Friday, July 20, 2018

சலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்


ஆடிமாசத்தை பத்தி, இந்த மாசத்துல வரும் விசேசங்கள், விரதங்கள்ன்னு போன பதிவில் பார்த்தோம்.  அதனால, நேரா பதிவுக்கு போய்டலாம். ஆடி மாசத்து முதல் வெள்ளிக்கிழமை அன்னிக்கு  நாம வணங்க வேண்டியது சொர்ணாம்பிகையை.   சிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சி 16 முகங்களோடு சிவப்பெருமான் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டுமென கேட்டபோது எனக்கு காட்சியளித்த இத்தலத்தில் தாங்கள் எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள்ன்னு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தருமாறு வேண்டினார். அவ்வாறே வரமளித்த இறைவன் அங்கேயே எழுந்தருளினார். அங்கு அவருக்கு பெயர் சுவர்ணபுரீச்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகைன்னும், சிவனின் காவல்தெய்வமான காலபைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர். சகல செல்வங்களையும் அள்ளித்தரும் இந்த ஆலயம் பொன்பரப்பின்ற ஊரில் இருக்கு. அந்த அம்மனைதான் இன்று நம் இல்லங்களில் ஆவகணப்படுத்தி வழிப்பட வேண்டும்.   

சர்க்கரை பொங்கல், பாயாசம் நெய்வேத்தியம் செய்து, சிறு பெண் குழந்தைகளை அம்மனாய் பாவித்து பூஜை செய்து, அவரவர் வசதிக்கேற்ப ஜாக்கட் பிட், சீப்பு, கண்ணாடி, மஞ்சள் குங்குமம் தர வேண்டும். 

சொர்ணாம்பிகை மூலமந்திரம்.
 வேதாந்த வேத்யை விதுசேகராயை
வித்யுத் ஸஹஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை
ஸுகவன ஷேத்ர நிவாஸிகாயை
ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை ! ,


 இதன் பொருள்.. வேதாந்தத்தின் வேரென விளங்கும் வேத பொருளானவளும் ,  அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும் , ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும் , சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான அன்னை ஸ்ரீசொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக! என்பதாகும்.


ஆடிமாசத்தில் அம்மன் கோவில்கள் அனைத்தும் நிரம்பி வழியும். எல்லாராலும் போகமுடியாதில்ல. அதனால், ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அம்மன் கோவில் பத்தியும் பார்க்கலாம். இன்னிக்கு நாம பார்க்கப்போறது, படைவேடு ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயம்.  ஆடி மாதத்தில் கூழ் வார்க்கும் பழக்கம் உண்டானது. அது என்ன கதைன்னு பார்த்துக்கிட்டே கோவிலையும் பார்க்கலாம் வாங்க.... 
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டத்தில், சந்தவாசலுக்கு இருக்கு படவேடு.  திருவண்ணாமலையிலிருந்து வடக்கே 27 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து தெற்கே 40 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து மேற்கே 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சோழர்களின் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த சம்புவராயர்கள், இப்பகுதியில் ஒரு படைவீடு அமைத்து ஆட்சி புரிந்து வந்தனர். இங்கு சோழர், விஜயநகர மன்னர்கள் கட்டிய கோயில்களே இதற்கு சாட்சி. படைவீடுன்னா அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம்’ன்னு அர்த்தம்.  சோழர்களும், பழையாறையில் பம்பப்படை, ஆரியப்படை போன்ற படைவீடுகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். பாண்டியர்கள், பொருணை ஆற்றங்கரையில் ஒரு படைவீடு அமைத்துச் செயல்பட்டனர். அதனை மணப்படைவீடு என்றும் அழைத்துள்ளனர். இம் மணப்படைவீடு, பாண்டிய நாட்டுத் துறைமுகமான கொற்கைக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளது. சம்புவராயர்கள் அமைத்துக்கொண்ட படைவீடும் அதைப்போன்றதுதான். இங்கு காணப்படும் மலையின் மேல்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை, ராஜகம்பீர சம்புவராயர் என்ற மன்னனால் கட்டப்பட்டது என கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது. படைவேடு என அழைக்கப்பட்டு இப்ப படவேடு என இந்த ஊர் அழைக்கப்படுது. 

வேலூர் டூ திருவண்ணாமலை சாலையிலிருந்து கிளைச்சாலை வழியே மூன்று கிமீ பயணித்தால் இவ்வூரை அடையலாம். ஊருக்குள் நுழையும்போது மலைகளும், வனங்களும் அதனால் உண்டாகும் தென்றலை நம்மை வரவேற்கும்.  வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, போளூரிலிருந்து இந்த ஊருக்கு நேரடி பேருந்து உண்டு. 


முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த ’விஜரவத’ன்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகாதேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பிரம்மனின் அருளின்படி பிறந்த ரேணுகாதேவி சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார். பின்னாளில், ரேணுகாதேவிக்கும் ஜமதக்னி முனிவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுமணன் முதலிய நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவன்தான் பரசுராமன், மகாவிஷ்ணுவின் அவதாரம். 
வழக்கமாக அதிகாலை நேரத்தில் தாமரைக்குளத்தில் நீராடி குளக்கரை மண்ணில் குடத்தைச் செய்து, அதில் தண்ணீரைப் பிடித்து கொண்டு வந்து, ஜமத்க்னி முனிவரின் பூஜைக்கு கொடுப்பது ரேணுகாதேவியின் வழக்கம். வழக்கம்போல், ஒருநாள் நீர் கொண்டு வரச்சென்றபோது தாமரைக்குளத்தில் தேவர்குலத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வனின் உருவம் தெரிந்தது. கந்தர்வனின் அழகை ரசித்த ரேணுகாதேவி ஒரு நிமிடம் அப்படியே மெய்மறந்து நின்றாள். சிறிது நேரத்தில் மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. நடந்தது என்ன செய்வதென தெரியாமல் ரேணுகாதேவி திகைத்து நின்றார். நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பி வராத காரணத்தை தனது ஞான திருஷ்டியால் ஜமதக்னி முனிவர் தெரிந்துகொண்டார். கந்தர்வனின் அழகில் மயங்கியதால் மண் குடத்தை செய்ய முடியாமல் நிற்கும் தனது மனைவி கற்பு நெறி தவறிவிட்டார் எனக் கருதினார்.

தனது மகன்களை அழைத்த ஜமதக்னி முனிவர், மனைவியின் தலையைக் கொய்துவிட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.  தாயின் பாசத்தால் மூன்று மகன்கள் மறுக்க. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கோடாரியுடன் புறப்பட்டான் பரசுராமன். பெற்ற மகனே தன்னைக் கொல்ல வருகிறான் என்பதை தெரிந்த ரேணுகாதேவி கலக்கத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள ஓடினார். நீண்ட தூரம் ஓடிய களைப்பால் இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். பெற்ற தாய் என்று நினைக்காமல் வெட்ட வந்த பரசுராமனைத் தடுத்தார் வெட்டியான் மனைவி. தந்தையின் கட்டளையைத் தடுக்க நினைத்த வெட்டியானின் மனைவியின் தலையை வெட்டிய பரசுராமன், பின்னர் தாயின் தலையையும் வெட்டிச் சாய்த்தான்.

கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்ற, தன்னிடமிருந்த புனித நீர் அடங்கிய கமண்டலத்தை கொடுத்து, உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். 
இதற்கிடையில் ஜமத்க்னி முனிவரிடமிருந்த காமதேனு பசுவினை சொந்தம் கொள்ள நினைத்த கார்த்தவீரியன், ஜமத்க்னி முனிவரிடம் பசுவை கேட்டார். பசுவை கொடுக்க மறுத்த ஜமத்க்னி முனிவரை கொன்று காமதேனு பசுவை கவர்ந்து சென்றான் கார்த்தவீரியன். கணவரின் உடலோடு உடன்கட்டை ஏறினாள் ரேணூகாதேவி. ஆனால், ரேணுகாதேவியின் விதி முடியாததால், திடீரென மழை பொழிந்து தீ அணைந்தது. ஆனாலும் தீயினால் உடை எரிந்து, உடலும் தீயினால் உடல் வெந்து கொப்புளங்கள் தோன்றியது. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இப்படி அல்லல்படுமளவுக்கு தான் செய்த குற்றம் என்னன்னு மனம் நொந்து யாருக்கும் தெரியாமல் அருகிலிருக்கும் காட்டில் தஞ்சம் புகுந்து அங்கிருக்கும் வேப்பிலைகளை ஆடையாக்கி அணிந்து கால் போன போக்கில் திரிந்தாள். பசி காதை அடைத்தது, அருகிலிருக்கும் கிராமத்திற்கு சென்று பசி உயிர் போகுது, சாப்பிட எதாவது கொடுங்களென வேண்டு நின்றாள். 
பார்க்க பெரிய இடத்து பெண் மாதிரி இருக்கே. இவளுக்கு எதாவது கொடுத்தால், நமக்கு எதாவது தீங்கு வரும்ன்னு அவளை விரட்டி விட்டனர். அப்படியே சேரிப்பகுதிக்குள் புகுந்து சாப்பிட எதாவது கேட்டாள். அது ஏழை குடியானவங்க வீடு என்பதால் தங்களிடமிருந்த பச்சரிசிமாவும், வெல்லமும்,இளநீரும் கொடுத்தனர். அவற்றைக்கொண்டு கூழ் காய்ச்சி பருகி பசியாறினார் ரேணுகாதேவி. அப்போது சிவப்பெருமான் தோன்றி, நீ சக்திதேவியின் அம்சம், உலக மக்கள் வெம்மை நோய் நீங்க நீ ஆடையாய் அணிந்த வேப்பிலையே சிறந்த மருந்தாகும். நீ குடித்த கூழே சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என வரமளித்து மறைந்தார். அன்னை, சிவப்பெருமானிடம் வேண்டிக்கொண்டபடி, வெட்டியான் மனைவி சிரசு பூமியிலேயே தங்கிவிட, மற்ற உடல்பாகங்கள், முனிவருடன் சொர்க்கம் புகுந்தாள்.  இந்த சம்பவத்தினை முன்னிட்டே அம்மனுக்கு கூழ்வார்த்தல் தொடங்கியது. 
மூலவரான அம்மன் முகம் மட்டுமே தரையில் ஊன்றியவள். இது சுயம்பு லிங்கமாகும்.  அவளுக்குப் பின்னே, அத்தி மரத்தால் செய்த அம்மனின் முழுத் திருவுருவம்! ஆதிசங்கரர் நிறுவிய பாணலிங்கம் மற்றும் நானாகர்ஷணச் சக்கரமும் அருகில்!  இக்கோவிலில்  குங்குமப் பிரசாதம் கிடையாது!  ஆண்டுக்கு ஒருமுறை ஆனித்திருமஞ்சன நாளில் ஆற்றோரமாய், ஜமதக்னி முனிவரிரோடு ரேணுகாதேவி உடன்கட்டை ஏறிய  திட்டிலிருந்து  எடுக்கப்படும் மண்"நீறு" மட்டுமே பிரசாதமாய் தருவது வழக்கம்! இந்த மண் நீரை நீரில் கலந்து குடிப்பதால் பிணிகள் நீங்குமென்பது நம்பிக்கை. 
கோவில் இப்போது கட்டுமாணப்பணிகளில் இருக்கு. எல்லா அம்மன் கோவில்களிலும் பலிபீடம்முன் யாளி அல்லது சிங்கம்தான் இருக்கும். ஆனா இந்த அம்மன் கோவிலில் எருதுதான் இருக்கு.  அதான் அம்மனின் வாகனம். அதேப்போல கோவில் சுற்றுச்சுவர்களில் சிங்கத்துக்கு பதிலா பசுதான் இருக்கு.  பரசுராமனின் தலையும் கருவறையில் வழிப்பாட்டில் இருக்கு. இதுக்கு பரசுராமஷேத்திரம்ன்னும் பேரு. 
இக்கோவிலில் மும்மூர்த்திகள் அரூபமாய் இருப்பதால் இக்கோவிலில் வழிபாடு செய்தால், மும்மூர்த்திகளையும் வழிப்பட்ட பலன் கிடைக்கும். மும்மூர்த்திகளின் துணைக்கொண்டு பேருருக்கொண்டு உலக இயக்கத்துக்கு சக்தியே  பிரதானமென அன்னை அருள் புரிகிறாள்.  முனிவர்கள் பலர் தவம் செய்து பல அரிய சித்திகளை பெற்றது இத்தலத்தில்தான். 

அம்மை நோய், சரும நோயினால் பாதிக்கப்பட்டவங்க இக்கோவிலுக்கு வேண்டிக்கிட்டு வேப்பிலை ஆடை உடுத்தி, பரசுராமர், ரேணுகாதேவி, ஜமத்க்னி முனிவர் சிலாரூபத்தை சுமப்பது வித்தியாசமான நேர்த்திகடன்.  பொங்கல் படையலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும் உண்டு. 
அம்மை நோய் கண்டவர்கள் குணமானதும் கூழ், முருங்கைக்கீரை பொரியல், கருவாட்டு குழம்ப், மோர், இளநீரை தானமாய் கொடுப்பது வழக்கம். 
அங்கப்பிரதட்சணம், ஆடு கோழி பலியிடுதல், மொட்டை அடித்தல், துலாபாரம்ன்னு இங்கு நேர்த்திக்கடன் ஏராளம். இது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மதியம் அன்னதானம் உண்டு. மத்தபடி சொல்லிக்கொள்ளும்படியான ஹோட்டல்கள் இல்ல. சுமாரான ஹோட்டல்வசதிதான் உண்டு. மத்தபடி ஆங்காங்கு அடுப்பு மூட்டி சாப்பாடு சமைச்சுக்கிட்டிருப்பாங்க. 
அம்மை நோய் கண்டவர்கள் 3 அல்லது 5 நாட்கள் இக்கோவிலில் தங்கி இருந்து குணமாகி செல்கின்றனர்.  மருக்கள், பருக்கள் தொல்லை இருப்பவர்கள் உப்பு,  மிளகினை சாற்றி, உப்பு,  வெல்லத்தினை இக்கோவிலில் இருக்கும் குளத்தில் போடுகின்றனர். உப்பும், வெல்லமும்  கரைகிற மாதிரி தங்கள் பிரச்சனை தீருமென்பது நம்பிக்கை. 
பொங்கல் வைக்கும் இடம், ஆடு கோழி பலி இடம் கோவிலுக்கு வெளியிலிருப்பதால் கோவில் வெகு சுத்தம். 300 ஆண்டுகளுக்கு முன் இங்கு தவமிருந்த கணபதி முனிவரால் இக்கோவில் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. 





கோவிலுனுள் வினாயகர், முருகருக்கென தனி சன்னிதி உண்டு.  மாமரம்தான் இங்கு தலவிருட்சம். கமண்டலநாகநதி தலதீர்த்தமாகும். ஆடி மாதத்தின் ஐந்தும், ஆவணி மாதத்தின் முதலிரண்டு வெள்ளியென மொத்தம் 7 வெள்ளிக்கிழமை இங்கு விசேசம். ஆறாவது வெள்ளியன்று சுமார் 10 லட்சம் பேர் வருவது வழக்கம். புரட்டாசி, நவராத்திரியென இங்கு விசேசதினங்கள். 

இக்கோவிலிலிருந்து  சுமார் 3கிமீ தூரத்தில் கோட்டமலை என்னும் இடத்தில் யோகராமசந்திரர் கோவில் இருக்கு. அதில்லாம மலைமேல் கிருஷ்ணர் கோவில் இருக்கு. அருகிலிருக்கும் காட்டில் சிவன் கோவில் ஒன்றும் தாலியறுத்தான் கோவில் ஒன்றும் இருக்கு. செண்பகத்தோப்பு என்னும் இடத்தில் சின்னதா ஒரு அணை இருக்கு. 

இந்த ஊரை சுற்றி கத்திரிக்காய், மக்காச்சோளம், புளி, வாழை, பப்பாளி தோட்டம் உண்டு. இங்கிருந்து பல ஊர்களுக்கு செல்லுது. கருவாடு, மண்பாண்டங்கள்ன்னு பர்சுக்கு வேட்டு வைக்கும் அம்சங்கள் நிறைய உண்டு. சரியான சாலை வசதியும், சாப்பாட்டு வசதியும் இல்லாதது பெருங்குறை. 

கற்பு உடலுக்கில்லை மனசுக்குன்னு நாம சொல்றோம். உடலால் களங்கப்பட்ட அகலிகையும் வணங்கத்தக்கவள்,  சலனப்பட்ட மனசும் இங்கு வழிப்பாட்டுக்குரியதா இருக்கு.  எதை?! எப்படி?! எங்க கொண்டாட, இகழ வைக்கனும்ன்னு இறைவனுக்கு மட்டுமே தெரியும்!!

நன்றியுடன்
ராஜி.


6 comments:

  1. சுவாரஸ்யமான கதை.

    ReplyDelete
    Replies
    1. கதைகள் எப்பயுமே சுவாரசியம்தான் சகோ

      Delete
  2. விளக்கம் அருமை சகோதரி...

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான தகவல்கள். சிறப்பான படங்களுடன்....

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete