Monday, July 30, 2018

நடப்பது நடந்தே தீரும் - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள டல்லா உக்காந்திருக்கே?!

எங்கம்மா என்னைய திட்டிடுச்சு மாமா..

எதுக்கு திட்டுனாங்க?!

எப்ப பாரு தின்னுட்டு  தூங்கிட்டு  இருக்கியே! அதது ஊருக்குள் பொம்பளைகள்லாம் எப்படி பொழைக்குது, நீயும் இருக்கியேன்னு திட்டுனாங்க.. 

அவங்க எப்பயுமே சரியாதான் சொல்வாங்க.

என்னாது?!

ஒன்னுமில்ல,  புதுசா காணாததை கண்ட மாதிரி எதுக்காக அப்படி சொன்னாங்க?! எப்பயும் அது நடக்குறதுதானே?!

யாரோ முத்துலட்சுமி ரெட்டின்னு ஒரு டாக்டரம்மாவை பத்தி டிவில சொன்னாங்க. அதை பார்த்துட்டுதான் எனக்கு மண்டகப்படி நடந்துச்சு.

முத்துலட்சுமி ரெட்டி அம்மா யார்ன்னு தெரியுமா?!

முதல் பொம்பளை டாக்டர்ன்னு எனக்கு தெரியும். ஊருக்கு நாலு பொம்பள டாக்டர் இருக்கும் காலத்தில் எங்கம்மா என்னைய ஏன் திட்டனும்?!

அவங்க டாக்டர்ன்ற அளவுக்காவது தெரிஞ்சிருக்கே உனக்கு. எப்ப பாரு பேஸ்புக்லதானே இருக்கே. இதுலாம் தெரிஞ்சுக்காத. எப்ப பாரு கடலை போட்டுக்கிட்டு..  முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் அடிமைகளாகவும், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy).  அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைலாம் இவரால்தான் கொண்டு வரப்பட்டது. 
அது மட்டுமல்லாம, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர்தான். அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். சட்டசபையில் அங்கம் வகித்த முதல் பெண்ணும் இவரே. அந்த காலத்துலயே  சமூக சீர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவர் இவர்.  புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கௌரவமான ஒரு குடும்பத்தில் 1886ல . நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி, புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியின் முதல்வர். முத்துலட்சுமிக்கு நான்கு வயதில், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். பருவ வயதானபோது,  படிப்பை நிறுத்த நினைச்சாங்க. ஆனால் முத்துலட்சுமி நன்றாகப் படித்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள்ன்னு டீச்சர்லாம் சிபாரிசு செய்யவே, உயர் நிலைப்பள்ளி படிப்பைத்தொடர்ந்தார்.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்துபேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பத்துல ஒரே ஒரு  மாணவி, அதிலும் பத்தில் முதல் மாணவி என்ற பெருமை பெற்றார் முத்துலட்சுமி. அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்தடை ஏதும் இல்லாமல் போனது. சிறுவயதில் இருந்தே முத்துலட்சுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு வருமாம். அதை  பொருட்படுத்தாமல் படிப்பில் கவனமாக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது கண்பார்வை சற்று மங்கியது. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப்பாடங்களுடன் ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), மில்டன் (Milton), ஷெல்லி (Shelly) போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்களையும் படித்தார். தனது 20வது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் படிச்சார்.  மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, புதிதான அந்தச் சூழ்நிலையால் பயந்திருந்த முத்துலட்சுமி வெகுவிரைவில் பயத்திலிருந்து மீண்டு, படிப்பில் முன்னேறுவதில் கவனம் செலுத்தினார். அறுவை சிகிச்சை தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினாலும், அவருக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய எண்ணங்களுக்கேற்ற கணவனாக டி.சுந்தரரெட்டி அமைந்தார். அக்காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி, சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய் தந்தையைப் போல மருத்துவரானார். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வாகியானார். 

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை  பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியில் இருந்த ஐந்தாண்டுளில்  தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் மாதிரியான அதிரடியான சட்டங்களை கொண்டு வந்தார்.  பல்வேறு காரணங்களால் குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தைகளை வளர்க்க,  அவ்வை இல்லத்தினை அமைச்சார். இப்பயும் இது அடையாறிலிருக்கு.  குழந்தைகளை படிக்க வச்சு கல்யாணம் செஞ்சு வைப்பார். அந்த நேரத்தில்தான் அவங்க வீட்டுக்காரர் இறந்துட்டார். கலங்கி நின்னாலும், அதுக்குப்பின் முழுசா சமூகத்துக்குன்னு தன்னை அர்ப்பணிச்சுக்கிட்டாங்க.  முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை இல்லாத காரணத்தினால் சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க.  தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாதுன்னு, சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். அப்படி உருவானதுதான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. இதுக்கு பிரதமர் நேரு 1952ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். கோவில்களில் தேவதாசியாய் பெண்களை நேர்ந்துவிடக்கூடாதுன்னு சட்டசபையில் முழங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல்தட்டு ஆட்களிடம், தேவதாசியாவது அத்தனை புனிதம்ன்னா வேணும்ன்னா உங்க குலப்பெண்களை நேர்ந்துவிடுங்க. எங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னு தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்தது. பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து, புகழ் பெற்ற முத்துலட்சுமி  1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். அவர் நினைவாகதான் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டம் கொடுத்துக்கிட்டு வர்றாங்க. 
எது நடக்கனும்ன்னு விதிச்சிருக்கோ அது நடந்துதான் தீரும். நான் உன்கிட்ட அல்லாடனும்ன்னு விதிச்சிருக்கும்போது எப்படி படிச்சு டாக்டராகி இருப்பேன் மாமா?!

’நடப்பது நடந்தே தீரும்’ இந்த வார்த்தைக்கு, மகாபாரதத்துல கர்ணனும், ராமாயணத்துல கும்பகர்ணனும்தான் சரியான உதாரணம்.   இருவருமே சிறந்த குணம் படைச்சவங்க. தீயோர் பக்கமிருந்தாங்களே தவிர, தீமையினை செய்யாதவங்க. யார்ன்னே தெரியாத அம்மா, யார்ன்னு தெரிஞ்சுக்க போராடிக்கிட்டிருக்கும் அம்மா,  மகாபாரத போருன்போது நான்தான்  உன் அம்மான்னு சொல்லி எதிரில் நின்னு, தன்னோடு வந்திடுமாறு  அழைச்சாங்க. அதுமட்டுமில்லாம, கடவுள் அவதாரமான க்ருஷ்ணர், கௌரவர்களோடு இருந்தா உனக்கு அழிவு நிச்சயம்ன்னு சொல்லி எச்சரிச்சார். இவங்க மட்டுமில்லாம வயசில் மூத்தவங்கலாம் சொல்லியும் கௌரவர்களோடு இருந்தே  போரில் மாண்டே போனான். 
ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்
இது ராமாயண பாடல்.  ராவணன் போக்கு சரியில்லை. நீ என்னோடு வந்து ராமனுடன் சேர்ன்னு விபீஷணன் கும்பகர்ணனை கூப்பிட, அதுக்கு அவன் மறுத்து சொன்ன வார்த்தைகள்தான்  மேல பார்த்தது. 
என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும். அழிய வேண்டியது, அதற்குரிய காலத்தில் அழிந்துப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும் அழிந்து போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல் (ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே -எனக் கூறினான் கும்பகர்ணன். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே.. இது கும்பகர்ணனின் முடிவு.  ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று விபீஷணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவணனும் அரக்கர் சேனையும் கூண்டோடு, கைலாசம் போகப் போகிறோம். எங்களுக்கெல்லாம் எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன்கள் செய்து நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு..ன்னு சொல்றான். 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின் பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா.. இதுக்கு என்ன பொருள்ன்னா,  தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே” 

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்
கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்.
இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்..ன்னு கும்பகர்ணன் விபீஷணனை திருப்பி அனுப்பிட்டான். அதனால தலையால் தண்ணி குடிச்சாலும் எது நடக்கனும்ன்னு விதி இருக்கோ அது நடந்தேதான் தீரும். 
தமிழர் பண்பாடும், வாழ்வியல் முறைகளும் எத்தனை நுணுக்கம். அதுவே நம்மாளுங்கக்கிட்ட ஒட்டுச்சா?! கிராம், கிலோ, டன்ன்னா என்னன்னு நம்ம பசங்களுக்கு தெரியும், ஆனா, தமிழ் அளவைகள் தெரியுமா?! நம்ம பசங்களுக்கு காபடி, அரைப்படியே தெரியாது. எல்லாமே கப் அளவுதான்.
அப்ப என்னைய கழுதைன்னு சொல்றியாடி?!

இதை சொல்லித்தான் தெரியனுமா மாமா!!??

ஓடிரு ராஜி.....

நன்றியுடன்,
ராஜி 

18 comments:

  1. மிக நல்ல பதிவு தோழி! ஒரு சிறிய திருத்தம். குறை கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். வரலாறு தவறாகப் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகக் சுட்டிக் காட்டுகிறேன். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்கள் (மேற்கத்திய மருத்துவ முறை) ஆனந்தி கோபால் ஜோஷி மற்றும் கடாம்பினி கங்குலி ஆகியோர். இவர்கள் 1886-ஆம் ஆண்டிலே மருத்துவர் பட்டம் பெற்றனர். முத்துலட்சுமி ரெட்டி 1886-ஆம் ஆண்டுதான் பிறந்தார். அவர் 1912-இல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. குறை சொல்வதில் தப்பே இல்லை. நான் வருத்தப்படலை. கோவிக்கவுமில்ல. தவறினை சுட்டிக்காட்டினால்தான் திருத்திக்க முடியும். படிப்பவர்களுக்கு தவறானா தகவல் கொடுத்த மாதிரி ஆகிடக்கூடாதில்லையா?!

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
    2. நண்பர் பாலமுரளி கிருஷ்ணா சொல்லி இருக்கும் தகவல் எனக்கும் புதிது.

      Delete
    3. மருத்துவர் முத்துலக்ஷ்மி இல்லை என்பது தெரியும் ஆனால் அதற்குமுன் பட்டம் பெற்ற அந்தப் பெண்மணிகளின் பெயர்கள் டக்கென்று பிடிகிடைக்கலை...இப்போது பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தகவல் பார்த்து நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி

      கீதா

      Delete
  2. தகவல்கள் நன்று
    இருந்தாலும் மாமாவை இப்படி சொல்லி இருக்ககூடாது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொன்னேன்?! அச்சச்சோ! அந்த எருமைய நான் அப்பிடி சொல்வேனா?!

      Delete
    2. மாமா இந்த ஏரியாவுக்கு வரமாட்டார் போலயே...

      Delete
    3. பார்க்கட்டுமே! நான் ஒன்னும் தப்பா சொல்லலியே! கழுதைதான் முன்ன போனா முட்டும்.. பின்னாடி போனா உதைக்கும்

      Delete
  3. ஸ்வாரஸ்யமான தகவல்கள்.... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. அருமையான தகவல்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. ராமயண உதாரணமெல்லாம் நல்ல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. படித்ததை பகிர்ந்துக்கிட்டேன். அம்புட்டுதான் சேக்ஸ் அண்ணா

      Delete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  7. கழுதை நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சொந்த அனுபவமாச்சுதே! அதான்

      Delete
  8. நல்ல தகவல்கள் சகோதரி..

    ReplyDelete