எங்கயோ பிறந்து, எங்கயோ வளர்ந்து நம்ம நாட்டுக்கு பிழைக்க வந்தவங்க, நம் மண்மீதும் நம் மக்களின்மீதும் அக்கறைக்கொண்டு தன் வாழ்க்கையே அர்ப்பணிச்ச அன்னை தெரசாவை பத்தி நமக்கு தெரியும். அவங்களுக்கு முன்னமயே மருத்துவ பணிக்காக தன்னையே அர்ப்பணித்த ஐடா ஸோஃபியா ஸ்கடர் (Ida Sophia Scudder ) பத்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! இவங்கதான் அன்னை தெரசாவுக்கே வழிக்காட்டி சொன்னால் நம்ப முடியுமா?! ஆனா, அவங்களால் உருவாக்கப்பட்டு இன்னிக்கு ஆசியாவின் இரண்டாவது மருத்துவமனைன்னு பேரெடுத்த கிறித்துவ மெடிக்கல் கல்லூரி christian medical college பத்தி எல்லோருக்குமே தெரியும். இந்த கல்லூரி சமீபத்தில் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடியது.
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் சுகாதாரம் பின்தங்கி இருந்தது. அப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 வயதுதான். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாகவே இருந்தது. 1877-ல் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. பட்டினிச்சாவு மட்டும் கிட்டத்திட்ட 50 லட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு, ஒரு வேளை உணவுகூட கொடுக்க முடியாத நிலையே அந்நாளில் இருந்தது. அந்தக்காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் மருத்துவச்சிகிச்சை அளிப்பது, உணவு வழங்குவது போன்ற பணிகளைச் செய்துவந்தன. அப்படி இந்தியா வந்தவர்களில் டாக்டர் ஜான் ஸ்கடரும் ஒருவர். பஞ்சத்தால் ஏற்பட்ட கோரக்காட்சிகளைத் தினமும் பார்த்த ஜானின் ஏழு வயது சிறுமி, இனி, தன் தந்தையோடு அவர் நாட்டிற்கு திரும்பிச்சென்றபின், தன் வாழ்நாளில் இனியொரு முறை இந்தியாவுக்கு வரக்கூடாது என்றும் மிஷனரி பணியில் ஈடுபடக்கூடாது என்றும் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். ஆனா, அவரால்தான் மிகப்பெரிய மருத்துவக்கல்லூரி உருவாக வேண்டுமென்பது இறைவன் வகுத்து வைத்திருந்தான் போலும்!!
டாக்டர் ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் தம்பதியருக்கு மகளாக 1870 டிசம்பர் 9ம் தேதி ராணிப்பேட்டையில் ஐடா ஸ்கடர் பிறந்தார். மிஷனரி பணியில் தங்களை முழுமையாக ஈடுபட்ட தன் குடும்பத்தினரின் வழியில் செல்ல ஐடாவுக்கு அப்போது விருப்பமில்லை. அமெரிக்கா திரும்பிய ஸ்கடர், படிப்பில் கவனம் செலுத்தினார். ஐடாவின் பெற்றோர் மட்டும் இந்தியாவில் மிஷனரி பணிகளில் ஈடுபட்டுவந்தனர். அவர்களைப் பார்க்க மீண்டும் இந்தியா வரவேண்டிய கட்டாயம் ஐடாவுக்கு ஏற்பட்டது. திரும்ப இந்திய வந்த ஐடாவின் பயணம் அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. வேலூரில் மிஷனரி பணியில் ஈடுபட்டிருந்த பெற்றோருடன் சிறிது காலம் அவர் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார். அப்போது ஐடாவுக்கு 14 வயது. மருத்துவப்பணிக்காக திண்டிவனத்தில் தங்கி இருந்தபோது, ஒரு நாள் இரவு வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஐடா கதவைத் திறந்தார். வாசலில் நின்றிருந்த ஓர் இஸ்லாமிய இளைஞர் முகத்தில் படபடப்போடும், பதற்றத்தோடும் நின்றிருந்தார்.
