Friday, February 14, 2014

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

தந்தைக்கு மந்திரம் உபதேசித்த முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க எண்ணிடலங்காது உள்ளன. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புடையது. இளமை மாறாமல் இருக்கும்  முருகனது சிறப்பு வாய்ந்தத் தலங்களில் இன்று புண்ணியம் தேடி பயணத்தில் நாம் பார்க்க இருப்பது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருங்கூர்,  நாகர்கோவில். ”குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”ன்ற ஔவ்வையின் வாக்கிற்கேற்ப இந்த திருக்கோவிலும் மலைமேல் தான் இருக்கு.

தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் (நெருங்கி) வந்து அருள்பவர் என்பதால், இவ்வூர் மருங்கூர் என பெயர் வந்தது. இதுதான் திருக்கோவிலுக்குச் செல்லும் மலையடிவார நுழைவுத் தோரண வாயில். நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது இத்திருகோவில். இங்குச் செல்ல நேரடி பஸ் வசதியும் உள்ளன.

ஏறக்குறைய எண்பது அடி உயரமும், இருபத்தி இரண்டு ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த மலை திருமலை,  மங்கலமலை,  எழில்மலை, சித்தர்மலைவேள்விமலை எனவும் அழைக்கபடுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது மேற்குப்புறம் உயர்ந்தும், அதன் தலை பகுதியில் திருக்கோவிலும்  கிழக்குப்புறம் நீண்டும் சரிந்தும் ஒரு ஆண் மயில் போலத் தோற்றம் அளிப்பதால் இந்த மலை மயூரகிரிமயில்மலை எனவும் சொல்லபடுகிறது.     

படியேறி மலைமீது வந்தால் இந்த திருக்கோவிலின் நுழைவு வாயிலை அடையலாம். இந்தத் திருக்கோவிலின் உள்ளே செல்லும் முன் அதன் ஸ்தல வரலாற்றை பாப்போம்.  அகலிகை மீது ஆசைக் கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும்படி அவளது கணவர் கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் பூலோகம் எல்லாம் அலைந்து திரிந்து இங்கு வந்தான். இவ்வூர் அருகிலுள்ள சுசீந்திரத்தில் உள்ள ஸ்ரீதாணுமாலயன் காட்சி தந்து இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தருளினார்.

இனிப் பிரகாரத்தை வலம் வரும்போது வலப்பக்கம் காசிலிங்கேஸ்வரரும் இடப்பக்கம் பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் சன்னதிகளும்  உள்ளன. இந்த காசிலிங்கேஸ்வரர் சன்னதி எதிரே நந்திப் பீடம் உண்டு. இந்த இடத்தில சித்தர் ஒருவர் ஜீவசமாதியான தாகவும் சொல்லபடுகிறது இனி ஸ்தல வரலாறின் தொடர்ச்சியை பார்ப்போம்...,


இந்திரனுக்கு சாப விமோசனம் கிடைத்தவுடன் இந்திரனுடைய வெள்ளை குதிரையான உச்சைசிரவம் சாபம் கொண்ட இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதி சிவனிடம் விமோசனம் கேட்டது. அதை ஏற்று சிவனும், சுசிந்திரத்தின் மருங்கே வடக்கிழக்கு பக்கத்தில் உள்ள இதன் பழைய காலத்துப் பெயரான சோபனாத்திரியில் உள்ள பிரம்மஷேத்திர மூர்த்தியான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியை  வழிப்பட்டு அவனை அர்ச்சித்து நற்கதி அடையுமாறு அருள்பாலித்தார்.
இது திருக்கோவிலின் கிழக்கு வாயில் பகுதி. இனி, ஸ்தல வரலாற்றை பார்க்கலாம். இந்த உச்சைசிரவம் என்னும் வெள்ளைகுதிரை இறைவனிடம் குதிரையாகிய என்னால் அர்ச்சிக்க முடியாதே என உள்ளம் கலங்கி முறையிட்டது. அப்பொழுது சுனந்தனையும் உடன் அழைத்து செல்லுமாறு இறைவன் அறிவுறுத்தினார். பின்னர், உச்சைசிரவம் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினாராம் குதிரை வழிபட்ட தலம் என்பதால் இதற்கு வாசிபுரம்(வாசி என்றால் குதிரை)என்றும் பெயருண்டு. எல்லா முருகன் கோவில்களிலும் மயில் மீதுதான் முருகன் வலம்வருவார். ஆனால், இங்கு குதிரை வழிபட்டத் தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனிவருவார். இது இந்தக் கோவிலின் விசேஷமாகும்.  

