Friday, July 13, 2018

பஞ்சஷேத்ர தலமான ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆலயம்(ஆரணி) - அறிவோம் ஆலயம்

பக்தன் பிரகலாதனின் அபயக்குரலுக்கு நொடிப்பொழுதில் அவதரித்த இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்ய அவதரித்தார் நரசிம்மர். தன் இரண்யகசிபுவை வதம் செய்தபின்னும் உக்கிரம் தணியாத நரசிம்மரை கண்டு அஞ்சிய பிரகலாதன், நரசிம்மரை நோக்கி பாடல் பாடி, லட்சுமி தேவியுடன் சாந்த சொரூபத்தில் காட்சியருள வேண்டி,  தரிசனம் பெற்றார். பிரகலாதனுக்கு கிட்டிய லட்சுமி நரசிம்மர் தரிசனத்தை தங்களுக்கும் கிட்டவேண்டுமென  திருமாலிடம் தேவாதிதேவர்கள்  வேண்டி நின்றனர்.  திருமால், 'அவணி நாராயணபுரம்' என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு  சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.  
பிருகு  மகரிஷியோடு தேவாதிதேவர்களின் தவத்துக்கு மனமிரங்கி, சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’   என வேண்டி நின்றார். அதன்பின்னர், அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி அளித்ததன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது. மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன்பெயர் ‘பாகூ நதி’. இது சேயாற்றோடு கலக்குது. இத்திருக்கோவில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் எனவும் அழைக்கப்படுது.


ஆரணில இருந்து 12கிமீ தூரத்தில் இருக்கு இக்கோவில். வந்தவாசில இருந்து 26 கிமீ, செய்யாறுல இருந்து 25கிமீ, சேத்பட்ல இருந்து 30கிமீ தூரத்திலும் இக்கோவில் இருக்கு.  சென்னைல இருந்து 148 எண் கொண்ட  போளூர்க்கு  நேரடி பேருந்து இருக்கு. அதுல வந்தால்  ஆவணியாபுரம்ல இறங்கி, இடதுபுறம் இருக்கும் ஊர் நுழைவு வாயில் வழியா ஊருக்குள் வந்தால், ஊரின் மேற்குப்புறமாக நம் கண்ணுக்கு தெரியும் இந்த  சிம்மாசல பர்வதம்.  பிரதான சாலையிலிருந்து வயல்வெளிகளை ரசித்தவாறே ஒரு கிமீ தூரத்திலிருக்கும் கோவிலுக்கு  நடந்தே செல்லலாம்.  இல்லன்னா, ஷேர் ஆட்டோக்களும் சனிக்கிழமைகளில் கிடைக்கும்.

இம்மலை  வடக்கு தெற்காக சிங்கம் ஒன்று படுத்திருப்பது மாதிரி காட்சியளிக்கும்.  கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயம் சுமார் 110 படிகளை கொண்டது.  இது பல்லவர்காலத்தைய கோவிலாகும். 
மலையின் பாதி தூரத்தை கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை தரிசிக்கலாம்.  சுத்தமான சிறிய கருவறை.  அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர். கருவறையின் எதிரினில் இரண்டு க கருடாழ்வார்கள் உள்ளனர். இருவரில் ஒருவர் சிம்ம முகத்துடன் இருக்கின்றார். இடப்புறம் லட்சுமி தேவியும் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறாள்.   அழகான பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்வாங்க. ஆனா, அந்த மகாலட்சுமியே இங்க சிங்க முகம் கொண்டு இருக்க என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?!

கண்ணாடி அறையில் நின்றக்கோலத்தில் உற்சவர்..
பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்றாங்க. அதன்படி அறுபது வருடங்களுக்கு ஒரு முறை சர்வதாரி வருடத்தைய  ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

தெற்கு நோக்கிய பஞ்ச நரசிம்மர்..
இக்கோவிலில் மொத்தம் 9 நரசிம்மரை தரிசிக்கலாம், மூலவரான லட்சுமி நரசிம்மர், உற்சவர், மற்றொரு சிறிய உற்சவர், பஞ்ச நரசிம்மர், மலைமீதிருக்கும் யோக நரசிம்மர் என மொத்தம் 9 நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம். இது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படுகின்றனர்.  இங்கு வழிபடுவதன்மூலம் இரண்யவதம் நடந்த அகோபில மடத்தை வழிப்பட்டதன் பலன் கிடைக்கும்.
திருப்பதி அமைப்புப்படியே மலைமேல்  சீனிவாசப்பெருமாள் இருக்க, கீழ்ப்புற கோவிலில்  அமர்ந்த கோலத்தில் அலர்மேலு தாயார் வீற்றிருக்கிறார். 

திருமணத்தடை நீங்க, குழந்தைவரம் வேண்டி இக்கோவிலுக்கு வருவோர் ஏராளம். குழந்தைப்பேறு வேண்டுவோர், சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்தும், இத்தலத்தில்  சனிக்கிழமை இரவு இத்தலத்தில் தங்கியிருந்தும் வரம் பெறுகின்றனர்.  குழந்தை வரம் பெற்றோர் நேர்த்திக்கடனாய் துலாபாரம் செலுத்துகின்றனர்.  திருப்பதி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாதவர்களும் இவ்விடத்தில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தங்கள் நிலத்தில் விளையும்  விளைப்பொருட்களில் ஒரு பாகத்தை இக்கோவிலுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.  மேலும் துலாபாரமாய் கொடுக்கும் நெல், வெல்லம், சர்க்கரை முதலான பொருட்களும் இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. கரும்பு, வேர்க்கடலை, கம்பு, சோளம்ன்னு அனைத்து விளைப்பொருட்களும் இங்குண்டு.

லட்சுமி நரசிம்மரை வணங்கி மேலும் மலை ஏறினால் வலப்பக்கமிருக்கும் ஆஞ்சநேயரை காணலாம்.
பிருகு முனிவரின் தவக்கோலமே இந்த பாறைவடிவம்ன்னு சொல்றாங்க. 

அங்கிருந்து மலை ஏறினால், ஒரு பெரிய பாறையின்மேல்  பலிபீடம், கொடிமரத்தோடு கூடிய ஆலயத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் சீனிவாசப்பெருமாளை காணலாம்.

திருப்பதி சீனிவாசப்பெருமாளை ஒத்த உருவ அமைப்பு.. ஜருகண்டி, ஜருகண்டின்னு கழுத்தில் கைவைத்து தள்ள ஆள் இல்ல. எவ்வளவு நேரமானாலும் நம்ம வெங்கிக்கூட பேசிக்கிட்டிருக்கலாம். சனிக்கிழமைலதான் சார் ரொம்ப பிசியா இருப்பார். மத்த நாட்களில் தனியாதான் இருப்பார். போய் பேசிக்கிட்டிருக்கலாம்.
ஸ்ரீரங்கத்து ரங்கப்பெருமாள்
சீனிவாசப்பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு பிரகாரத்தை வலம் வருகையில் பாறையை குடைந்து குடவறை கோவில் இருக்கு. அதுக்குள் போனால், ஸ்ரீரங்கத்து ரங்கனையும், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளையும்,  சோளிங்கப்புரத்து யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். 
சோளிங்கப்புரத்து யோக நரசிம்மர் 
காஞ்சிபுரத்து வரதராஜப்பெருமாள்
அமிர்தவல்லி தாயார்
எல்லா கோவில்களிலும் தல தீர்த்தம் கோவில் அருகிலேயே இருக்கும்.ஆனா இத்தலத்து புண்ணிய தீர்த்தமான பாகூ நதி இக்கோவிலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கு.  வயல்ல்வெளிகள் சூழ்ந்த இடமென்பதால் இயற்கை பேரழகு கொட்டிக்கிடக்கும்.    வைகானச ஆகம விதிப்படி அமைந்த வடகலை கோவில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றத்தோடு  தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைப்பெறும்.  சித்திரை சுவாதியில் நரசிம்மர் ஜெயந்தி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மூன்றாம் சனியன்று பெருமாள் கருடசேவை, ஐப்பசியில் தீபாவளி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தையில் காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என விழாக்களுக்குக் குறையில்லை. மாத சுவாதி நரசிம்மருக்கும், திருவோணம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் உகந்த நாள் என்பதால் அன்றைய தினமும் விசேச அபிசேக ஆராதனை உண்டு. 
கடன் தொல்லைக்கு மலையுச்சியில் உள்ள வெங்கடேசப் பெருமாளையும்,  பகை, பில்லி, சூன்யம் போன்றவை நீங்க லட்சுமிநரசிம்மரையும் சரணடைகிறார்கள். பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம்போல இங்கயும் கிரிவலம் வருவது வழக்கம். அதுக்காக, மலையை சுத்தி தார்ப்பாதை போட்டிருக்காங்க. இது மலைன்னு சொல்லுறதைவிட குன்றுன்னு சொல்லலாம். 

இந்த குன்றின்மீது, சரியாக சொல்வதென்றால் சீனிவாசப்பெருமாள் கோவில் இருக்கும் பாறையை குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் சிங்கமுகம்போல காட்சியளிப்பதால் இந்த மலைக்கு சிம்மாசலம்ன்னு பேரு.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  இந்த ஆலயம் இருக்கு. தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  இக்கோவில் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில்  காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆவணியாபுரம் கூட்டு ரோட்டில் சுமாரான ஹோட்டல் இருக்கும்.  அதனால, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசியிலேயே சாப்பிட்டு வந்திடுங்க. இல்லன்னா கட்டுச்சோறு மூட்டை கட்டிக்கிட்டு வாங்க. இந்து அறநிலை துறைக்கட்டுப்பாட்டில் இருப்பதால் தினமும் மதியம் 50பேருக்கு அன்னதானம் நடக்குதுன்னு கேள்வி. கோவில் அருகில் சாதாரண நாட்களில் சோடாகூட கிடைக்காது. சுவாமிக்கு சார்த்த துளசிமாலை, அர்ச்சனை தட்டு மட்டுமே கிடைக்கும். 

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

  1. அழகிய இடம், அழகிய படங்கள். ஆட்கள் இருக்கும்போதே படங்களை எடுத்துத் தள்ளி இருக்கிறீர்கள் போல. ஒன்றும் சொல்லவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஒருசில ஆட்கள்தான் இருந்தாங்க சகோ. நான் போனது ஞாயிறு மதியம் 12 மணிக்கு. அந்நேரத்துக்கு எல்லாரும் கறிச்சோறுக்காக காத்திட்டு இருப்பாங்கல்ல. அமைதியான அற்புதமான தரிசனம் கிடைத்தது. கூடவே பதிவும் கிடைத்தது.

      Delete
  2. அழகிய படங்களுடன் தகவல்கள் அனைத்தும் அருமை....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. மிக அழகிய தரிசனம் ராஜி க்கா...

    ஒரு புதிய தலத்தை அறிந்துக் கொண்டேன்....

    ReplyDelete
    Replies
    1. வசதி வாய்ப்புதான் இல்லியே தவிர கோவில் நல்லா இருக்கும் அனு. வயல்வெளிகள் நிறைஞ்ச பகுதி... சின்னதா இருந்தாலும் கிரிவலம் வரும்பாதை முழுக்க நெல், வேர்கடலை, கம்பு வாசனைன்னு செமையா இருக்கும்.

      Delete
  4. நேரில் தரிசனம் கிடைத்தது.
    அழகான படங்கள், செய்திகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete
  5. அழகான கோயில்...இயற்கை சூழலில். அந்த நதியில் நீர் இருக்கிறதா? எனக்கு எங்கு சென்றாலும் நதி அருவி, சுனைகள், வாய்க்கால், குளம் இருந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன். ரொம்பப் பிடிக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆற்றில் தண்ணி இல்ல கீதாக்கா,. ஆனா, வயல்வெளி என்பதால் கிணறு, பம்ப்செட்டுகள் நிறைய உண்டு.

      Delete
  6. அழகான கோவில். இதுவரை கேள்விப்பட்டதில்லை. தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சின்ன கோவில்ண்ணே. வீட்டிலிருந்து சரியாய் 12கிமீ. புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அள்ளும். மத்த சனிக்கிழமைகளில் கூட்டமிருக்கும். மத்த நாளில் கோவில் காலியாதான் இருக்கும்.

      Delete