Wednesday, November 06, 2013

வலையன் கோட்டை, பிடாரி ரதம் மாமல்ல புரம் - மௌனச்சாட்சிகள்

கடந்த இரண்டு வாரமா மௌனச்சாட்சிகள்ல, மாமல்லபுரத்துல அதிகம் பரிட்சயப்படாத இடங்களான புலிக்குகை, அர்ச்சுனன் தபசு  பார்த்தோம்.அந்த வரிசைல இன்னிக்கும் சில புதிய இடங்களை பார்க்க போறோம்.  மாமல்லபுரம் ன்னு சொன்னதும் எல்லாருக்கும் சட்டுன்னு கடற்கரை கோவில் ஐவர்ரதம் லாம் தான் நினைவுக்கு வரும்.  ஆனா வெளியே தெரியாத இரண்டு ரதங்கள் இருக்கு. சில பேர் பார்த்திருக்கலாம் பார்காதவங்களுக்காக இந்த பதிவு....,


சென்னைல இருந்து போரூர் வழியா மாமல்லபுரம் போகும் போதும்.., செங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம் போகும்போதும்,  மாமல்லபுரம் பக்கிம்காம் கால்வாய்க்குக் கிழக்குப் பக்கத்துல இருக்குற வலையன் குட்டை  இரதமும், இதுக்கு வடக்கே கொஞ்ச தூரத்துல வேறு இரண்டு பாறைக் கோயிலான பிடாரி இரதங்களும் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்ன்னு தெரியல.பார்க்காதவங்களுக்காக இந்த பதிவு. வாங்க போய் பார்க்கலாம்!! .. 
ஊருக்கு ஒதுக்குப்புறத்துல தனியா இருக்குறதால இங்க நிறையப்பேர் வர்றதில்ல போல!   இந்த இடம் முழுக்க தடுப்பு வேலிகள் போட்டிருக்காங்க.  அங்க,  ஒரு பாறையில் விநாயகர் சிலை இருக்கு.  வாங்க கிட்டக்க போய் பார்க்கலாம்...  முதல்கடவுளான விநாயகருக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்ய ஒரு வட்ட வடிவிலான குழிபோன்ற பகுதி இங்க இருக்கு பாருங்க. நிறைய பேர் வழிபடுறாங்கன்னு நினைக்கிறேன்.  பூக்கள்லாம் போட்டு பூஜை பண்ணி இருக்காங்க..  நாமும் கற்பூரம் கொளுத்தி நம் பயணத்தைத் தொடங்கலாம் வாங்க!

நாம பார்க்கிற இந்த இடம்தான் வலையன் குட்டை ரதம்,  ஒரே பாறையில  செதுக்கப்பட்டு, முழுசா முடிக்கப்படாம பாதியில கை விடப்பட்ட நிலையில் இருக்கு.   இந்த பாறைக் கோயில்களின் பேர்லாம் கொஞ்சம் வித்தியாசமாவும் இருக்கு.  “ வலையன் குட்டை இரதம் ”  ன்னு பேர் வந்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே வந்தால் அங்க ஒரு தண்னி தேங்கிய குட்டை ஒண்ணு இருக்கு.  அந்தக் குட்டைக்கு கிட்டக்க இது இருப்பதால இதுக்கு அந்த பேர் வந்திருக்கலாமோ!? அங்க இருந்து பார்த்தா கலங்கறை விளக்கம் சின்னதா தெரியுது பாருங்க!!

இங்க இருந்து கொஞ்ச தூரத்துல வேற ரெண்டு பாறைக் கோயில்களான  பிடாரி இரதங்கள் காணப்படுது.  மாமல்லபுரத்தின் காவல் தேவதையாகிய பிடாரியின் கோயில் அருகில் இந்த இரதங்கள் இருக்குறதால பிடாரி இரதங்கள் ன்னு பேர் வந்திருக்கலாம்ன்னு நினைக்குறேன்.

இந்த பாறை கோவிகளின் சிறப்பம்சம் என்னன்னா , அடிப்பகுதி, கருவறைக்கு முக்கியத்துவம் கொடுக்காம மேற்பகுதி மட்டும் அதிகக் கவனம் செலுத்தி அழகாவும், ஒழுங்காவும், சிறப்பாவும் வடிவமைக்கபட்டிருக்கு. வலையன் குட்டைக் கோயிலும், பிடாரிக் கோயிலும் மூன்று நிலையுள்ள இளங்கோயில்கள் வகையைச் சார்ந்தவை என்றாலும், இவ்விரண்டிற்கும் சில வேறுபாடுகள் இருக்கு. இந்த இரண்டு கோவில்களிலும் விமானங்களின் சிறப்பினை மட்டும் வெளிப்படுத்துற மாதிரி செதுக்கபட்டு இருக்கலாம்ன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றதா கூட வந்தவர் சொன்னார்.

இந்த இடம் திருமூர்த்தி கோவில் போகும் பகுதியின் மறுபக்கம்.  பாறை முடியும் பகுதி. இந்த இடத்துக்கும் யாரும் போறதில்ல போல!  ஏன்னா, இது மலைமீது இருக்கும் கோவில்களின் மறுபக்கம் இருக்கு.  கோவிலை பத்தின குறிப்புகள் ஏதுமில்ல. தொல்பொருள் துறையினரின் எச்சரிக்கைப் பலகை  மட்டும் இருக்கு.

பார்வையாளர்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுன்றதால குடிமக்களும், சமூக விரோதிகளும் இங்க அதிகம் இருப்பாங்க போல, உடைஞ்ச சரக்கு பாட்டில்களும்,  குப்பைகளுமா சேந்து அழகான மண்டபத்தை அலங்கோலமா வச்சிருக்கு.  இந்தத் தூண்களில் சிங்கம் மற்றும் பல்வேறு அழகான சிலைகளும் செதுக்கப்பட்டு அழகா காட்சியளிக்குது. இந்த கோவில் பற்றிய தகவலும் தெரியல.  
இனி நாம பார்க்கபோறலாம் மாமல்லபுரம் செல்லும் எல்லோரும் டெம்ப்ளேட்டா பார்க்கும் இடங்களைதான்.  இது கணேசரதம். இதன் விமானங்கள், தூண்கள், சுவர்கள் எல்லாமே சிலைகளாக செதுக்கப்பட்டிருக்கு.  கோவிலினுள் ஒரு விக்கிரகமும் இருக்கு.  சிலர் இங்க  பயபக்தியோடு சூடம் ஏத்தி வழிபட்டிருக்காங்க போல!  இப்ப தொல்லியல் கட்டுப்பாட்டுல இக்கோவில் இருந்தாலும்,  இதுக்கு முன்னாடி இங்க வழிபாடு நடந்ததுக்குண்டான அறிகுறிகள் தெரியுது.

இது கிருஷ்ணருடைய வெண்ணை உருண்டை ன்னு சொல்லபடுது . கிருஷ்ணர் இங்க எப்ப வந்தார்!? பஞ்சபாண்டவர்களை முன் நிறுத்தி சில சிற்பங்கள் காணபட்டாலும்,  பாண்டவர்களுக்கும், பல்லவர்களுக்கும் என்ன சம்பந்தம்ன்னு தெரியல.

இந்த கோவிகளில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே இடத்துல சன்னதிகள் அமைக்கப்பட்டதுமில்லாம அவர்களின் அவதார படங்கள் கூட சிற்பங்களா செதுக்கப்பட்டிருக்கு. இதை பார்க்கும்போது,  ”சிவனும், ஹரியும் ஒண்ணு. இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு”ன்னு சின்ன பிள்ளைல பாடும் பாட்டு நினைவுக்கு வருது!!

கோவில் முன்னாடி வட்டவடிவிலான குளம் ஒண்ணு கல்லுலயே  செதுக்கியிருக்காங்க.  கோவில் உள்ள சிவலிங்கமும்,  சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கு.  கை, காலை சுத்தம் பண்ணிக்கிட்டு சாமியை நல்லா கும்பிட்டுக்கோங்க. அடுத்த இடத்துக்கு போலாம்.

அடுத்த இடத்துக்கு போற வழியில இருக்குற ஒரு பாறையில செஞ பெருய யானைக்குள்ள குட்டி, குட்டி யானைகள் அழகா செதுக்கப்பட்டிருக்கு.  இதெல்லாம் எப்படி இவர்களுக்கு சாத்தியம்!?ன்னு நினைக்கும்போது மலைப்புதான் வருது.  நரசிம்ம வர்மன் கி.பி.642 இல், சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்ற போது, அங்குள்ள சிற்பிகளையும், கலைஞர்களையும் போர்க்கைதிகளா சிறைப்பிடித்து அழைத்து வந்திருக்கலாம்ன்னும், அவர்களை கொண்டு காஞ்சியும், மாமல்லபுரத்தையும் உருவாக்கி இருக்கலாம்ன்னும்  தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்களோட சந்தேகத்தை சொல்லி இருக்காங்க.

இன்னும் பல சில சிற்பங்கள் முற்றுப்பெறாமலே இருக்கு.சாளுக்கியர்களின் படையெடுப்பும், விஜய நகரப் பேரரசின் தொடக்கமும் பல்லவர்களின் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

மேல இருக்குற படத்துல பார்க்குறது வராக மண்டபம்.  இந்த மண்டபத்துல இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று,  திருமால் வராக அவதாரம் எடுத்து பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை ஹிரண்யாட்சண் என்று அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் பன்றி உருவெடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேல கொண்டுவரும் காட்சியே இங்க செதுக்கியிருக்காங்க.  வராகம் தன் காலை நாக அரசன்மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில் பூமிதேவி அமர்ந்திருக்கிறாள். அருகே ஒரு முனிவரும், ஒரு பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். பிரம்மன் ஒரு பக்கம் இருக்கிறார். அவர் அருகே ஒரு முனிவர் நிற்கிறார். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் இருக்கிறார்கள். கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டிருக்கு.

இது பஞ்ச பாண்டவர்களின் படுக்கை ன்னு சொல்றாங்க.  ஆனா இந்த பெயர் காரணம் பத்தி சரியாக தெரியலை.  பாண்டவர்கள் இங்க தங்கிருந்ததாகவும் அவர்கள் இங்க ஒரு குளம் அமைத்து குளித்ததாவும் வாய் வழி கதைகள் சொல்லப்படுது.  கல்லிலே சிற்பக் கலையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அழகா வடிவமைச்சிருக்காங்க.

அடுத்து நாம போக போறது முடிவு பெறாத நிலையில் இருக்கும் ராஜகோபுரம்.  ஒரு கோவிலின் கோபுரத்தை எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்று இதைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளனும் போல இருக்கு. ஆனா, ஏன் இது முற்றுப்பெறலைன்னுதான் தெரியலை!!

இதன் உள்புறம் இருக்கும் கலைநயத்தை பார்க்கும் போது வியப்பா இருக்கு.   இயற்கையின் படைப்பால கோடிக்கணகான உயிர்கள் பிறந்து மனிதர்கள் எலும்புக்கூடுகளாகச் சிதைந்து போனாலும்,. இவைகளின் புகழ்மட்டும் எந்தகாலத்திலும் அழியாமல் அவர்களுடைய கலை நுட்பதிற்காகவே உயிர்வாழ்கின்றன.

இனி நாம் பார்கபோறது ஐவர் ரதம் ன்னு சொல்லப்படுற பஞ்சபாண்டவர் ரதம். இவை தனித்தனியா ஐந்து ஒற்றைக்கல்லுல கோயில்களாக செதுக்கப்பட்டவை.   மற்றும் சில விலங்குச் சிற்பங்களும் இங்க இருக்கு . இவை தெற்கிலிருந்து வடக்காச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கி இருக்காங்க.

இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரை வைத்து அழைக்கபட்டாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை உடைய தர்மராஜா ரதம் மற்றும் அர்ச்சுன ரதம்.  சாலை வடிவிலான சிகரத்தை உடையது பீம இரதம்,. சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடையது திரௌபதி இரதம். கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடையது சகாதேவ இரதம்.  நகுலனுக்குதான் ரதம் எதும் காணோம். உருவாக்கவே இல்லியா!? இல்ல காணாம போய்டுச்சான்னு தெரியல!?

ஐவர் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராஜா ரதம் தான். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் இருக்கு. மேல உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமா முடிக்கப்பட்டிருக்கு. தரைத்தளம் முழுவதுமா செதுக்கலை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை இருக்கு.  அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் இருக்கு. அவை தவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியிருக்கு. ஆனா மேல உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைச்சா மட்டுமே இங்க போய் பார்க்க முடியும்.

தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை: அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் இணைந்த சிற்பம்), ஹரிஹரன் (சிவனும் திருமாலும் இணைந்த சிற்பம்), சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன். நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டிருக்கு.

தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை: அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் இணைந்த சிற்பம்), ஹரிஹரன் (சிவனும் திருமாலும் இணைந்த சிற்பம்), சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன். நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் மொத்தம் 40 சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கு. இதுல 14 சிவன் வடிவங்கள் இருக்கு. கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாக கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாக காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாக காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன் போன்றவை அடங்கும். 

இவை தவிர, சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகளும் செதுக்கப்பட்டிருக்கு.  பொதுவா, இதுப்போன்ற சிற்பங்களே எல்லாக் கோயில்களிலும் காணக்கிடைக்கும்ன்னாலும், மிக வித்தியாசமா இந்தத் தளத்தில் சாதாரணக் கோயில் பணியாளர்களான கையில் ஓலைக்குடலையில் பூவுடன் ஓர் அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார் ஆகியோரும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்காங்க.  பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் இந்தத் தளத்தில் வடிக்கப்பட்டிருக்கு. இரண்டாம் தளத்தில் சூரியன், சந்திரன் ஆகியோரைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிற்பம், தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள சிவன்.