இந்தk கோவிலின் மற்றுமொரு சிறப்பு, கந்தசஷ்டி அன்று மும்மூர்த்தி அலங்காரம் கொண்டு மும்மூர்த்தி அம்ச முருகனாகk காட்சிth தருகிறார். ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி)நடராஜராகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மாவாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவார். இது இந்த கோவிலின் ஒரு சிறப்பு அம்சமாகும். 

கிழக்கு வாயிலுக்கு நேரே இருக்கும் பலிபீடம் மஹா பலிபீடம் ஆகும். அதன் முன் சிறிய இந்திர பலிபீடமும், அதன் பின் பிரம்மா மற்றும் அக்னி பலிபீடங்களும் உள்ளன, இதன் சிறப்பு அம்சம் என்னனா 12 ராசிகளும் 27 நட்சத்திர குறிகளும் இருக்கு. இது ஒரு பரிகார அமைப்பு ஆகும். பிறந்த குழந்தைக்கு, முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது. இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரைப் பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர்.

பிரகார வலம் வரும்போது இங்கே ஒரு நாக சன்னதி இருக்கு. மேலும் தெற்குப் பக்கம் யம பலிபீடமும், மேற்கு பக்கம் நிர்குதி பலிபீடமும், வடமேற்கில் வருண பலிபீடமும், வடக்கே வாயு ,மகாவிஷ்ணு ,குபேரன் மற்றும் ஈசானன் முதலிய பலிபீடங்கள் உள்ளன. பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர் சன்னதிகளும் உள்ளன.   கந்தசஷ்டி திருவிழா இங்கு விசேஷம். விமோசனம் கேட்டுத் தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். 


ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும்படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்றும் அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது.

மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சித் தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியப் பின் இங்குள்ள முருகனுக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் இடைமலை தொண்டு என்னும் சிறு கணவாயின் நேர் எதிரே சேர சோழ பாண்டிய மன்னர்களின் எல்லை கோட்டில் இருப்பதால் மன்னர்கள் பலராலும் வணங்கப் பட்டத் திருத்தலம் என சொல்லப்படுகிறது.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மதுரைத் தொடங்கிக் குமரி வரையுள்ள பகுதி பாண்டி மண்டலமாக இருந்தது. அதனால் இப்பகுதி பாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது. முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது. பல்வேறு மன்னர்கள் ஆண்டு வந்தற்கு சாட்சியாகவும் அவரவர்கள் பற்றிய செய்திகள் இங்கே உள்ள சுவர்களில் சின்னங்களாக காணப்படுகிறது. இந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வாழைப்பூ போன்ற அமைப்பு பத்மநாபபுரம் அரண்மனையிலும் காணப்படுகிறது.

இந்தத் திருகோவிலின் உத்திரத்தில் மீன் உடம்பும், யானை தலையும் கொண்ட அமைப்பு இரண்டு நாடுகளின் இடையே உள்ளே தொடர்புகளையும், அவர்கள் இந்தக் கோவிலுக்கு செய்த தானங்களும் இங்கே உள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

எதிரில் முருக தீர்த்தம் உள்ளது. திருமலையின் அடிவாரத்தில் காவடி மண்டபமும் உள்ளது.   உற்சவர் சண்முகர், கந்தசஷ்டி விழாவின்போது மட்டுமே புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவரை சன்னதிக்குள் மட்டுமே தரிசிக்க முடியும்.

திரு.நாராயணகுரு தனிமையை நாடி இங்குள்ள மருந்துவாழ் மலையில் தங்கி இருந்த போது அடிக்கடி இந்த ஸ்தலத்திற்கு வந்து தவம் செய்வாராம். ஒருநாள் நடுராத்திரியில் முதியவர் ஒருவர் பசியோடு இருந்த நாராயண குருவுடன் தான் கொண்டு வந்த உணவை உண்ண கொடுத்து, தானும் உண்டாராம். பின்னர் மறைந்து விட்டார். அது இங்குள்ள முருகன் என சொல்லப்படுகிறது. திரு நாராயணகுருவுடன் மருந்துவாழ் மலையில் தங்கி இருந்த சட்டம்பி சுவாமிகளும் திருவனந்தபுரம் அபேதானந்தசுவாமிகளும் இங்கே பல நாட்கள் தங்கி இருந்து தவம் செய்து உள்ளனர்.


மேலும் திருவஞ்சிநல்லூர் சிதம்பரம் சுவாமிகள் மற்றும் இங்குள்ள வேதாந்த சிரவண மடத்தில் தங்கி இருந்த  பல துறவிகள் ஞானபேதம்(முக்தி) அடைந்துள்ளனர். இந்த ஸ்தலத்தை சுற்றி ஆறு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்தத் திருக்கோவில் நடை திறந்திருக்கும்.  மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு புண்ணிய ஷேத்திரத்தில இருந்து சந்திக்கலாம்.

12 comments:

  1. மருங்கூர்-இரவிபுதூர் தான் எனது சொந்த கிராமம். ஆனால் எமக்கு தெரியாத பல செய்திகள் தாங்கள் தந்து உள்ளேர்கள். மிக்க நன்றி! எப்படி உங்களால் இவ்வளவு தகவல்களை சேகரிக்க முடிந்தது..?
    ~ revmuthal.com

    ReplyDelete
    Replies
    1. வருக்கைக்கு நன்றி சகோ ..நீங்கள் அந்த ஊர் எனபது மிகவும் சந்தோசமான விஷயம் மேலும் நாங்க கோவிலுக்கு சென்ற போது ஒரு முதியவர் அந்த கோவிலை பற்றி அழகாக விளக்கினார் ...அதன் பதிவுதான் இது

      Delete
  2. இந்த கோவிலை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வுளவு தெளிவாக இன்றுதான் அறிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

      Delete
  3. இதுவரை சென்றதில்லை சகோதரி... மருங்கூர் கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி... படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் செல்லவேண்டாம் அண்ணா நான் இடும் பதிவுகளை பார்த்தாலே போதும் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

      Delete
  4. மிக அழகான தலம்! கோயிலின் தூய்மை நீங்கள் பகிர்ந்த படங்களில் அறிந்துகொள்ள முடிந்தது! சிறப்பான வரலாறுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறப்பாக பராமரிகின்றனர் அதற்காக ஒரு குழுவும் இருக்கிறது நாங்கள் சென்றபோது விழகாலமாக இருந்தது ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ...

    ReplyDelete
  6. "//முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க எண்ணிடலங்காது உள்ளன.//" - அதில் எங்கள் ஊர் சிட்னி முருகன் கோவிலும் அடங்கும் சகோ.

    கோவில் பற்றிய செய்திகளை மிகவும் அழகாகவும், வரலாற்றுச் செய்திகளோடும் தொகுத்து, கோவில் நேரத்தையும் சேர்த்து தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. uavaikarai@gmail.com க்கு உங்க மெயில் ஐ.டியை தெரியப்படுத்துங்க... உங்களிடம் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.........! அவசரம்...

    ReplyDelete
  8. சிறப்பானதோர் கோவில் பற்றிய படங்களும் தகவல்களும் அங்கே செல்லத் தூண்டுகின்றன.......

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete