Friday, November 01, 2013

நினைவில் நின்ற தீபாவளிகள்

நம்ம வாழ்நாளில் எத்தனையோ தீபாவளியை கொண்டாடி இருப்போம். இருந்தாலும் ஒரு சில தீபாவளிகள் நம் மனசை விட்டு போகவே போகாது. அப்படி என் மனசில் நின்ன தீபாவளிகள் சில.....,
 கசப்பு தீபாவளி: எனக்கு நினைவு தெரிஞ்ச முதல் தீபாவளி.., என் அத்தையின் தலை தீபாவளிதான். பாட்டியால தனியா சமாளிக்க முடியாதுன்னு நாங்க எங்க அப்பாவோட சொந்த கிராமத்து வீட்டுக்கு போயிருந்தோம். அப்பாவுக்கு ஆண் பிள்ளை இல்லாத காரணத்தால, அப்பா சம்பாத்தியம் மொத்தம் எனக்குதானேன்னு அத்தைக்கு பொருமல் கொஞ்சம். அதனால, என்னை பிடிக்காது. மாமா பட்டாசுகள் நிறைய வாங்கி வந்திருந்தார். சின்ன பிள்ளைதானே! பட்டாசை பார்த்ததும் ஆசை ஆசையாய் கிட்டக்க போனதும், மாமா துப்பாக்கியும், ரோல் கேப்பும் கொடுக்க பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சேன். இதப் பார்த்த அத்தை, கோவமா என் முதுகுல பட்டாசு வெடிச்சு தலை தீபாவளி கொண்டாடினாங்க. நினைவில் நின்ன முதல் தீபாவளியே கசப்பான தீபாவளியா மாறிடுச்சு.
ஆரம்ப தீபாவளி:  மத்தாப்பு, கம்பி, ஜாட்டி, பாம்பு மாத்திரை, சங்கு சக்கரம், பொட்டு வெடி, கேப், புஸ்வானம்ன்னு வெடிக்காத பட்டாசுகளை மட்டும் வாங்கி வந்ததுமில்லாம,  அதையும் என் கூடவே இருந்து வெடிக்க வச்ச தீபாவளி. பொட்டு வெடியும், கேப் ரோல் வெடிக்க மட்டும் ஃபுல் சுதந்திரம் தந்தார். வீட்டு வேலை டென்சன், கள்ளம் கபடுலாம் இல்லாம கொண்டான தீபாவளி.
தாவணி போட்ட தீபாவளி: அப்பாக்கிட்ட அடம்பிடிச்சு வாங்கிய புத்தம் புது பட்டு பாவாடையில் கொண்டாடிய தீபாவளி. என்னை வளர்த்த பக்கத்து வீட்டு அண்ணா வாங்கி தந்த லட்சுமி வெடி, யானை வெடி, அணுகுண்டு, பாய் பட்டாசுன்னு சொல்லும் லோக்கல்ல தயாரிச்ச பட்டாசுன்னு பெரிய பெரிய வெடிகளை பரிசாய் வாங்கிய தீபாவளி. டிவில பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா!? பாட்டும்..., நான் சிரித்தால் தீபாவளி பாட்டையும் கேட்டுக்கிட்டே பெரிய ஹீரோயின் போல தெருவுல போக வர இருக்கும் எங்க தெரு ஹீரோக்கள் முன்னாடி சீன் போட்ட தீபாவளி.

 தலை தீபாவளி: தாலி சரடின் மஞ்சள் மறையாமயும், முகத்துல கல்யாண களை போகும் முன்னே எங்களுக்கு தலை தீபாவளி. பொண்ணுக்கு பட்டு புடவையா?! சாதாரண சேலையா!? மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட்டா!?மோதிரமா? எண்ணெய் தேய்க்க கல்யாண மனையை ஆர்டர் செய்து புதுசு வாங்கலாமா!? இல்ல பழசே போதுமான்னு பட்டி மன்றம் நடத்தாத குறையாய் பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் அம்மா, அப்பவோடு, தெருவே எங்களுக்காக காத்திருக்க..., எல்லோரையும் பார்க்க இருக்கும் கண்கள் போதாதுன்னு மெட்ராஸ் ஐயை வாங்கிட்டு வந்த என்னவரோடு தலைக்கு எண்ணெய் வைக்காமயே கொண்டாடிய தீபாவளி.
தூயாவின் முதல் தீபாவளி:  இருபது வருசத்துக்கப்புறம் எங்க வீட்டுக்கு புது வரவு. எங்கயோ யார் வீட்டுலயோ கதவை ஓங்கி சாத்தின சத்தம் கேட்டால் கூட அலறி அழுவா. அதனால, என் பாப்பாவுக்காக அக்கம் பக்கம் நாலு வீட்டுக்காரங்களும் வெடி வெடிக்காம சத்தம் வராத பட்டாசுகளை கொளுத்தி பத்தியம் இருந்து பாசத்தை காட்டிய தீபாவளி.