கதவை திறந்த ஐடா ஸ்கடரை கண்ட இளைஞர் அவர்தான் டாக்டர் என எண்ணி, தன் மனைவிக்கு பிரசவ வலி எடுத்திருப்பதாகவும், அவளுக்கு 14 வயதுதான் எனவும், அவளை காப்பாற்றி தர, தன்னோடு வரும்படி அழைத்தார். அதற்கு, ஐடா, தான் டாக்டர் இல்லையென கூறி, தன் தந்தைதான் டாக்டர், அவரை அழைத்துச்செல்லுமாறு சொல்லி, தந்தையை அழைக்க வீட்டினுள் செல்ல முயன்றார். அம்மா! ஆண்கள் பிரசவம் பார்ப்பது எங்களது சமயத்தில் இல்லைன்னு சொல்லி சென்றார். மீண்டும் தனது புத்தகத்தில் ஆழ்ந்த ஐடாவை மீண்டும் கதவொலி கலைத்தது. இப்போது வாசலில் நின்றிருந்தவர் ஒரு அந்தணர். அவரும் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க அழைக்க, தான் டாக்டர் இல்லையென சொல்லி, தன் தந்தையை அழைக்க முற்பட, எங்கள் குலவழக்கில் ஆண் பிரசவம் பார்த்தலாகாதுன்னு சொல்லி அவரும் திரும்பி சென்றுவிட்டார். மீண்டும் புத்தகம் படிக்க சென்ற ஐடாவை மீண்டும் கதவொலி கலைக்க இந்தமுறை வந்தவர் ஒரு கிறித்துவர். முன் இருவர் போலவே இவரும் ஐடாவின் தந்தையை மறுத்து சென்றார். சொல்லி வைத்தாற்போல் மூவரின் மனைவியுமே பிரசவிக்க முடியாமல் இறந்து போயினர். இது ஐடாவின் காதுக்கு வந்தது.
மூன்று விதமான சமயத்தை சேர்ந்தவர்கள் ஒரே காரணத்துக்காக தன்னை அழைத்ததையும், தன் தந்தையை ஆண் மருத்துவர்ன்னு சொல்லி மறுத்து சென்றதையும், மூவரின் மனைவியும் ஒருசேர இறந்ததையும் நம்ப முடியாமல், தனக்குள் பலக்கேள்விகளை எழுப்பிக்கொண்டார். தனக்குத்தான் மருத்துவம் தெரியாதே! பின் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்?! என்ற பதிலையும் அவரே சொல்லிக்கொண்டார். மனப் போராட்டத்துக்கு நடுவே அன்றைய இரவு கழிந்தது. மறுநாள் மூன்று பெண்களின் சவ ஊர்வலம் செல்வதை ஐடா பார்த்தார். ஒருவித குற்றவுணர்வு அவரை ஆட்கொண்டது. விதியின்மேல் பழியைப்போட்டு தப்பித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. தனது எதிர்காலத்துக்கான விடையை அப்போது அவர் கண்டுகொண்டார்.
தான் மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக ஐடா தெரிவிக்க, அவருடைய பெற்றோருக்கு ஆச்சரியம். இந்தியாவின் பஞ்சத்தை கண்டு அருவருப்புக்கொண்ட தன் மகள் இப்படி ஒரு முடிவெடுத்ததைக்கண்டு திகைத்தனர். தந்தை ஜான் ஸ்கடர் (ஜூனியர்), தாத்தா ஜான் ஸ்கடர் (சீனியர்) இருவருமே மருத்துவர்கள். தவிர ஐடாவின் தாத்தா டாக்டர் ஜான் ஸ்கடர், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மிஷனரி பணிக்காக வந்த முதல் மருத்துவரும்கூட! மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும் ஐடாவின் மிஷனரி பணிக்குத் தோழி ஆனி ஹான்காக் உதவினார். வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஐந்து, பத்து அமெரிக்க டாலராகச் சேர்க்கும் நிதியால் இலக்கை எட்ட முடியுமா என்ற அச்சமும் ஐடாவுக்கு இருந்தது.
ஒரு நாள் நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றின் தலைவியாக இருந்த டேபர் என்பவரைச் சந்தித்தார். டேபருடன் ஷெல் என்ற முதியவரும் இருந்தார். முதியவரை அங்கேயே இருக்குமாறு கூறிய டேபர், அடுத்த அறைக்கு ஐடாவை அழைத்துச் சென்றார். இந்தியாவில் நிலவும் பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் ஐடா விளக்கினார். அவற்றைப் பொறுமையாகக் கேட்ட டேபர், அறக்கட்டளை கூட்டத்தில் நிதி திரட்டிக்கொள்வதற்குப் பேச வாய்ப்பளித்தார். நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்ட ஐடாவுக்கு மறுநாள் காலை ஒரு கடிதம் வந்தது. டேபரின் வீட்டில் பார்த்த முதியவர் ஷெல், அறக்கட்டளைக்குச் செல்லும் முன்பாகத் தன்னை ஒரு முறை பார்த்துச் செல்லும்படி எழுதியிருந்தார்.
ஷெல்லைப் பார்க்கச் சென்றார் ஐடா ஸ்கடர். ஐடாவும் டேபரும் முதல் நாள் பேசியதைக் குறிப்பிட்ட அவர், மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். வேலூரின் மக்கள்தொகை, ரயில்பாதை வசதி, மருத்துவமனை கட்டிடம் எப்படிக் கட்டப்படும் என்றெல்லாம் கேட்டார். ஐடாவின் பதில் ஷெல்லுக்குத் திருப்தியளிக்க, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் நீட்டினார் ஷெல். இன்ப அதிர்ச்சியில் இருந்த ஐடாவிடம், ‘‘என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார்’’ என்று கூறினார்.
தேவைக்கு அதிகமாகவே கிடைத்த பணத்துடன் இந்தியாவுக்கு புறப்பட ஐடா ஸ்கடர் தயாரானார். மீண்டும் ஷெல்லிடம் இருந்து ஐடாவுக்கு உதவி கிடைத்தது. மருத்துவமனைக்குத் தேவையான கருவிகள் அடங்கிய மரப்பெட்டி ஐடா புறப்படத் தயாரான கப்பலுக்கு வந்துசேர்ந்தது. தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 ஜனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப்பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது.
அப்போது போதிய பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு எதிராக இருந்த சமூகக் கட்டமைப்புகளை எப்படி உடைப்பது என்ற கவலையும் அவருக்கு இருந்தது. ஆண்டுதோறும் பயிற்சி பெற்ற செவிலியர்களை கிராமங்களுக்கு அனுப்பினால் நிலைமை மாறும் என்று நம்பினார். செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908-ல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
கோடை விடுமுறையில் அனைத்து மிஷனரிகளும் கொடைக்கானலில் ஒன்று கூடுவது வழக்கம். அப்படிக் கூடிய மிஷனரி டாக்டர்கள் மாநாட்டில் ‘தென்னகத்தில் பெண்களுக்கென்று ஒரு யூனியன் மருத்துவக் கல்லூரி வேண்டும்’ என்ற கருத்தை ஐடா ஸ்கடர் முன்வைத்தார். நூறாண்டுகளுக்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்ற ஏளனக்குரல்கள் எழுந்தன. மாநாட்டில் பங்கேற்ற பெண் டாக்டர்கள் ஆன்டா கூக்ளர், மக்ஃபெயில் ஆகிய இருவரும் ஐடாவுக்கு பக்கபலமாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் 15 கோடி பெண்கள் இருந்த இந்தியாவில் 150 பெண் மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.
1914-ல் ஐடா நெடு விடுப்பில் அமெரிக்காவுக்குச் சென்றார். அந்தநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915-ல் கடுமையான போர்ச்சூழலில் இந்தியா திரும்பிய ஐடா ஸ்கடர், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் துரிதப்படுத்தினார். மருத்துவமனை கட்டிடம் கட்ட பத்து லட்சம் அமெரிக்க டாலர் பணம் தேவைப்பட்டது. பல இன்னல்களுக்கு இடையில் 1918-ல் டிப்ளமோ மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதி, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து கிடைத்தது. எபி, கிருபம்மா, ஜெஸிலெட், லிஸி, நவமணி, லூஸி, தனம்மா, எலிசபெத், செஸிலியா, சோஃபி, தாய், கனகம், அன்னா, சாரம்மா ஆகிய 14 மாணவிகளுடன் முதல் ஆண்டு மருத்துவப் பள்ளி தொடங்கியது. 1918 ஆகஸ்ட் 12-ல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். அந்தக் காலத்தில் மற்ற ஏழு மருத்துவப் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் இல்லாதபோதும், அதற்கான சாத்தியங்களை ஐடா ஸ்கடர் ஏற்படுத்திக்கொடுத்தார்.
நான்கு ஆண்டுகள் கழித்து நடந்த தேர்வில் சென்னை மாகாண மருத்துவப் பள்ளிகளிலே யூனியன் மிஷனரி மருத்துவப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது. அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இன்று 100 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. நாற்பது படுக்கையுடன் தொடங்கி இந்த மருத்துவக்கல்லூரி 2695 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாய் பரந்து விரிந்திருக்கு. மகப்பேறு, இருதயம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள், பற்கள், உணவுன்னு அனைத்துக்கும் தனித்தனி பிரிவுடனுடம், ஆய்வக வசதியுடன் ஒரே வளாகத்தில் சி.எம்.சி பிராதான மருத்துவக்கல்லூரி இருக்கு. வேலூர் பாகாயத்தில் மனநல மருத்துவமனையும், வேலூர் நகரின் மையத்தில் கண் மருத்துவமனையும், சித்தூரில் ஒரு மருத்துவமனையும் செயல்படுது. ஒரேயொரு எலும்புக்கூட்டை வைத்து மருத்துவக்கல்லூரியை தொடங்கினார் ஐடா.
1948-ல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் பலரும் அறிந்த வரலாறு. ‘உலக அளவில் தொழு நோயாளிகளுக்கு முதல் அறுவைசிகிச்சையை டாக்டர் பால் பிராண்ட் தலைமையிலான குழுவினர் இங்கு செய்தனர். 1950 இறுதியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் முதல் இதய அறுவைசிகிச்சையும் முதல் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் இங்குதான் நடைபெற்றன. முதல் மூளை நரம்பியல் சிகிச்சைப் பிரிவும் இங்கு தொடங்கப்பட்டது.
இங்கு படித்த பல மருத்துவர்கள் இந்தியாவின் முன்னணி மருத்துவர்களாக உள்ளனர். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் மிஷனரி மருத்துவமனைகளிலும் இங்கு பயின்ற மாணவர்கள் ஏழை மக்களுக்கு விரும்பி பணியாற்றுகின்றனர். கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பதை இந்த கல்லூரி அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதற்கு ஒரு கதை வச்சிருக்காங்க.
இந்தியாவில் முதல் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்தவர் ஐடா ஸ்கடர் தான். மாட்டு வண்டியில் மருந்து பொட்டலங்களுடன் புறப்பட்டு மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுக்கு இலவச சிகிச்சையளித்து வருவது வழக்கம். "ஐடாவின் நடமாடும் மருத்துவ சேவை வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்திருக்குது. ஒருமுறை வேலூரிலிருந்து ஆற்காட்டுக்கு செல்லும் வழியில் இருக்கும் கேவி குப்பத்தில் மருத்துவம் பார்த்திருக்கிறார். அப்போது கடைசியாக நின்றவருக்கு கொடுக்க மருந்து இல்லாமல் போய்விட்டதாம். உடனே ஐடா . நான் திரும்பி வரும்போது இந்த வழியாகத்தான் வருவேன், ஆனால் மாட்டு வண்டியை ஆற்காட்டில் நிறுத்திவிட்டு மாலையில் ரயிலில்தான் வருவேன். ஆனா, இங்க ரயிலை நிறுத்த மாட்டாங்க. நீ இந்த இடத்தில் நின்றால் நான் ரயிலிருந்து மருந்து பொட்டலத்தை வீசுகிறேன். நீ அதை எடுத்துக்கொள் என்றிருக்கிறார். அதன்படியே ஐடா ரயிலில் வந்தபோது அந்த நபருக்கு மருந்து பொட்டலத்தை வீசினாராம். இந்த மனிதநேயமும், அக்கறையும்தான் இன்று நம் மருத்துவர்களுக்கு தேவை. தன் தொழிலின்மீதான் இந்த அக்கறைதான் இன்று ஆசியாவின் இரண்டாவது மருத்துவமனையாய் சி.எம்.சி திகழ காரணம்.
வேலூர் சாலையில் ஓடிய முதல் மோட்டார் வண்டி ஐடா பயணம் செய்த கார்தான். இது தான் சி.எம்.சியின் முதல் அம்புலன்ஸ்சும்கூட. 1909 செப்டம்பர் 23ம்தேதி தான் வேலூரில் இது பயணத்தை தொடங்கியது. இந்தக் காரை ஸ்டார்ட் செய்யும்போது கழுத்து நெறிக்கப்படும் ஒரு மிருகத்தைப் போல சத்தம் எழுப்புமாம். கிராமங்களில் ஐடா வரும் காரைக் கண்டு மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள். பேய் வண்டி என்றும் பட்டப் பெயர் வச்சிருக்காங்க. காலப்போக்கில் பயம் தெளிந்து, காரை தொட்டுப் பார்க்கவும், காரின் சீட்டில் உட்காரவும் வேலூர் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. பிறகு ஒரு நாள் ஐடாவின் காரில் கொடூரமாக ஓசை எழுப்பும் கார் ஹாரனை சிலர் திருடிச் சென்றுவிட்டார்களாம்.
உலகம் முழுவதுமிலிருந்து வந்து. வேலூரில் தங்கி சிகிச்சை மேற்கொண்டு நலமோடு திரும்புகின்றனர். . இந்தியாவில் இதய வால்வுகளைச் சரிசெய்யும் சிகிச்சையும் இங்குதான் செய்யப்படுகிறது”. தகுந்த ஆவனங்களுடன் வரும் ஏழை நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுது. கிராமப்புறங்களுக்கு நடமாடும் மருத்துவமனையும் இயக்கப்படுது. மக்கள் சேவைக்காக குடும்பத்தையே அர்ப்பணித்திருந்த அந்த ஸ்கடர் குடும்பத்தின் கடைசி நபரான ஐடா ஸ்கடர் 24-05-1960ம் ஆண்டு மறைந்தார். திண்டிவனத்திலிருந்து தொடங்கிய அவரின் மருத்துவ சேவை இன்று உலகம் முழுக்க பேசப்படுது.
ஐடா ஸ்கடர் அவர்களின் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் இனிவரும் மருத்துவ மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.
நன்றியுடன்,
ராஜி.
புதிய செய்தி படித்தேன் திகைத்துப் போனேன் பகிர்வுக்கு நன்றிகள் அக்கா
ReplyDeleteஉங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும் கிடைக்குமா ? கிடைக்காததால் கருத்தில் பதிவிட்டிருக்கிறேன்
மின்னஞ்சல் பக்கம் வருவதே இல்லன்னு போன பதிவிலேயே சொல்லிட்டேனே சகோ
Deleteஎன்ன ஒரு அர்ப்பணிப்பு....
ReplyDeleteவியந்து பார்க்கிறேன் கா....அற்புதம்
இந்த அர்ப்பணிப்பு எல்லா மருத்துவரிடமும் வரனும்ப்பா அனு
DeleteAwesome dedication
ReplyDeleteநன்றி சகோ
Deleteஉங்கள் மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்று. நிறைய விவரங்கள் தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteஇந்த பதிவின் தொடர்ச்சி இருக்கு சகோ. விரைவில் பதிவிடுகிறேன்
Deleteஎப்பேர்ப்பட்ட வாழ்வு...! சிறப்பான பதிவுக்கு மிகவும் நன்றி சகோதரி...
ReplyDeleteஆச்சர்யமானதுதான்ண்ணே. சி.எம்.சியின் வளர்ச்சி அளப்பறியது. இதை நான் கண்கூடா பார்த்துக்கிட்டு இருக்கேன்.
Deleteசிறந்த அறிமுகம்
ReplyDeleteவரவேற்கிறேன்