காட்சி. மனிதர்கள்லாம் சின்னதா தெரிஞ்சாங்க. சரி மூன்றவதா புதியதாக கட்டப்பட்ட உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருந்த 175 அடி உயர கோபுரத்தில் விளக்கு அமைக்கப்பட்டது.இது ஒரு வித்தியாசமான இந்திய மற்றும் சரசெனிக் ன்னு சொல்லபடுகிற கட்டிடகலையின் கூட்டு அமைப்பில் உருவாக்கப்பட்டதாம் இது, ஜூன் 1894 ம் வருஷம் 1 ம் தேதி முதல் இயங்க தொடங்கியதாம். அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 175 அடியாக இருந்ததாம்.  இதில் விளக்கு எரிக்க மண்ணெண்ணெய் உபயோகபடுத்தி இருக்காங்க.

சரி அடுத்த பக்கத்திற்கு செல்வோம். ஏன்னா வழி ரொம்ப குறுகலா இருக்கு. மேலும் நிறையப்பேர் கீழ வெயிட் பண்ணுரதுனால நாம வேகமா நகர்ந்து செல்லனும். மொத்த மெரினா பீச்சும் மேல இருந்து பார்க்க அழகா தெரியுது. வாகனங்கள், பீச்சோரக் கடைகள், மனுசங்கள்லாம் மினியேச்சர் போல இருக்கு.

மேல் படத்துல பார்க்குறது கிழக்கு பாகம் மெயின் ரோடு.   நான்காவதா கட்டப்பட்ட இந்த லைட் ஹவுஸ் 1977ம் ஆண்டு ஜனவரி 10 தேதி லருந்து இயங்க ஆரம்பிச்சுதாம்.  இப்ப இருக்குற மெரினா பீச்ல கட்டப்பட்ட  இந்த லைட் ஹவுஸ் இதில்  நவீன 150 வோல்ட் ஹாலிட் விளக்கும், நவீன லென்சுகளும் உள்ளன. இதனால் கடலில் இருந்து 55 கி.மீ தொலைவில் இருந்தும் லைட் ஹவுஸ் விளக்கு வெளிச்சத்தை தெளிவா பார்க்க முடியுமாம். மேலும் நகரத்தின் எல்கைக்குள் இயங்கிகொண்டு இருக்கும் மற்றும் லிப்ட் வசதி கொண்ட ஒரே லைட் ஹவுஸ் இந்தியாவிலே இதுதானாம்.
இரு பக்கமும் கம்பி அணைப் போட்ட பால்கனி வழியா கீழ பீச் மணலில் குப்பைகளை அகற்றும் இயந்திரம் மூலம் பீச் தூய்மையாக்குறதை பார்க்க முடிஞ்சது. பீச்ல சிறுவர்கள்லாம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. மேல இருந்து பார்க்கும் போது, இவ்வளவு சுத்தமா இருக்கே இது மெரினா பீச் தானான்னு நமக்கே டவுட் வந்திடுது!!

மேல இருந்து பார்க்கும் போது லைட் ஹவுசை சுத்தி பார்க்க வந்தவங்க க்யூல நிக்குறது தெரியுது. நாம கீழ போனாதான் மத்தவங்க வந்து சுத்தி பார்க்க முடியும். அதனால மத்தவங்களும் பார்க்க வசதியா வேகமா பார்த்துட்டு கீழ போவோம்.  ஏன்னா, இந்த லைட் ஹவுஸ் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மீண்டும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுறாங்க.

மேலும் திங்கட்கிழமை விடுமுறை. அதனால, நிறைய பேர் பார்க்குறதுக்கு வசதியா முன்னே செல்பவர்கள் வேகமா பார்த்துவிட்டு செல்லவேண்டும் சின்ன பசங்களுக்கு 5 ரூபாய் வசூலிக்கிறாங்க.   மாற்றுத்திறனாளிகள் செல்ல, பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருக்கு. 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கு. தரை தளத்தில், கலங்கரை விளக்கின் மாதிரி, கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்திய அரிய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கு.அருங்காட்சியகத்தை பார்க்க தனியாக 10 ரூபாய் வசூலிக்கப்படுது.

80 காலக்கட்டத்து படங்கள்ல ஹீரோ இல்ல ஹீரோயின் சென்னைக்கு வந்ததைக் காட்ட ரெண்டு மூணு இடங்களைக் காட்டுவாங்க. பலப் படங்களில் வந்த சென்னையின் முக்கியமான இடங்களை அடுத்த வார மௌனச்சாட்சிகள் பகுதியில் பார்க்கலாம். 

அதுவரை நன்றிக்கூறி உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கிறேனுங்க,

16 comments:

  1. படங்கள் எல்லாம் நேரில் பார்த்தது போல் அட்டகாசம்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி அண்ணா!

      Delete
  2. இத்தனை வருஷமா சென்னைல இருக்கேன், ஒரு நாள் கூட லைட் ஹவுஸ் போனதில்லையே...

    ReplyDelete
    Replies
    1. 20 வருசத்துக்குப் பின் பொது மக்கள் பார்வைக்காக இப்போதான் திறந்து விட்டிருக்காங்க ஸ்பை. அதான் போய் பார்த்து வந்தேன். நீங்களும் குடும்பத்தோடு சீக்கிரம் போய் வாங்க.

      Delete
  3. அழகான படங்கள் அருமையான விளக்கங்கள. நேரில் சென்ற ஒரு உணரவை. கொடுத்தது

    ReplyDelete
  4. அருமையான படங்களுடன் தெளிவான விளக்கமுடன் சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
  5. அருமையான படங்கள். சிறுவயதில் விடுமுறைக்குச் சென்னை சென்றபொழுது, லைட்வுஸ்ல் ஏறிய நினைவுகள் மீண்டும் மலர்ந்தன. நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. Really superb akka. athuvum avalavu azhaga beech erukurathai parkum pothu nama chennai eavalavu azhaganu doubt varuthu.

    Evening patha nama aluka vanthu full and fulla kupai akiduvaka!!!

    ReplyDelete
  7. “இந்தியாவிலே லிப்ட் வசதி கொண்ட ஒரே லைட் ஹவுஸ் இது தான்“
    பெருமையான விசயம் தான்.
    படங்களும் பதிவும் மிக மிக அருமை தோழி.

    ReplyDelete
  8. படங்களும் பதிவும் மிக மிக அருமை

    ReplyDelete
  9. படங்களைப் பார்த்தபோது கில்லி படம் நினைவுக்கு வந்தது.. கூடவே என் திருவல்லிக்கேணி மேன்ஷன் வாசமும்..

    ReplyDelete
  10. வாவ் படங்கள் மிக அருமை தகவலும் மிக பயனுள்ளவை பாராட்டுக்கள் சில பதிவுகல படித்துவிட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் அருமை என்று சொல்லிவிட்டு செல்வோம் ஆனால் இந்த பதிவு அப்படி அல்லாமல் உண்மையாகவே அருமை சகோ......

    ReplyDelete
  11. சென்னையில திரியும் நாங்க இன்னும் போகலை ... நீங்க முந்திகிட்டிங்க அக்கா ... அக்கான்னா அப்படிதான் இருக்கோணும் ...

    போட்டோஸ் கிளியரா இருக்குங்க அக்கா .. நைஸ் போஸ்ட்

    ReplyDelete
  12. நானும் மெரினா பார்த்து பல வருஷமாச்சு....:))

    அடுத்த முறை போய் வர வேண்டும்.

    ReplyDelete
  13. லைட் ஹவுஸ்ல லைட்டே எரியலயே... ( வலைச்சர அறிமும் சென்று பார்க்கவும் )

    ReplyDelete
  14. //நானும் மெரினா பார்த்து பல வருஷமாச்சு....:))

    அடுத்த முறை போய் வர வேண்டும்.//

    அம்மணியே சொல்லிட்டாங்க... அடுத்த சென்னை பயணத்தில் பார்த்துட வேண்டியது தான்! :)

    ReplyDelete