இனியாவின் தீபாவளி: அம்மாவை போலவே தைரியமான குட்டி பாப்பா இனியா. ஒன்பது மாசத்துலயே அம்மாவோடு சேர்ந்து மேடம் மத்தாப்பு கம்பியை பிடிச்சவங்க. பட்டாசு புகை பாப்பாக்கு ஆகாதுன்னு தாத்தா சொன்னதால அமைதியா தூரமா இருந்து பட்டாசுகளை பார்த்தும், கேட்டும் ரசிச்சாங்க.
ஓட்ட தீபாவளி: அப்புக்கு 4 வயசு. பாம்பை கையால் பிடிக்கும் புரியா வயசு. அக்காக்கள் போல பட்டாசை நானே கொளுத்துவேன்னு அடமா நின்னு தீபாவளியை கொண்டாடினவன். சங்கு சக்கரம் கொளுத்த.., பக்கத்துல இருக்கும் மத்தாப்பு பெட்டியை எடுக்க போய்.., சங்கு சக்கரத்தின் சீறும் நெருப்பு பட்டு மத்தாப்பு பெட்டி தீப்பிடிக்க கையில் தீக்காயம் பட்டு கதறி துடிக்க தூக்கிண்டு ஹாஸ்பிட்டல் ஓடிய தீபாவளி. என்னிக்கும் இது மறக்க கூடாதுன்னு அவன் கயில் இன்னமும் தழும்பு.

ஏக்க தீபாவளி: அப்பா, அம்மாவோடு கூட்டாய் இருந்து அம்மா கையால எண்ணெய் தேய்த்து, அப்பா கையால நூறு ரூபாய் வாங்கிய தீபாவளி. அம்மா, அப்பா, குடும்பம்ன்னு கொண்டாடிய குதூகல தீபாவளி. கடைக்கு போகனும், பலகாரம் சுடனும்ன்னு பொறுப்பில்லாம எல்லாமே என் அப்பா அம்மா பார்த்துக்குவாங்கன்னு கொண்டாடிய தீபாவளி. இனி வருமா?ன்னு நினைக்க வைக்கும் ஏக்க தீபாவளி.
பொறுப்பான தீபாவளி: கடைக்கு போய் வேண்டியதை வாங்கி, பலகாரம் சுட்டு, அக்கம் பக்கம் கொடுத்து.., வரவு செலவு பார்த்து...., பொறுப்பான பிள்ளையாய் புது வீட்டில் கொண்டாடும் தீபாவளி..., தூயா எப்ப வருவா?ன்னு வழி மேல் விழி வைத்து பார்த்திருக்க..., கண்காணிக்க அப்பா இல்லாம இந்த பயல் ஆட்டம் போடுவானேன்னு பயத்தோடு பட்டாசு பையின் மேல் ஒரு கண்ணுமாய் பொறுப்பான அம்மாவாய் கொண்டாடும் தீபாவளி.

தலை தீபாவளி கொண்டாடுறவங்களுக்கும்..., தலைக்கு குளிச்சு தீபாவளி கொண்டாடுறவங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

23 comments:

  1. சுவாரசியமான தீபாவளி பகிர்வு! ராஜி அக்காள் குடும்பத்தாருக்கு இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தம்பியின் தீபாவளி வாழ்த்து மனசுக்கு மகிழ்ச்சியை கொடுக்குது.

      Delete
  2. ரசித்தேன் சகோதரி...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனித்திடும் தீபாவளி நினைவுகள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

    ReplyDelete
  5. ஆணோ பெண்ணோ தனியாளாய் கொண்டாடிய தீபாவளி பண்டிகையை துணையோடு கொண்டாடும் போது அதன் மகிழ்ச்சியே தனிதான் ஒவ்வரு தீபாவளியும் அருமையான கோர்வை

    ReplyDelete
  6. ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வொரு வித அனுபவம்..

    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. எத்தனை எத்தனை தீபாவளிகள் அத்தனை அத்தனை அனுபவங்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. எத்தனை தீபாவளிகள் நினைவில் நிற்கின்றன! இந்த தீபாவளியும் இனி வரும் எல்லா தீபாவளிகளும் உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும்மா! உனக்கும் வீட்டில் அனைவருக்கும் என் அன்பும், இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  10. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமை அக்கா... தீபாவளி வாழ்த்துகள்! தூயா, இனியா மற்றும் குட்டி வாலுக்கும் என் வாழ்த்துகளை சொல்லிடுங்க..

    ReplyDelete
  12. அருமையான தீபாவளிகளாயிருக்கே!

    ReplyDelete
  13. இனிய தீப ஒளி வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete
  14. வாழ்க்கை ஒரு சக்கரம்..
    பண்டிகைகள் தான் நம் உணர்வுகளை
    முழுதுமாக பிரதிபலிக்கின்றன...
    கடந்த மூன்று வருடங்களாக எனக்கு
    ஏக்கத் தீபாவளியாகவே இருக்கிறது..
    ஊருக்கு போய் குழந்தைகளுடன்
    கொண்டாட மாட்டோமா என்று...
    நல்லா சொல்லியிருகீங்க பா..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  15. நெகிழ்ச்சியான ,வித்தியாசமான பதிவு. உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  16. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. விதம் விதமாய் தீபாவளி....

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  18. கற்றும் தந்திருக்கிறது காயமும் செய்திருக்கிறது.
    அத்தனை தீபாவளியும். ரசித்தேன் ....!

    என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete

  19. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  20. ஒவ்வொரு விதமான தீபாவளி.குழந்தைகளோடும் குடும்பத்தோடும்
    இனி வரும் தீபாவளிகள் அனைத்தும் இனிமையாகவே அமையும் ராஜி மா. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அழகாகப் பட்டியல் போட்டுள்ளீர்கள்..நன்றாய் இருக்கிறது...படிக்க படிக்க நான் கொண்டாடிய தீபாவளிகள் கண்முன் வந்து சென்றன. உங்கள் பிள்ளைகளின் பெயர்கள் - தூயா, இனியா அருமையோ அருமை! மிகப் பிடித்தது..அவர்களுக்கும் உங்கள் பையனுக்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete