புண்ணியம் தேடிப் போற பயணத்துல போன வாரம் நாம பார்த்தது செங்கல்பட்டில் இருக்கும் கோவிலான “திருவடிசூலம்” அதை ஒட்டி இன்னிக்கு நாம பார்க்கப்போற கோவிலும் செங்கல்பட்டு பக்கத்துல இருக்கும் கோவில்தான். அதுவும் திருவடிசூலம் கோவிலுக்கு பக்கத்துல இருக்கும் கோவிலைதான் பார்க்கப் போறோம்.
திருவடிசூலம் ஸ்ரீ
ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு இடப்புறம் வழியாகவும் இல்லாட்டி சென்னை - செங்கல்பட்டு
ஹைவேஸ்ல மறைமலை
நகரை தாண்டி இருக்கும் மகேந்திரா சிட்டி வழியா உள்ள போனா, அந்த வழி திருவடிசூலம்
கிராமத்துக்கு போய் சேரலாம். இந்த வழி சுற்றிலும் மலையும், பச்சைபசேலென செடி கொடிகள், மரங்கள் சூழ்ந்து அழகாக
காட்சியளிக்குது. இந்த
வழிதடம் மற்றும் திருவடிசூலம் கோவிலில் இருந்து செல்லும் வழியும், இந்த இடத்தை சுத்தி சுமார் இரண்டு கி மீ தொலைவில் தனிமையான வழி. அதனால, தனியா போறவங்க கவனமா போகனும். பெண்கள் தனியா போறதைத் தவிர்க்கலாம். இந்த வழி நம்மை நேரா ஸ்ரீமகா பைரவ ருத்ர
ஆலயயத்திற்கு கொண்டுச் செல்லும்.
மேல இருக்கும் படத்தில் இருப்பது அந்த
கோவிலின் மாதிரி. தற்செயலா கோவிலின் பழைய அழைபிதழை பார்த்து கொண்டு இருந்த போது
இவ்வளவு அழகான கோவில் எங்க இருக்கு? அதை நாம பார்க்க முடியுமா!?ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். நாம் செய்த புண்ணியத்தின் பலனாவோ என்னமோ இன்று நாம்
எல்லோரும் இந்த ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்று இருக்கிறோம் ..இது இந்த
கோவிலின் அழைப்பிதழில் எடுக்கப்பட்ட கோவிலின் மாதிரி வடிவம்தான் நாம் மேல பார்த்தது.
பைரவர், அவனி பாஜன பல்லவேஸ்வரம், சீயமங்கலம்
முதலில் பைரவர் பத்தி தெரிஞ்சுக்கலாம். அப்பதான் இனி கோவிலுக்கு போகும்போது நாம் வழிபடும் போது முழுமையா வழிபடமுடியும். நாம் சிவாலயங்களில் போகும்போது சன்னதியை சுற்றிவரும் போது வடகிழக்குப்பகுதியில் பைரவர் வீற்றிருப்பதை
பார்த்திருப்போம். பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நாம் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான
நோக்கமே பயன் தராமல் போய்டும்ன்னு சொல்வாங்க.
சிவன் கோவிலின் வட
கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர் இந்த பைரவர். பரதேசி கோலத்திலும், பன்னிரு கைகளுடனுடனும், நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத்
தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஆகிய
ஆயுதங்களைத் தாங்கியும் ருத்ரமூர்த்தி ரூபமாய்க் காட்சி தருபவர் கால பைரவர். சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்சபூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும்
கட்டுப்படுத்துபவராகவும் கருதபடுகிறார்.
மேல இருக்கும் படத்தில் இருப்பதுதான் ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது மலை அளவு உயரமாக தூய வெண்மையில் கம்பீரமா காட்சியளிக்குது இக்கோவில்.
இங்குள்ள ஆலயத்துக்கு ஸ்ரீமகா
பைரவருத்ர ஆலயம் ன்னு பெயரிடப்பட்டிருக்கு. . இதற்குப் பொருள் ஸ்ரீ என்பது பெண்சக்தியை
குறிக்கும். மகா என்றால் பெரியது என்றும், பைரவ என்றால் பயம் அறியாதவர் என்றும்,ருத்ர என்பது சிவ அம்சத்தையும், ஆலயம் என்பது ஆகம
விதிகளின் படி உருவாக்கப்பட்ட தலம் என்பதையும் குறிக்கும். மொத்தத்தில் பயம் அறியாத
சக்தியுடன் கூடிய சிவவம்சத்து ஆகம விதிப்படி அமைந்த ஆலயம் என்று அர்த்தம்.
ஒரு அமைதியான சூழ்நிலை இந்த கோவிலை சுத்திலும் இருக்கு..இங்க ஆலய பணிகள் நடந்து வருது. வெளியில் இருந்து கோவிலுக்குள் செல்லும் போது இங்கே ஆலயத்தை நிர்மாணிக்க காரணமாயிருந்த சுவாமிகளின் சில குறிப்புகள் பேனர்களாக வைக்கப்பட்டிருக்கு.
