Monday, December 30, 2013

தேவையா இதுப்போன்ற சடங்குகள்!? - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள! போன வாரம் பக்கத்து தெரு காசி அண்ணா இறந்ததுக்கு இன்னிக்கு காரியமாச்சே! கூப்பிட்டு இருந்தாங்களே! போய் வந்தியா!?

ம்ம்ம் போய் வந்தேன் மாமா. ஆனா, ஏன் போனோம்?ன்னு ஆகிடுச்சு.

ஏன்? என்னாச்சு!? சரியா கவனிக்கலியா!?

கவனிச்சாங்க மாமா. ஆனா, காசி அண்ணன் வொய்ஃபுக்கு செஞ்ச சடங்குலாம் பார்த்து மனசே ஒரு மாதிரி ஆகிட்டுது. அக்கம் பக்கத்தாரோட அதிகம் பழகாதவங்க அந்த அக்கா. நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்து 35 வருசமானாலும் அதிகமா வெளில வராதவங்க. அப்படிப்பட்டவங்களை, சடங்கு செய்யுறேன்னு முகம், கைக்கால்லாம் மஞ்சள் பூசி, அகலமா பொட்டு வச்சு, கைநிறைய வளையல் போட்டு, கழுத்துல மாலைப் போட்டு ஊர் ஃபுல்லா நடக்க வச்சு கூட்டி போய் ஆத்தங்கரையில சடங்கு செஞ்சாங்க. என் கோலத்தை பாத்தீங்களா!?ன்னு அழுதுக்கிட்டு போனது மனசைப் பிசைஞ்சுட்டுது.

ஆமா புள்ளா, காசி அண்ணன் செத்த அன்னிக்கே அந்த அண்ணா உடம்பை குளிப்பாட்டுற போதே பக்கத்துல அந்த அக்காவையும் உக்கார வச்சு குடம் குடமா தண்ணி ஊத்தி இம்சை பண்ணிட்டாங்க.  சடங்கு பண்ணுறதை வேணாமின்னு சொல்லலை. அதுக்காக, ஊருக்கு முன்னாடி செய்யுறதை தான் வேணாம்ன்னு சொல்றேன். போன வியாழக்கிழமை சுனாமி நினைவு தினம் புள்ள. டிவில பார்த்தியா!?

பார்த்தேன் மாமா! சுனாமி வந்த மூணு மாசம் கழிச்சு நாமலாம் தமிழ்நாடு ஃபுல்லா டூர் போனோம். அப்படிப் போகும்போது பூம்புகாருக்கும் போனோம். அப்பா, அந்தக் கடற்கரைல ஒரு 20வயசுப் பொண்ணு தன்னையே மறந்து கடலையே பார்த்துக் கதறிக்கிட்டு இருந்துச்சு. என்ன ஏதுன்னு அக்கம் பக்கம் விசாரிச்சப்போ, சுனாமில அப்பா, அம்மா, தம்பி, கல்யாணம் கட்டி ஆறு மாசமான புருசன், வயத்திலிருந்த கருன்னு எல்லாத்தையும் இழந்திட்டு தன்னையும் மறந்து அந்த கடல் வெளில சுத்திக்கிட்டு இருந்தது இன்னும் என் கண்ணை விட்டு அகலவேயில்ல மாமா. அந்தப் பொண்ணு இப்ப எப்படி இருக்கோ தெரியலை!!

ம்ம்ம்ம் பலப் பேரோட வாழ்க்கையை புரட்டிப் போட்டுட்டுது இந்த சுனாமி. உன் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்குப் போயிருந்தேன். நம்ம வாயெல்லாம் கட்டிப்போடும் ராஜி, அங்க அவ பொண்ணுக்கிட்ட அடங்கிப் போயி நிக்குறா!

ஏன்? என்னாச்சு!? ராஜி என்ன தப்பு பண்ணா!?

தப்புலாம் பண்ணலை. பிளாக்குல எழுதுறதுக்காக கம்ப்யூட்டர்ல உக்காந்து கிச்சன் கார்னர் டைப்பிக்கிட்டு இருந்திருக்கா. அங்க வந்த அவ பொண்ணு இனியா, என்னம்மா பண்றேன்னு மானிட்டரை பார்த்து அங்கிருக்குறதை படிச்சிருக்கா. அதுல சத்து மாவுக்கு தேவையானப் பொருட்கள்ன்னு சொல்லி ஒரு பத்து பொருட்களை டைப் பண்ணி இருக்குறதைப் பார்த்த இனியா, அம்மா முக்கியமான பொருள் ஒண்ணை விட்டுட்டே பாருன்னு கத்தி இருக்கா.

மறுபடியும் படிச்சு பார்த்து எதும் விடுப்பட்டுப் போகலியே இனியா!ன்னு ராஜி சொல்ல, நீ சமைக்கும்போது தேவைப்படும் பொருள்ல கேமராவும் ஒண்ணாச்சே! அது விடுபட்டு போயிருக்கு பாருன்னு சொல்லிட்டு அங்கிருந்து அவ எஸ்கேப்.

ம்க்கும் ராஜியை வம்பிக்கிழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே! சரி, எனக்கொரு ஜோக் வந்துச்சு. அதை சொல்லுறேன் கேளுங்க. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள்லாம் செத்துப் போய் சொர்க்கத்திற்கு போனாங்க. ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து,  அவங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்ன்னு விசாரிச்சு, கம்மியா குழந்தை இருக்குறவங்களுக்கு பரிசு கொடுத்தார். காந்திஜி உள்ள போய் கடவுள்கிட்ட பேசி வெறும் கையோடு திரும்பி வந்தாராம்!

ஏன்?ன்னு மத்த தலைவர்கள்லாம் காந்திஜிக்கிட்ட விசாரிச்சதுக்கு யாரோ ஒரு முட்டாள் கடவுள்கிட்ட 'நான் தான் இந்தியாவின் தந்தை' ன்னு சொல்லியிருக்கான். இவ்வளவு குழந்தைகள் பெத்த உனக்கு ஏன் பரிசு தரனும்ன்னு கடவுள் திருப்பி அனுப்பிட்டார்ன்னு ப்தில் சொன்னாராம்.

ஹா! ஹா! நம்மாளுங்க ஒருத்தரையும் பொழைக்க விட மாட்டாங்களே!! நீ ஜோக் சொல்லீட்ட. நான் கேள்விக் கேக்குறேன். நீ பதில் சொல்லுப் பார்க்கலாம்.

ம்ம் கேளுங்க. முடிஞ்சா பதில் சொல்றேன்.

ஒரே காம்பவுண்டில் உள்ள மூணு வீட்டுக்கு ஆப்பிள் வியாபாரி, தன் கிட்ட இருக்குற் ஆப்பிள்ல பாதியையும் + அரை ஆப்பிளையும் முதல் வீட்டுக்குக் கொடுத்தார். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டுக்குக் கொடுத்தார். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூணாம் வீட்டுக்குக் கொடுத்தார்.


இப்ப வியாபாரியின் கூடை காலியாகிட்டுது! அப்படின்னா, வியாபாரி கொண்டுவந்த ஆப்பிள்களில் எத்தனை முழு ஆப்பிள்களும், எத்தனை அரை ஆப்பிள்களும் இருந்துச்சுன்னு சொல்லு புள்ள. 

கொஞ்சம் இருங்க மாமா. அடுப்புல பால் வச்சிட்டு வந்திருக்கேன். அதை இறக்கிட்டு வந்து பதில் சொல்றேனுங்க மாமா!

ஓ எஸ்கேப் ஆகப் பார்க்குறியா!? ரைட்டு.

16 comments:

  1. அந்தப் பெண்ணை நினைத்தால் மனம் பதறுகிறது...

    ReplyDelete
  2. 4 + Two 1/2 Apples...? (மூணாம் வீட்டுக்கு பாதி + அரை ஆப்பிள் தான் சந்தேகமாக இருக்கு....!)

    ReplyDelete
  3. உண்மை தான் அக்கா.இந்த சடங்கு எல்லாம் தேவைஇல்லை.இங்கு கேரளாவில் கணவர் இருந்த போது எப்படி இருப்பார்களோ அதுமாதிரிதான் கணவர் இறந்த பிறகும்.dress மட்டும்light colours போடுவாங்க.சின்ன பொண்ண இருந்த பெத்தவங்க மறுமணம் பண்ணி வைப்பாங்க.
    வயதுக்கு வந்த சடங்கு எதுவும் கிடையாது.வயதுக்கு வந்த அன்னிக்கு மட்டும் school leave.அவ்வளவுதான்.
    அக்கா பசங்க கிட்ட பல்பு வாங்குறது கூட ஒரு சந்தோஷம் இல்லையா !!!

    ReplyDelete
  4. Ellaam thevaiyaana thakavalkal..

    Nantri!

    ReplyDelete
  5. காந்திஜிக்கு பரிசு கிடைக்காத மாதிரி நம்ம 'தமிழர் தந்தை 'க்கும் பரிசு கிடைக்காது போலிருக்கே !
    +1

    ReplyDelete
  6. சுனாமி நினைத்தாலே மனம் பதறுகிறது.... அந்த பொண்ணு பாவம்....:(((

    இந்த மாதிரி சடங்குகள் எல்லாமே தேவையே இல்லாதவை தான்....

    ReplyDelete
  7. காலம் மாறிக்கொண்டுவருகிறது. நகரங்களில் இதுபோல் நடப்பது குறைந்துவருகிறது.(2) தங்கள் நகைச்சுவை எழுத்து சுவையாக உள்ளது!

    ReplyDelete
  8. ரசித்தேன்!
    மிக்வும் விருவிருப்பான உரையாடல்!
    பல சமயங்களில் நாம் செய்வதும் நம்மை சுற்றி நடப்பவற்றுக்கும் காரணம் கூற முடியாது. காலம் தான் பதில் சொல்லணும்.
    அப்புறம் அந்த கணக்கில் கடைசியாக பாதியை கொடுத்தால் கூடை எப்படி காலியாகும்?

    ReplyDelete
  9. 7 apples.

    First house -> Half (3.5) + 0.5 = 4 apples

    So remaining 3

    Second house -> Half (1.5) + 0.5 = 2 apples

    So remaining 1

    Third house -> Half (0.5) + 0.5 = 1 apple

    ReplyDelete
  10. துயரமான சில சடங்குகள் தேவையா? மக்களைப் பார்த்த கேள்வி இது. எல்லோருமே அடுத்தவர்களுக்காக செய்யும் ச்மூக( ஜாதி )க் கட்டுப்பாடு இது. உடைத்தவர்களும் உண்டு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகிலடைந்த அந்த சுனாமி நினைவுகளை மற்றக்க இயலாது. இரண்டினையும் நன்றாகவே சொன்னீர்கள். கிச்சன் கார்னர் பற்றி நீங்களே அடித்த கிண்டல் நல்ல நகைச்சுவை!



    ReplyDelete
  11. நல்ல அவியல்......

    த.ம. +1

    ReplyDelete
  12. சுவையான பதிவு! தேவையற்ற சடங்குகள் அவசியமே இல்லை! அதுவும் கணவன் இறந்த பிறகு பெண்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் மிகவும் கேவலமானவை! மனைவி தவறினால் ஆண்களுக்கு உண்டா சடங்குகள்?!! நம் சமூகம் எப்போது திருந்தும்?!

    ReplyDelete
  13. சரியாகத்தான் உங்கள் மகள் சொல்லியிருக்கிறாள்.
    கர்ணன் கவசகுண்டலத்தோட பிறந்த மாதிரி, நீங்கள் காமிராவோட பிறந்திருப்பீர்களோன்னு ஒரு சின்ன சந்தேகம்.

    ReplyDelete
  14. இது போன்ற நிறைய சடங்குகள் நிச்சயம் விலக்கி வைக்கப் பட வேண்டியவையே

    ReplyDelete