குடிசை போன்ற தோற்றத்தையுடைய திரௌபதி ரதம் சின்னதா இருக்கு. இந்திரனுக்கு வடிக்கப்பட்டதாகச் சொல்லும் சகாதேவ ரதம் கொஞ்சம் முற்றுப்பெறாத நிலையில்இருக்கு. அர்ஜுனன் ரத்தத்தில் கிழக்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலும் பெண்களின் உருவங்கள் சிறந்த கலைப்படைப்புகளா இருக்கு.

பீம ரதத்தில் துவாரபாலர் சிற்பங்பளைத் தவிர வேறு சிற்பங்கள் இல்லை. இது திருமாலுக்கு உரியதாய் இருக்கலாம். சகாதேவ ரதம் இந்திரனுக்கு வடிக்கப்பட்டதா இருக்கலாம்ன்னு சொல்றாங்க. இதுவும் கூட்டுச் சிற்பங்கள் வகையை சார்ந்தது. அனைத்தும் புராண இதிகாச கதைகளின் மையமா இருக்கு.



சள சளவென ஓயாம ஏதோதோ கவிதை பேசி வரும் கடலலைகள், கடலோரத்தில் சவாரி செய்ய தயாரா நிற்கும் குதிரைகள், பாறைகளில் ஓடும் நண்டுகள், கடலலைகளில் சறுக்கி விளையாடும் காதலர்கள், அவற்றை நோட்டமிடும் இளைஞர்கள், கடைகள் விரித்துக் காத்திருக்கும் வியாபாரிகள், பட்ஜெட்டை மீறிடுமோன்னு சட்டை பாக்கெட்டை தொட்டு பார்க்க வைக்கும் மிடில் கிளாஸ் நினைப்பு, வீட்டு வேலைகள்ல இருந்து இன்னி விடுதலைன்னு சந்தோசப்படும் இல்லத்தரசியின் மகிழ்ச்சின்ற பலவிஷயங்கள் மக்களை ஈர்க்க...,  

மழையில் நனைஞ்சு ஓடி வரும் குழந்தையை சேலைத்தலைப்பால் பாசத்தோடு துடைக்கும் அன்னையை ஏக்கத்தோடு பாக்கும் தாயில்லா சிறுவனின் ஏக்கப்பார்வை போல..., பார்வையாளர்களுக்காக வலையன் குட்டை ரதமும், பிடாரி ரதமும்     பல கதைகளை சுமந்தப்படி காத்திருக்கு....,

மீண்டும் அடுத்த வாரம் இதே இடத்தின் வேற ஒரு பகுதியிலிருந்து சந்திப்போம்!!

10 comments:

  1. நல்ல படங்கள். சமீபத்தில் இந்த இடங்கள் பார்த்து ரசித்தோம். இன்னமும் நினைவில்......

    ReplyDelete
  2. Great! pavam nagulan avaruku mattum oru ratham kuda illai. eathai pathiramaga parthu adutha thalaimuraiku kondu sellanukum. illai eanil samuga virthikal athai azhithu viduvarkal.
    neril parka mudiyathathai negal azhgaga photovudan explain pani erukirkal. Thank you

    ReplyDelete
  3. வலையன்குட்டை, பிடாரி ரதம் ரெண்டுமே நான் பார்த்தில்லைம்மா! மத்த இடங்கள்லாம் பாத்து ரசிச்சதுண்டு. படங்கள் ஒவ்வொண்ணும் ரொம்ப ஜோரா கண்ணை நகர்த்த விடாம பாக்க வெக்குது.

    ReplyDelete
  4. பார்த்தவற்றை இரசித்து வாசிக்கும்படி சொல்லி வந்திருக்கிறீர்கள். சிறப்பான படங்களும்

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான வர்ணனைகளுடன், அழகிய படங்களுடன் ரொம்ப சுவாரஸ்யமா படித்தேன். கல்லிலே செதுக்கிய குளம் அழகு.

    ReplyDelete
  6. மிக மிக ஜோரான பதிவு, மற்ற இரு இரதங்களை நான் பல முறை கண்டதுண்டு. பெரும்பாலும் திருப்போரூர் வழி போறவங்க பார்த்திருக்கக் கூடும்..! மிக சுவையான பதிவு. இதை ஆங்கிலத்தில் ( ஜெயமோகன் தமிங்கிலிஷ் அல்ல ) உண்மையான ஆங்கிலத்திலும் எழுதினால் பலர் பயன்பெறுவாங்க,

    ReplyDelete
  7. படங்களும் அதை தொகுத்தவிதமும் இந்த இடத்தினை பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளமுடிந்தது

    ReplyDelete
  8. வலையன் குட்டை இரதமும்,பிடாரி ரதமும் இப்பொழுதுதான் கண்டுகொண்டேன்.

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு சலிக்காமல் மற்றொரு முறை மகாபலிபுரத்தை சுற்றி பார்த்த நிறைவு .என்றும் அன்புடன் .இலா.தமழடியான்

    ReplyDelete