இங்க, நான்கு சிறிய கோவில்கள் இருக்கு. முதலில் ஸ்ரீ ருத்ர விநாயகர் அடுத்து ஸ்ரீ வைஷ்ணவி தேவி. அதனையடுத்து ஸ்ரீஅழகு பிரத்யங்கரா தேவி. வழக்கமா எல்லா கோவில்களில் பார்க்கும் பிரத்தியங்கரா தேவி அமைப்பில் இல்லாம இங்க மனித
முகத்துடன் அழகாக காட்சிதருகிறார் . மேலும் ஸ்ரீ சுப்ரமையர் ஆகியோரும் வீற்று
இருகின்றனர்.
இதுதான் கோவிலின் முன்பக்கம். வடஇந்திய கட்டிடக்கலையில்
கோவில்அமைப்பு. ஆடும் கும்பகலசம்,
பைரவரின் கூம்புவடிவ கருவறை என்று இந்த
ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற
ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.திருப்பணிகள் நடந்து கொண்டு இருகின்றன.
வட்ட வடிவிலான பிரகாரத்தை சுற்றி
வந்தால், கோவிலின் முன் பக்கம் வெளியே இரண்டு துவார பாலகர்களும், பைரவரின்
வாகனகளும் இருக்கு. உள்ளே படிக்கட்டுகளின் மேல் பைரவர் அருள் பாலிக்கிறார். பைரவரை
தரிசனம் செய்ய ஏறி செல்லும் படிகள் 12 ராசிகளின் படிகளை குறிக்கும்படி 12 படிகளா இருக்கு.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுது. இதனை குறிக்கும் வகையில் கோவிலுனுள்ளே பைரவரின் பல்வேறு வடிவங்கள் வைக்கப்பட்டிருக்கு.
இந்த பைரவமூர்தியின் திருவுருவம் அங்கே கிடைக்க
பெற்ற ஆலய அழைப்பிதழில் இருந்து எடுக்கப்பட்டது. மிக அழகாக காட்சியளிக்கிறார்
கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில்
இருந்து கல் எடுத்து பைரவர் சிலை உருவாக்கபட்டதாம். மகாபைரவ ருத்ர ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் சிலையின் உயரம் 5 அடி. சூலம், கட்கம், டமருகம் கொண்டு ஆட்சியும், வரப்பிரசாத குங்குமமும் நான்கு கரங்களில் அமையப் பெற்றது. உடலாக ஆண்,
பெண் கலை அடங்கியது. கபால உச்சி பிரம்மராட்சஷ செயல் அடங்கியது. அக்னி
சடையில் ஆனந்தம் கொண்டதுமாக, சுபிட்சம் கொண்டு
இடையில் நாக கிராஷாந்தியும், கத்தி முனை, அரிவாள்
கொண்டு சலங்கையோடும், இடது கால் தண்டை மெருகூட்ட, நெற்றியில் சூல பொட்டுடனும் உள்ளார்.
பிரம்மன் படைப்பு அடங்கா
பிறவியுடன் கூடிய கால மயம் கண் இமை பார்வையில் அடங்கி, அகோர பல்லுடன் கூடிய, சித்தாந்த வடிவில், சீர்மிகு அலங்காரம் தோற்ற பொலிவுடன் பிரம்ம முகூர்த்த பலன் அமையப் பெற்று, ரிஷி, நந்தி இல்லா, திருஆவுடையார் லக்கணம்
பெற்று, நாய் வாகன வேதம், கமல, மனம் கொண்டு பறை
சாற்றும், ஜலதார்ச்சண சமிஞ்சை பீட விருட்ச்சகம் அமைய பெற்று, விரிசல் இல்லா உயிரோட்டம் கொண்டு, விடை அறிந்த உன் பிறவி
ஆட்சி செய்யும், கபால யுக்தி பெற்ற, கால பைரவம் மந்திரம் சொல்ல,
காணா காட்சி, கண்டெடுத்து முத்து, நாகம் துணை கொண்டுள்ளார்.
பைரவரை தரிசனம் செய்து விட்டு
வெளியே வரும்போது தூரத்தில் நாகமுனி சன்னதி காணபடுகிறது அங்கே அதற்கான தகவலை தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தால் யாரும் இல்ல.
தூரத்தில் இருந்து பார்க்கும் போதே மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சி தருது ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் . கோவில் நடைதிறந்து இருக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை. பைரவரை வணங்கிய திருப்தியோடு
கோவிலுக்கு வெளிய வந்து அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டு தூரத்தில் இருக்கும் மண் சாலைவழியா பயணத்தை தொடங்கினோம்.
வந்துடுவேன்னு மழை வேறு பயம் காட்டியது. அடர்ந்த
காடு போல இருக்குறதால மழைக்காக ஒதுங்கவும் இடம் இல்லை. இங்கிருந்து திரும்பி
செல்லும்போது மகேந்திரா சிட்டி வழியாக போகும் மினி பஸ் பத்திய தகவல் அட்டவணை கோவிலில் பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருக்கு. அப்படி இல்லாட்டி திருவடி சூலம் வழியா பஸ்
ஸ்டாப் வந்து செங்கல்பட்டு மார்க்கமாக நம்ம ஊருக்கு திரும்பலாம். வீட்டுக்கு கிளம்பலாம்
ன்னு நினைச்சு பஸ்சுக்காக காத்திருக்கும்போது, பக்கத்துல ஒரு கருமாரியம்மன் கோவில் இருக்குன்னு அறிவிப்பு பலகை பார்த்து தெரிஞ்சுக்கிட்டோம். சரி, இங்க வெட்டியா இருக்குறதுக்கு கோவிலுக்காவது போய் வரலாமேன்னு கிளம்பிட்டோம்.
தூரத்திலிருந்து பார்க்க மிகவும் பெரிய ரூபமா அன்னை கருமாரி காட்சியளித்தாள். கோவிலினுள் அமைதியாக இருந்து சிறிதுநேரம் அன்னையை வங்கினோம் அங்கே ஆலயத்தினுள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை ஆகையால் அங்கே இருக்கும் அம்மனின் திருவுருவ சிலையின் சிறப்பு பற்றி அங்கே இருந்த குறிப்புகளில் எழுதப்பட்டு இருந்தது.
திரும்பி வரும்போது நாங்கள்
முதலில் நின்ற இடத்திலிருந்தே அன்னையை வணங்கிவிட்டு தாயே எல்லோருக்கும் உன் அருள்
கிடைக்கவேண்டும் ன்னு நினைச்சுக்கிட்டே, கேமராவை ஜூம் செய்ய ஆரம்பிச்ச போது, நம் எல்லோருக்கும் காட்சி அளிக்கனும்ன்னு அன்னையோட எண்ணம் போல! வானம் மப்பும், மந்தாரமுமில்லாம தெளிவா இல்லாம அன்னை தெளிவாக காட்சி தந்தாள். இந்த சமயம் இந்த கருமாரி அம்மனின் சிறப்பை இங்கே
சொல்லியே ஆகவேண்டும்.
கிட்டத்தட்ட அரை கி மீ தொலைவில்
இருந்து ஜூம் செஞ்சு படம் எடுத்ததால அம்மனின் திருஉருவ சிலையின் நுணுக்கங்களை தெளிவா படம்
பிடிக்க முடியலை. திருவேற்காட்டில் எழுந்தருளி இருக்கும் தேவி கருமாரி தன்னை
வழிபாடு செய்யும் ஆறாம் தலைமுறையில் உள்ள முத்து ஸ்வாமிகள் என்பவர் இரவு விழித்து
கொண்டு இருக்கும் போது மலைசூழ் வனத்தின் நடுவே ஆயிரமாயிரம் ஒளிகள் சூழ ஒன்றிணைந்து
அன்னை தன் பொற்பாதங்களை காட்டி ஆண்பெண் தத்துவமான சிவா சக்திரூபமாக விண்ணுக்கும்
மானுக்குமாய் ஓங்கி சுடர்விடும் மாபெரும் தீப்பழம்பாகி அதில் அய்யன் அன்னையோடு
ஏகமாகி அப்பெரும் ஜோதியில் அகிலாண்ட கோடிநாயகி பிரமாண்டமாக காட்சி கொடுத்தாளாம்.
அந்த சுயரூபத்தை காட்சியாக்க
பல்லாயிரம் ஆண்டுகளாக நாதனின் ருத்ர பூமியில் அடியில் வீற்றிருக்கும் தன் சுயரூபத்தை
திரிசூலம் நாட்டி காண செய்தாளாம். அன்னை
அந்த சுயம்பு ரூபதினை 800 டன் எடை உடைய ஒரே கல்லாக காஞ்சிபுரம் மாவட்டம்
சிறுதாமூர் பட்டாகோணவாடை கிராமத்தில் 21 அடி ஆழத்தில் திரிசூலம் நாட்டி காண செய்தாளாம் அச்சுயம்புவே மகா
திருஉருவமாகி இந்த திருவடி சூலத்தில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறாளாம்.
இன்னிக்கு பைரவர் மற்றும் கருமாரி அம்மன் கோவில்கள் பற்றி பார்த்து படித்து அருள் பெற்றோம். அடுத்த வாரம் வேற ஒரு கோவில் பற்றி பார்க்கலாம். நன்றி! வணக்கம்.
ஜூம் செய்து படம் எடுக்க முடியாவிட்டாலும் படம் நல்லா இருக்கு சகோதரி... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteகணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)
பயணம் நல்லா இருக்கு....
ReplyDeleteபுதிய கோவில்கள் புதிய தகவல்கள் படங்களும் தொகுப்பும் அருமையா இருக்கு
ReplyDeleteகோவில்கள் பத்தின பதிவுகள் நிச்சயம் தெரியாத சில பேருக்கு தெரியும் விதத்திலும் பலருக்கு அங்கேசென்று புண்ணியம் தேடி கொள்ளவும் உங்கள் புண்ணியம் தேடி பயணம் கடவுள் அனுகிரகதால் தொடரட்டும் ..
ReplyDeleteஅருமை ராஜி புண்ணியம் தேடி புகழ்பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள்..... பகிர்வுக்கு நன்றி சகோ.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete